மயக்கும் தமிழ் - 51 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உன்னிடம் மாறாத பக்தி வேண்டும்!

ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான்;
வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என் நாயகரே

(பெரிய திருமொழி)

நிலமகளின் உடைமையையெல்லாம் பெருவெள்ளம் கொண்ட காலத்தில்  நீருக்கும் சேற்றுக்கும் பின்வாங்காத வராக வடிவினை ஏற்றுக் கொண்டு பூமியை எடுத்துக் காத்தான் எம்பெருமான். எம்பெருமானின் பல்வேறுபட்ட அவதாரங்களில்தான் எத்துணை ஈடுபாடு நம் திருமங்கையாழ்வாருக்கு! நம்மைக் காப்பதற்குத்தானே எம்பெருமான் இப்படிப்பட்ட வராக அவதாரத்தை எடுத்தான் என்று மகிழ்ச்சியின் பூரித்துப் போகிறாளாம் பூமித்தாய்! இந்த செய்தியை உள்ளடக்கும் விதமாகத்தான் ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான் என்று பூமித் தாயை அழகிய தமிழில் நாம் எல்லோரும் புரிந்து கொள்ளும்படியாக நிலமங்கை என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் ஆழ்வார்! வராகப் பெருமானுக்கே ஞானப்பிரான் என்று பெயர் உண்டு. ஆழ்வார் இன்னும் ஒருபடி மேல் சென்று ஞானத்தின் ஒளி உரு என்கிறார். நம் வாழ்வின் திசைகாட்டியாகவும், வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் இருப்பது ஆழ்வார்களின் அற்புதப் பாசுரங்கள். பூமாதேவியைக் காத்த எம்பெருமான் வராக அவதாரம் கொண்டவன் எங்கிருக்கிறான் தெரியுமா? 
கானத்தின் கடல் மல்லைத் தலசயனத்து உறைகின்ற... அடர்ந்த காடு, பக்கத்திலே ஆர்ப்பரிக்கின்ற கடல். இதன் நடுவே எம்பெருமான் தலசயனமாக அதாவது தரையையே பிரதானமாக நினைத்து துயில் கொள்ளுகிறானாம். பள்ளிகொண்ட பெருமாள் என்றால் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருப்பான் இங்கே, மகாபலிபுரத்தில் அதாவது திருக்கடல் மல்லையில் பக்தர்களைக் காப்பதற்காக அருளை வாரி வாரி வழங்குவதற்காக அங்கே நித்யவாசம் செய்கிறானாம்! இறைவனைப்பற்றி மட்டும் திருமங்கை ஆழ்வார் சிந்திக்கவில்லை கூடவே இறையடியார்களையும் அவர்களின் உயரிய பண்புகளையும் சொல்கிறார் ஆழ்வார். அதனால்தான் இந்தப் பாசுரத்தின் இறுதியின் நினைவார் என் நாயகரே! என்கிறார். பேராற்றலும் பெருஞ்சிறப்பும் வாய்ந்த இந்த கடல் மல்லைத் தலசயனத்து எம்பெருமானை நினைப்பவர்கள், வந்து தரிசனம் செய்கிறவர்கள் எல்லாம் என் வணக்கத்திற்கு உரிய நாயகர்கள் என்று ஏற்றிப் போற்றுகிறார்!

திருமங்கை ஆழ்வார் வராகப் பெருமானை கொண்டாடி தலையில் வைத்து ஆடினார் என்றால் தமிழ் இனத் தலைவர் என்று பெயர் பெற்ற பேயாழ்வார் மயிலை தந்த மகாமுனிவர், திருமழிசை ஆழ்வாரின் குருவான பேயாழ்வார் வாமன அவதாரத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். மகாபலி சக்ரவர்த்தியின் வரலாறு நாம் எல்லாம் அறிந்ததுதான். காலம் காலமாய் படித்தும் கேட்டும் மகாபலி தொடர்பான செய்திகளை அறிந்து வைத்திருக்கிறோம். இவ்வளவு பெரிய வரலாற்று புராண நிகழ்வை நான்கு வரிகளில் ‘நச்’ சென்று நமக்கு படையல் வைத்திருக்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார், நம்மைப் போன்ற சாதாரண அடியார்களுக்கும் இறைவன்பால் நெருக்கமும் உருக்கமும் ஏற்படுத்தும் பாசுரம் இதோ...

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே  தாவிய நின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி
அஞ்சாதிருக்க அருள்!

(மூன்றாம் திருவந்தாதி)

பிறவிகளை நினைத்து அஞ்சவில்லை ஆழ்வார். எனக்கு எத்துணை பிறவி வேண்டுமானாலும் வாய்க்கட்டும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, உன்னிடம் மாறாத பக்தி, பிடிப்பு இருந்தால் எனக்குப் போதும் என்று இரும்பூதெய்கிறார் ஆழ்வார். எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி அஞ்சாதிருக்க அருள்.

நான் அஞ்சாதிருக்க வேண்டும். அதற்கு உன்னருள் எனக்கு கிடைக்க வேண்டும். எம்பெருமான் நெடியோன் ஆஜானுபாகுவாக காணப்படுபவன், பக்தர்களுக்கு தோற்றம் அளிப்பவன், அப்படிப்பட்ட நீ எப்பேர்பட்ட காரியம் செய்திருக்கிறாய் தெரியுமா? உன் இயல்புக்கு மாறாக குட்டையான வடிவம் எடுத்து அசுரனான மாவலியிடம் சென்று மூவடி நிலம் கேட்டு அவனுக்கும் நாட்டுக்கும் தர்மத்தை போதித்தவனாயிற்றே நீ! உலகளந்த உத்தமனான நீ செய்த காரியம் சிறுபிள்ளைத்தனமானதா என்ன? நீ எப்படிப்பட்டவன் பேரண்டப் பிரபஞ்சத்தின் பிதாமகன் ஆயிற்றே. உன் அழகிய திருவடிகளுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றேன். எம்பெருமானின் திருநாமத்திற்குள்ள ஏற்றத்தை எல்லா ஆழ்வார்களும் உரத்த சிந்தனையில் தத்தம் படைப்புகளில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவரவர்கள் நடை, சொல்லும் விதம் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். எம்பெருமான் என்னும் கதாநாயகனைப் பற்றிய கருப்பொருள் ஒன்றுதான்.

‘‘தேனும் பாலும் அமுதமாய
திருமால் திருநாமம்
நானும் சொன்னேன்; நமரும் உரைமின்;
நமோ நாராயணமே!’’

என்றெல்லாம் ஆழ்வார்கள் திருமாலின் திருப்பெயர்களை சொன்னால் நலம் பயக்கும் மன மாசு தீரும் என்கிறார்கள். எம்பெருமான் மீது பித்தேறி உன்மத்த நிலை அடைந்த நிலையில் நம்மாழ்வார் படைத்த திருவாய்மொழிப் பாசுரம்...

‘‘ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா என்று என்று
கூவிக் கூவி நெஞ்த உருகி, கண்பனி சோர நின்றால்
பாவநீ என்று ஒன்று சொல்லாய் 
பாவியேன் காணவந்தே’’

(திருவாய்மொழி)

இறைவனைப் பார்த்து நம்மாழ்வார் கேட்கிறார் ‘‘நீ என் கண் முன்னே தோன்றிப் பாவி என்று ஒரு வார்த்தை சொன்னாலும் பரவாயில்லை. நான் உன் நிஜ தரிசனத்தைக் காண வேண்டும்’’ என்கிறார். பெருமாளின் மேல் பேரன்பு இல்லாவிட்டால் இதெல்லாம் சாத்தியமா? அடுத்து நம் சாதாரணமான மனித வாழ்க்கைக்கு வருகிறார். நான் எத்தனை கோடி பாவங்களை செய்தேனோ? அறியேன். பெருமாளை ஆழ்வார் எப்படி அழைக்கிறார் தெரியுமா?

தாமோதரா என்று என்று கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர ஆண்டவனை நினைத்து அவனை வாயாரக் கூப்பிட்டவுடன் நெஞ்சு விம்முகிறதாம், கண்களிலே நீர் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதைத் தானே மாணிக்கவாசகரும் சொல்கிறார் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே பெருமக்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில்தான் சிந்தித்து இருக்கிறார்கள். படைத்தவர்கள் வேறு வேறாக இருந்தாலும் பாடுபொருள் ஒன்றுதான். எம்பெருமானின் திருவடிகளை தொழுது எழுவோம்! வேண்டியதைப் பெறுவோம்!

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை