வெள்ளி, 11 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 230

 தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினான்காவது அத்தியாயம்

(ப்ரஹ்ம ஸ்துதியும், ஸ்ரீக்ருஷ்ணன் பிள்ளைகளோடு வீட்டிற்குப்போதலும், பிள்ளைகள் அகாஸுர வ்ருத்தாந்தத்தை வீட்டில் கூறுதலும், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் இடையர்களுக்கு அத்தகைய ப்ரீதி உண்டானதற்குக் காரணம் கூறுதலும்)

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- துதிக்கத் தகுந்தவனே! கால மேகம் போல் கறுத்திருப்பவனும், மின்னல் போல் விளங்குகின்ற பீதாம்பரத்தினை உடுத்தியவனும், குந்த மணிகளால் இயற்றின காதணி அணிந்தவனும், மயில் தோகையால் திகழ்கின்ற முகமுடையவனும், காட்டுப் புஷ்பங்களால் தொடுத்த பூமாலை பூண்டவனும், அன்னக் கவளம், கோல், கொம்பு, குழல் இவ்வடையாளங்களால் மிகுந்த சோபை (அழகு) அமைந்தவனும், மெதுவான பாதங்களுடையவனும், நந்தகுமாரனுமாகிய உனக்கு, நமஸ்காரம். 

நீ ஏற்றுக் கொண்டிருக்கிற இந்த இடைப்பிள்ளை உருவத்தின் மஹிமையை உள்ளிந்த்ரியமான மனத்தினாலுங் கூட ப்ரஹ்ம தேவனாகிய நானும் அறிவதற்கு வல்லமையற்றிருக்கின்றேன். கேவலம் ஜ்ஞானாநந்த ஸ்வரூபனான (இயற்கையிலேயே அறிவு மற்றும் ஆனந்தமே வடிவானவனான) பரமாத்மாவாகிய ஒன்றான உன் மஹிமையை நான் அறியமாட்டேன் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? என் ப்ரார்த்தனையை நிறைவேற்றும் பொருட்டு, என்னிடத்தில் அருள்புரிந்து, நீ இந்த உருவத்தை ஏற்றுக் கொண்டாயென்பது மாத்ரமே எனக்குத் தெரியும். இவ்வுருவம், உனக்கு உன் ஸங்கல்பத்தினால் ஏற்பட்டதேயன்றி, எங்கள் சரீரம்போல் காமத்தினால் ஏற்பட்டதன்று. மற்றும், இது சுத்த ஸத்வமயமேயன்றிப் பஞ்ச பூதங்களின் மாற்றம் அன்று. ஒருவராலும் வெல்ல முடியாத மஹானுபாவனே! எவர்கள் ப்ரக்ருதியைக்காட்டிலும் வேறுபட்டதான ஆத்ம ஸ்வரூபத்தை உபாஸிக்கையாகிற ஜ்ஞான யோகத்தைத் துறந்து, உன் மாயையைக் கடப்பதற்கு உன்னையே சரணமாகப் பற்றி, தங்கள் வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்கையாகிற நிலைமையில் நின்று, மனம், வாக்கு, காயங்களென்கிற மூன்று கரணங்களாலும் ஸத்புருஷர்களால் கோஷிக்கப்பட்ட (உரக்க சொல்லப்பட்ட) உன் கதையைச் செவிகளாரக் கேட்டு, ஜீவிக்கின்றார்களோ, மூன்று லோகங்களிலுமுள்ள ஸமஸ்த போகங்களிலும் பற்றற்றவர்களான அவர்கள், உன்னையும் வெல்லுகிறார்கள்.

ப்ரபூ! நன்மை கறக்கவல்ல உன் விஷயமான பக்தியைத் துறந்து, ஆத்மாவையே அனுபவிக்கையாகிற கைவல்யமென்கிற மோக்ஷத்தின் பொருட்டு, ஜ்ஞான யோகத்தில் (ஜீவாத்மாவைப் பார்த்து அனுபவிப்பதில்) ப்ரயாஸப்படுகிறவர்களுக்கு (முயற்சி செய்பவர்களுக்கு), அந்த ப்ரயாஸம் (வீண் முயற்சி) மாத்ரமே மிகுமன்றி, மற்றொரு பயனும் உண்டாகாது. நெல்லைக் குத்துகிறவர்களுக்கு அரிசி கிடைக்குமன்றி, நெல்லு போல தோற்றுகிற பெரிய உமியைக் குத்துகிறவர்களுக்கு அரிசி கிடைக்குமோ? அவர்களுக்கு ப்ரயாஸம் (வீண் முயற்சி) மாத்ரமல்லவோ மிகும்? 

பரமாநந்த ஸ்வரூபனே! இவ்வுலகத்தில் பல புருஷர்கள் பக்தி யோகத்திற்கு உதவியாக ஜ்ஞான யோகத்தை அனுஷ்டித்து, தங்கள் வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட தர்மங்களை அனுஷ்டிக்கையாகிற செயல்களையெல்லாம் உன்னிடத்தில் அர்ப்பணம் செய்து, தங்கள் ஸத் (நல்ல) கர்மங்களால் விளைந்ததும், தினந்தோறும் உன் கதைகளைக் கேட்பதால் வளர்ந்து ப்ரத்யக்ஷம் (நேராகப் பார்ப்பது) போன்றிருப்பதுமாகிய, பக்தி யோகத்தினாலேயே உன்னை உள்ளபடி அறிந்து, பரமகதியான மோக்ஷத்தை அடைந்தார்கள். அளவற்ற மஹிமையுடையவனே! ஆயினும், ப்ராக்ருத குணங்கள் தீண்டப் பெறாத உன் மஹிமை, தூய மனத்தரான பெரியோர்களால் மாத்ரம் அறியக் கூடியதன்றி, மற்றவர்களால் அறியக் கூடியதன்று. நீ விகாரங்களற்றவன் (வேறுபாடு அற்றவன்). கர்மத்தினால் விளையும் சரீர ஸம்பந்தம் உனக்குக் கிடையாது. நீ தன்னைத் தானே அனுபவிக்கும் தன்மையன். உன்னை நீயே உள்ளபடி அறிவாயன்றி, மற்ற எவரும் அறியவல்லரல்லர். 

பெரியோர்களும் கூட அறிய முடியாத ஸ்வரூபமுடையவனென்று அறிவார்களேயன்றி, இவ்வளவனென்று அளவிட்டு அறிய வல்லரல்லர். நீ குணங்களுக்கெல்லாம் ஆதாரமாயிருப்பவன். நீ இப்பொழுது ஜகத்தின் ஹிதத்திற்காக, எல்லாரும் கண்டு அனுபவிக்கும்படி அவதரித்திருக்கின்றாய். ஆயினும், உன் குணங்களையும், ஸ்வரூபத்தையும் இவ்வளவென்று அளவிட்டு எவர்கள் அறியவல்லவர்கள்? 

பூமியில் தூட்களையும், ஆகாயத்தில் பனித் திவலைகளையும், த்யுலோகத்தில் (தேவலோகத்தில்) நக்ஷத்ரங்களையும், நெடுங்காலம் ப்ரயாஸப்பட்டு (கஷ்டப்பட்டு) எண்ணி முடித்த பெரும் திறமையுடையவர்களாயினும், உன் குணங்களை எண்ண வல்லராக மாட்டார்கள். ஆகையால், மனம், வாக்கு, காயங்களென்கிற மூன்று கரணங்களாலும் உனக்கு நமஸ்காரம் செய்து, உன் கருணையையே நன்றாக நினைத்து, தன் புண்ய, பாப கர்மங்களால் நேரிட்ட ஸுக, துக்காதி பலன்களை அனுபவிப்பதைத் தவிர, வேறொரு யத்னமும் (முயற்சியும்) செய்யாமல் ஜீவித்துக் கொண்டிருப்பவன், மோக்ஷத்தில், தந்தை சொத்திற்கு மகன் போல், பங்குடையவனாவான். 

ஜகதீச! என்னுடைய துஷ்டத்தனத்தைக் (கெட்ட நடத்தையைக்) காண்பாயாக! ஆச்சர்யமான சக்தியுடையவர்களுக்கும் மேலான ஆச்சர்ய சக்தியுடையவனும், அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களுடையவனும், ஜகத்காரணனும் பரமாத்மாவுமாகிய உன்னிடத்தில், மாயையைப் பரப்பி, என் வைபவத்தைக் காட்ட விரும்பினேனல்லவா? என் செயல், நெருப்புப் பொரி தன் வைபவத்தை நெருப்பிடத்தில் காட்ட விரும்பினது போலிருக்கின்றது. இவ்வாறு என்னையும், உன்னையும் அறியாத நான், எவ்வளவன்? 

பற்றினவர்களைக் கைவிடாத பரமனே! நான், ரஜோ குணத்தினால் உண்டானவன். ஆகையால், நான் உன் மஹிமையை அறியும் திறமையற்றவன். என்னை நான், உனக்கு உட்படாத ஸ்வதந்த்ர ப்ரபுவென்று பாவித்துக் கொண்டிருப்பவன்; ப்ரஹ்மதேவனென்னும் கர்வமாகிற பேரிருளால், கண்கள் குருடாயிருக்கப் பெற்றவன். ஆகையால், நான் உன்னிடத்தில் தெளர்ஜன்யத்தைக் (தீய எண்ணத்தைக்) காட்டினது யுக்தமே (ஸரியே). ஆயினும், “இவன் என்னுடைய சேவகன், என்னைச் சேர்ந்தவன், இரக்கத்திற்கு உரியவன்; ஆகையால், இவனும் அருள்புரியத் தகுந்தவனே” என்று நினைத்து, மூடனாகிய என்னுடைய அபராதத்தைப் பொறுத்தருள்வாயாக. ப்ரதானம் (மூலப்ரக்ருதி), மஹத்து, அஹங்காரம், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம் இவைகளால் சூழப்பட்டதும், ஒரு குடம் போன்றதுமாகிய இந்த அண்டத்திற்குள், ஏழு சாண் சரீரமுடைய நான் எங்கே? 

ஜன்னல் வழியே வரும் ஸூர்ய கிரணங்களில் காணப்படும் பரமாணுக்கள் போன்று, எண்ணிறந்த பல அண்டங்களை உன் மயிர்க்கால்களில் நடையாட விடுகின்ற நீ எங்கே? உன் மஹிமை எங்கே? ஆகையால், மிகவும் அற்பனாகிய என்னை, மிகவும் மேன்மையுடைய நீ, அருள் புரியவேண்டும். இந்திரியங்களுக்கு விஷயமாகாத பரமனே! கர்ப்பத்திலிருக்கும் சிசு (குழந்தை), காலால் உதைக்கில், அது தாய் விஷயத்தில் அபராதப்பட்டதாகுமோ? ஆகாதல்லவா? அவ்வாறே, உன்னுடைய கர்ப்பத்தில் இருப்பவனான நான் செய்த பிழையை நீ அபராதமாகக் கொள்ளலாகாது. உள்ளது என்றும், இல்லது என்றும், ஸ்தூலம் (பெயர் உருவங்களுடன் கண்ணுக்குப் புலப்படுபவை), ஸூக்ஷ்மம் (பெயர், உருவம் அற்று கன்ணுக்கு இலக்காகாமல் இருப்பவை), செயல்கள், காரணம் என்று வழங்கப்படுகிற பொருட்களில், எதுதான் உன் வயிற்றினுள் இல்லை? எல்லாம் உன் வயிற்றில் உள்ளதேயன்றி, அதில் இல்லாதது இவ்வுலகத்தில் எதுவுமே இல்லை. ஜகத்தெல்லாம் அழிந்து போகையில், ஸமுத்ரங்கள் எல்லாம் ஒரே வெள்ளமாக மூடிக்கொண்டிருக்கிற மஹாஜலத்தில், நாராயணனுடைய உதரத்தில், நாபியின் நாளத்தினின்று, அயன் வெளிக் கிளம்பினானென்று ஜனங்கள் சொல்லுகிறார்களே; அந்தச்சொல் பொய்யன்று; உண்மையே. இது நிச்சயம். 

