88. கும்பகர்ணன் எழுந்தான் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

யுத்த பூமியில் ராவணன் கிரீடம் உடைந்து அவமானப்பட்டுக் கோட்டைக்குத் திரும்பிப் போவதைக் கண்ட தேவர்கள் சந்தோஷமடைந்து ஆரவாரம் செய்தார்கள். 'நம்முடைய கஷ்டங்கள் தீரும் காலம் சமீபித்தது' என்று ஆனந்தமடைந்தார்கள்.


ராவணனோ மானபங்கமடைந்து மிகக் கவலை கொண்டவனாகக் கோட்டைக்குள் புகுந்தான். ஆலோசித்து மனத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு தம்பி கும்பகர்ணனை எழுப்பச் சொல்லி உத்தரவிட்டான்.


கும்பகர்ணன் தான் அடைந்த சாபத்தால் மாதக் கணக்காகத் தூங்கிப் போவான். ராவணன் அவமானப்பட்டுத் திரும்பியபோது கும்பகர்ணன் படுக்கப் போய்ச் சில நாட்களே ஆனபடியால், அந்த இளந்தூக்கத்திலிருந்து அவனைச் சுலபமாக எழுப்பக்கூடும் என்று ராவணன் தீர்மானித்து, “எப்படியாவது தம்பியைத் தூக்கத்தினின்று எழுப்பி யுத்தத்துக்குத் தயாராகும்படி செய்யுங்கள்” என்று தன் மந்திரிகளுக்கு உத்தரவிட்டான்.


“என் தவங்களெல்லாம் வீணாயிற்று. ரிஷிகள் சொன்னது உண்மையாகும் போலிருக்கிறது. கோட்டையை எல்லாப் பாகங்களிலும் வீரர்கள் கவனமாகக் காவலிருந்து பார்த்துக்கொள்ளச் சொல்வீர்களாக. தம்பி சுகமாகத் தூங்குகிறான். அவன் தூக்கம் மாதக்கணக்காக இருக்குமே. அவன் படுத்து, இன்று ஒன்பது தினங்கள் தானாயின. அவனை உடனே எழுப்பி விடுங்கள். அவன் யுத்தத்துக்குச் சென்றால் இந்த எதிரிகள் சிதறி ஓடுவார்கள். கும்பகர்ணனுக்கு எதிரில் யார் நிற்க முடியும்? அவன் எழுந்து போருக்கு நின்று விட்டால் எனக்கு ஒரு பயமுமில்லை. நான் கவலைப்படுகிறேன் என்பது அவன் அறியவில்லை, தூங்குகிறான்.”


இப்படி ராவணன் சொன்னதும் ஆட்கள் கும்பகர்ணனுடைய அரண்மனைக்குச் சென்றார்கள். அவுன் எழுந்ததும் அவனுக்கு அடங்காத பசியாக இருக்கும் என்று ஆகாரம் தயாரித்து மலையாகக் குவித்து வைத்தார்கள். பிறகு அவனை எழுப்புவதற்காக அநேக பேரிகை, சங்குகள் முதலியவைகளைக்கொண்டு பெரிய சத்தம் போட்டார்கள். பல அரக்கர்கள் கூடி அவனைத் தட்டிக் குத்தித் தள்ளினார்கள். அவர்கள் போட்ட இரைச்சலும் பேரிகை, சங்கம் முதலிய கோஷங்களும் ஆகாயமளாவிச் சென்றன. பறவைகளும் மிருகங்களும் பயந்து கத்தின.


கும்பகர்ணனுடைய சாப நித்திரை இதையெல்லாம் கேட்கவில்லை. தூங்கினவன் தூங்கிக்கொண்டேயிருந்தான். பல ராக்ஷசர்கள் கூடித் தூக்கத்தில் கிடந்தவனை மிக உபத்திரவப் படுத்தினார்கள். அவன் மேல் யானைகளை நடக்கச் செய்தார்கள், கம்புகள் எடுத்து அடித்தார்கள். இப்படி உபத்திரவம் செய்த பின், கும்பகர்ணன் கண்ணைத் திறந்து, தூக்கத்திலிருந்தவன் கொசுக்கடிக்காகக் கையால் தட்டுவது போல் அனைவரையும் தட்டித் துரத்திவிட்டுக் கொட்டாவி விட்டான்.


பிறகு, என்ன காரணம் தன் தூக்கத்தை இவ்வாறு கெடுத்தது என்று பெருங்கோபங் கொண்டான். விஷயம் தெரியாமலேயே பசி தெரியாமலேயே தாங்காத மேலிட்டு மலைக் குவியல்களாகக் கிடந்த மாமிசமும் மற்ற ஆகாரப் பண்டங்களையும் எடுத்து விழுங்கி, பானைகளில் வைக்கப்பட்டிருந்த ரத்தத்தையும் மது வகைகளையும் குடித்துத் தாகம் தீர்த்துக் கொண்டான். அதன்மேல் அவன் கோபம் கொஞ்சம் தணிந்த தன்று அரக்கர்கள் அவனையண்டி விஷயத்தைச் சொன்னார்கள்.


இராவணனுடைய மந்திரி யூபாக்ஷன் பேசினான்: “சுவாமி, யுத்தத்தில் அடிபட்டு நாம் அபாயத்திலிருக்கிறோம். சீதையின் காரணம் வந்த யுத்தம், வானரர்களும் ரகு குமாரர்களும் இதுவரையில் நாம் கண்டிராத முறையில் நம்முடைய சேனையையும் வீரர்களையும் மாய்த்து வருகிறார்கள். லங்கா நகரத்தைச் சுற்றிக் கடல் போன்ற வானரக் கூட்டம் நிற்கிறது. ராவணேசுவரரே, யுத்தத்தில் அடிபட்டுத் திரும்பி விட்டார். அவர் உயிருடன் தப்பியதே நம்முடைய அதிர்ஷ்டம்” என்றான்.


இதைக் கேட்டதும் கும்பகர்ணன் அடக்க முடியாத கோபாவேசமானான். “இந்தக் கணம் எதிரிகளை நிர்மூலம் செய்வேன். வானர சேனையைக் கொன்று ராம லக்ஷ்மணர்களுடைய ரத்தத்தைக் குடிக்கப் போகிறேன். காரியத்தை முடித்துவிட்டு ராவணனைப் போய்ப் பார்ப்பேன்.”


இவ்வாறு ரோஷத்தோடு பேசியதைக் கேட்ட மந்திரிகள் மகிழ்ச்சியடைந்து, “முதலில் அரசனைக் கண்டு ஆலோசித்து அதற்குமேல் தக்கது செய்யுங்கள்” என்று கும்பகர்ணனிடம் விண்ணப்பம் செய்தார்கள்.


கும்பகர்ணன் “சரி அப்படியே” என்று சொல்லி, முகம் கழுவிக்கொண்டு தன் பலத்தை விருத்தி செய்து கொண்டு, யமனைப்போல் பூமி அதிர லங்கேசன் அமர்ந்திருக்கும் மண்டபத்துக்குச் சென்றான். கும்பகர்ணன் போகும் பொழுது ராஜமார்க்கத்தில் நின்று கொண்டிருந்த அரக்கர்கள் தைரியமும் மகிழ்ச்சியும் அடைந்து கைகூப்பி வணங்கினார்கள். அவன்மேல் புஷ்பமாரி பெய்தார்கள்.


அரண்மனைக்குள் பிரவேசித்து ராவணன் சந்நிதியில் நின்றான். ராவணனும் தன்னுடைய நிகரற்ற தம்பி எழுந்து வந்துவிட்டான் என்று அடங்காத மகிழ்ச்சியுடன் எழுந்து ஆசனத்திலிருந்து இறங்கி, அவனைத் தழுவி வரவேற்றான்.


“என்ன செய்ய வேண்டியது, அண்ணா?” என்றான் கும்பகர்ணன். “ஏன் என்னை எழுப்பச் சொன்னீர்? உமக்கு என்ன பயம் ஏற்பட்டிருக்கிறது? யார் பிரேதமாய் விழுந்துபோகக் காத்திருக்கிறார்கள், சொல்லுவீர்!” என்றான்.


“தம்பி! உனக்குத் தெரியவில்லை. நீ உன்னுடைய தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தாய். எனக்கு ராமனால் ஏற்பட்டிருக்கும் பயம் பெரிதாகிவிட்டது. கடலைப்போல் வானர சேனை லங்கையைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. நம்முடைய வீரர்கள் அவர்களை எதிர்த்துத் தோல்வியடைந்து மடிந்து விட்டார்கள். பெருஞ் சேனையுடன் ராமன் சமுத்திரத்தில் சேது ஒன்று கட்டி நம்முடைய குலத்தை வேரோடு அழிக்க வந்திருக்கிறான். என் செல்வம், என் சேனை எல்லாம் தீர்ந்து போயிற்று. நீ தான் நம்முடைய குலத்தைக் காப்பாற்ற வேண்டும். உன்னை நம்பியிருக்கிறேன். நீ தேவர்களை எல்லாம் யுத்தத்தில் சிதற அடித்திருக்கிறாய். என்னிடம் உனக்கு உள்ள பிரியத்தை நான் அறிவேன். யுத்தத்தில் உனக்கு உள்ள பிரியமும் உன் வீரமும் அறிவேன். உடனே சென்று இந்தச் சத்துருக்களை வதம் செய்து என்னையும் லங்கையையும் காப்பாற்றுவாய்” என்றான் ராவணன்.


இதைக் கேட்ட கும்பகர்ணன் சிரித்தான். ராவணன் கவலைப்பட்டும், துக்கப்பட்டும் பிரலாபித்துப் பேசினதைக் கேட்டதும் முதலில் தனக்கு இயற்கையாகப் பாசத்தால் உண்டான கோபத்தின் வேகம் மறைந்து போய், விஷயங்கள் நினைவுக்கு வந்து விவேகம் மேலிட்டு அண்ணன் செய்த தவறுகளை எண்ணிச் சிரித்துவிட்டுப் பேசலானான்:


“மன்னிக்க வேண்டும், அண்ணா! முன் நீர் மந்திராலோசனை செய்த சமயத்தில் நாங்கள் என்ன எச்சரித்தோமோ அது இப்போது நடந்திருக்கிறது. நாங்கள் உம்முடைய நன்மைக்கென்று சொன்னதை அப்போது நீர் உதறித் தள்ளினீர். சீதையை அபகரித்த பாப காரியத்தின் பயனை இப்போது அனுபவிக்கிறீர். ஆசையால் தூண்டப்பட்டுக் காரியத்திலுள்ள தோஷத்தை ஆராயாமல் ஒருவன் புகுந்தால் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதானே! முந்தி யோசனை செய்து பிறகு காரியத்தில் பிரவேசிப்பதற்குப் பதிலாக, காரியத்தில் பிரவேசித்துவிட்டு, பிறகு யோசிப்பது அறிவீனம். ராஜ நீதிக்கு விரோதம். இதை நான் எடுத்துக் காட்டினேன். சீதையை அபகரிக்கப் பிரியப்பட்டாலும் விரோதிகளான ராமலக்ஷ்மணர்களை வதம் செய்துவிட்டுப் பிறகு அல்லவோ சீதையை அபகரித்திருக்க வேண்டும்? தலைகீழாக வேலையைச் செய்து விட்டீர். நன்மை தீமைகளை யோசித்துச் சொல்லக்கூடிய மந்திரிகள், மித்திரர்கள், பந்துக்கள் இவர்களோடு கலந்து ஆராயாமல் அல்லது அவர்கள் சொன்னதைப் புறக்கணித்து விட்டு செய்யப்படும் காரியங்கள் அபாயத்திலும் நஷ்டத்திலும் கொண்டுபோய் விடும். இது நீர் அறிந்திருக்கவில்லையா? யார் சரியான யோசனை சொல்லுகிறவர்கள், யார் அல்ல என்பதை அரசன் அறிந்துகொள்ள வேண்டும்.”


இவ்வாறு கும்பகர்ணன் செய்த தர்மோபதேசமும் நீதி சாஸ்திர விளக்கமும் ராவணனுக்குப் பிடிக்கவில்லை. ராவணனுடைய முகத்தில் கோபக்குறிகள் உண்டாயின. ஆயினும் அபாய நிலையிலிருந்தபடியினால் கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு ராவணன் பேசினான். “தம்பி! இப்போது இந்த ஆராய்ச்சியில் ஒரு பிரயோசனமும் இல்லை. காலம் தாண்டி விட்டது. இப்போது நான் கோருவது உன்னுடைய பராக்கிரமத்தின் வேகத்தை நியாயமாகவோ, அநியாயமாகவோ, விவேகமாகவோ, அவிவேகமாகவோ, கர்வத்தாலோ, அறிவீனத்தாலோ ஒரு காரியம் நடந்து விட்டால், அதைப் பற்றிக் காலம் கடந்த பின் யோசித்துக் கொண்டோ பேசிக்

கொண்டோ இருப்பதில் பயன் என்ன? நடந்தது நடந்து விட்டது. இப்போது இந்தச் சங்கடத்தில் என்ன செய்வது என்பதுதான் கேள்வி. நடந்து போன தவறுகளால் நேர்ந்திருக்கும் கெடுதியை உன் வீரத்தாலும் சாமர்த்தியத்தாலும் தீர்ப்பது உன் கடமை. தவறுகள் செய்து விட்டபடியால் அபாயத்திலும் கஷ்டத்திலும் சிக்கினவனுக்கு உதவி செய்கிறவனே மித்திரன். அவனே பந்து. என்பேரில் உனக்குப் பிரியம் இருப்பது உண்மையாயின் இப்போது எனக்கு நீ உதவுவாய். உன் சாமர்த்தியமும் பலமும் தெரிந்துதான் இப்படிப் பேசுகிறேன். கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்குத் தைரியம் சொல்லி என்னைக் கைவிடாமல் சூரனாக நடந்து கொள்வாய்” என்றான்.


கும்பகர்ணன் சொன்னான்: “நீர் கவலைப் பட்டது போதும். உமக்குப் பயம் உண்டாகியிருக்கும் சத்துருக்களை இப்போதே வதம் செய்வேன். நான் உம்முடைய தம்பி. ஒரு போதும் உம்மைக் கைவிட மாட்டேன். ராமலக்ஷ்மணர்கள் மாண்டார்கள் என்று நிச்சயமாக இருப்பீராக. இந்த வானர சேனையைச் சின்னா பின்னமாக அடித்து வதம் செய்வேன். சந்தேகப்பட வேண்டாம். ராமனுடைய தலையை உமக்கு எதிரில் கொண்டு வந்து போடப் போகிறேன். பயப்படாதீர். சுக்ரீவனுடைய ரத்தம் அருவி போல் பாய்வதைக் காண்பீர். என்னைக் கொன்று விட்டுப் பிறகு அல்லவா ராமன் உம்மிடம் வரவேண்டும். என்னை யாரும் வென்று கொல்ல முடியாது என்பது உமக்குத் தெரியும்.”


இப்படிப் பேச ஆரம்பித்ததும் கும்பகர்ணனுடைய அகம்பாவம் பொங்கிக் கிளம்பிற்று. “எந்தச் சத்துருவாயினும் அழிப்பேன். யமனே வரட்டும். சூரியனே வந்து எதிர்க்கட்டும். அக்கினியேயாயினும் சரி, வரட்டும். அனைவரையும் கடித்துத் தின்று விழுங்கி விடுவேன்” என்று பலவாறாகப் பேசி அண்ணனுக்குத் தைரியம் உண்டாக்கிப் போர்க் களத்துக்குப் போகக் கிளம்பிவிட்டான்.

*

முதலில் பெருந்தூக்கத்தினின்று எழுந்ததும் இயற்கை வேகத்தில் பேசினான். பிறகு பசி ஓரளவு தீர்ந்ததும் சுபாவத்தில் நீதி உணர்ச்சி கொண்டவனானபடியால் ராவணனிடம் விஷயங்களை ஆராய்ந்து ஹிதத்தை எடுத்து உரைத்தான். அதன் பின் ராவணனுடைய தற்காலக் கஷ்ட நிலையைக் கண்டு உருகி, அன்பு மேலிட்டு மற்றதையெல்லாம் மறந்தொழிந்தான்.


“உன்னைப் போன்ற வீரன், உன்னைப் போன்ற தம்பி, ஆபத்தில் உதவும் மித்திரன் வேறு யார், கும்பகர்ண!” என்று ராவணன் மகிழ்ச்சி பரவசமாகப் பேசித் தம்பியை யுத்தத்துக்கு அனுப்பினான். தம்பி கட்டாயமாக ஜெயிப்பான் என்று ராவணன் எண்ணினான். செத்துப் பிழைத்த மாதிரி மகிழ்ச்சி அடைந்தான்.

கும்பகர்ணன் சூலத்தை எடுத்துக் கொண்டு ஒருவனாகவே போகப் புறப்பட்டான். அப்போது ராவணன் அவனைத் தடுத்து, “இப்படிச் செய்யலாகாது. சேனையைக் கூட்டிக் கொண்டு போ” என்று சொல்லி, தம்பியின் பெரிய தேகத்துக்கு ஆபரணங்கள் புனைந்தும் மாலை போட்டும் அலங்கரித்து, ஆசீர்வதித்து, “போ, வீரனே! சத்துருக்களை நிர்மூலம் செய்து விட்டு ஜெயகோஷத்துடன் திரும்பி வா” என்றான்.


கும்பகர்ணனும் திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு திரிவிக்ரமனைப்போலவே ஜொலித்தான்.


அண்ணனை வலம் செய்து வணங்கி, நீண்ட சூலத்தை எடுத்துக் கொண்டு சென்றான். பெருஞ்சேனை அவனைப் பின் தொடர்ந்து சென்றது. கும்பகர்ணன் நடந்து சென்ற போது லங்கையில் உள்ள ராக்ஷசர்கள் அவன் மேல் மலர்கள் தூவினார்கள். எரிமலையைப் போல் ஜொலித்துக் கொண்டு சென்றான்.


அவன் மதில் சுவர்களைக் காலாலே தாண்டிக் காலாந்தக யமனைப் போல் வந்ததைக் கண்ட வானரர்கள் பலர் பயந்து இங்குமங்கும் ஓட ஆரம்பித்தார்கள். வானரத் தலைவர்கள் படைக்குத் தைரியம் சொல்லி மிகக் கஷ்டப்பட்டுச் சேனையைக் காத்து வந்தார்கள்.




Post a Comment

புதியது பழையவை