செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 228

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பன்னிரண்டாவது அத்தியாயம்

(அகாஸூர வதம்)

“இது முதல், மூன்று அத்யாயங்கள் பின்புள்ளவர்களால் சேர்க்கப்பட்டனவென்று கூறுகிறார்கள்.”

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், விடியற்காலையில் எழுந்து, நண்பர்களான கன்று மேய்க்கும் பிள்ளைகளை எழுப்பிக்கொண்டு, வனத்திலேயே முதல் வேளை போஜனம் செய்ய (சாப்பிட) விரும்பிக் கன்றுகளை ஓட்டிக்கொண்டு, அழகிய வேணு கானத்துடன் புறப்பட்டான். ஒருவர்க்கொருவர் நட்புடைய அனேகமாயிரம் கோப குமாரர்கள், அழகிய உரி, கொம்பு, குழல் இவைகளைக் கையில் ஏந்திக்கொண்டு ஆயிரத்திற்கு மேற்பட்டவைகளான தங்கள் தங்கள் கன்றுகளை முன்னிட்டுக்கொண்டு அந்த ஸ்ரீக்ருஷ்ணனோடு கூடவே மனக் களிப்புடன் புறப்பட்டார்கள், பிறகு, அந்தக் கோப குமாரர்கள், தங்கள் தங்கள் கன்றுகளைக் கணக்கற்றவைகளான ஸ்ரீக்ருஷ்ணனுடைய கன்றுகளுடன் ஒரு மந்தையாகச் சேர்த்து, மேய்த்துக் கொண்டு, பாலக்ரீடைகளால் (சிறுவர்களுக்குரிய விளையாட்டுக்களால்) விளையாடினார்கள். அவர்கள், தங்கள் தாய்மார்களால் பாலமணி, குந்தமணி, ரத்னம், பொன் இவைகளைப் பூட்டி அலங்காரம் செய்யப்பெற்றவர்களாயினும், காய், தளிர், பூங்கொத்து, புஷ்பங்கள், மயிலிறகு, சிவப்பு நிற தாதுப்பொடிகள் ஆகிய இவைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒருவர்க்கொருவருடைய உரி முதலியவற்றைத் திருடி ஒளித்து வைப்பதும், அவற்றிற்குடையவர்கள் தேடியெடுப்பார்களாயின், அவற்றை அவ்விடத்தினின்று தூரத்தில் வீசியெறிவதும், அங்குப் போய் எடுக்கப்போவார்களாயின் அவற்றை அவ்விடத்தினின்று தூரத்தில் வீசியெறிவதும், சிரித்து மீண்டு தாங்களே எடுத்துக்கொள்வதுமாகி விளையாடினார்கள்.

ஸ்ரீக்ருஷ்ணன் வனத்தின் சோபையைப் பார்க்க விரும்பி தூரம் போகையில், கோப குமாரர்கள் நான் முன்னே, நான் முன்னே என்று போட்டியிட்டு, விரைவுடன் ஓடிச்சென்று, அவனைத் தொட்டுக் களித்தார்கள். சிலர் வேணு கானம் செய்வதும், சிலர் கொம்புகளை ஊதுவதும், சிலர் அதற்கு ஒத்திருக்குமாறு பாடுவதும், சிலர் குயில்களோடு கூடக் கூவுவதும், சிலர் பக்ஷிகளின் நிழல்களைத் தொடர்ந்தோடுவதும், சிலர் ஹம்ஸங்களோடு அழகாக நடப்பதும், சிலர் கொக்குகளோடு கூட உட்காருவதும், சிலர் மயில்களோடு கூடக் கூத்தாடுவதும், சிலர் குரங்குகளின் வாலைப் பிடித்திழுப்பதும். சிலர் அந்தக் குரங்குகளோடு கூட மரமேறுவதும், சிலர் அவற்றோடு கூடப் பல்லைக் காட்டுவது, மூஞ்சியைக் காட்டுவது, புருவத்தை நெரிப்பது முதலிய விகாரமான சேஷ்டைகளைச் செய்வதும், சிலர் ஒரு கிளையினின்று மற்றொரு கிளைக்குக் கிளம்பிக் குதிப்பதும், சிலர் தவளைகளோடு கூடக் கிளம்பிக் கிளம்பிச் செல்வதும், சிலர் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதும், சிலர் தங்கள் ப்ரதி பிம்பங்களைப் (நீரில் ப்ரதிபலிக்கும் தங்கள் உருவங்களை) பரிஹஸிப்பதும் (கேலி செய்வதும்), சிலர் ப்ரதித்வனிகளை (எதிரொலி) ஊதுவதுமாயிருந்தார்கள். 

ப்ரஹ்மானந்தானுபவத்தினால் உயர்ந்த ஆனந்தமாகிற பரமாத்ம ஆனந்தத்தை அனுபவிப்பதால் உண்டான ப்ரீதியினால் தூண்டப்பட்டு மேன்மேலும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்யும் அடியவர்களான நல்லோர்களுக்கு பரதெய்வமாய்த் தோற்றுகின்றவனும், அவனுடைய மாயையினால் மதி (புத்தி) மயங்கின மூட (அறிவற்ற) மனிதர்களுக்கு ஸாதாரண மானிடக் குழந்தையாய்த் தோற்றுகின்றவனுமாகிய, ஸ்ரீக்ருஷ்ணனுடன் மஹா புண்யசாலிகளான கோபகுமாரர்கள் இவ்வாறு விளையாடினார்கள். 

பல ஜன்மங்களில் உபவாஸாதிகளால் (உண்ணா நோன்பு முதலிய விரதங்களால்) சரீரத்தை உலர்த்தி, அதனால் பரிசுத்தமான மனமுடைய யோகிகளுக்கும் கூட எவனுடைய பாததூளி கிடைக்க அரிதோ, அப்படிப்பட்ட பகவான் தானே இந்த இடைச்சேரியிலுள்ளவர்கள் கண்களுக்கு விஷயமானான். இவர்களுடைய பாக்யத்தை என்னவென்று சொல்லுவேன்? இது மிகவும் அற்புதமாயிருக்கின்றது. இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனும், மற்ற கோபகுமாரர்களும் விளையாடிக்கொண்டிருக்கையில், அகனென்னும் மஹாஸுரன் அவர்கள் ஸுகமாக விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், அவர்களை எதிர்த்து வந்தான். 

அம்ருத பானம் செய்து மரண பயமற்ற தேவதைகளும் கூட, தாங்கள் ஸுகமாக ஜீவித்திருக்க விரும்பி “இவன் எப்பொழுது சாவானோ” என்று அவனுடைய நாசத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பகி, பகன் இவர்களுக்குப் பின் பிறந்தவனாகிய அந்த அகாஸுரன், கம்ஸனால் கட்டளையிடப்பெற்று, க்ருஷ்ணன் முதலிய சிறு பிள்ளைகளைப் பார்த்து “அதோ புலப்படுகின்ற இவர்களுக்குள் இவன் என்னுடைய ஸஹோதரனாகிய பகாஸுரனைக் கொன்றவன். ஆகையால், இவனைப் பலராமன் முதலிய மற்ற பிள்ளைகளுடன் கொன்று விடுகிறேன். இந்த க்ருஷ்ணாதிகளை என் ஸ்னேஹிதனான பகனுக்கு எள்ளும் ஜலமுமாகச் செய்வேனாயின், அப்பொழுது இடைச் சேரியிலுள்ளவர்கள் அனைவரும் மாண்டாற்போலவே. (இவர்களைக் கொன்று, இறந்த என் ஸ்னேஹிதனுக்கு எள்ளும் நீரும் அளிக்கும் திருப்தியை விளைக்கிறேன் என்று பொருள்). ப்ராணன் (உயிர்) போன பின்பு, சரீரங்களில் என்ன சிந்தை இருக்கிறது? ப்ராணன் போன பின்பு, சரீரம் உடனே நசித்துப் போமல்லவா? ப்ராணிகள் பிள்ளைகளையே ப்ராணனாகவுடையவர்கள். ப்ராணன்கள் போன்ற பிள்ளைகளை நான் கொன்ற பின்பு, இடைச்சேரியிலுள்ளவர்கள் தாங்களே மாண்டு போவர்கள். ஆகையால், அவர்களைப் பற்றித் தனியே யத்னம் (முயற்சி) செய்யவேண்டியதில்லை” என்று நிச்சயித்துக் கொண்டு, துர்ப்புத்தியுடைய (கெட்ட எண்ணம் உடைய) அந்த அகாஸுரன், ராம க்ருஷ்ணாதிகளை விழுங்கி விடவேண்டுமென்று விரும்பி, யோஜனை தூரம் நீண்டு, பெரிய பர்வதம் (மலைப்) போலப் பருத்து, குஹை போன்ற வாயைத் திறந்து கொண்டிருக்கிற அற்புதமான பெரிய மலைப்பாம்பின் உருவத்தைத் தரித்து, அவர்கள் போகும் வழியில் படுத்திருந்தான். 

அந்த மலைப் பாம்பின் கீழுதடு பூமியிலும், மேலுதடு மேக மண்டலத்திலுமாயிருந்தன. வாயைத் திறந்து கொண்டிருக்கிற அந்த மலைப்பாம்பின் கடைவாய்கள், குஹைகள் போன்றிருந்தன. அதனுடைய கோரைகள், பர்வத (மலைச்) சிகரங்கள் போன்றிருந்தன. அதனுடைய உள் வாயெல்லாம், பெரிய அந்தகாரம் (இருட்டு) மூடியிருந்தது. அதன் நாக்கு, நீண்ட வழி போன்று இருந்தது. அதன் மூச்சுக் காற்று, பெரிய நெருப்புக் காற்றுப் போன்றிருந்தது. அதன் கண்கள், காட்டுத் தீ போல எரிக்குத் திறமையுடையவைகளாயிருந்தன. இதைக் கண்ட கோப குமாரர்கள் அனைவரும் இது வாயைத் திறந்து கொண்டிருக்கிற மலைப் பாம்பா? அல்லது ப்ருந்தாவனத்தினுடைய அழகிய கண்காட்சியா? என்று ப்ரமித்துக் கற்பனை செய்தார்கள். “ஓ நண்பர்களே! இதோ முன்னே புலப்படுகிற இவ்வுருவம், ஒரு ஜந்து போலத் தோன்றுகிறதல்லவா? மற்றும், நம்மை விழுங்குவதற்கு வாயைத் திறந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறதல்லவா!” என்று சில பிள்ளைகள் சொல்ல, அதைக் கேட்டு வேறு சில பிள்ளைகள், “நண்பர்களே! ஸூர்ய கிரணங்களால் சிவந்திருக்கிற மேகம் மேலுதடு போலவும், அந்த மேகத்தின் காந்தியால் சிவந்திருக்கின்ற தரை கீழுதடு போலவும், புலப்படுகின்றன; பாருங்கள். இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலுமுள்ள பர்வத (மலை) குஹைகள், கடைவாய்கள் போன்றிருக்கின்றன. இந்த இடது, வலது பக்கங்களிலுள்ள பர்வத (மலை) சிகரங்களின் வரிசைகள், கோரைப் பற்களோடொத்திருக்கின்றன. அகன்று நீண்டிருக்கிற இந்த மார்க்கம், அதன் நாக்கை ஒத்திருக்கின்றது. இந்தப் பர்வத (மலை) சிகரங்களினிடையிலுள்ள அந்தகாரம் (இருட்டு) அதன் உள்வாய் போல் தோன்றுகிறது. காட்டுத் தீயினால் சுட்டுக் கொண்டிருக்கிற இப்பெருங்காற்று, மூச்சுக் காற்று போல் தோன்றுகிறது; பாருங்கள். காட்டுத் தீயினால் கொளுத்தப்பட்ட ஜந்துக்களின் துர்க்கந்தம் (கெட்ட வாசனை) மாம்ஸங்களைத் தின்ற மலைப்பாம்பின் வாய்நாற்றம் போன்றிருக்கிறது. கன்றுகளும், கன்று மேய்ப்பவர்களுமாகிய நாமெல்லாரும் நுழைவோம். நம்மை விழுங்கி விடுமா என்ன? அப்படி விழுங்குமாயின், இதுவும் பகாஸுரனைப்போல் க்ஷணத்திற்குள் இந்த ஸ்ரீக்ருஷ்ணனால் நாசம் அடையப் போகின்றது” என்று மொழிந்து, பகாஸுரனைக் கொன்ற ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகிய முகத்தைக் கண்டு, உரக்கச் சிரிப்பதும், கைகளால் தாளமிடுவதுமாகி கடந்து சென்றார்கள். 

இவ்வாறு இடைப்பிள்ளைகள், “அது உண்மையான மலைப்பாம்பு” என்பதை அறியாமல், ஒருவர்க்கொருவர் பேசுகிற பொய்வார்த்தையைக் கேட்டு, ஸ்ரீக்ருஷ்ணன் உண்மையான பாம்பையே இவர்கள் பொய் செய்கிறார்களென்று சிந்தித்து, ஸமஸ்த பூதங்களுடைய ஹ்ருதயங்களிலும் வஸிப்பவனாகையால், ராக்ஷஸன் மலைப்பாம்பின் உருவம் தரித்திருக்கிறானென்பதை அறிந்து, தன்னைச் சேர்ந்தவைகளான கன்றுகளையும், கன்று மேய்க்கும் பிள்ளைகளையும், அதில் நுழையாதபடி தடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கையில், அதற்குள்ளாகவே கன்றுகளும், கன்று மேய்க்கும் பிள்ளைகளுமாகிய அவையெல்லாம், அவ்வஸுரனுடைய வயிற்றிற்குள் நுழைந்தன. ஆனால், ஜீர்ணமாகவில்லை. அவ்வஸுரன், தன் ஸ்னேஹிதனான பகாஸுரனுடைய வதத்தை நினைத்து, பக சத்ருவான (பகனின் எதிரியான) ஸ்ரீக்ருஷ்ணன் நுழைவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தானாகையால், தன் வயிற்றில் நுழைந்த கன்றுகளையும், கன்று மேய்க்கும் பிள்ளைகளையும் செரிக்கும்படிச் செய்யவில்லை. 

எல்லார்க்கும் அபயம் கொடுப்பவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன்னையொழிய வேறு நாதன் (தலைவன்) அற்றவர்களும், தீனர்களுமாகிய (புகலற்றவர்களுமான) அவர்களெல்லோரும், தன் கையினின்று  நழுவி ம்ருத்யுவைப் (மரணத்தைப்) போன்ற அவ்வஸுரனுடைய ஜாடராக்னிக்கு (வயிற்றுத்தீக்கு) இரையானமையைக் கண்டு, தெய்வாதீனமாய் நேர்ந்தமைக்கு வியப்புற்று, கருணையால் கலங்கி, “துர்ப்புத்தியாகிய இவ்வஸுரன் பிழையாமல் நசித்துப் போவதும், ஸாதுக்களாகிய இந்த கோப குமாரர்கள் அழியாமல் ஜீவிப்பதுமாகிய இவ்விரண்டும், ஒரே ஸமயத்தில் எப்படி நேரும்? இதற்காக நாம் என்ன செய்யவேண்டும்?” என்று தனக்குள் சிந்தித்து, ஸர்வஜ்ஞனாகையால் (எல்லாம் அறிந்தவனாகையால்) தானே அதற்குச் செய்ய வேண்டிய கார்யத்தை ஆராய்ந்தறிந்து, தன்னைப் பற்றினவர்களுடைய வருத்தங்களைப் போக்கும் திறமையுடைய தானும் அவ்வஸுரனுடைய வாயில் நுழைந்தான். 

அப்பொழுது, மேகத்தில் மறைந்து கொண்டிருக்கிற தேவதைகள் பயந்து, ஹா ஹா என்று இறைச்சலிட்டார்கள். அகாஸுரனுடைய பந்துக்களான கம்ஸன் முதலிய ராக்ஷஸர்கள் ஸந்தோஷித்தார்கள். அழிவற்றவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், தேவதைகள் செய்த ஹா ஹாகாரத்தைக் கேட்டு, தான் ஒருவித கெடுதியுமின்றி, தன்னையும் தன்னைச் சேர்ந்த பிள்ளைகளையும், கன்றுகளையும், சூர்ணம் (பொடி) செய்ய விரும்புகிற அவ்வஸுரனுடைய கழுத்தில் சீக்ரமாக வளர்ந்தான். அப்பொழுது, பெருந்தேஹமுடைய அவ்வஸுரன், மூக்கு ரந்த்ரங்கள் (த்வாரங்கள்)  தடைபடப்பெற்று, கண்கள் பிதுங்கி, இப்படியும் அப்படியும் சுழன்று, வருந்திக் கொண்டிருக்கையில், அவனுடைய சரீரத்திற்குள் (உடலில்) காற்று தடைபட்டு, வளர்ந்து, மண்டையைப் பிளந்து கொண்டு, வெளிவந்தது. 

அவ்வாறு வெளிவந்த காற்றுடன், உயிர் முழுவதும் வெளியாகையில், போக மோக்ஷங்களைக் (உலக அனுபவங்களையும், மோட்சத்தையும்) கொடுக்கவல்ல மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், மரணம் அடைந்தாற்போல் இருக்கிற கன்றுகளையும், நண்பர்களான கன்று மேய்க்கும் பிள்ளைகளையும், அம்ருதம் சொரிகிற தன் கண்ணோக்கத்தினால் எழுப்பிக்கொண்டு, அவர்களுடன் மீளவும் வாய் வழியாகவே வெளியில் வந்து சேர்ந்தான். பருத்திருக்கின்ற அந்த மலைப் பாம்பின் சரீரத்தினின்று, அற்புதமாயிருப்பதும், ஜ்ஞானத்தினால் பெரியதும், ஸ்வயம்ப்ரகாசமுமாகிய ஆத்ம ஸ்வரூபம் கிளம்பி, தன் தேஜஸ்ஸினால் பத்துத் திசைகளையும் விளங்கச் செய்து கொண்டு, ஸ்ரீக்ருஷ்ண பகவான் அந்த மலைப்பாம்பின் உருவத்தினின்று வெளி வருவதை ஆகாயத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருந்து. அவன் வெளிவந்த பிறகு, தேவதைகள் பார்த்துக்கொண்டிருக்கையில், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் நுழைந்தது. அது மிகவும் ஆச்சர்யமாயிருந்தது. 

அப்பால், தேவதைகள் மிகவும் ஸந்தோஷம் அடைந்து, புஷ்பங்களாலும், அப்ஸர மடந்தையர்கள் நாட்டியங்களாலும், நன்கு பாடுபவர்களான கந்தர்வர்கள் பாட்டுக்களாலும், வாத்யங்களை ஏந்தினவர்கள் வாத்யங்களாலும், ப்ராஹ்மணர்கள் ஸ்தோத்ரங்களாலும், ப்ருத்ய கணங்கள் (அடியவர் கூட்டங்கள்) ஜயசப்தங்களாலும், தங்கள் கார்யத்தை நிறைவேற்றின ஸ்ரீக்ருஷ்ணனுக்குப் பூஜை செய்தார்கள். ப்ரஹ்மதேவன், அற்புதமான அந்த ஸ்தோத்ரங்கள், அழகிய வாத்ய கோஷங்கள், பாட்டுக்கள், சப்தங்கள் முதலிய பல மஹோத்ஸவங்களையும் மற்றும் பல மங்கள த்வனிகளையும் கேட்டு, தன் இருப்பிடத்தை விட்டு, விரைந்து ஓடி வந்து, ஸ்ரீக்ருஷ்ணனுடைய மஹிமையைப் பார்த்து, வியப்புற்றான். 

மன்னவனே! அற்புதமான அந்த மலைப்பாம்பின் தோல் உலர்ந்து, வெகுகாலம் கோகுல வாஸிகளுக்கு க்ரீடா ஸ்தானமாயிருந்தது (விளையாட்டிடமாயிருந்தது). இது ஒரு ஆச்சர்யமன்று. மேன்மையுடைய தேவ ரிஷிகளுக்கும், தாழ்மையாயிருக்கப் பெற்ற ப்ரஹ்மாதிகளுக்கும் மேலாயிருப்பவனும், உலகங்களையெல்லாம் படைப்பவனும், மாயையினால் மானிடக் குழவியின் உருவத்தை ஏற்றுக்கொண்டிருப்பவனுமாகிய, ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸ்பர்சம் நேர்ந்த மாத்ரத்தினால், அகாஸுரனும் கூட பாபங்களையெல்லாம் உதறி, அஸத்துக்களுக்கு (நற்புத்தி இல்லாதவர்களுக்கு) மிகவும் கிடைக்க அரிதான பரமாத்ம ஸாம்யத்தைப் (பரமாத்மவோடு ஒத்த ஆனந்தத்தைப்) பெற்றானென்னுமதுவே பெரிய ஆச்சர்யம். 

மன்னவனே! மனோ பாவத்தினால் ஏறிடப்பட்ட பகவத்ச் சக்தியுடையதாகையால் மனோமயமென்று சொல்லப்படுகிற, இந்தப் பகவானுடைய அர்ச்சா ரூபமான திருமேனியை ஒருகால் மனத்தில் த்யானிப்பானாயின், அது அவனுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கிறது. நித்யானந்த ஸ்வரூபனும், பராக்ருத குணங்களற்றவனும், இணையெதிரில்லாதவனுமாகிய ஒன்றான அந்தப் பகவானையே மனத்தில் த்யானிப்பானாயின், அவன் மோக்ஷத்தைக் கொடுப்பானென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? 

பகவான், கௌமார வயதில் (1 முதல் 5 வயது வரையான குழந்தை வயதில்) ம்ருத்யு ஸ்வரூபனான அகாஸுரனிடத்தினின்று தங்களை விடுவித்த, இந்த வ்ருத்தாந்தத்தை அப்பொழுதே கண்டனுபவித்த இடைப் பிள்ளைகள், பௌகண்டக வயதில் (6 முதல் 16 வயது வரையான சிறுவர் வயதில்) அப்பொழுது தான் நடந்ததாக வியப்புடன் இடைச்சேரியிலுள்ளவர்களுக்குச் சொன்னார்கள். 

பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக