வியாழன், 16 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 5 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

நம்மாழ்வார் வாக்கும் நம்முடைய நிலையும்


“நம் ஆழ்வார்” ஆழ்வார்கள் பதின்மரிலே இவரை மட்டும் “நம் ஆழ்வார்” என்று சொல்லக் காரணம் என்ன? எல்லாப் பெருமாளும் பெருமாள் தான். ஆனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளுக்கு நம்பெருமாள் என்று பெயர். அதே போல் எல்லா ஆழ்வார்களுக்கும் சரீரமாக விளங்குவதாலும், ஆசாரிய ஸ்தானத்தில் இருப்பதாலும் இவரை நம்மாழ்வார் என்கிறோம். “பிரபந்த ஜன கூடஸ்தர்” என்கிறோம்.


நம்மாழ்வாரிலே எல்லா ஆழ்வாரும் அடக்கம். இது இவருடைய இணையற்ற பெருமை. வேதம் தமிழ் செய்த மாறன் அல்லவா? நம்பெருமாள், நம்மாழ்வார், நம்பிள்ளை, நம் ஜீயர் என்று அடை மொழியோடு அழைப்பது அவரவர்களுக்குரிய ஏற்றத்தால் என்பார் உபதேசரத்தின மாலை என்ற நூலில் சுவாமி மணவாள மாமுனிகள்.


பாண்டிநாடு தந்த ஆழ்வார். இவர் தென்பாண்டி நாடு திருக்குருகூரிலே வேளாளர் குடியில் பிரமாதி ஆண்டு வைகாசித் திங்கள் பன்னிரண்டாம் நாள் வளர்பிறையில், பௌர்ணமியில் வெள்ளிக்கிழமை விசாக நட்சத்திரம், கடக லக்கினத்தில் அவதரித்தார்.


வெகுகாலம் பிள்ளையில்லாமல் இருந்து குழந்தை பிறந்ததே என்ற மனமகிழ்ச்சியில் இருந்த பெற்றோருக்கு நாள் செல்லச் செல்ல மிகுந்த வருத்தமும் உண்டாகிக் கொண்டே வந்தது.


காரணம், பிள்ளை சராசரிப்பிள்ளையாக இல்லை. பாலுண்பதில்லை, அழுவதில்லை, மொத்தத்தில் உணர்வற்ற நிலை. காலம் கடந்து பிறந்த பிள்ளை இப்படி இருக்கிறதே என்ற வருத்தத்தில், வரம் கொடுத்தவனிடமே முறையிடுவோம் என்று எண்ணிய தம்பதியினர், நேராக ஆழ்வார் திருநகரி ஆதிப்பிரான் சந்நிதிக்குச் சென்றனர்.


இறைவன் திருமுன் கிடத்தி மனமுருக அந்த மாலவனை வேண்டினர். எந்தப் பிறவிக்கும் ஓர் காரண காரியம் இருக்கும். ஆனால், அதைத் தீர்மானிப்பது சர்வேஸ்வரனான இறைவன் அல்லவா!


ஆழ்வாரின் ஞானத் தமிழ் அருந்த காத்துக் கிடக்கும் அவன் எண்ணத்தை, சாதாரண மனநிலையில் இருந்த காரி மற்றும் உடைய நங்கை தம்பதிகளால் அறிய முடியவில்லை.


ஆனால், பெருமாளும், குழந்தையாகக் கிடந்த ஆழ்வாரும் என்ன மாயமொழியில் பேசிக் கொண்டார்களோ தெரியவில்லை. அங்கே தெய்வச் சந்நிதி முன் ஓர் திருவிளையாடல் அரங்கேறியது.



ஜடமாக விழுந்து கிடந்த குழந்தை திடீரென தவழ ஆரம்பித்தது. ஆச்சரியமான ஆச்சரியம் பெற் றோர்களுக்கு... திருக்கோயில் பிராகாரத்தை வலம் வந்த குழந்தை அங்கே ஓர் புளிய மரப்பொந்தில் சென்று அமர்ந்து கொண்டது. அவ்வளவுதான்... அப்படியே யோகத்தில் ஆழ்ந்தது குழந்தை. பதினாறு ஆண்டுகள் கழித்து மதுரகவிகள் என்றொரு வேத பண்டிதர் வந்தார்.


திருக்கோயிலில் அழகே ஓர் வடிவாய் சின் முத்திரையோடு, ஆடாது அசையாது, வாடாது, வதங்காது, அமர்ந்திருக்கும் பாலகனின் எழில் தோற்றத்தைக் கண்டார். சற்று நேரம் இவரும் தியான திசையில் நின்றார்.


பிறகு சுய உணர்வு வந்து பாலகனைக் கைதட்டி அழைத்தார். இவர் அழைப்பிற்கு அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அவருடைய பார்வை உணர்வையும், செவிப்புலன் உணர்வையும் சோதிக்க எண்ணிய மதுரகவியார் ஓர் சிறிய கல்லை எடுத்து அவர் முன் போட்டார். சட்டென்று அந்த ஞானதீபம் அசைந்தது. ஆழ்வார் கண்மலர்ந்தார்.


ஆயிரம் தாமரைப் பூக்கள் ஒன்றாக மலர்ந்த மலர்ச்சியும் குளுமையும், சூரிய ஒளியை விட அதிக வீட்சண்யம் உடைய ஒளியையும் தரிசித்த மதுரகவியார், “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?” என்று மெதுவாகக் கேட்டார். அடுத்த நொடி அந்த இனிமையான குரலினை உலகம் கேட்டது. வகுளாபரணரான ஆழ்வார் சோதி வாய் மெல்லத் திறந்து “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்...” என்றார்.


கூட இருந்தவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. கேட்டவர்க்கும், சொன்னவர்க்கும், இவற்றையெல்லாம் தூண்டி விட்ட எம்பெருமானுக்கும் தெரிந்த விஷயத்தை இவர்களால் அறிய முடியுமா என்ன? செத்தது என்றால் அசேதனமான சரீரம். சிறியது என்றால் உடம்பு உள்ளே இருக்கும் ஆத்மா.


பிறந்து இறக்கும்படியானது சரீரம் (உடல்). இதிலே அழியாதது உயிர் (ஆத்மா). ஆத்மா (ஜீவாத்மா) மறுபடி மறுபடி சரீரத்தை அடைந்து கர்ம வினைகளை அநுபவித்துக் கொண்டே இருக்கிறது.


இந்த ஆத்மா சாணத்தில் சிக்கிய புழு போல மண்ணுலக சுக துக்கங்களை திரும்பத் திரும்ப அநுபவித்தும் சலிக்காமல் மறுபடியும் கர்ம வினையில் சிக்கி சரீரத்தில் புகுந்து கிடப்பதிலேயே காலம் கழிக்கிறது. உயிரற்றதாகிய பஞ்ச பூதங்களால் ஆன உடம்பில் உயிர் புகுந்து கொண்டு (அணு பரிமாண முள்ள ஜீவாத்மா) அந்த உடம்பால் உள்ள உணர்வுகளை (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) அநுபவித்துக் கொண்டு அந்த உடம்பு சாயும் வரை (மரணமடையும் வரை) அதிலேயே இருக்கிறது. சித் எனப்படும் ஜீவாத்மா, அசித் எனப்படும் (உயிரற்ற) உடம்பில் புகுந்ததால் இரண்டும் இயங்குகின்றது.
அதன் பலனாக அது ஈஸ்வரனை அடைய வேண்டும். அதற்கு ஞானம் பிறக்க வேண்டும். மாறாக, சித்தும் அசித்தும் இணைந்து இயங்கி சிற்றின்ப போகங்களிலே காலம் கழிக்கிறது.


சித்தானது வேறு உடம்பைத் தேடி அங்கேயும் இதே உலக இன்பங்களை நுகர்கிறது. சரீர ஆத்ம சம்பந்தத்தை இத்தனை அழகாகவும், அது உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அற்புதமாக இந்த கேள்வி பதிலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.


இதன் மூலம் கேள்வி கேட்டவரின் ஞானத்தையும், பதில் சொன்னவரின் ஞானத்தையும் ஒன்றாக அறிய முடிகிறது. நம்மாழ்வாரின் நூல்களைப் படிப்பதற்கு முன் நம்மாழ்வார் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.


நம்மாழ்வாரின் திருவாய்மொழி செய்தி முழுதும் அவரின் அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்ற ஒரே வார்த்தையின் விரிவுதான். தன்னை அறிதல் என்பது இதைத்தான். மனிதப்பிறவி எடுத்த நாம் எத்தைத்தின்று எங்கே கிடக்கிறோம் என்ற கேள்வியை ஆராய்ந்தால் வந்த வாழ்வின் நோக்கத்தை அறியலாம். இனியாவது அறிய முயற்சிப்போம்!


வாழ்க்கை நெறிகள் வளரும்…


நன்றி - சப்தகிரி மே 2018


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக