மயக்கும் தமிழ் - 3 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

ஆண்டாள் ஆண்டவனையும் ஆண்டாள் தமிழையும் ஆண்டாள்

ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மானுட சமூகத்திற்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம். அதுவும் குறிப்பாக தமிழர்களுக்கு கிடைத்த தங்கப் புதையல். பக்தி இலக்கிய உலகத்தில் இன்றைய தேதி வரைக்கும் தனி முத்திரையை பதித்து வரும் ஆண்டாள் நாச்சியாரின் பாசுரங்களுக்கு ஈடு இணை ஏது? எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இதோ ஒரு அற்புதமான நாச்சியார் திருமொழிப் பாசுரம்...

எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே

இந்தப் பாசுரத்தில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா?
தமிழுக்கு சிறப்பே ‘ழ’ தான்.

பாலில் பாதாம் பவுடரை கலப்பது போன்று சொற்களிலே ழ, ளவை கலந்து சிறப்பு செய்திருக்கிறான். திருவரங்கத்தில் பள்ளிகொண்டு இந்த ஜகத்திற்கு காவல் அரணாக விளங்கும் ரங்கநாதர் மீதான ஒருவித காதல் பாசுரம்... காதல் என்றால் தேகம் சார்ந்தது இல்லை. அதற்கும் மேலான ஒன்று. கடவுளா மனிதனா, பக்தியா காதலா... என்கிற இருவேறு நிலைதான் நாச்சியார் திருமொழி எங்கும் பரவி இருக்கிறது. வெறும் உடல் உணர்ச்சிகளுக்கு கிளுகிளுப்பு ஊட்டாமல், உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உரம் பாய்ச்சுவது போல் வார்த்தைகளை வடித்தெடுத்து இருக்கிறார். இந்தப் பாசுரத்தைப் பார்த்தோமானால் திருவரங்கத்து இனிய அமுதர் என்று ஆரம்பித்து, அரங்கனின் அங்கங்களை அடையாளப்படுத்தும் போது வந்து விழுகிற சொல்லாட்சியைப் பாருங்கள்... வாய் அழகர் என்கிறார்.

அரங்கனின் கண்களை மறக்க முடியாமல் கண் அழகர் என்கிறார். இதைத்தான் மற்ற ஆழ்வார்களும் அரங்கனைக் கண்ட கண்கள் என்று சிலாகித்து பரவசப்பட்டுப் பாசுரத்தில் கரைந்து போயிருக்கிறார்கள். நம்மைப்போல பலகீனங்களால் சூழப்பட்டவர்களின் கண்ணுக்கு முன்பாக அரங்கனின் கண் எப்படி இருக்கும். அது பவள வாய் கமலச் செங்கண் இல்லையா? அடுத்து எழு கமலப்பூ அழகர் என்று ஒரு வார்த்தையை பிரயோகம் செய்திருக்கிறார். கமலம் என்றால் அழகிய தாமரைப்பூ என்று பொருள். பகவானே தாமரை மணாளன்தானே. வைணவத்திலே எப்படி திருத்துழாயான துளசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதைப்போல அன்றலர்ந்த தாமரை மலருக்கும் ஒரு விசேஷமான இடம் தரப்பட்டிருக்கிறது. 

அதற்கு மாமலர் என்ற ஒரு பெயரும் உண்டு. தாமரை பூவழகரை இப்போது கூட ஸ்ரீரங்கம் சென்று பாருங்கள். மூலவர் ரங்கநாதராக இருந்தாலும் சரி, உற்சவப் பெருமாள் நம்பெருமாளாக இருந்தாலும் சரி, ஆண்டாள் நாச்சியார் செய்திருக்கும் வர்ணனைக்கு வடிவம் கொடுத்ததுபோல் இருக்கும். தன்மீது தலைவன் இரக்கம் காட்ட வேண்டும் என்கிற ஆதங்கம், ஒருவித ஏக்கப் பார்வை ஆண்டாளை புரட்டிப் போடுகிறது. அதே சமயத்தில் தன் தலைவனான ரங்கநாதரின் கம்பீரத்தால் ஆச்சரியப்பட்டு அதிசயப்பட்டு வெளிப்படுகிற வார்த்தைகளால்... சொல்ல முடியாத உணர்வுகளை தனக்கே உரிய பாணியில் ஆண்டாள் வெளிப்படுத்தியதன் ரகசியம் என்ன தெரியுமா? இங்கேதான் எனக்கு ஆழ்வார்களின் தலைமகன் ஞானத் தந்தை என்று வைணவ உலகம் வணங்கும் நம்மாழ்வார் ஞாபகத்திற்கு வருகிறார். அவருடைய திருவாய்மொழியில் அற்புதமாக ஒரு பாசுரம். அதில் மிக அற்புதமாக ஒரு வரி. 

ஆடி ஆடி அகம் கரைந்து, இசை
பாடி பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று
வாடி வாடும் இல்வாள் நுதலே!

இந்தப் பாசுரம் மனதின் உள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடிமனதின் சுவடுகளாய், ஆழ்கடலின் கொந்தளிப்பாய், இறைவன் அதாவது தலைவன் மேல் கொண்ட ஒருவித மோகத்தை வெளிப்படுத்துவது. ஆடி ஆடி அகம் கரைந்து என்ற வரிகளில் வருகிற அகம், கரைந்து என்று சொல்லப்பட்டதற்கு ஏற்ப, அரங்கனோடு அகம் கரைந்திருக்கிறாள், ஆண்டாள் நாச்சியார். அகம் கரைவது என்பது அப்படி ஒன்றும் மிகச் சாதாரணமான விஷயம் இல்லை. போகிற போக்கில் செய்வதற்கு தன்னையே இழந்தால்தான் தரணி புகழ்கிற தலைவனிடம் தான் சென்று சேர முடியும் என்பது அந்தப் பூ மகளுக்கு தெரியாதா என்ன?

ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை முப்பது பாசுரங்களாக இருந்தாலும் சரி, அவளுடைய நாச்சியார் திருமொழி பாசுரங்களாக இருந்தாலும் சரி, தன் படைப்புகள் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

மனித சமூகத்தை பார்த்து, நீங்கள் வெறும் போகப் பொருள் கிடையாது. புறத் தூய்மையாலும், அகத் தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்ற கருத்தை எட்டாம் நூற்றாண்டில் ஒரு பெண் கவிஞர் சிந்தித்து சொல்லி யிருக்கிறாள் என்றால் அது என்ன சாதாரண விஷயமா? பக்தி உலகம் அவளை ஒரு புரட்சிப் பெண்ணாகவே பார்த்து மகிழ்ந்து வருகிறது. அவளுடைய காதலன் மானிடன் இல்லை மால்  திருமால் என்கிற போது அவளுடைய காதல் உணர்ச்சி கள் மிகவும் தூய்மை அடைந்து விடுகின்றன. அதில் மனம் சார்ந்திருக்கிறது என்றாலும் கூட, மாலவனிடம் மனத்தை பறிகொடுத்ததனால் அதுவும் தெய்வத்தன்மை அடைந்து விடுகிறது. ஆண்டாளுக்கு முன்பும் எவ்வளவோ பேர் வந்திருக்கிறார்கள். ஆண்டாளுக்குப் பிறகும்கூட எத்தனையோ பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், பக்தியை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் விதத்தில் அவளின் எளிமையான சொல்லாட்சி அதிலுள்ள இனிமை, இளமை, எளிமை அப்பப்பப்பா.

எதைச் சொல்வது? எதை விடுவது? ‘தமிழுக்கும் அமுது என்று பேர்’ என புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சும்மாவா சொன்னார். அவருக்கு குருவான பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியோ ‘பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி பேணி காத்திடும் ஈசன்’ என்றான். இங்கே ஆண்டாளுக்கும் அரங்கனுக்கும் இடையே உள்ள நெருக்கம் உறவு சாதாரணமானதா? ஆண்டாள் ஆண்டவனையும் ஆண்டாள், தமிழையும் ஆண்டாள், அவளுடைய வசீகரத்தால் நம்மையும் ஆள்கிறாள்.

இல்லாவிட்டால் கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்களா? கோதைத் தமிழால் கோவிந்தனுக்கு மட்டுமா ஏற்றம்? ஆண்டாளின் திருத்தகப்பனார் பெரியாழ்வார் ஆழ்வார்களில் ஒருவர். மகள் ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். தந்தையும் மகளும் தமிழால் விளையாடி இருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் இரண்டு எம்.எல்.ஏக்களை பார்க்கலாம். அமைச்சர்களை பார்க்கலாம். பணக்கார கோடீஸ்வரர்களைப் பார்க்கலாம். இன்னும் யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பார்க்க முடியும். இரண்டு ஆழ்வார் பெருமக்களை பார்க்க முடியுமா? அதுவும் ஒருவர் இறைவனுக்கே மாமனார் ஆனவர். மற்றொருவர் அந்த இறைவனையே மணந்த மலர் மகள். அடடா என்ன மகிழ்ச்சி... சிறப்பு!

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை