ஐந்தாவது ஸ்கந்தம் – நான்காவது அத்தியாயம்
(ருஷபனுடைய சரித்ரத்தைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு பிறக்கும் பொழுதே பகவானுடைய லக்ஷணங்களெல்லாம் தோன்றப் பெற்று ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸமமாயிருக்கை, இந்த்ரிய நிக்ரஹம் (புலன் அடக்கம்), சப்தாதி விஷயங்களில் ப்ரீதி (ஆசை) இல்லாமையாகிற வைராக்யம், எல்லோரையும் அடக்கியாள்கையாகிற ஐச்வர்யம் எல்லாம் நிறைந்திருக்கையாகிற மஹாவிபூதி இவை முதலிய குணங்களுடன் தினந்தோறும் வளர்கின்ற வைபவமுடைய அப்புதல்வனைக் கண்டு மந்திரி முதலிய ராஜாங்கத்தவர்களும் ப்ரஜைகளும் ப்ராஹ்மணர்களும் இவன் பூமண்டலத்தை ஆளவேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டார்கள். அப்புதல்வன் இப்படி ஸத்வ குணம் தலையெடுத்து மேன்மைக்கிடமான தேஹம், பெரிய குணப்பெருக்கு, இந்திரிய பலம் (பலம் பொருந்திய இந்த்ரியங்கள்), தேஹபலம் (உடல் பலம்), செல்வம், மிகப்பெரிய நடத்தைகளால் விளையும் ப்ரஸித்தி, வீர்யம், சௌர்யம் இவைகளால் மிகுந்த ப்ரபாவமுடையவனாய் இருந்ததைப் பற்றியும் சீர்மையைப் பற்றியும் அவனுக்கு அவன் பிதாவான நாபி மன்னவன் ருஷபனென்று பேரிட்டான். இந்த்ரன் இந்த ருஷபனிடம் பொறாமையால் விரோதித்து இவனுடைய ராஜ்யத்தில் மழை பெய்யாதிருந்தான். யோகேச்வரனாகிய அம்மன்னவன் அதை அறிந்து சிரித்துத் தன் விசித்ர சக்தியால் அஜாபமென்கிற தன் ராஜ்யத்தில் மழை பொழியும்படி செய்தான். நாபி மன்னவன் தான் ஆசைப்பட்டபடி நற்பிள்ளையைப் பெற்றுப் பகவானுடைய மாயையால் மதிமயங்கி அவனுடைய அம்சாவதாரமான அம்மஹானுபாவனைத் தன் புதல்வனாகப் பாவித்துப் பெரிய ஸந்தோஷத்தினால் உரைகள் தழதழத்துத் தன் ஸங்கல்பத்தினால் மானிட உருவம் கொண்டவனும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய அப்பரமபுருஷனைக் குழந்தாய் என்றழைத்து மஹாநந்தத்தை அடைந்தான். பட்டணத்து ஜனங்களும் ப்ரக்ருதிகளும் நாட்டார்களும் தன் புதல்வனிடத்தில் அனுராகத்துடன் இருப்பதை அறிந்து நாபி மன்னவன் வர்ணாச்ரம தர்ம மர்யாதைகளைப் பாதுகாக்கும்படி அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து ப்ராஹ்மணர்களிடம் ஒப்புவித்து மேரு தேவியுடன் பதரிகாச்ரமம் சென்று, பிறர்க்கு மனவருத்தம் விளைக்காமல் விக்னங்களால் (இடையூறுகளால்) தடைபடாது வளர்கின்ற தவத்தினாலும் அங்கங்களோடு கூடின பக்தியோகத்தினாலும் நரநாராயணனென்னும் பேருடைய வாஸுதேவ பகவானை ஆராதித்து ப்ராரப்த அவஸானகாலம் (ப்ராரப்த கர்மம் முடிவு பெரும் சமயம்) நேரப் பெற்று முத்தி அடைந்தான்.
விதுரனே! இந்நாபியின் புகழை இங்கனம் பாடுகிறார்கள்., “ராஜரிஷியாகிய நாபியின் சரித்ரம் ப்ரஸித்திபெற்றது: அவ்வாறு மற்றெவனும் செய்யவல்லவனல்லன், பகவான் இவனுடைய பரிசுத்தமான கர்மத்தினால் ஸந்தோஷம் அடைந்து இவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். இந்த நாபி மன்னவனைத் தவிர ப்ராஹ்மணர்களைப் பாதுகாத்து அவர்களிடத்தில் விச்வாஸத்தோடு இருப்பவன் மற்றெவனும் இல்லை. இந்த மன்னவனுடைய யாகத்தில் ப்ராஹ்மணர்கள் மங்களமான வஸ்துக்களால் பூஜிக்கப்பட்டுத் தமது மந்த்ர பலத்தினால் யஜ்ஞேச்வரனான பரமபுருஷனைக் கண்களால் கண்டு அனுபவிக்கும்படி காட்டினார்கள்.”
ருஷபதேவன் ராஜ்யாபிஷேகம் பெற்றபின்பு தன்னுடைய ராஜ்யமாகிய அஜநாபவர்ஷம் ஸ்வர்க்க மோக்ஷங்களை நிறைவேற்றிக் கொடுக்கும்படி கர்மங்களை அனுஷ்டிப்பதற்குரிய இடமென்று நினைத்துப் பிறரும் இங்கனமே செய்ய வேண்டுமென்பதற்காகத் தான் ஸர்வஜ்ஞனாயினும் சில நாள் குருகுலவாஸம் செய்து வரங்களைப் பெற்று அக்குருக்களால் அனுமதி கொடுக்கப் பெற்று, இல்லற வாழ்க்கையிலிருப்பவர் இங்கனம் தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்பதை அறிவிக்கும் பொருட்டுச் சாஸ்த்ரங்களில் ப்ரவ்ருத்தி கர்மமென்றும் நிவ்ருத்திகர்மமென்றும் விதிக்கப்பட்ட இருவகைக் கர்மங்களையும் அனுஷ்டித்துக் கொண்டு இந்த்ரன் கொடுத்த ஜயந்தியென்னும் பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) நூறு பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் முதல்வன் பரதனென்னும் பேருடையவன்; புகழத்தகுந்த குணங்களுடையவன். அவன் முதற்கொண்டே இந்த அஜநாபவர்ஷத்தை அவன் பேரால் பாரதவர்ஷமென்று வழங்கி வருகிறார்கள். அவன் தம்பிகளான குசாவர்த்தன், இலாவர்த்தன், ப்ரஹ்மாவர்த்தன், ஆர்யாவர்த்தன், மலயகேது, பத்ரஸேனன், இந்த்ரஸ்ப்ருக், விதர்ப்பன், கீகடன் என்னும் இவ்வொன்பதின்மரும் மற்ற தொண்ணூறு பேர்களைக் காட்டிலும் ப்ரதானராய் இருந்தார்கள். மற்ற தொண்ணூறு பேர்களில் கவி, ஹரி, அந்தரிக்ஷன், ப்ரபுத்தன், பிப்பலாயனன், ஆவிர்ஹோத்ரன், த்ரமிடன், சமஸன், கரபாஜனன் என்னும் இந்த ஒன்பதின்மர் பாகவததர்மத்தை வெளியிட்டுக்கொண்டு மஹாபாகவதர்களாய் இருந்தார்கள். அவர்களின் சரித்ரம் பகவானுடைய மஹிமைகள் உள்ளடங்கப்பெற்று வளர்ந்திருக்கும்; சித்த சாந்தியை விளைக்கும். அதை மேல் வஸுதேவ நாரத ஸம்வாதத்தில் சொல்லப் போகிறோம். அவர்க்குத் தம்பிகளான மற்ற எண்பத்தோறு பேர்களும் தந்தையின் ஆஜ்ஞையை அனுஸரித்து க்ருஹஸ்தாச்ரம ஸம்பத்தெல்லாம் (செல்வமெல்லாம்) நிறைந்து ஸாங்கவேதாத்யயனம் செய்தவர்களும் யஜ்ஞானுஷ்டான சீலர்களும் ஸதாசாரத்தினால் பரிசுத்தர்களுமாய் இருந்தமை பற்றி ப்ராஹ்மணர்களாய் விட்டார்கள்.
ருஷபனென்னும் பேர்பூண்டு அவதரித்த பகவான் கர்மத்திற்குட்படாமல் ஸ்வதந்த்ரனாய் அக்கர்மத்தினால் விளையும் அனர்த்த பரம்பரைகள் எவையும் தீண்டப்பெறாமல் கேவல ஆநந்தமயமான ஸ்வரூபத்தை அனுபவிக்கும் தன்மையுள்ள ஸர்வேச்வரனாயிருந்தும், தர்மமார்க்கத்தை அறியாதவர்க்குக் கால வசத்தினால் பாழான தர்மத்தைத் தனது ஆசாரத்தினால் அறிவிக்க முயன்று தர்மம், அர்த்தம், புகழ், ஸந்தானார்த்தமான போகம் (பிள்ளை பேறுக்காக இன்பம்) மோக்ஷம் ஆகிய இத்தன்மைகள் ஸித்திக்குமாறு ப்ராக்ருதன் போல் வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்துக்கொண்டு ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸமனாயிருக்கை ராகாதி தோஷங்களால் (விருப்பு, வெறுப்பு முதலிய குறைகளால்) மனம் கலங்கப்பெறாமை, தாழ்ந்தவரையும் தன்னோடொத்து நினைக்கை, பிறர் துக்கம் கண்டு வருந்துகை முதலிய குணங்களெல்லாம் அமைந்து க்ருஹஸ்தாச்ரமத்தில் ஜனங்களை நியமித்துக் கொண்டிருந்தான். மேன்மையுடையவர் எவற்றைச் செய்வார்களோ அதையெல்லாம் உலகத்திலுள்ளவர் அனுஸரிப்பார்களாகையால் அம்மன்னவன் மேன்மையுடைய தனது அனுஷ்டானத்தினால் உலகங்களைத் திருத்தப் பார்த்தான். அவன் ஸகல தர்மங்களும் உள்ளடங்கின வேத ரஹஸ்யத்தையெல்லாம் தானே அறிந்தவனாயினும் ப்ராஹ்மணர்களைக் கேட்டு அவர்கள் காட்டின வழியின்படி ஸாமம் முதலிய (ஸாம, பேத, தான, தண்ட என்கிற) உபாயங்களால் ப்ரஜைகளைப் பாதுகாத்து வந்தான். த்ரவ்யம் தேசம் காலம் வயது ச்ரத்தை ருத்விக்குக்கள் பலவகை அங்கங்கள் இவையெல்லாம் அமைத்துக்கொண்டு ஸமஸ்த யாகங்களையும் சாஸ்த்ரங்களில் விதித்தபடி ஒவ்வொன்றையும் நூறு நூறு தடவைகள் அனுஷ்டித்தான். ருஷபதேவன் இந்தப் பாரதவர்ஷத்தைப் பாதுகாத்து வருகையில், தமது நாதனாகிய அந்த ருஷபனிடத்தில் தமக்கு நாள்தோறும் மேன் மேலும் ஸ்னேஹம் வளரவேண்டுமென்பதைத் தவிர எவனும் தனக்கில்லாத மற்ற புருஷார்த்தத்தை எதையும் மற்றொருவனிடத்தில் ஒருக்காலும் சிறிதும் எந்தக் காரணத்தைப் பற்றியும் அபேக்ஷிக்கவில்லை. அந்த ருஷபன் ஒருகால் திரிந்துகொண்டே சென்று ப்ரஹ்மாவர்த்த தேசத்திற்குப் போனான். அங்கு ப்ரஹ்மரிஷிகள் பலரும் ஸபை (கூட்டம்) சேர்ந்திருந்தார்கள். அம்மன்னவன் அந்த ஸபையில் சென்று ப்ரஜைகள் கேட்டுக் கொண்டிருக்கையில் மனவூக்கமுடையவரும் வணக்கம் ஸ்நேஹம் ஸந்தோஷம் இவற்றின் மிகுதியால் தனக்கு ஸ்வாதீனர்களுமான தன் புதல்வர்களை நோக்கி அவர்களுக்குக் கற்பித்துக்கொண்டு இங்கனம் மொழிந்தான்.
நான்காவது அத்தியாயம் முற்றிற்று.