ஜகதீச்வரனே! நான் உன்னிடத்தினின்று உண்டானவனல்லவா? ஆம். உண்டானவனே. “நாராயணனிடத்தினின்று நீ உண்டானவனாயின், அது உண்மையாகவே இருக்கட்டும். அதனால் எனக்கு என்ன” என்கிறாயோ? அப்படியன்று. நீயேயல்லவா அந்த நாராயணன்? ஏனென்றால், நீ ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் இருக்கின்றாய். ஜகதீசனே! ஆகையால், நீ நாராயணனன்றோ? நீ ஸமஸ்த லோகங்களையும் ஸாக்ஷாத்கரிக்கின்றாய். நாரமென்று சொல்லப்படுகிற ஜலத்தில் வீற்றிருக்கின்றமையால், நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும் நீயே. நீ ஜகத்து முழுவதும் வ்யாபித்திருப்பினும், அதில் அடங்கின ஜல மாத்ரத்தில் வீற்றிருப்பதுவும் உண்மையே. அது பொய்யன்று. 

இவ்வாறு நாராயண சப்தத்தில் வெளியாகும் பொருட்களெல்லாம் உன்னிடத்திலேயே அமைகின்றனவாகையால், நீயே  நாராயணன். ஜகத்தெல்லாம் உள்ளடங்கப்பெற்ற உன் திருமேனி, ஸ்ருஷ்டிக்கு முன்பு ஜலத்தின் மேல் இருக்குமாயின், நீ நாராயணனென்பதில் ஸந்தேஹம் என்ன? ஷாட்குண்யபூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே)! ஜலத்தின் மேலிருந்த அந்த உன் திருமேனியை நான் காணவில்லையா? அவ்வுருவம், என் ஹ்ருதயத்தில் நன்றாகத் தோற்றவில்லையா? மற்றும், அப்பொழுதே அவ்வுருவத்தை நீ எனக்குத் தெரியாதபடி மறைக்கவில்லையா? ஆகையால் நீயே நாராயணனே. “ஆம். ஜலத்தின் மேலிருந்ததும், நீ ஜலத்தில் கண்டதும், என் ஹ்ருதயத்தில் நன்றாகத் தோற்றினதும், உடனே மறைக்கப்பட்டதுமாகிய உருவம், அநிருத்த மூர்த்தியினுடையதேயன்றி, என்னுடையதன்று; ஆகையால், நானன்று நாராயணன்” எனில், சொல்லுகிறேன்; கேள். 

பிறருடைய மாயைகளையெல்லாம் பயன்படாதபடி அழிக்குந் திறமையுடையவனே! உன்னையே சரணமாகப் பற்றினவர்களின் ப்ரக்ருதி (ஸம்ஸார) ஸம்பந்தத்தைப் போக்கும் பரமனே! நீ, இந்த அவதாரத்தில் வெளியில் ஸ்பஷ்டமாகப் (நன்றாகப்) புலப்படுகின்ற சேதனாசேதன (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள்) ரூபமான இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம், உன் வயிற்றிற்குள் தாயான யசோதைக்குக் காட்டினதால், உன்னுடைய விசித்ர சக்தியை வெளியிட்டாயல்லவா? ஆகையால், அந்த அநிருத்த மூர்த்தியும் நீயேயன்றி, வேறன்று. இதோ புலப்படுகிற சேதனாசேதன ரூபமான இந்த ஜகத்தெல்லாம், நம்மிருவரோடும்கூட வெளியில் எவ்வாறு விளங்குகின்றதோ அவ்வாறே, உன் வயிற்றிலும் விளங்கிற்றல்லவா? ஆ! என்ன ஆச்சர்யம்! இது உன்னுடைய விசித்ர சக்தியாலன்றி, மற்ற எதனால் ஸம்பவிக்கும்? விசித்ர சக்தியை உன் தாய்க்குக் காட்டினது மாத்ரமேயோ? எனக்குக் கூட இப்பொழுதே நீ உன் விசித்ர சக்தியைக் காட்டவில்லையா என்ன? காட்டினையே. முதலில், நான் கன்றுகளையும், கன்று மேய்க்கும் பிள்ளைகளையும், பறித்துக் கொண்டு போகும்பொழுது, ஒருவனாயிருந்தாய். பிறகு, இடைச்சேரியிலுள்ள உன் நண்பர்களான கன்று மேய்க்கும் பிள்ளைகளும், கன்றுகளும், ஆகிய எல்லாமாக இருந்தாய். பிறகு, அவையெல்லாம் நான்கு புஜங்களுடையவையாகி, என்னோடு கூட ஸமஸ்தமான ஜங்கம (அசைபவை) ஸ்தாவரங்களாலும் (அசையாதவை) உபாஸிக்கப்பட்டு, தோன்றினாய். பிறகு, அவ்வளவும் விராட்ரூபங்களாகத் (விச்வரூபமாய்த்) தோன்றினாய். 

ஆகையால், அளவற்றதும், இணையெதிரில்லாததும், க்ருஷ்ண ரூபமுமான பரப்ரஹ்மமொன்றே மிகுந்திருக்கின்றது. தேஹாத்மாபிமானத்தினால் (இந்த உடலே ஆத்மா என்று) மதிமயங்கினமையால், உன்னுடைய உண்மையை அறியப்பெறாத பாக்யஹீனர்களுக்கு, உன் மாயையைப் பரப்பி, ஸ்ருஷ்டியில் (படைப்பில்) நான்முகனாகிய என்னைப் போலவும், ரக்ஷணத்தில் (காப்பதில்) விஷ்ணுவைப் போலவும் தோற்றுகின்றாய். உன் பதவியை உணர்ந்தவர்களுக்கு, ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸம்ஹாரங்களில் (அழித்தல்), ப்ரஹ்ம, ருத்ரர்களென்கிற ஜீவாத்மாக்களுக்கு அந்தர்யாமியாகவும், ரக்ஷணத்தில் (காப்பதில்) நேரே உன்னுடைய அவதாரமாகவும் தோற்றுகின்றாய். 

ஜகதீசனே! நீ கர்மத்தினால் விளையும் பிறவியற்றவனாயினும், தேவதைகள், ரிஷிகள், மனுஷ்யர்கள், திர்யக்குகள் (விலங்குகள்), ஜலஜந்துக்கள் (நீர் வாழ் பிராணிகள்) ஆகிய இந்த ஜாதிகளில், துஷ்டர்களின் கொழுப்பை அடக்குவதற்காகவும், ஸத்புருஷர்களை அனுக்ரஹிப்பதற்காகவுமே, அவதரிக்கின்றாய். மஹாநந்த ஸ்வரூபனே! ஷாட்குண்ய பூர்ணனே! (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே!) ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் நியமித்துக் கொண்டிருப்பவனே! எந்த ஜாதியிலென்றாவது, எந்த ப்ரகாரமென்றாவது, எவ்வளவென்றாவது, எக்காலத்திலென்றாவது, உன் சேஷ்டைகளை, மூன்று லோகங்களிலும் எவன் தான் அறியவல்லவன்? 

யோகீச்வரனே! உன்னுடைய ஆச்சர்ய சக்தியை பரப்பி, இவ்வாறு விளையாடுகின்றாய். உன்னையொழிந்த  வஸ்து எதுவுமேயில்லை. நித்யஜ்ஞானாந்த ஸ்வரூபனும் (இயற்கையிலேயே அறிவு மற்றும் ஆனந்த வடிவானவனும்), அளவிறந்த மஹிமையுடையவனுமாகிய உன்னிடத்தில், உன் ஸங்கல்ப, ரூப ஜ்ஞானத்தினால் உண்டாகி, உன்னிடத்திலேயே மறைகின்றதாகையால், இந்த ஜகத்தெல்லாம் உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் தன்மையதன்று. ஆயினும், அறியாத மூடர்களுக்கு, உன்னை விட்டுப் பிரிந்திருப்பது போல தோற்றுகின்றது. 

இந்த ப்ரபஞ்சமெல்லாம் மிகப்பெரிய துக்கங்களுக்கு மேல் பல துக்கங்களுக்கு இடமாயிருக்கும்; விவேகிகளுக்கு ஸ்வப்னம் (கனவு) போலத் தோற்றும். இது உண்மையான உணர்வற்றது; ஸர்வ காலமும் விகாரங்களுக்கிடமாக (மாறுபாட்டிற்கிடமாக) மாறிக்கொண்டேயிருக்குமன்றி ஒருவாறாயிராது. ஆயினும், அவிவேகிகள் அதை அறியாமல், நித்யமென்று ப்ரமிப்பார்கள். நீ, அத்தகைய ஜகத்தைச் சரீரமாகவுடையவனாகி, அதைவிட்டுப் பிரியாதிருப்பினும், விகாரமற்றவன் (மாறுபாடுகள் அற்றவன்); ஸ்வயம் ப்ரகாச ஸ்வரூபன் (தானே தோன்றுபவன்); தேச, கால, வஸ்து பரிச்சேதங்களற்றவன் (வரையறை அற்றவன்); ஜீவாத்மாக்களுக்குக் கர்மத்தினால் விளையும் தேஹ வியோகம் (சரீரம் பிரிதல்) உனக்குக் கிடையாது. கர்மத்தினால் விளையும் தேஹ (உடல்) ஸம்பந்தமும், உனக்குக் கிடையாது. நீ புண்ய, பாபங்களாகிற மலங்களற்றவன்; என்றும் மாறாமல் ஒருவாறாகவேயிருப்பவன்; எங்கும் நிறைந்தவன்; தானல்லாத வஸ்து எதுவுமில்லாதவன்; தன்னைக்காட்டிலும் மேற்பட்ட குணமுள்ள வஸ்து இல்லாதவன்; அளவற்ற ஆநந்த ஸ்வரூபமுடையவன். இத்தகைய நீயே ஜகத்காரணன் (உலகிற்குக் காரணம்); தனக்குச் சரீரமாகிய ப்ரக்ருதி, புருஷ, காலங்களை ஸாக்ஷாத்கரிப்பவன்; ஸ்ருஷ்டிக்கு முன்பு, சேதனா சேதனங்களெல்லாம் நாம, ரூபங்களுக்கிடமாகாமல், தன்னிடத்தில் மறைந்திருக்கப் பெற்று, தனியனாயிருப்பவன்; ஜகத் ஸ்ருஷ்டிக்கு முன்பும் அழியாதிருந்து, ஜகத் ஸ்ருஷ்டியை நடத்தின பரமபுருஷன் நீயே. 

அஜ்ஞானமாகிற (அறியாமையாகிற) அந்தகாரத்தைப் (இருட்டைப்) போக்கும் தன்மையுடைய குருவாகிற ஸூர்யனிடத்தினின்றும் கிடைத்த வேதாந்த ஞானமாகிற நல்ல நேத்ரத்தினால் இத்தகையனும் ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் அந்தராத்மாவுமாகிய உன்னைத் தங்களுக்கு அந்தராத்மாவாகவும், தங்களை உனக்குச் சரீரமாகவும் காண்கிறவர்கள், ஸம்ஸாரத்தை மேன்மேலும் விளைப்பதாகிய புண்யபாப கர்மங்களாகிற ஸமுத்ரத்தைக் கடப்பார்கள். இவ்விஷயத்தில் ஸந்தேஹமே இல்லை. 

பரமாத்மாவாகிய உன்னையே தங்களுக்கும், மற்ற ஆத்மாக்களுக்கும், அந்தராத்மாவாக அறியாத மூடர்களுக்கு, அந்த அஜ்ஞானத்தினாலேயே ஸம்ஸாரமெல்லாம் மாறாமல் தொடர்ந்து வருகின்றது. தேஹாத்மாபிமானாதி (இந்த உடலே ஆத்மா என்ற மனக்கலக்கமாகிற) அஜ்ஞானங்களைத் துறந்து, பரமாத்மாவான உன்னை உள்ளபடி அறிவார்களாயின், அப்பொழுது தான் அவர்களுக்கு அந்த ஸம்ஸார பந்தம் நீங்கும். 

கயிற்றைக் கண்டு அதைக் கயிறென்று தெரிந்து கொள்ளாமல் ஸர்ப்பமென்று ப்ரமித்துப் பயப்படுவது போல, ஜீவாத்மாக்கள் தேஹத்தையே (உடலையே) ஆத்மாவென்று ப்ரமித்து, ஸம்ஸார துக்கங்களை அனுபவிக்கிறார்கள். கயிறென்று தெரிந்த பின்பு, ஸர்ப்பத்தைப் பற்றின பயம் நீங்குவது போல, ஆத்மா தேஹத்தைக் (உடலைக்) காட்டிலும் விலக்ஷணனென்று (வேறானவன் என்று) உணர்ந்து, ஆத்மாவுக்கும் அந்தராத்மாவான பரமாத்மாவையும் உள்ளபடி உணர்வானாயின், ஸம்ஸார துக்கங்கள் நீங்கும். ஸம்ஸார பந்தமும், அதினின்று விடுபடுகையுமாகிய இவ்விரண்டிற்கும், அஜ்ஞானமும், ஜ்ஞானமும் காரணமேயன்றி, மற்ற எதுவும் காரணமன்று. 

பகலில் ஸூர்யன் விளங்குகையில், இருள் பறந்தோடுவது போல, ஸத்யம், ஞான (அறிவு) ஸ்வரூபனும், ஜீவாத்மாவுக்கு அந்தராத்மாவும், அத்விதீயனுமாகிய (இரண்டாவது இல்லாத ஒன்றேயான) பரம புருஷனை வேதாந்த வாக்யங்களால் ஆராய்ந்தறிகையில், அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) விளைவதாகிய ஸம்ஸார (உலகியல்) பந்தம் பறந்தோடும். ப்ரக்ருதி, புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), அவற்றிற்கு அந்தர்யாமியாய் நியமித்துக் கொண்டிருப்பினும் அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாதவனுமாகிய உன்னை, ஜீவாத்மாக்களில் ஒருவனாகவும், தேஹத்தையே ஆத்மாவாகவும் ப்ரமித்துப் பரமாத்மாவை வெளியில் தேடுகிற சில மூடஜனங்களின் அறிவின்மையை என்னென்று சொல்லுவேன்? 

இதென்ன ஆச்சரியம்? வீட்டில் கெட்டுப்போனதை, காட்டில் தேடுவாருண்டோ? மற்றும் சிலர் ஆத்ம ஸ்வரூபத்தை அறியாமல், தேஹத்தையே ஆத்மாவாகவும், தங்களை ஸ்வதந்தர்களாகவும் (பகவானுக்கு உட்படாது தன் இச்சையாக செயல்பட வல்லவர்களாகவும்) ப்ரமித்து, உன்னை வெளியில் தேடுகிறார்கள். அவர்களுடைய அஜ்ஞான மஹிமையை என்னென்று சொல்லுவேன்?

அனந்தனே! விவேகமுடைய பெரியோர்கள், தேஹத்தில் அடங்கியிருப்பதும், பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதுமான, ஜீவன் வரையிலுள்ள இருபத்து நான்கு தத்வங்களில், எதையும் பரமாத்மாவென்று பாவிக்காமல், அவற்றைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறுபட்டவனும்), இத்தகைய குணங்களுடையவனுமாகிய உன்னை, ஆராய்ந்தறிகிறார்கள். கயிற்றின் உண்மையை அறிந்தவர்கள், அருகில் இருக்கின்ற கயிற்றைக் கண்டு அங்கே ஸர்ப்பம் இல்லாதிருக்க, ஸர்ப்பம் இருக்கிறதாக ப்ரமிப்பார்களோ? அவ்வாறே, விவேகிகள் தேஹத்தை ஆத்மாவென்றாவது, உன்னை மற்ற தத்வங்களில் ஏதேனுமொன்றாகவாவது, ப்ரமிக்கமாட்டார்கள். 

தேவனே! உன் பாதார விந்தத்தினால், சிறிது அருள் புரியப்பெற்ற புருஷன் தான் ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) உன்னுடைய மஹிமையின் உண்மையை அறிவான். அதனால் அருளப் பெறாதவன், ஜன ஸஞ்சாரமில்லாத (மக்கள் நடமாட்டமில்லாத) இடத்தில் இருந்து, நெடுங்காலம் ஆராய்ந்து பார்க்கினும், உன் மஹிமையைச் சிறிதும் அறியமாட்டான். நீ அருள் புரிவதற்குக் காரணம், உன் பக்தர்களோடு ஸஹவாஸமே (தொடர்பே). ஆகையால், நான் இந்த நான்முகப் பிறவியிலாவது, வேறு மனுஷ்யாதி ஜன்மங்களிலாவது, மற்ற பசு, பக்ஷி, முதலிய திர்யக்கு (விலங்கு) ஜன்மங்களிலாவது, உன் பக்தர்களினிடையில் இருந்து, எதனால் உன் பாதார விந்தங்களைப் பணிவேனோ, அத்தகைய பெரும் பாக்யம் எனக்கு நேரும் படி அருள்புரிவாயாக. 

இடைச் சேரியிலுள்ள பசுக்களும், கோபிமார்களும், மஹா பாக்யமுடையவை. ஏனென்றால், நீ அந்தப் பசுக்களின் பாலைக் கன்றாகவும், கோபிமார்களின் ஸ்தன்யத்தைப் (தாய்ப்பாலை) பிள்ளையாகவும் இருந்து, மனக்களிப்புடன்  நிரம்பவும் பானஞ் செய்தாயல்லவா? ஸமஸ்தமான யாகங்களுங்கூட எவனுக்குப் பூர்ணமான த்ருப்தியை விளைக்கமாட்டாவோ, அப்படிப்பட்ட நீ அவற்றின் ஸ்தன்ய பானத்தினால் (தாய்ப்பாலை அருந்தியதால்) நிரம்பவும் திருப்தி அடைந்தாயல்லவா? ஆகையால், அவற்றின் பாக்ய மஹிமையைச் சொல்ல வேண்டுமோ? 

இடைச்சேரியிலுள்ள நந்தன் முதலிய இடையர்களின் பாக்யம் மிகவும் ஆச்சரியம். அவர்களுடைய பாக்யமே பாக்யம். அளவற்ற ஆனந்தமே வடிவாயிருக்கப்பெற்றதும், எங்கும் நிறைந்ததும், அனாதியுமாகிய பரப்ரஹ்மம், அவர்களுக்கு நண்பனாயிற்றல்லவா? அச்சுதனே ! அவர்களின் பாக்ய மஹிமை அப்படி இருக்கட்டும். அதை எவன் தான் இவ்வளவென்று அளவிட்டு அறிய வல்லவனாவான்? இந்த்ரியங்களுக்கு அபிமானி தேவதைகளான ருத்ரன் முதலிய நாங்கள் பதினொருவர்களுமே மிகுந்த பாக்யசாலிகள். ஏனென்றால், நாங்கள் இந்த இடையர்களின் இந்திரியங்களாகிற பான பாத்ரங்களால், அம்ருதம் போல் ருசியுள்ளதும், மத்யம் (கள்) போல் மதத்தை விளைப்பதுமாகிய, உன் பாதார விந்தங்களின் மகரந்தத்தை (தேனை), அடிக்கடி பானம் செய்கிறோமல்லவா? 

ஒவ்வொரு இந்த்ரியங்களுக்கு அபிமானிகளாகிய நாங்கள், கீர்த்தி, ஸௌகந்த்யம் முதலிய ஒவ்வொரு குணத்தை அனுபவிப்பினும், பெரிய பாக்யசாலிகளென்று புகழத்தகுந்த பெருமையுடையவர்களாய் இருக்கின்றோம். எல்லா இந்த்ரியங்களாலும், எல்லா குணங்களையும் அனுபவிக்கிற இந்த இடையர்களின் பாக்யத்தை என்னென்று சொல்லுவேன்? 

ஸ்ரீக்ருஷ்ணனே! நான் ஆசைப்படுகிற பெரும்பாக்யம் இதுவே. இந்த மனுஷ்ய லோகத்தில், அடவியில் (காட்டில்) கோகுலத்தில் எவனேனும் ஒருவனுடைய பாதங்களின் பராகங்களால் (தூள்களால்) அபிஷேகம் நேரப் பெருவதான, ஏதேனுமொரு மனுஷ்ய ஜன்மத்தை நான் பெறுவேனாக. இந்த இடைச்சேரியிலுள்ளவன் ஒவ்வொருவனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), போக மோக்ஷங்களைக் (உலக ஸுகங்களையும், மோட்சத்தையும்) கொடுப்பவனுமாகிய, உன்னையே தன் ப்ராணாதாரகமாக (உயிருக்கு ஆதாரமாக) நினைத்திருப்பவனல்லவா? வேதாந்தங்களும் கூட உன் பாத தூளியைத் தேடிக் கொண்டிருக்கின்றனவே அன்றி, இன்னும் கண்டறியவில்லை. 

தேவனே! பகாஸுரன் முதலிய தன் குடும்பத்தோடு கூடி பாபிஷ்டையாகிய பூதனை, உண்மையில் கொல்லவேண்டுமென்று நினைத்திருப்பினும், ஸாதுக்களின் வேஷம் பூண்டு, ஸாதுவைப்போல் வந்து, உன்னையே அடைந்தாள். வீடு, பொருள், நண்பர், ப்ரியமான ஆத்மா, பிள்ளை, ப்ராணன், மனம் ஆகிய அவையெல்லாம் உனக்காகவேயென்று நினைத்திருக்கின்ற இடைச்சேரியிலுள்ளவர்களுக்கு, ஜகத்திற்கெல்லாம் பலனான உன்னைக்காட்டிலும் மேலான எந்தப் பலனைக் கொடுக்கப் போகின்றனையோ என்று என் மனம் மயங்குகின்றது. (ஜகத்திற்கெல்லாம் பலனான நீ, இவர்களுக்கு ப்ரத்யக்ஷமாகவே இருக்கின்றாய். உன்னைக் காட்டிலும் மேற்பட்ட பலன் எதுவுமே இல்லை. ஆகையால், நீ இவர்களுக்கு எதைக் கொடுப்பாயென்று என் மனம் மயங்குகின்றது.) 

ஸ்ரீக்ருஷ்ணா! ஜனங்கள் எதுவரையில் எவ்விதத்திலாயினும் உன்னோடு ஸம்பந்தம் உண்டாகப் பெறாதிருப்பார்களோ, அது வரையிலுமே அவர்களை ராகம் (விருப்பு, வெறுப்பு) முதலிய துர்க்குணங்களாகிற திருடர்கள், ஸம்ஸார மார்க்கத்தில் பறிப்பார்கள். அது வரையிலுமே, அவர்களுக்கு க்ருஹம், சிறைச்சாலை போன்றிருக்கும். தேஹாத்ம ப்ரமாதி (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்க) ரூபமான அஜ்ஞானமும், அதுவரையிலுமே கால் விலங்கு போல் பந்தகமாய் (கட்டாய்) இருக்கும். அந்த ஸம்பந்தம் நேருமாயின், உடனே அவையெல்லாம் பறந்து போகும். நீ, ப்ராக்ருத (ப்ரக்ருதியின் மாறுபாடான) சரீரம், ப்ராக்ருத (முக்குணங்களின்) வ்யாபாரம் ஆகிய ப்ரபஞ்சத்தின் தன்மையற்றவனாயினும், ஸங்கல்பத்தினால் ப்ரபஞ்சத்தை அனுஸரித்து, நடக்கின்றாய் என்று எனக்குத் தோற்றுகிறது. அதுவும் உன்னையே சரணமாகப் பற்றின உன் பக்தர்களுக்கு, மாறாத ஸந்தோஷ ப்ரவாஹத்தை விளைப்பதற்காகவே. 

எவர்கள் உன் ஸ்வரூப ஸ்வபாவாதிகளை உள்ளபடி அறிகிறார்களோ, அவர்களே நீ ப்ரபஞ்சத்தை அனுஸரித்து நடப்பதின் காரணத்தை அறியட்டும். பல படச் சொல்லியென்ன? உன் வைபவம் என்னுடைய மனோ, வாக், காயங்களென்கிற (மனது, சொல், செயல் என்கிற) மூன்று கரணங்களுக்கும் விஷயமாகிறதில்லை. எனக்கு இவ்வளவு மாத்ரமே தெரியுமன்றி மற்றொன்றும் தெரியாது. 

ஸ்ரீக்ருஷ்ணனே! ஸர்வஜ்ஞனே! நீ எல்லாவற்றையும் அறிவாய். நான், ஒன்றையும் அறியமாட்டேன். ஜகத்திற்கெல்லாம் நீயே நாதனன்றி, நானன்று. இதோ புலப்படுகிற ஜகத்தெல்லாம் உன்னால் படைக்கப்பட்டு, உன்னிடத்திலேயே ஸ்வாதீனமாக வைக்கப்பட்டிருக்கின்றது. எனக்கும், இதற்கும், ஒரு ஸம்பந்தமும் கிடையாது. ஆகையால், எனக்கு அனுமதி கொடுப்பாயாக. ஸ்ரீக்ருஷ்ணா! வ்ருஷ்ணி குலமாகிற தாமரைக்கு ஸந்தோஷத்தை விளைக்கும் ஸூர்யனே! பூமி, தேவதைகள், ப்ராஹ்மணர்கள், பசுக்கள் இவையாகிற ஸமுத்ரத்திற்கு அபிவ்ருத்தியைக் (செழிப்பைக்) கொடுக்கும் சந்த்ரனே! பாஷண்ட தர்மமாகிற (வேதத்திற்கு விரோதமான கர்மங்களாகிற) இருட்டைத் தொலைப்பவனே! பூமியிலுள்ள ராக்ஷஸர்களுக்கு த்ரோஹம் செய்பவனே! ஸூர்யன் வரையிலுள்ள ஸமஸ்தர்களாலும் நன்கு பூஜிக்கத் தகுந்தவனே! ஷாட்குண்ய பூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே)! கல்பம் வரையிலும் உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மதேவன் அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களுடையவனாயினும், லீலைக்காகச் சுருக்கப்பட்ட திவ்ய மங்கள விக்ரஹமுடைய ஸ்ரீக்ருஷ்ண பகவானை இவ்வாறு துதித்து, மூன்று தரம் ப்ரதக்ஷிணம் செய்து, நமஸ்கரித்து, தன் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) ஸத்ய லோகம் போய்ச் சேர்ந்தான். எதிரேயிருந்த ப்ரஹ்ம தேவனுக்கு அனுமதி கொடுத்தனுப்பிவிட்டு, முன்போலவே தன் நண்பர்கள் உட்கார்ந்திருக்கப் பெற்ற தன் மணற்குன்றிற்கே கன்றுகளை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த இடைப்பிள்ளைகள், ஒரு வர்ஷம் நிரம்பக் கடந்திருப்பினும், தங்கள் ப்ராண நாதனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரிந்தும், அவனுடைய மாயையினால் மதி (புத்தி) மயங்கி, அரை க்ஷணம் போல் நினைத்தார்கள். 

பகவானுடைய மாயையினால், மயங்கின மனமுடையவர்கள், எதை எதைத் தான் மறக்கமாட்டார்கள். ஜகத்தெல்லாம் இந்தப் பகவானுடைய மாயையினால் மதிமயங்கி, தன்னையும்கூட அடிக்கடி மறக்கின்றது. இனி பசி, தாஹம், முதலியவற்றை மறப்பது ஒரு ஆச்சர்யமோ? அந்த இடைப் பிள்ளைகள் அவ்வாறு வருகின்ற தங்கள் நண்பனான ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து, “ஸ்ரீக்ருஷ்ணா! உனக்கு நல்வரவு. நீ வெகு சீக்ரத்தில் வந்தாய். நீ இல்லாமையால், நாங்கள் ஒரு கவளங்கூடப் புசிக்கவில்லை. இங்கு வா; நாமெல்லாரும் கலந்து, குளிர்ந்து, போஜனஞ் செய்வோம்” என்று மொழிந்தார்கள். 

பிறகு, ஸ்ரீக்ருஷ்ணன் சிரித்துக்கொண்டே சென்று, பிள்ளைகளுடன் கூடிப் புசித்து, மலைப்பாம்பின் தோலைக் காட்டிக் கொண்டே வனத்தினின்று கோகுலத்திற்குத் திரும்பி வந்தான். அந்த ஸ்ரீக்ருஷ்ணன், மயில்தோகை புதிய சிவப்பு நிற தாதுக்கள் இவைகளால் விசித்ரம் செய்யப்பட்ட அங்கமுடையவனாகி, குழல், இலை, கொம்பு இவைகளை ஊதி அவற்றின் த்வனியால் (ஒலியால்) ஸந்தோஷம் அடைந்து, தன்னைத் தொடர்ந்து வருகின்ற இடைப்பிள்ளைகளால் பரிசுத்தமான கீர்த்திகள் பாடப்பெற்று, கோபிமார்களின் கண்களுக்கு மஹானந்தத்தை விளைக்கவல்ல காட்சியுடையவனாகி, கன்றுகளை ஓட்டிக்கொண்டு, கோகுலத்தில் நுழைந்தான். பிறகு, கன்று மேய்க்கும் பிள்ளைகள், இடைச்சேரியில் சென்று, “யசோதைக்கும் நந்தகோபனுக்கும் பிள்ளையாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணன் இன்று ஒரு பெரிய மலைப் பாம்பைக் கொன்றான். எங்களையும் அந்த மலைப்பாம்பின் வாயினின்று விடுவித்தான்” என்று மொழிந்தார்கள்.

பரீக்ஷித்து மன்னவன சொல்கிறான்:- ப்ரஹ்மர்ஷி! இடைச் சேரியிலுள்ளவர்களுக்கு, தங்கள் பிள்ளைகளிடத்தில் ஒரு நாளும் இல்லாத ப்ரீதி, பிறர் பிள்ளையாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் எப்படி உண்டாயிற்று? அதற்குக் காரணம் சொல்லுவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவான பரமபுருஷன் ஒருவனே மிகுந்த அன்பிற்கிடமானவன். தேஹம் (உடல்) தேஹத்தைத் தொடர்ந்த பந்துக்கள் முதலாக ஜீவன் வரையிலுள்ள மற்றவைகளெல்லாம், அந்தப் பரமபுருஷனுக்கு ப்ரியமாயிருப்பதைப் பற்றியே அன்பிற்கிடமாகின்றன. ஆகையால், ராஜேந்த்ரனே! ப்ராணிகளுக்கு, தங்கள் சரீரத்தில் என்னுடையதென்னும் அபிமானத்தோடு கூடிய ப்ரீதி எவ்வளவு உண்டாகின்றதோ, அவ்வளவு ப்ரீதி அந்தத் தேஹத்தைத் தொடர்ந்த பிள்ளை, பணம், வீடு முதலியவற்றில் உண்டாகிறதில்லை. (பரமாத்மாவோடு நேரே ஸம்பந்தமுடைய ஆத்மாவிடத்திலுள்ள ப்ரீதி, தேஹத்தில் உண்டாகிறதில்லை. தேஹத்திலுள்ள ப்ரீதி, பிள்ளையிடத்தில் உண்டாகிறதில்லை. பிள்ளையிடத்திலுள்ள ப்ரீதி, பணத்தில் உண்டாகிறதில்லை. பணத்திலுள்ள ப்ரீதி, வீடு முதலியவற்றில் உண்டாகிறதில்லை.) 

ராஜச்ரேஷ்டனே! தேஹத்தையே ஆத்மாவென்று அபிமானித்திருப்பவர்களுக்கும், தேஹத்தில் எவ்வளவு ப்ரீதி உண்டாயிருக்கின்றதோ, அவ்வளவு ப்ரீதி அந்தத் தேஹத்தைத் தொடர்ந்த பிள்ளை, பணம் முதலியவற்றில் உண்டாகிறதில்லை. தேஹத்தையும் கூட தானென்று அபிமானிக்காமல் என்னுடையதென்று அபிமானிப்பார்களாயின், அது ஆத்மாவைப்போல் ப்ரீதிக்கிடமாயிராது. விவேகிகளுக்குக் கூட அந்தத் தேஹத்தினிடத்தில் ப்ரீதி ஆத்மாவிடத்திலுள்ள ப்ரீதியைக் காட்டிலும் குறைந்திருக்குமேயன்றி, முதலே ப்ரீதி மாறாது. 

ஏனென்றால், ஜீர்ணமாகி மரணமடைய முயன்றிருப்பினும் ஜீவித்திருக்க வேண்டுமென்னும் விருப்பம் ஜீர்ணமாகாது; பலம் உடையதாய் இருக்கும். ஆகையால், ஸமஸ்த ப்ராணிகளுக்கும், தங்களுக்கு அந்தராத்மாவான ஸ்ரீக்ருஷ்ணனே மிகுந்த அன்பிற்கிடமானவன். அவனைப் பற்றியே ஜங்கம (அசைவன), ஸ்தாவர (அசையாதவை) ரூபமான மற்ற இந்த ஜகத்தெல்லாம் ப்ரீதிக்கிடமாகின்றது. இந்த ஸ்ரீக்ருஷ்ணனை, ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் அந்தாராத்மாவான பரமபுருஷனென்றே அறிவாயாக. ஆயினும், அவன் தன் ஸங்கல்பத்தினால் ஜகத்தின் ஹிதத்திற்காக, இங்குக் காமத்தினால் விளைந்த சரீரமுடைய ஒரு  ஜீவன் போல் தோற்றுகிறானன்றி வேறில்லை. அதுவும் விவேகமற்ற மூடர்களூக்கேயன்றி, ஜங்கம (அசைவன), ஸ்தாவர (அசையாதவை) ரூபமான ஜகத்தெல்லாம் பகவானுக்குச் சரீரம், அவனுக்குச் சரீரமாகாமல் “அவனை விட்டுப் பிரிந்திருக்கும் வஸ்து எதுவுமே இல்லை” என்று வாஸ்தவத்தை (உண்மையை) அறிந்த விவேகிகளுக்கு, அவ்வாறு தோற்ற மாட்டான். 

ஸமஸ்த வஸ்துக்களும், தங்கள் தங்கள் காரண வஸ்துக்களில் நிலையுற்றிருக்கின்றன. அத்தகைய காரண வஸ்துக்களுக்கும் ஆதாரனாயிருப்பவன் ஸ்ரீக்ருஷ்ணனே. ஆகையால், அவனைக் காட்டிலும் வேறுபட்ட வஸ்து என்ன இருக்கின்றது? அதை நிரூபிப்பாயாக! அவனைக்காட்டிலும் வேறுபட்டதாக நிரூபிக்கத் தகுந்த வஸ்து எதுவுமே இல்லை. பரிசுத்தமும், அழகியதுமான புகழுடையதும், பெரியோர்களுக்கு அவலம்பமுமாகிய (பற்றுக்கொம்பும்) ஸ்ரீ க்ருஷ்ணனுடைய தளிர் போன்ற பாதமாகிற ஓடத்தைப் பற்றினவர்களுக்கு, ஸம்ஸாரமாகிற ஸமுத்ரம், குளப்படி போல் ஸுகமாகவே தாண்டக் கூடியதாயிருக்கின்றது. பெரிய வைகுண்டமென்கிற பரமபதமே, அவர்களுக்கு வாஸஸ்தானமாம் (இருப்பிடமாம்). பல ஆபத்துக்களுக்கிடமான ஸம்ஸாரம், அவர்களுக்கு மறுபடியும் ஒரு காலும் உண்டாகாது. 

ஸ்ரீ க்ருஷ்ணன், கௌமார வயதில் (1 முதல் 5 வயது வரையான குழந்தை வயதில்) செய்த அக மோக்ஷ வ்ருத்தாந்தத்தை இடைப் பிள்ளைகள் பௌகண்டக வயதில் (6 முதல் 16 வயது வரையான சிறுவர் வயதில்) அப்பொழுது தான் நடந்ததாக எப்படி சொன்னார்களென்பதைப் பற்றியல்லவோ நீ என்னை வினவினாய். அதைப்பற்றிச் சொல்ல வேண்டியதையெல்லாம் உனக்குச் சொன்னேன். ஸ்ரீக்ருஷ்ணனுடைய நண்பர்களான இடைப்பிள்ளைகள், வனத்தில் விளையாடினதையும், ஸ்ரீக்ருஷ்ணன் அகாஸுரனைக் கொன்ற வ்ருத்தாந்தத்தையும், புல் முளைத்த மணற்குன்றில் பிள்ளைகளுடன் போஜனம் செய்ததையும், கன்றுகளும், கன்றுமேய்க்கும் பிள்ளைகளுமாகத் தோன்றின சுத்த ஸத்வமயமான பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும், ப்ரஹ்ம ஸ்துதியையும் கேட்கும் புருஷனும், சொல்லும் புருஷனும், விருப்பங்களெல்லாம் கைகூடப்பெறுவார்கள். 

பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக