சனி, 14 டிசம்பர், 2019

ஶ்ரீமத் பாகவதம் - 78

மூன்றாவது ஸ்கந்தம் – முப்பத்து மூன்றாவது அத்தியாயம்

(தேவஹூதி கபிலரை ஸ்தோத்ரம் செய்தலும், அவள் யோகமார்க்கத்தில் பரப்ரஹ்மத்தை அடைதலும் கபிலர் அந்தர்த்தானம் ஆதலும்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- கர்த்தம ப்ரஜாபதியின் பார்யையும் கபிலருடைய மாதாவுமாகிய தேவஹூதியானவள் இங்ஙனம் கபிலர் மொழிந்த வசனத்தைக் கேட்டு அஜ்ஞானமாகிற திரை நீங்கப்பெற்று, ப்ரக்ருதி புருஷன் ஈஸ்வரன் என்கிற மூன்று தத்வங்களின் உண்மையை அறிந்த யோகிகளுக்குப் புகலிடமான அந்தக் கபிலரை நமஸ்கரித்து மேல் வருமாறு ஸ்தோத்ரம் செய்தாள்.

தேவஹூதி சொல்லுகிறாள்:- வாராய் பகவானே! உன்னுடைய நாபீ கமலத்தினின்று உண்டான ப்ரஹ்மதேவனும் உன் திருமேனியை நேரே காணப்பெறாமல் த்யானம் செய்து ஸாக்ஷாத்கரித்தான். நீ முதலில் மஹாஜலத்தின் மேல் சயனித்துக் கொண்டிருந்தனை. ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்களும் பதினொரு இந்திரியங்களும் சப்தாதி விஷயங்களுமாகப் பிரிந்த ப்ரக்ருதியும் ஜீவாத்மாக்களும் உன் சரீரத்தில் அடங்கியிருப்பவை. இந்த ஜகத்தெல்லாம் உனது சரீரமான ப்ரக்ருதியினின்று உண்டானது. உன் சரீரம் ஸத்வாதி குணங்களின் ப்ரவ்ருத்திக்குக் காரணமாயிருக்கும். நீயே ப்ரஹ்மாதிகளைப் படைத்து அவர்களுக்கு ரஜஸ்ஸு முதலிய குணங்கள் தலையெடுக்கச் செய்து அவர்களுக்கு அந்தராத்மாவாயிருந்து அந்தந்த குணங்களுக்குத் தகுந்தபடி ஜகத்ஸ்ருஷ்டி முதலிய சக்திகளை அவர்களுக்கு விளைவிக்கின்றனை. (ப்ரஹ்மதேவனுக்கு ரஜோகுணம் தலையெடுக்கச் செய்து அவனுக்கு அந்தராத்மாவாய் உள்ளே புகுந்து ஸ்ருஷ்டிகார்யத்தை நடத்துகிறவன் நீயே. அங்ஙனமே ருத்ரனைப் படைத்து அவனுக்குத் தமோகுணம் தலையெடுக்கச் செய்து அவனுக்கு அந்தராத்மாவாய் உள்ளே புகுந்து ஸம்ஹார கார்யத்தை நடத்துகிறவனும் நீயே. நீ நேரே ஸத்வகுணம் தலையெடுத்த விஷ்ணுவாய் அவதரித்து உலகங்களைப் பாதுகாக்கையாகிற கார்யத்தை நடத்துகின்றனை). நீ இயற்கையில் எவ்வகை வியாபாரங்களுமில்லாதவனே. ஆயினும், ஸத்யஸங்கல்பனாகி (நினைத்ததை நினைத்தபடியே நிறைவேற்றும் திறமையுடையவனாகி) அந்த ஸங்கல்பத்தினாலேயே உலகங்களைப் படைப்பது முதலிய செயல்களையெல்லாம் நிறைவேற்றுகின்றனை. உனக்கு நீயே ப்ரபு. உனக்கு மேற்பட்டவன் மற்றொருவனும் கிடையாது. உன்சக்தி இத்தகையதென்று நினைக்க முடியாதது. அத்தகைய சக்திகள் பலவாயிரமுடையவன். ஆகையால் நீ ஸங்கல்பத்தினாலேயே ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களை நடத்துகின்றனை. கல்பாவஸானத்தில் இந்த ஜகத்தெல்லாம் உன்னுடைய உதரத்தில் அடங்கியிருந்தது. அப்பொழுது நீ உன்னுடைய ஸங்கல்பத்தினால் சிறிய குழவியாய்த் தோன்றி நீயொருவனே மிகவும் இளையதான ஓர் ஆலந்தளிரில் சயனித்துக் கொண்டிருந்தாய். அப்படிப்பட்ட நீ என் கர்ப்பத்தில் எப்படி இருந்தாய்? இதற்குக் காரணம் என்னவோ எங்களுக்குத் தெரியவில்லை. (எங்கள் பாக்யமேயன்றி மற்றொன்றும் காரணமன்று) அன்றியே ஸமஸ்த அவதாரங்களுக்கும் பொதுவான காரணம் ஒன்றுண்டு. யாதெனில்; சொல்லுகிறேன். 


துஷ்டர்களை அழிப்பதற்காகவும் உனது ஆஜ்ஞையைப் பின்செல்லுகிற உன் பக்தர்களைப் பாதுகாப்பதற்காகவும் நீ திருவுருவங்களைக் கொள்கின்றனை. வாராஹாதியான மற்ற அவதாரங்களைப்போல், இந்த அவதாரமும் ஸாதுக்களுக்கு உனது உண்மையை அறிவிப்பதற்காகவேயென்று நாங்கள் அறிகின்றோமன்றி மற்றொரு காரணமும் எங்களுக்குப் புலப்படவில்லை. உன்னுடைய அவதாரத்திற்குக் காரணம் எதுவேனும் ஆகட்டும். நாங்கள் உன்னுடைய தர்சனத்தினால் ப்ரயோஜனம் கைகூடப்பெற்றோம். தர்சனமாத்ரத்தினால் ப்ரயோஜனம் கைகூடுமோவென்று ஸந்தேஹிக்க வேண்டாம். எங்கேனும் உன் பேரைக் கேட்பினும், அதை வாயால் சொல்லினும், உன்னை வணங்கினும், உன்னை நினைக்கினும், நாயைத் தின்னும் ஹீன ஜாதியில் பிறந்த சண்டாளனும் அந்த க்ஷணமே யாகம் செய்வதற்கு யோக்யனாவான். பகவானே! இப்படியிருக்க, உன்னுடைய தர்சனத்தினால் நாங்கள் க்ருதார்த்தர்களானோம் என்பதில் ஸந்தேஹமுண்டோ? ப்ராஹ்மண க்ஷத்ரிய வைஸ்யர்களென்கிற மூன்று வர்ணத்தவர்களுக்கு மாத்ரமே யாகத்தில் அதிகாரம் உண்டு. நான்காவதான வர்ணத்தவர்களுக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை. அதிலும் ஹீன ஜாதியாகிய சண்டாளனுக்கு யாகத்தில் அதிகாரத்திற்கு ப்ரஸக்தியே இல்லை. அதற்குக் காரணம் துர்ஜாதியே. அந்த துர்ஜாதிக்குக் காரணம் ஜன்மாந்தரபாபமே. அப்படிப்பட்ட பாபிஷ்டனும், பகவானை ப்ரீதியுடன் நெஞ்சினால் நினைப்பது, அவனை வணங்குவது அவன் பேரைச் சொல்லுவது, அவன் பேரைப் பிறர் சொல்லக் கேட்பது ஆகிய இவற்றில் ஏதேனுமொன்று நேரப் பெருவானாயின், அந்த க்ஷணமே பாபமெல்லாம் தொலைந்து யாகம் செய்வதற்கு உரியவனாவான். (பகவானுடைய அங்கீகாரத்திற்கு யோக்யனாவான்). இப்படியிருக்க உன் காட்சியின் மஹிமையைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? எவனுடைய நாக்கு நுனியில் உனது நாமம் இருக்கின்றதோ, அவன் சண்டாளனாயினும் மேன்மையுடையவனே. ஏனெனில், உன் நாமத்தை எவர்கள் சொல்லுகிறார்களோ, அவர்கள் பல தவம் செய்தவர்களும், பல ஹோமங்களை நடத்தினவர்களும், பற்பல புண்ய தீர்த்த ஸ்னானம் செய்தவர்களும் வேதாத்யயனம் செய்தவர்களும் ஆனதுபற்றியே பெரியோர்களுமாகின்றார்கள். நீ தனக்குத்தான் தோற்றும் தன்மையுள்ள ஜீவாத்மாவினிடத்தில் அந்தராத்மாவாய் த்யானிக்கத் தகுந்தவன்; பெருமை அமைந்தவன், தன்னைப்பற்றினவர்க்கு அப்பெருமையை விளைவிப்பவன்; ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாயிருப்பினும் தன் ஜ்ஞான ப்ரகாசத்தினால் ஸம்ஸாரம் தீண்டப்பெறாதவன். ஜீவாத்மாக்களுக்கு ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஜ்ஞான ஸங்கோசம் உண்டாவதுபோல் உனக்கு உண்டாகிறதில்லை. நீ வேதங்களால் ஓதப்படுமவன்;  ஆகையால் வேதஸ்வரூபன், நீ எங்கும் நிறைந்தவனாகையால் விஷ்ணுவென்று கூறப்படுகின்றாய். நீ கபிலரென்னும் பேர் பூண்டு தத்வோபதேசத்தினால் உலகங்களை வாழ்விக்கும் பொருட்டு என்னிடத்தில் அவதரித்தனை. நீயே பரமபுருஷன். அத்தகையனான உன்னை வணங்குகின்றேன்.

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- கபிலரென்னும் பேருடைய பரமபுருஷன் இங்ஙனம் தேவஹூதியால் ஸ்தோத்ரம் செய்யப்பெற்று, தாய் தந்தைகளிடத்தில் மிகுதியும் ப்ரீதியுடையவனாகையால் மாதாவைப் பார்த்து கம்பீரமான மொழியுடன் இங்ஙனம் உரைத்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வாராய் மாதாவே! நான் சொன்ன வழி ஸுகமாகவே ஆசரிக்கத் தக்கதாயிருக்கும். இவ்வழியில் இழிந்து நடப்பாயாயின், சீக்ரத்தில் மோக்ஷம் பெறுவாய். இதுவே என்னுடைய ஸித்தாந்தம் (மோக்ஷ மார்க்கம் இதுவேயென்று நான் நிச்சயித்திருக்கின்றேன்). இந்த என் மதத்தில் ச்ரத்தை செய்வாயாக. ப்ரஹ்மோபதேசம் செய்கின்ற பெரியோர்கள் அடிக்கடி ஆராய்ந்து நிச்சயித்த மார்க்கமும் இதுவே. இம்மார்க்கத்தினால் எவ்விதத்திலும் பயத்திற்கிடமில்லாத என்னைப் பெறுவாய். இந்த என் மதத்தை அறியாதவர்கள் ஸம்ஸாரத்தையே அடைவார்கள். (அதினின்று விடுபட மாட்டார்கள்).

ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- பகவானாகிய கபிலர் இங்ஙனம் அழகான தன் ஜ்ஞான மார்க்கத்தை மாதாவுக்கு உபதேசித்து, ப்ரஹ்மோபதேசம் செய்யும் திறமையுடைய அம்மாதாவால் அனுமதி செய்யப் பெற்றுப் புறப்பட்டுப் போனார். அந்த தேவஹூதியும் புதல்வராகிய கபிலர் உபதேசித்த யோகசாஸ்த்ரத்தின்படி அந்த ஸரஸ்வதி நதிக்கரைக்கு அலங்காரமான அவ்வாச்ரமத்திலேயே மனவூக்கத்துடன் யோகாப்யாஸம் செய்து கொண்டிருந்தாள். அவள் மூன்று காலங்களிலும் ஸ்னானம் செய்து வந்தாள். அதனால் அவளுடைய சுரும்பார் குழல்கள் பொன் நிறமாயின. அவளுடைய தேஹம் கடும் தவத்தினால் இளைத்தது. அவள் மரவுரி உடுத்தியிருந்தாள். மற்றும் அவள் கர்த்தமருடைய தவத்தினாலும் யோக மஹிமையாலும் மிகுந்த மேன்மையுடைய தன் க்ருஹத்தைத் துறந்து அவ்வாச்ரமத்திலேயே நித்யவாஸம் செய்தாள். அந்த க்ருஹத்திற்கு என்ன மேன்மையென்னில், அது கர்த்தமருடைய தவமஹிமையால் ஏற்பட்டது. அதற்கு நிகரான மாளிகை எங்குமே அகப்படாது. அது எல்லா ஐச்வர்யங்களும் அமையப்பெற்றது. விமானத்தில் ஸஞ்சரிக்கின்ற தேவதைகளும் அதைக்கண்டு ஆசைப்படுவார்கள். அம்மாளிகையில் பால் நுரைபோல் மென்மையமைந்து கிர்மலமாயிருப்பவைகளும் தந்தத்தினால் இயற்றப் பெற்றவைகளும் ஸ்வர்ணத்தினால் அலங்காரம் செய்து அழகாயிருப்பவைகளுமான படுக்கைகளும் ஸ்வர்ணமயமான ஆஸனங்களும் ஸுகஸ்பர்சங்களான ரத்னகம்பளம் முதலிய ஆஸ்தரணங்களும் அமைந்திருக்கும். அங்கு மிகவும் நிர்மலமான ஸ்படிகரத்னங்களாலும் சிறந்த மரகத ரத்னங்களாலும் சுவறுகள் இயற்றப் பெற்றிருக்கும். அந்தச் சுவறுகளில் சிறந்த மாதரார்மணிகள் ப்ரதிபலிப்பார்கள். அத்தகைய அம்மாளிகையின் ப்ரதேசங்கள் அழியாமல் எரிகின்ற ரத்னங்களாகிற தீபங்களின் ஒளிகளால் எப்பொழுதும் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும். அம்மாளிகையின் பின்புறத்திலுள்ள உத்யானம், பாரிஜாதம் முதலிய பலவகைக் கல்பவ்ருக்ஷங்கள் பூத்திருக்கப்பெற்று சமணீயமாயிருக்கும். அந்த உத்யானத்தில் பக்ஷிகள் ஆணும் பெண்ணுமாகக் குலாவிக்கொண்டிருக்கும். வண்டுகள் புஷ்பங்களிலுள்ள தேன்களைப் பருகி மதித்துப் பாடிக்கொண்டிருக்கும். அவ்வுத்யானத்தில் தேவஹூதி நுழைந்து விளையாடும் காலத்தில் தேவதைகளுக்குப் பணிவிடை செய்பவரான கின்னராதிகள் அவளைப் பாடுவார்கள். நெய்தல்கள் மலர்ந்து மணம் கமழ்கின்ற நடை வாவியில் அவள் கர்த்தமரால் உபசாஸனம் செய்யப்பெற்று விளையாடிக் கொண்டிருப்பான். அவ்வுத்யானத்தைக் கண்டு தேவேந்த்ர போகத்தை அனுபவிக்கிற அப்ஸரஸ்த்ரீகளும் ஆசைப்படுவார்கள், அங்ஙனம் அழகியதான மாளிகையையும் அவ்வுத்யானத்தையும் அந்தந்த போகங்களையும் துறந்து அஹங்கார மமகாரங்களையும் அறுத்துக்கொண்டு அவ்வாச்ரமத்திலேயே இருந்து எதைப்பற்றியும் சிறிதும் கலக்கமின்றி மிகுந்த மனவூக்கத்துடன் யோகாப்யாஸம் செய்துவந்தாள். ஆனால் புதல்வனைப் பிரிந்தமையால் வருந்திச்சிறிது முகம் வாடப் பெற்றாள். கர்த்தம ப்ரஜாபதி இல்லறத்தைத் துறந்து துறவியாய் வனத்திற்குப் போனமையாலும், புதல்வனைப் பிரிய நேர்ந்தமையாலும் மிகவும் வருந்தி, ப்ரக்ருதி புருஷன் ஈஸ்வரன் என்கிற தத்வங்களின் உண்மையை அறிந்தவளாயினும், கன்றைப் பிரிந்த பசு போன்றிருந்தாள். குழந்தாய்! விதுரனே! தன் புதல்வனாகிய அந்தக் கபிலரென்னும் பேருடைய ஸ்ரீவிஷ்ணுவையே த்யானித்துக் கொண்டு வருகையில், சீக்ரகாலத்திலேயே அங்ஙனம் அழகியதான மாளிகை முதலியவற்றில் சிறிதும் விருப்பமில்லாதவலானாள். தன் புதல்வனாகிய கபில பகவான், பகவானுடைய உருவத்தை எங்ஙனம் த்யானிக்கவேண்டுமென்று தனக்கு மொழிந்தானோ, அங்ஙனமே தெளிந்த முகம் முதலிய அவயவங்கள் அமைந்த பகவானுடைய உருவத்தை முழுவதும் ஒரே தடவையில் சிந்திப்பதும் அவயவங்களைத் தனித்தனியே சிந்திப்பதுமாகிற க்ரமத்தின்படி தயானித்துக் கொண்டு வந்தாள். அவள் எவ்வகையிலும் தடைபடாத வைராக்யம் உண்டாகப்பெற்றாள். பகவானைப் பூஜிப்பது முதலிய கர்மங்களைத் தவறாமல் அனுஷ்டித்துக்கொண்டு வந்தாள். அதனால் அவளுக்கு ஆத்மாவின் உண்மையைப் பற்றின அறிவு வளர்ந்தது. இந்த ஜ்ஞான வைராக்யாதிகளால் பரப்ரஹ்மத்தை அடைவதற்கு ஹேதுவான பக்தியோகம் ப்ரவாஹம்போல் தடையின்றி மேன்மேலும் வளரப்பெற்றாள். அதனால் அவளுடைய மனம் பரிசுத்தமாயிற்று. அவள் அப்பொழுது அத்தகைய மனத்தினால் ஸர்வஜ்ஞனும் ஸ்வ ப்ரகாசத்தினால் ஸத்வாதி குணங்களின் கார்யமான சோக மோஹாதிகளற்றவனும் பசி தாஹம் முதலிய ஊர்மிகளில்லாதவனுமாகிய பரமபுருஷனை அனாயாஸமாக த்யானம் செய்தாள். அவள் அந்த தியானத்தின் மஹிமையால், ஜீவாத்மாக்களுக்கு ஆதாரமாயிருப்பவனும் ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்தவனுமாகிய பரம புருஷனிடத்தில் நிலைகின்ற மதியுடையவளானாள். ஜீவனுக்கு வருத்தங்களை விளைக்குத் தன்மையுள்ள ப்ரக்ருதியின் ஸம்பந்தம் பெரும்பாலும் நீங்கப் பெற்றமையால் குளிர் வெப்பம் முதலிய வருத்தங்களெல்லாம் நீங்கப் பெற்றாள். பரமாத்மாவை அனுபவிக்கையாகிற மஹாநந்தத்தையும் பெற்றாள். தினந்தோறும் பக்தி யோகம் வளர்ந்து வருகின்றமையாலும் ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணமான ஜீவனைச் சரீரமாகவுடைய பரமாத்மாவினிடத்தில் தினந்தோறும் மனம் சூழ்ந்து பதியப் பெறுகையாலும் தமஸ்ஸு முதலிய ப்ரக்ருதியின் குணங்களால் விளையக்கூடிய தேஹாத்மாபிமானம் முதலிய ப்ரமங்களெல்லாம் நாளடைவில் துலைந்து, ஸ்வப்னத்தினின்று எழுந்தவன் ஸ்வப்னத்தில் கண்ட வஸ்துக்களைப்போல், தேஹத்தை நினைக்காமலேயிருந்தாள். ஸ்வப்னங் கண்டவன் ஸ்வப்னத்தில் கண்ட வஸ்துக்களெல்லாம் அநித்யமென்று நிச்சயித்து அந்த ஸ்வப்னத்தில் கண்ட வஸ்துக்களைப் பற்றின ஸுகதுக்கங்களால் எங்ஙனம் மனம் கலங்கப் பெறமாட்டானோ, அங்ஙனமே தேவஹூதியும் தேஹத்தைப் பற்றினதெல்லாம் கர்மாதீனமென்றும் அநித்யமென்றும் நினைத்து அவற்றைப் பற்றின ஸுகதுக்கங்களால் மனம் கலங்கப் பெறாமல் தேஹம் பெருத்திருக்கிறதென்றும் இளைத்திருக்கிறதென்றும் நினைக்காமலேயிருந்தாள். தேஹம் போஷிக்கப்பட்டு வருமாயின் அப்பொழுதே இளைக்காமலிருக்கும். இதுவே அதன் ஸ்வபாவம். இப்படியிருக்க, அவளுடைய தேஹம் தன்னாலும் பிறராலும் போஷிக்கப் பெறாதிருப்பினும் இளைக்காமலே இருந்தது. ஏனென்னில், அவள் தேஹத்திற்குப் போஷணம் செய்யாதிருக்கிறோமே என்கிற மன வருத்தம் சிறிதும் நேரப்பெறாமலே இருந்தாள். அவளுக்கு அதைப்பற்றின சிந்தை எதுவுமே இல்லாமையால் அது இருந்தபடியே இருந்தது. மற்றும் அவள் தேஹம், எண்ணெய் தேய்த்து அரப்பிட்டு அலம்புவது முதலிய ஸம்ஸ்காரங்கள் எவையுமில்லாமையால் அழுக்கடைந்திருந்தது. ஆயினும் அது புகைமூடின அக்னிபோல் ப்ரகாசித்தது. வாஸுதேவனிடத்தில் நிலைநின்ற மதியுடைய அவளுடைய சரீரம் தபஸ்ஸும் யோகமும் நிறைந்து தலைமயிர்கள் அவிழ்ந்து விரிந்து அரையில் ஆடையுமில்லாதிருந்தது. அத்தகைய சரீரத்தை அவள் சிறிதும் நினைக்காமலேயிருந்தாள். ஆயினும் அவளது சரீரம் தெய்வத்தினால் பாதுகாக்கப் பெற்று ஒருவித கெடுதியுமில்லாதிருந்தது. இங்ஙனம் அவள் கபிலர் உபதேசித்த யோகமார்க்கத்தினால் சீக்ரத்தில், மஹா நந்தஸ்வரூபனான பரம புருஷனை அடைந்தாள். ஆ! இதென்ன ஆச்சர்யம்? ஸாதாரணமாகவே ஸ்த்ரீகள் அவிவேக முடையவர்கள். அதிலும் அந்த தேவஹூதி மஹத்தான போகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவள். அவள் அதையெல்லாம் துறந்து யோகமார்க்கத்தினால் பரப்ரஹ்மத்தை அடைந்தாளென்னில், இதைக் காட்டிலும் மேலான ஆச்சர்யம் என்னிருக்கின்றது? வாராய் வீரனாகிய விதுரனே! அந்த தேவஹூதி எந்த இடத்தில் மோக்ஷஸித்தியைப் பெற்றாளோ, மிகவும் பரிசுத்தமான அந்த க்ஷேத்ரம் ஸித்தாச்ரமமென்னும் பேரால் மூன்று லோகங்களிலும் ப்ரஸித்தி அடைந்தது. வாராய் நல்லியற்கை உடையவனே! அந்த தேவஹூதியின் சரீரம் அவள் அனுஷ்டித்த யோகத்தின் மஹிமையால் மயிர் நரைத்தல் தோல் சுருங்குதல் முதலிய விகாரங்கள் எவையுமின்றி அவளால் துறக்கப் பெற்று ஓர் நதியாய்த் தோற்றிப் பெருகிக் கொண்டிருந்தது. அந்ததி நதிகளெல்லாவற்றிலும் சிறப்புடையதும் அவரவர் விரும்பும் ஸித்திகளையெல்லாம் கொடுக்கவல்லதும் ஸித்தர்களால் சூழப்பட்டதுமாயிருந்தது. வாராய் விதுரனே!

மஹாயோகியாகிய கபில பகவான் மாதாவிடம் அனுமதி பெற்றுக்கொண்டு தந்தையின்
ஆஸ்ரமத்தினின்று வடகிழக்கு மூலையாகப் புறப்பட்டுப் போனார். அங்கு ஸித்தர்களும் சாரணர்களும் கந்தர்வர்களும் முனிவர்களும் அப்ஸரஸ்த்ரீகளும் கூட்டம் கூட்டமாய் வந்து அந்தக் கபிலபகவானை ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டு பின் சென்றார்கள். அம்மஹானுபாவன் அங்ஙனமே ஸமுத்ரம் சேர்ந்து அங்கு ஸமுத்ர ராஜனால் பூஜித்து இருப்பிடமும் கொடுக்கப்பெற்று, தான் மொழிந்த ஸாங்க்ய சாஸ்த்ரத்திற்கு ப்ரவர்த்தகர்களான யோகிகள் துதி செய்ய, லோகங்களின் க்ஷேமத்திற்காக மன ஏக்கத்துடன் தானும் யோகாப்யாஸம் செய்துகொண்டு அவ்விடத்திலேயே இருக்கின்றான். அப்பா! பாபமற்றவனே! நீ எதைக் குறித்து என்னை விணாவினையோ அந்த ஸ்வாயம்புவமனுவின் சரித்ரத்தையெல்லாம் உனக்கு மொழிந்தேன். அந்த ப்ரஸ்தாவத்தினால் கபிலருக்கும் தேவஹூதிக்கும் நடந்த ஸம்வாதத்தையும் மொழிந்தேன். இது உலகங்களையெல்லாம் பாவனஞ்செய்யும், இந்தக் கபிலருடைய மதம் மிக்க ரஹஸ்யமானது. ஆத்மயோகத்தைப் பற்றினது. இதை எவன் கேட்கிறானோ, எவன் சொல்லுகிறானோ, அவர்கள் இருவரும் கருடத்வஜனாகிய பகவானிடத்தில் பக்தியோகம் உண்டாகப்பெற்று அந்த பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பெறுவார்கள். 

முப்பத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

மூன்றாவது ஸ்கந்தமும் முற்றுப் பெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக