சனி, 14 டிசம்பர், 2019

ஸ்ரீ ஆண்டாள் விபவ வைபவம்! - வசந்தா கோவிந்தன்

‘திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே' 

என்று ஸ்ரீ ஆண்டாளை, அப்பிள்ளை என்பவர் வாழ்த்திப் பாடியுள்ளார்.

எந்நாளும் மகாவிஷ்ணுவையே தியானித்துக் கொண்டிருக்கும், 'விஷ்ணு சித்தர்' எனும் பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் புஷ்ப நந்தவனம் அமைத்து, அந்த நந்தவனத்திலேயே துளசிச் செடியின் கீழ் குழந்தையாகக் கண்டெடுத்த திருவவதாரம் ஸ்ரீ ஆண்டாள். அது, ஆடி மாதம் பூர நட்சத்திரம்!

தாம் சூடிக் கொண்ட பூ மாலையையே பெருமாளுக்கு அளித்து, 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்ற பெருமையை பெற்றவள். அந்த ஸ்ரீரங்கநாதனையே வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மணாளனாக வரித்தவள்.

தமது சிஷ்யனும், பாண்டிய மன்னனுமான ஸ்ரீ வல்லபதேவனுடைய உதவியுடன் ஆண்டாள் விக்ரஹத்தை பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதிஷ்டை செய்தார். அர்ச்சா ரூபத்தில் அருளும் ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் மூன்று மகான்களுக்கு மட்டும் விபவ ரூபத்தில் காட்சியளித்தார் என்பது வரலாறு.


ஸ்ரீ ராமானுஜர் 

'நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் 
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் 
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?' 

என்று தமது மன ஆசையை, திருமாலிருஞ்சோலை பெருமாள் மேல் கொண்ட பக்தியை பாடி வைத்த ஆண்டாளின் ஆசையைப் பூர்த்தி செய்து வைத்தார் எம்பெருமானார். 'பகவானுக்கு நாச்சியார் படைக்க எண்ணிய இவை அனைத்தும் பாடலாகவே உள்ளனவே; செய்ய முயன்றதாகவே தெரியவில்லையே' என்று அங்கலாய்த்த எம்பெருமானார், திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தடா, அதாவது அண்டா நிறைய பால் சேர்த்த அக்காரவடிசல் பாயசத்தையும், நூறு தடா வெண்ணெயையும் சமர்ப்பித்து விட்டு, உடனேயே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாளை சேவித்து, 'அன்று பாடியருளியதை இன்று நான் நிறை வேற்றி விட்டேன்' என்று இராமானுஜர் பணிவுடன் நின்றார்.

அப்போது, கர்பகிரஹத்திலிருந்து அர்த்தமண்டபம் வரை நடந்து வந்து, 'வாரும் நம் அண்ணலே' என்று வாழ்த்தி வரவேற்றாளாம் ஆண்டாள் நாச்சியார். அதனால்தான், 'பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே' என்று கூறப்பட்டது.

ஸ்ரீ மஹாதேசிகன் 

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு மாதந்தோறும், அவரது அவதார நட்சத்திரமான பூர நட்சத்திர திருநாளில் புறப்பாடு நடைபெறும். ஸ்ரீஸ்வாமி தேசிகர் ஸ்ரீ ஆண்டாளை சேவிக்க எண்ணி, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்தார். அது, பூர நட்சத்திர புறப்பாடு தினம். தேசிகரின் உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தேக அசௌகரியம் இப்படி ஆனதால், தாயாரை சேவிக்க முடியவில்லையே என்று தேசிகர் தவித்துக் கொண்டிருந்தார். எப்பவும் தாயாரின் புறப்பாடு செல்லும் வீதியில் அன்று ஏதோதடங்கல் ஏற்பட்டதால், தேசிகர் தங்கியிருந்த வீதி வழியாக தாயார் வந்தருளியதோடு, ஸ்வாமி தங்கியிருந்த திருமாளிகை முன்பு நின்று சேவை சாதித்தருளினாள். தாயாரின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்த தேசிகர், தெண்டனிட்டு சேவித்து, உடனே தாயாரின் கருணை குறித்து இயற்றியதுதான், 'கோதாஸ்துதி.'

ஸ்ரீ மணவாள மாமுனிகள் 

ஸ்ரீ ஆண்டாளின் மார்கழி நீராட்டல் உத்ஸவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏழு நாட்கள் நடந்தேறுவது உண்டு. ஆண்டாளின் நீராட்டல் உத்ஸவத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல ஸ்ரீ மணவாள மாமுனிகள் விரும்பி, வந்தடைந்தார். பிரயாணத்தில் ஒரு நாள் காலதாமதமாகச் சென்றதால், ஏழாம் நாள் உத்ஸவம் முடிந்து விட்டது. “நீராட்டல் உத்ஸவத்தை சேவிக்க முடியவில்லையே” என்று ஆண்டாளைப் பிரார்த்திக்க, ஆண்டாளும் மனமுவந்து தை மாதம் சங்கராந்தியன்று, அதாவது ஏழாம் நாள் உத்ஸவத்தின் மறுநாள் எட்டாம் நாளாக நீராட்டல் உத்ஸவம், அதுவும் மாமுனிக்கு நேரில் சேவை சாதித்து உத்ஸவம் கண்டருளி அவர் மனதை உற்சாகப் படுத்தினார். 

இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் நீராட்டல் உத்ஸவம் எட்டு நாட்கள் நடைபெறுகிறது. அன்று மாமுனிகளின் சன்னிதி வாசலில் ஆண்டாள் எழுந்தருள, மாமுனிகளும் கைத்தல சேவையாக ஆண்டாளை மங்களாசாசனம் செய்ய, மணவாள மாமுனிக்கு மாலை, பரிவட்டம், சடாரி, ஹாரத்தி செய்து மரியாதையளிக்கும் நடைமுறையைக் கண்டு தரிசிக்கலாம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - தீபம் ஆகஸ்ட் 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக