மயக்கும் வாழ்வில் தெளிவு பிறக்கும்!
தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர்
ஆரும் அறியார் அவன்பெருமை ஓரும்
பொருள் முடிவும் இத்தனையே; எத்தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான்பால்.
நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வாரின் தீந்தமிழ்ப் பாசுரம் இது! அருளாலே அவனை அடையலாம் என்று தீர்க்கமாக நம்புகிறார் திருமழிசை ஆழ்வார். பேயாழ்வாரிடம் கற்ற தேர்ச்சி அவரை ஞானத்தின்பால் காட்டாற்று வெள்ளத்தைப்போல் ஆழ்வாரை அடித்துச் சென்றுவிட்டது எனலாம். இந்தப் பாசுரத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் உள் ஊடாகப் பார்த்தோமானால் ஏகப்பட்ட ரகசியங்களை புதைத்து வைத்திருக்கிறார் இந்த ஆழ்வார்.‘‘ஆரும் அறியார் அவன் பெருமை’’ என்கிறார். நாம் சிந்தித்துப் பார்த்தால்தான் இந்தப் பேருண்மையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஜபம், தபம் செய்துவிட்டாலே போதும். வேள்வித்தீயை வளர்த்தால் அதில் அவனைக் கண்டுவிடலாம் என்று எண்ணும் பலரும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இந்தப் பெருமக்கள் நினைப்பதுபோல் அத்துணை எளிமையான செயல் கிடையாது. அவன் அருளைப் பெறுவது. இதைத்தான் நான்கு வேதங்களும் ஏகப்பட்ட உபநிடதங்களும் ரிஷிகளின் வாக்குகளும் இன்றுவரை சொல்லி வருகின்றன. அதுதான் உண்மையின் உண்மை என்கிறார். அவ்வளவு சீக்கிரம் அகப்படக்கூடியவனா எம்பெருமான்?
இரண்டாம் திருவந்தாதி. சாதாரண எளிய பக்தனின் நிலையில் நின்று எம்பெருமானிடம் பேசுகிறார் பூதத்தாழ்வார்.‘‘கண்ணபிரானே! ஆயர்பாடியில் உள்ள அனைவருக்கும் ஆபத்பாந்தவனாக இருந்தாய்! அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் அனைத்திற்கும் ஆதாரமானவன் நீதான் கிருஷ்ணா! இதிகாச புராணங்களிலும் நீதான் மறைபொருளாய் இருக்கிறாய்! சிறந்ததாகச் சொல்லப்படுகின்ற அழகிய வேதங்களின் வடிவமாக நின்ற திருமாலே! இவ்வளவு சிறப்பு இருந்தும் உன்னைப்பற்றி கேட்டால் மட்டும் போதாது. பரம பதத்தில் உன்னை நேரே கண்டு அனுபவிக்கும்படி நீ அருள் செய்ய வேண்டும்.
‘‘திருமொழியாய் நின்ற திருமாலே!
உன்னைப் பருமொழியால் காணப்பணி!’’
‘பணி’ என்பதற்கு திருவுள்ளம் பற்ற வேண்டும் என்று கருதுகிறார். நண்பனை நேரே பார்த்தாலே பரவசப்படுகிறோம். இந்த உலகப் பேரியக்கத்திற்கே காரணகர்த்தாவாகக் கருதப்படுகின்ற கருமாமுகில் உருவனான கண்ணபிரானை நேரே பார்க்க வேண்டும். அதற்கும் உன் கட்டளைதான் தேவையாக இருக்கிறது.
பருமொழியால் காணப் பணி எம்பெருமானின் மேல் ஆழ்வாருக்கு உள்ள நெருக்கத்தை உருக்கத்தை பாசத்தை பந்தத்தை தெரியப்படுத்துகிறார். ஏன் தெரியுமா?
ஆழ்வார்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் இறைவனின் பெருங் கருணையைப் பெற மனதை சுத்தப்படுத்தி மனம், மெய், மொழிகளாலே அவனை சரணடைந்தால் அவனருள் தானாக நம்மிடம் வந்து சேரும். திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் பல இடங்களில்
‘‘மணிமாடக் கோயிலை வணங்கு என் மனனே!
வணங்கு என் மடநெஞ்சே.
காழிச்சீராம விண்ணகர் சேர்மினிரே.’’
தன் மனதிற்கு கட்டளையிடுகிறார். திவ்ய தேசங்களில் அருட்பாலிக்கின்ற எம்பெருமானிடம் மனமே நீ விரைந்து செல் என்கிறார். திருவாய்மொழி எங்கும் நம்மாழ்வார் இறைவனின் பரிபூரணத்தைக் கண்டு கண்கலங்குகிறார். என்னைப் போன்ற சிறிய ஞானம் படைத்தவனுக்கும் உன் இன்னருள் கிடைக்கிறதே இதை என்னவென்று சொல்ல?
‘‘இன்தமிழ் பாடிய ஈசனை, ஆதியாய்
நின்ற என் சோதியை, என் சொல்லி நிற்பனோ?’’
எத்தகைய சொற்களால் புகழ்ந்தாலும் உன்னைப் புகழ முடியுமா? அந்தத் தகுதிதான் எனக்கு இருக்கிறதா? இந்தக் கேள்வியை யார் சொல்கிறார் தெரியுமா? ஞானமே உருவான நம்மாழ்வார் ஆழ்வார்களின் தலைமகன் வேதத்தை தமிழ்படுத்திய தரணி போற்றும் தலைமகனின் இந்த அடக்கம் எவ்வளவு பெரிய உண்மைகளை ஊருக்கு எடுத்துச் செல்கிறது. நாமும், பக்தியோடும் ஒழுக்கத்தோடும் இறைவனின் திருமாலின் திருவடியில் சரணடைந்தால் மயக்கும் வாழ்வில் தெளிவு பிறக்கும். தூய பளிங்கு நீர்போல வாழ்வு இனிமையாக விளங்கும்!
நிறைவாக திருவாய்மொழிப் பாசுரம்:
‘‘உலகம் உண்ட பெருவாயா
உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
கூடும் ஆறு கூறாயே!’’
(முற்றும்)
நன்றி - தினகரன்