செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 229

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதின்மூன்றாவது அத்தியாயம்

(வத்ஸாபஹார வ்ருத்தாந்தம்)

ஸுதர் சொல்லுகிறார்:- ஓ, அந்தணர்களே! பரீக்ஷித்து மன்னவன் தன்னைப் பாதுகாத்த பகவானுடைய அற்புதமான வ்ருத்தாந்தத்தை (கதையை) இவ்வாறு கேட்டு, மீளவும் பரிசுத்தமான அந்தப் பகவானுடைய வ்ருத்தாந்தத்தைப் பற்றியே ஸ்ரீசுக முனிவரை வினவினான். அவன், அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவானால் பறிக்கப்பட்ட  மனமுடையவன். ஆகையால், அவனுடைய வ்ருத்தாந்தத்தை எவ்வளவு கேட்கினும், த்ருப்தி அடையாமல், மேன்மேலும் அதையே கேட்க வேண்டுமென்று விருப்பமுற்றிருந்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- அந்தணரே! காலாந்தரத்தில் (வேறு காலத்தில்) நடந்தது எப்படி அக்காலத்தில் நடந்ததாகும். பகவான் கௌமார வயதில் (1 முதல் 5 வயது வரையான குழந்தை வயதில்) செய்த வ்ருத்தாந்தத்தை இடைப் பிள்ளைகள் பௌகண்டக வயதில் (6 முதல் 16 வயது வரையான சிறுவர் வயதில்) அறிந்தார்களென்றீரே. அது எப்படி? மஹா யோகியே! அதன் காரணத்தை எனக்குச் சொல்வீராக. அஜ்ஞான அந்தகாரத்தைப் (அறியாமையாகிய இருட்டைப்) போக்கும் குருவே! அதைக் கேட்க வேண்டும் என்று எனக்குப் பெரிய குதூஹலம் (ஆவல்) உண்டாகின்றது. இதற்குக் காரணம்  நிச்சயமாகப் பகவானுடைய மாயையே என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றப்படிக்கு இவ்வாறு சேராது. குரு! நாங்கள் க்ஷத்ரிய அதமர்களாயினும் (க்ஷத்ரியர்களில் தாழ்ந்தவர்கள்) இவ்வுலகத்தில் மிகவும் பாக்யசாலிகள். ஏனென்றால், பரிசுத்தமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதையாகிற அம்ருதத்தை, உம்மிடத்தினின்று அடிக்கடி பானம் செய்கிறோம் (அருந்துகிறோம்) அல்லவா?

ஸுதர் சொல்லுகிறார்:- இவ்வாறு வினவப்பெற்ற அந்தச் சுக முனிவர், மன்னவன் நினைவு மூட்டின பகவானால் இந்த்ரியங்களெல்லாம் பறிக்கப்பெற்று, மீளவும் மெள்ள ப்ரயத்னப்பட்டு (முயற்சி செய்து), வெளி விஷயங்களைப் பற்றின அறிவைப் பெற்று, பகவத் பக்தர்களில் சிறந்த மன்னவனை நோக்கி இவ்வாறு மொழிந்தார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மிகுந்த மதி (புத்தி) உடையவனே! நன்றாக வினவினாய். நீ பகவானுடைய கதையைக் கேட்டுக் கொண்டேயிருப்பினும், அடிக்கடி அதைப் புதிது புதிதாகச் செய்கின்றாய். ஸாரத்தை அறிந்த ஸத் புருஷர்களின் நன்மை இது தான். அவர்கள் தங்கள் வாக்கு, செவி, மனம் இவற்றையெல்லாம் அச்சுதனிடத்திலேயே உபயோகப்படுத்தி, அவனையே ஸர்வ காலமும் அனுபவித்துக்கொண்டிருப்பினும், ஸ்த்ரீ லோலர்களுக்கு (பெண்களிடம் மயங்கினவர்களுக்கு) மடந்தையர்களைப் (பெண்களைப்) பற்றின வார்த்தைகள் மிகவும் புதிது புதிதாகத் தோன்றுவது போல, அவர்களுக்கு அச்சுதனுடைய வ்ருத்தாந்தம் க்ஷணந்தோறும் (ஒவ்வொரு வினாடியும்) மிகவும் புதிது புதிதாகத் தோன்றும். மன்னவனே! சொல்லக்கூடாத ரஹஸ்யத்தையும், உனக்குச் சொல்லுகிறேன்; மனவூக்கத்துடன் கேட்பாயாக. ஆசார்யர்கள் அன்பிற்கிடமான சிஷ்யனுக்கு ரஹஸ்யத்தையும் சொல்லுவார்கள் அல்லவா? ஸ்ரீக்ருஷ்ண பகவான், கன்றுகளையும், கன்று மேய்க்கிற இடைப்பிள்ளைகளையும், ம்ருத்யுவைப் (யமனைப், மரணத்தைப்) போன்ற அகாஸுரனுடைய வாயினின்றும் ரக்ஷித்து, அவர்களைத் தாமரையோடையின் மணற்குன்றிற்கு அழைத்துக் கொண்டு வந்து, இவ்வாறு மொழிந்தான்.

பகவான் சொல்லுகிறான்:- ஓ நண்பர்களே! இந்த மணற்குன்று மிகவும் அழகாயிருக்கிறது. நம்முடைய விளையாடல்களையெல்லாம் இங்கு நன்றாக உபயோகப்படுத்தலாம். இங்கு மணல் மெதுவாகவும், நிர்மலமாகவும் இருக்கின்றது. இந்தத் தாமரையோடையில், தாமரை மலர்கள் நிரம்பவும் மலர்ந்திருக்கின்றன. அவற்றின் வாஸனையால், வண்டுகளும், மற்றும் பல பறவைகளும், இழுக்கப்பட்டு வந்து, மொய்த்துக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள வ்ருக்ஷங்கள் (மரங்கள்), அவற்றின் த்வனிகளால் (ஒலிகளால்), ப்ரதி த்வனி (எதிரொலி) எழப்பெற்று, அழகாயிருக்கின்றன. நமக்கு இவ்விடத்திலேயே பகல் வளர்ந்து விட்டது. சாப்பாட்டு வேளை தப்பிப் போகின்றது. நாமும் பசியினால் வருந்தியிருக்கிறோம். ஆகையால், இவ்விடத்திலேயே போஜனம் செய்ய வேண்டும். கன்றுகள், நீர் குடித்து, ஸமீபத்திலேயே மெல்ல மெல்லப் புல் மேய்ந்து கொண்டிருக்கட்டும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அதைக் கேட்ட பிள்ளைகள் அப்படியே ஆகட்டுமென்று கன்றுகளைத் தண்ணீர் குடிப்பித்து, புல் முளைத்துப் பச்சென்றிருக்கிற இடத்தில் அவற்றை மடக்கி நிறுத்தி, பகவானுடன் பழைய அன்னம் கட்டிக் கொண்டு வந்த மூட்டைகளை அவிழ்த்துப் புசித்தார்கள். அவ்வரண்யத்தில், க்ருஷ்ணனைச் சுற்றி நாற்புறத்திலும், பல வரிசைகள் மண்டலம் மண்டலமாக ஒருவரோடொருவர் கலந்து, இடைவெளியின்றி உட்கார்ந்து, அவனுக்கு எதிர் முகமாகி ஸந்தோஷத்தினால் கண்கள் மலரப் பெற்றிருக்கிற இடைப்பிள்ளைகள், தாமரை மலரில் அதன் காயைச் சுற்றி நெருக்கியிருக்கிற இதழ்கள் போல் விளங்கினார்கள், அவர்களில் சிலர், புஷ்பங்களாலும், சிலர் இலைகளாலும், சிலர் தளிர்களாலும், சிலர் முளைகளாலும், சிலர் காய்களாலும், சிலர் அன்னம் கொண்டு வந்த சிக்கங்களாலும் (சிறு துணிகளாலும்), சிலர் பட்டைகளாலும், போஜன பாத்ரங்களை ஏற்படுத்திக்கொண்டு புஜித்தார்கள். 

அவர்கள் எல்லாரும், ஸ்ரீக்ருஷ்ணனுடன் கூடி, தங்கள் தங்கள் போஜனத்தின் ருசியைத் தனித்தனியே ஒருவர்க்கொருவர் காட்டிக்கொண்டு சிரிப்பதும், சிரிக்கச் செய்வதுமாகிப் புசித்தார்கள். யஜ்ஞங்களில் கொடுக்கப்படுகிற ஹவிர்ப் பாகங்களைப் புசிக்கும் பரமபுருஷனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், மாயையினால் மானிடப் பாலகனைப் போல விளையாடலுற்று, ஸ்வர்க்க லோகத்து தேவ ஜனங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், அரைக்கும், அரையாடைக்கும் இடையில் குழலையும், வலக்கை மூலையில் கொம்பு கால்களையும், வலக்கையில் ருசியுள்ள அன்னக்கவளத்தையும், அதற்கு வேண்டிய மாங்காய் முதலிய ஊறுகாய்களை விரல் சந்துகளிலும் தரித்து, இடைப் பிள்ளைகளின் இடையில் நின்று, தன்னைச் சுற்றி உட்கார்ந்திருக்கின்ற நண்பர்களாகிய அப்பிள்ளைகளைப் பரிஹாஸ (கேலி) வாக்யங்களால் சிரிக்கச் செய்து கொண்டு, புசித்தான். 

பாரதனே! அந்த இடைப்பிள்ளைகள் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் நிலைகின்ற மனமுடையவர்களாகிப் புசித்துக்கொண்டிருக்கையில், கன்றுகள் புல் மேய்வதில் விருப்பமுற்று, நெடுக்காட்டில் தூரம் சென்றன. அந்தக் கன்றுகளைக் காணாமல் பயந்திருக்கிற நண்பர்களைப் பார்த்து ஸ்ரீக்ருஷ்ணன், அவர்களுடைய பயத்தைப் போக்கி, “நீங்கள் போஜனம் செய்வதினின்று மீள வேண்டாம். நான் போய்க் கன்றுகளைத் தேடி ஓட்டிக் கொண்டு வருகிறேன்” என்று மொழிந்து, கையில் தரித்த அன்னக் கவளத்தோடு கூடவே மலைகளிலும், மலைக் குஹைகளிலும், புதர்களிலும், இன்னும் நெருக்கமான இடங்களிலும், கன்றுகளைத் தேடிக்கொண்டு சென்றான்.

ப்ரஹ்மதேவன் தெரியாமல் வந்து கன்றுகளையும், கன்று மேய்க்கும் பிள்ளைகளையும், பறித்துக்கொண்டு போய், ஸ்ரீக்ருஷ்ணன் தானே அவையெல்லாமாய் நடக்கக் கண்டு வியப்புறுதல்:- முன்பு அகாஸுரனிடத்தினின்று பிள்ளைகளையும், கன்றுகளையும் விடுவித்த பகவானுடைய அற்புதச் செயலை ஆகாயத்தில் இருந்து பார்த்துப் பெரும் வியப்புற்ற நான்முகன், ஸர்வேச்வரனான இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகியதான வேறு மஹிமையையும் பார்க்க விரும்பி, அந்த ஸமயம் பார்த்து வந்து, முதலில் கன்றுகளையும், ஸ்ரீக்ருஷ்ணன் கன்றுகளைத் தேடப்போன பொழுது கன்று மேய்க்கும் பிள்ளைகளையும் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்து மறைந்தான். பிறகு, கன்றுகளைத் தேடிக்கொண்டு சென்ற ஸ்ரீக்ருஷ்ணன், அங்கெங்கும் அவற்றைக் காணாமல் திரும்பி மணற் குன்றுக்கு வந்து, அங்கு கன்று மேய்க்கும் சிறுவர்களையும் காணாமல், அவ்விரண்டையும் வனத்தில் நாற்புறத்திலும் திரிந்து தேடினான். ஸ்ரீக்ருஷ்ணன் கன்றுகளையும், பிள்ளைகளையும் நடுக்காட்டில் வெகு தூரம் தேடியும், அவற்றை எங்கும் காணாமல், ஸர்வஜ்ஞனாகையால் (எல்லாம் அறிந்தவனாகையால்), எல்லாம் ப்ரஹ்மதேவன் செய்த கார்யமென்று சீக்ரமாகத் தெரிந்து கொண்டான்.

பரமபுருஷனான ஸ்ரீக்ருஷ்ணன், கன்று மேய்க்கும் பிள்ளைகளின் சிறிய சரீரங்களும், கன்றுகளின் சிறிய சரீரங்களும் எவ்வளவோ, அவ்வளவேயுள்ள சரீரங்களும், அவற்றின் கை, கால் முதலிய அவயவங்கள் எவ்வளவோ, அவ்வளவேயுள்ள அவயவங்களும், கோல், கொம்பு, குழல், இலை, சிக்கம் இவை எவ்வளவோ, அவ்வளவேயான அவைகளும், ஆபரணங்கள், ஆடைகள் இவை எவ்வளவோ, அவ்வளவேயான அவைகளும், ஸ்வபாவம், குணம், பெயர், உருவம், வயது இவை எவ்வளவோ, அவ்வளவேயான அவைகளும், விளையாட்டு முதலியவை எத்தகையனவோ, அத்தகையனவேயான அவைகளும் ஆகிய இவையெல்லாம் தானேயாகி “ஜகத்தெல்லாம் விஷ்ணுமயமே” என்னும் வார்த்தையின் பொருள் மூர்த்தீகரித்தாற்போல (உருவம் பெற்றாற்போல்) விளங்கினான். 

இவ்வாறு  அந்த ஸ்ரீக்ருஷ்ணன், எல்லாம் தானேயாகி, தானேயாகிய கன்று மேய்க்கும் பிள்ளைகளால் தானேயான பசுங்கன்றுகளை மேய்த்து, தன் விளையாடல்களால் க்ரீடித்துக்கொண்டே, கோகுலத்திற்குள் நுழைந்தான். அவரவர் கன்றுகளைத் தனித்தனியே பிரித்து, அவரவர் தொழுவங்களில் அடைத்து, அந்தந்த இடைப்பிள்ளைகளாகி, அவரவர் க்ருஹங்களில் ப்ரவேசித்தான். அந்தப் பிள்ளைகளின் தாய்மார்கள், குழலோசையைக் கேட்டு விரைவுடன் எழுந்து, தங்கள் பிள்ளைகளென்று நினைத்து, பரப்ரஹ்மத்தைக் கைகளால் பெரிய ஆனந்தத்துடன் வாரியணைத்து, ஸ்னேஹத்தில் (அன்பு, பரிவால்) பெருகுவதும், அம்ருதம் போல் மதுரமாயிருப்பதும், மத்யம் (கள்) போல் மதத்தை விளைப்பதுமாகிய ஸ்தன்யத்தைப் (தாய்ப்பாலை) பானம் செய்வித்தார்கள். இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன், ஸாயங்காலத்தில் க்ருஹத்திற்குச் சென்று, அழகிய சேஷ்டைகளால் இடையர்களையும், இடைச்சிகளையும் மனக்களிப்புறச் செய்து கொண்டு, எண்ணெய் தேய்ப்பது, ஸ்னானம் செய்விப்பது, சந்தனம், குங்குமம் முதலியன பூசுவது, அலங்கரிப்பது, காப்பிடுவது, திலகமிடுவது, மையிடுவது முதலிய உபசாரங்களெல்லாம் செய்யப்பட்டு, உபலாலனம் செய்யப் (சீராட்டப்) பெற்றிருந்தான். பிறகு, மேயப் போயிருந்து வந்த பசுக்கள், தொழுவத்தில் நுழைந்து, ஹூங்காரங்களால் அழைக்கப்பெற்று, அருகாமையில் வந்திருக்கின்ற கன்றுகளை அடிக்கடி நக்கிக் கொண்டிருந்து, மடியினின்றும் பெருகுகிற பாலை ஊட்டக் கொடுத்தன. கன்றுகளும், கன்று மேய்க்கும் பிள்ளைகளும், தானேயாயிருக்கிற அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில், பசுக்களுக்கும், இடைச்சிகளுக்கும், நாள்தோறும் ஸ்னேஹம் (அன்பு, பரிவு) வளர்ந்து வருவது ஒன்றுமாத்ரம் தவிரத் தாய்மார்கள் செய்கிற சீராட்டல் முதலிய மற்றவைகளெல்லாம் முன் போலவேயிருந்தன. கன்றுகளிடத்திலும், பசுக்களிடத்திலும், ஸ்ரீக்ருஷ்ணனுக்கு “இவள் என்னுடைய தாய்; நான் இவளுடைய பிள்ளை” என்கிற மதிமயக்கம் தவிர, மற்ற பிள்ளைத்தனமெல்லாம் முன்போலவேயிருந்தது. 

இடைச்சேரியிலுள்ளவர்களுக்கு, தங்கள் பிள்ளைகளைக்காட்டிலும் ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் முன்னமே இடைவிடாத பெரும் ப்ரீதி உண்டாயிருந்தது. இப்பொழுது, தங்கள் பிள்ளைகளிடத்திலும், ஒரு வர்ஷம் வரையில் தினந்தோறும் எல்லையில்லாமல் ஸ்ரீக்ருஷ்ணனிடத்திற் போலவே, ப்ரீதி வளர்ந்து வந்தது. இவ்வாறு கன்றுகள், கன்று மேயக்கும் பிள்ளைகளென்னும் வ்யாஜத்தினால் (சாக்கினால், பொய்க்காரணத்தினால்), தானே தன்னைப் பாதுகாத்துக்கொண்டு, ஒரு வர்ஷம் வரையில், வனத்திலும், கோகுலத்திலும் விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு வர்ஷம் நிரம்புவதற்கு ஐந்தாறு நாள்கள் குறைவாயிருக்கையில், ஒரு நாள் ஸ்ரீக்ருஷ்ணன் கன்றுகளை மேய்த்துக்கொண்டு பலராமனுடன் வனத்திற்குச் சென்றான். அப்பொழுது, கோவர்த்தன பர்வதத்தின் (மலையின்) நுனியில் வெகு தூரத்தில் புல்மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்கள், இடைச்சேரியின் ஓரத்தில் மேய்கிற கன்றுகளைக் கண்டன. அவ்வாறு கண்ட பசு மந்தையிலுள்ள பசு மாடுகளெல்லாம், அக்கன்றுகளிடத்தில் ஸ்னேஹத்தினால் இழுக்கப்பட்டு, தங்களை மறந்து, போகவொட்டாமல் தடுக்கிற மேய்க்கும் இடையர்களையும் கடந்து, காடு மேடாக நடக்க முடியாத குறுக்கு வழியே சென்று, பெருவோட்டமாக ஓடுகின்றமையால் பின்கால்கள் இரண்டும் முன்கால்களோடிணைந்து, இரண்டு பாதங்களால் நடப்பவை போன்று கழுத்தை திமிலோடு இணைத்து, முகத்தையும், வாலையும், உயரத் தூக்கிக் கொண்டு, மடியினின்று நாற்புறத்திலும் பால் பெருகப்பெற்று, ஹுங்காரங்களோடு சேரியின் அருகாமைக்குப் போயின. 

பசுக்கள், பின் பிறந்த இளம் கன்றுகள் பாலைப் பருக இருந்த போதிலும், முன்பே பிறந்து வளர்ந்து, பால் ஊட்டுவது நிறுத்தப்பட்ட அந்த கன்றுகளின் அங்கங்களை விழுங்குபவை போன்று நக்கிக்கொண்டு, தங்கள் மடியில் பெருகுகின்ற பாலை அவற்றிற்கு ஊட்டக் கொடுத்தன. இடையர்கள், அந்தப் பசுக்களைத் தடுப்பதற்குத் தாங்கள் பட்ட ப்ரயாஸங்கள் (முயற்சிகள்) எல்லாம் வீணானமையால் உண்டான வெட்கத்துடனும், பெரிய கோபத்துடனும், நடக்க முடியாத மூலைவழியே வந்து வருத்தத்துடனும், அவ்விடம் வந்து, பசுக்களோடும், கன்றுகளோடும், கூடியிருக்கின்ற தங்கள் பிள்ளைகளைக் கண்டார்கள். பிறகு, அவர்களைக் கண்ட மாத்ரத்தினால் தலையெடுத்த ப்ரேம ரஸத்தில் (அன்பு வெள்ளத்தில்) முழுகின மனமுடையவர்களாகி, வெட்கம், கோபம், வழி நடந்துவந்த வருத்தம் இவைகளால் அவர்களையும் அடிக்க வந்தவர்கள், கோபம் தணியப் பெற்றமை மாத்ரமே அல்லாமல், அனுராகமும் (பேரன்பு) உண்டாகப் பெற்று, கைகளால் வாரியெடுத்து அணைத்து, உச்சி மோந்து, என்றுமில்லாத பெருங்களிப்புற்றார்கள். 

இவ்வாறு பசுக்களோடு கூட இடையர்களும், தங்கள் பிள்ளைகளின் ஆலிங்கனத்தினால் ஸந்தோஷம் அடைந்து, பெரிய வருத்தத்துடன் அவர்களை விட்டுப் பிரிந்து அப்புறம் சென்று, அவர்களைப்பற்றிய நினைவினால் கண்ணீர் பெருகப் பெற்றிருந்தார்கள். பலராமன் கோப ஸ்த்ரீகளுக்கு, தாய்ப்பால் மறந்த, முன் பிறந்த பிள்ளைகளிடத்தில் க்ஷணத்தோறும் ப்ரீதி வளர்ந்து வருவதையும், ஆவலின் மிகுதியையும் கண்டு, அதற்குக் காரணம் தெரியாமல், அதைக்குறித்துச் சிந்தித்தான்:- 

“இடைச்சேரியிலுள்ளவர்களுக்கு, ஸர்வாந்தராத்மாவான வாஸுதேவ ஸ்வருபனாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்திற் போலத் தங்கள் பிள்ளைகளிடத்திலும் கூட இப்பொழுது சில நாளாக என்றுமில்லாத ப்ரீதி வளர்ந்து வருகின்றது. இதற்கு முன்பு, அவர்களுக்கு இவ்வளவு ப்ரீதி ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாத்ரம் உண்டாயிருந்ததேயன்றி, தங்கள் பிள்ளைகளிடத்தில் இவ்வளவு ப்ரீதி என்றும் கிடையாது. இதென்ன? ஆச்சர்யமாயிருக்கின்றதே! இதென்ன மாயையோ! தேவதைகளின் மாயையோ? அல்லது மனுஷ்யர்களின் மாயையோ? அஸுரர்களின் மாயையோ? எனக்கு இவ்வாறு தோற்றுகிறது. பெரும்பாலும் என் ஸ்வாமியாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய மாயையே இது. மற்றவர்களின் மாயை ஸகல ஜனங்களையும் மதிமயங்கச் செய்யுமேயன்றி, என்னை மதிமயங்கச் செய்யும்  திறமையுடையதன்று” என்று சிந்தித்துப் பலராமன், திவ்ய ஜ்ஞானமாகிற நேத்ரத்தினால் (தெய்வீகத்தன்மை உள்ள ஜ்ஞானக் கண்களால்) கன்றுகளையும், கன்று மேய்க்கும் பிள்ளைகளையும், ஸ்ரீக்ருஷ்ண ஸ்வரூபங்களாகக் கண்டான். 

அந்தப் பலராமன், ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து, தாதா! கன்றுகள் ரிஷிகளின் அம்சங்களென்றும், கன்று மேய்க்கும் பிள்ளைகள், தேவதைகளின் அம்சங்களென்றும் நான் இதுவரையில் அறிந்திருந்தேன். இப்பொழுது, அப்படி இல்லை. “கன்றுகள், கன்று மேய்க்கும் பிள்ளைகள்” என்னும் பேதத்தை உட்கொண்ட அறிவிலும், நீயே விஷயமாகத் தோன்றுகின்றாய். ஆகையால், நீ எல்லாவற்றையும் தனித்தனியே விவரித்து “எப்படி நடந்ததோ, அப்படியே எனக்குச் சொல்வாயாக” என்று வினவினான். பிறகு ஸ்ரீக்ருஷ்ணன், நடந்ததையெல்லாம் சுருக்கமாகச் சொல்லக் கேட்டு, பலராமன் தெரிந்து கொண்டான். ப்ரஹ்மதேவனும், தன்னுலகம் சென்று, அங்குத் தன்னைப்போலவே நான்முக உருவம் கொண்ட ஸ்ரீக்ருஷ்ணனால் மதி (புத்தி) மயங்கின த்வாரபாலகர்களால் (வாசற் காப்போர்களால்) பரிபவம் செய்யப்பெற்று (அவமதிக்கப்பட்டு), திரும்பி வந்தான். 

அந்த ப்ரஹ்மதேவன், தனக்கு ஏற்பட்ட காலக்கணக்கின்படி, ஒரு நொடிப்பொழுதில் ஸத்யலோகம் போய் மீண்டு வந்து, மனித கணக்கில் ஒரு வர்ஷம் வரையில், முன் போலவே பலராமனுடன் க்ரீடித்துக்கொண்டிருக்கிற (விளையாடிக்கொண்டிருக்கிற) ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டான். அவன் “கோகுலத்தில் எவ்வளவு பிள்ளைகளும், கன்றுகளும் உண்டோ அவையெல்லாம், என்னுடைய மாயப்படுக்கையில் படுத்திருக்கின்றன. இன்னம் எழுந்திருக்கவில்லை. என் மாயையினால் மதிமயங்கிக் கிடக்கிற அவற்றைக்காட்டிலும் இங்குப் புலப்படுகிற இப்பிள்ளைகளும், கன்றுகளும் வேறென்பதில் ஸந்தேஹமில்லை. இவை எங்கிருந்து வந்தன.  நான் எவ்வளவு கொண்டு போனேனோ, அவ்வளவு கன்றுகளும், பிள்ளைகளும், ஒரு வர்ஷமாக ஸ்ரீக்ருஷ்ணனுடன் க்ரீடித்துக் (விளையாடிக்) கொண்டிருக்கின்றன” என்று வேறான இந்தக் கன்றுகளையும், கன்று மேய்க்கும் பிள்ளைகளையும், குறித்து நெடு நேரம் சிந்தித்தும், “இவர்கள் பரப்ரஹ்ம ரூபனான ஸ்ரீக்ருஷ்ண ஸ்வரூபர்களே” என்று தெரிந்து கொள்வதற்கு வருந்தியும் வல்லனாகவில்லை. 

மதிமயக்கமற்றவனும், ஜகத்தையெல்லாம் மதிமயங்கச் செய்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனை, ப்ரஹ்மதேவன் தனக்கு அந்தராத்மாவான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய சக்தி விசேஷமான தன் மாயையினால் மதிமயங்கச் செய்ய முயன்று, அந்த மாயையினால் தானே மதிமயங்கி நின்றான். 

இருள் மூடின ராத்ரியில், பனித்திவலைகள் பெய்வதால் உண்டாகும் இருளும், பகலில் மின்மினிப் பூச்சியின் வெளிச்சமும், தனித்துத் தோற்றாமல் அவற்றிலேயே மறைவதுபோல, மஹா புருஷனிடத்தில் மாயை செய்ய முயன்ற அற்பனுடைய மாயை அவனுக்கு எவ்வித கெடுதியையும் செய்ய முடியாமல் மறைவது மாத்ரமேயன்றி, மாயை செய்ய முயன்றவனுடைய திறமையையும் அழித்து விடும். ப்ரஹ்மதேவன் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்த க்ஷணமே எல்லாக் கன்றுகளும், கன்றுகளை மேய்க்கிற எல்லாப் பிள்ளைகளும், காலமேகங்கள் போலக் கறுத்து, பொன்னிறமான பட்டு வஸ்த்ரம் தரித்து, நான்கு புஜங்களும், கைகளில் சங்கு, சக்ரம், கதை, தாமரை மலர், இவைகளும் அமைந்து, கீரீடம் குண்டலம், முத்து மாலை, வனமாலை இவைகளையும், தோள்களில் ஸ்ரீவத்ஸத்தின் சோபையால் திகழ்கின்ற தோள்வளைகளையும், கைகளில் ரத்னங்கள் இழைக்கப் பெற்றுச் சங்குபோல் உருண்டிருக்கின்ற கைவளைகளையும் பூண்டு, மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் திருமறுவு திகழப்பெற்று, கழுத்தில் கௌஸ்துப மணி அணிந்து, சிலம்பு, கால்வளை, அரைநாண் மாலை, விரலணி இவைகளால் விளக்கமுற்று, பாதம் முதல், சிரஸ்ஸு வரையில் ஸமஸ்த அவயவங்களிலும் மிகுந்த புண்யசாலிகளால் ஸமர்ப்பிக்கப்பட்டவைகளும், மெதுவாயிருப்பவைகளுமான துளஸி மாலைகளால் நிறைந்து, நிலவு போல் வெளுத்த புன்னகையோடு கூடின சிவந்த கடைக் கண்ணோக்கங்கள் அமைந்து, சிவந்த கடைக் கண்ணோக்கமாகிற ரஜோ குணத்தினால் தன் பக்தர்களுடைய மனோரதங்களைப் (விருப்பங்களைப்) படைப்பவர்கள் போலவும், நிர்மலமான புன்னகையாகிற ஸத்வ குணத்தினால் பாதுகாப்பவர்கள் போலவும், தோன்றித் தன்னை (ப்ரஹ்மாவை) முதற்கொண்டு பூச்சி, புழு வரையிலுமுள்ள ஸமஸ்தமான ஜங்கம (அசையும்) ஸ்தாவரங்களும் (அசையாதவைகளும்), உருவத்துடன் வந்து, கூத்து பாட்டு முதலிய பல உபசாரங்களால் பகவானின் அந்த கன்றுகள் மற்றும் பிள்ளைகளைத் தனித்தனியே வழிபடுவதையும் கண்டார். அவ்வாறே அணிமா முதலிய ஸித்தி தேவதைகளும், மாயை, வித்யை முதலிய பகவானின் சக்திகளும், மஹத்து முதலிய இருபத்து நான்கு தத்தவங்களும் அவர்களைச் சுற்றி நிற்கின்றனர். காலம், அதன் மாறுதல்களுக்குக் காரணமான இயல்பு, ஆழ்ந்த மனப் பதிவுகள், விருப்பம், செயல், குணம், உலகியல் பொருட்கள் இவை அனைத்தும் உருவம் ஏற்று, பகவானின் ஒவ்வொரு வடிவையும் வழிபடுகின்றன. பகவானது மகிமைக்கு முன்பு இவை ஒளி இழந்து தோன்றின.

கன்றுகளாகவும், பிள்ளைகளாகவும் காட்சி அளித்த பகவானின் அனைத்து வடிவங்களும், ஸத்ய, ஜ்ஞான, ஆனந்த ரஸமானவை. ப்ரஹ்மஜ்ஞானிகளாலும் அவனது அளவற்ற பெருமைகளை உணர முடியாது. 

பரஹ்மதேவன், கன்றுகள், கன்று மேய்க்கும் பிள்ளைகள், முதலிய எல்லாவற்றையும் இவ்வாறு ஒரு கால, ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான இந்த ப்ரபஞ்சமெல்லாம் எவனுடைய தேஜஸ்ஸினால் விளங்குகின்றதோ, அப்படிப்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபங்களாகக் கண்டான். பிறகு, அதே ப்ரஹ்மதேவன், பதினொரு இந்திரியங்களும், காண்பது, கேட்பது முதலிய செயல்களில் முயன்று, அவற்றிற்கு அப்பாற்பட்ட விஷயமாகையால், திறமையற்று, மயங்கப்பெற்று, இடைச்சேரியின் அதிஷ்டான தேவதையான ஸ்ரீக்ருஷ்ணனின் அருகாமையில் அசையாது நிற்கும் ஸ்வர்ண மயமான நான்முக ப்ரதிமை (பொம்மை) போன்று அவர்களின் தேஜஸ்ஸினால் ஒளிமழுங்கி, அசையாது நின்றிருந்தான். 

ஸர்வஸ்மாத்பரனும் (எல்லாவற்றையும் விட உயர்ந்தவனும்), கர்மத்தினால் விளையும் பிறவியற்றவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இன்னது இனியதென்று ஊஹிக்க முடியாததும், ப்ரக்ருதியைக் (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூல காரணமான மூலப்ரக்ருதியைக்) காட்டிலும் விலக்ஷணமாயிருப்பதும் (வேறாய் இருப்பதும்), ஸ்வயம்ப்ரகாசமும் (தானே தோன்றுவதும்), அளவிறந்த ஜ்ஞானாந்த ஸ்வரூபமும் (இயற்கையாகவே அறிவு மற்றும் இன்ப வடிவானவனும்), எல்லாம் பரமாத்ம ஸ்வரூபங்களேயன்றி பகவானின் நியமனத்திற்கு உட்படாத ஸ்வதந்தர (தன்னிச்சையாக செயல்படவல்ல) வஸ்துக்கள் எவையுமே இல்லையென்று முக்யமாக நிரூபிக்கிற வேதாந்த பாகங்களால் அறியக் கூடியதும், அஸாதாரணமான மஹிமையுடையதுமாகிய தன் ஸ்வரூபத்தைக் காட்ட, ப்ரஹ்ம தேவன் அதைக்கண்டு அனுபவிக்கும் திறமையின்றி, இதென்னென்று மதி (புத்தி) மயங்கிக் கிடப்பதை அறிந்து, தன் மாயையாகிற திரையினால் தன் ஸ்வரூபத்தை மறைத்தான். 

பிறகு, ப்ரஹ்மதேவன் இந்த்ரியங்கள் வெளித் தோன்றப் பெற்று, செத்தவன் எழுந்திருப்பது போல எழுந்து, ஸம்ஜ்ஞையை அடைந்து (உணர்வைப் பெற்று), மெல்ல மெல்லக் கண்களைத் திறந்து, தன்னையும், இந்த ப்ரபஞ்சத்தையும், கண்டான். அப்பொழுதே அந்த ப்ரஹ்மதேவன், கண்களை நாற்புறத்திலும் செலுத்தி, திசைகளையும், எதிரில் பழம், காய் முதலியவற்றைக் கொடுக்கையால் ஜனங்களுக்கு ஜீவனாதாரமான (வாழ்வாதாரமான) வ்ருக்ஷங்கள் (மரங்கள்) பலவும் நிறைந்து நாற்புறத்திலும் இனிய வஸ்துக்கள் பலவும் அமைந்து அழகாயிருப்பதும், பகவான் வாஸம் செய்கின்றமையால், கோபம், லோபம் (பேராசை) முதலியன தீண்டப்பெறாததும், இயல்பாகவே பகைவர்களான மனுஷ்யர்களும், ம்ருகங்களும் நட்புடன் வஸிக்கப் பெற்றதுமாகிய ப்ருந்தாவனத்தையும் கண்டான். 

பிறகு அந்த ப்ரஹ்மதேவன், அங்கு இடைப் பிள்ளை போல் வேஷம் பூண்டு நடனம் செய்வதும், இணையற்றதும், அளவற்ற ஜ்ஞான ஸ்வரூபமும், தேச, கால, வஸ்து, பரிச்சேதங்களற்றதுமாகிய ஸ்ரீக்ருஷ்ண ரூபியான பரப்ரஹ்மம், முன் போலவே கையில் அன்னக் கவளத்தை ஏந்திக்கொண்டு, நண்பர்களையும், கன்றுகளையும், தனியே தேடிக்கொண்டு, திரிவதைக் கண்டான். அவன் இவ்வாறு கண்டவுடனே, தன் வாஹனத்தினின்றும் இறங்கி, தன் சரீரத்தை ஸ்வர்ண மயமான தண்டத்தைப் (தடியைப்) போல் பூமியில் அஷ்டாங்கங்களும் படும்படி சாய்த்து, நான்கு கிரீடங்களின் நுனிகளால் அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய இணையடிகளை ஸ்பர்சித்து நமஸ்கரித்து, ஆனத்தத்தின் மிகுதியால் பெருகி வருகின்ற கண்ணீர்களால் அபிஷேகம் செய்தான். அவன், முன் கண்ட மஹிமையை அடிக்கடி நினைத்து நெடுநேரம் ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதங்களில் எழுந்தெழுந்து விழுந்து, நமஸ்கரித்துக் கொண்டிருந்தான். அப்பால், அந்த ப்ரஹ்மதேவன் மெல்ல மெல்ல எழுந்து, கண்களைத் துடைத்துக் கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து வணங்கின கழுத்துடன் கைகளைக் குவித்து, வணக்கம், நடுக்கம் இவை உடையவனாகி, தழதழத்த உரையுடன் துதிக்கத் தொடங்கினான். 

பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக