ஶ்ரீமத் பாகவதம் - 113

ஐந்தாவது ஸ்கந்தம் – ஐந்தாவது அத்தியாயம்

(பரதன் தன் பிள்ளைகளுக்கு மோக்ஷ தர்மத்தை உபதேசித்தலும், தான் பரமஹம்ஸர்களின் தர்மத்தை அனுஷ்டித்தலும்)

ருஷபதேவன் சொல்லுகிறான்:- பிள்ளைகளே! இவ்வுலகத்தில் ப்ராணிகளுடைய தேஹங்களுக்குள் இம்மனுஷ்ய தேஹம் (உடல்) வருந்தி ஸம்பாதிக்கத் தக்கவைகளும் கடைசியில் துக்க ரூபங்களுமான சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதற்காக ஏற்பட்டதன்று. அவை அமேத்யத்தைப் (மலத்தை) புசிக்கிற பன்றி முதலிய ஜந்துக்களுக்கும் உள்ளவைகள். ஆகையால் கர்மங்களைத் துறந்து ஸம்ஸாரத்தினின்று விடுபட்டு அளவிறந்த (அளவற்ற) ப்ரஹ்மாநந்தத்தை அனுபவிக்கும்படி பகவத் ஆராதன ரூபமான தவத்தை அனுஷ்டிக்கும் பொருட்டே ஏற்பட்டது. பெரியோர்களைப் பணிதல் மோக்ஷத்திற்கு ஹேது (காரணம்) என்றும், பெண்டிர்களிடத்தில் மனப்பற்றுடையவரோடு ஸஹவாஸம் நேரினும் அது ஸம்ஸாரத்திற்கு ஹேதுவாம் (காரணமாம்) என்றும் சொல்லுகிறார்கள். ஸுகம் துக்கம் முதலியவற்றில் மன விகாரமற்று (மனதில் மாறுபாடு அற்று) மனத்தையும் மற்ற இந்திரியங்களையும் வென்று பொறுமையும் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஹிதம் செய்யும் தன்மையும் அமைத்து பரோபகாரத்தில் (பிறர்க்கு உதவுவதில்) மன ஆக்கமுற்று (மனம் மிகவும் ஈடுபட்டு) ஸர்வேச்வரனாகிய என்னிடத்தில் ஸ்நேஹத்தையே புருஷார்த்தமாக நினைத்து, தேஹ யாத்ரையே பொழுது போக்காயிருக்கும் ப்ராக்ருத ஜனங்களிடத்திலும் பெண்டிர் புதல்வர் நண்பர் முதலிய பல பற்றுக்களுக்கிடமான க்ருஹஸ்தாச்ரமத்திலும் ப்ரீதியின்றி உலகத்தில் தேஹ யாத்ரைக்கு வேண்டியவற்றையொழிய மற்ற எதையும் விரும்பாதிருப்பவர்களே பெரியோர்களாவார்கள். ஜீவன் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து இந்திரியங்களின் ப்ரீதிக்காக முயன்று பலவகைக் கார்யங்களைச் செய்கின்றான். இது நிச்சயம். பூர்வ ஜன்மத்தில் இந்த்ரியங்களின் திருப்திக்காகச் செய்த கர்மத்தினாலல்லவோ இப்பொழுது பல வருத்தங்களுக்கு இடமாயிருப்பதும் நிலையற்றதுமாகிய இத்தேஹத்தைப் பெற்றான். மீளவும் அங்கனமே செய்வானாயின், ஜன்மாந்தரத்தைப் பெற்று வருந்த வேண்டுமல்லவா? ஆகையால் அங்கனம் இந்திரியங்களின் ப்ரீதிக்காகப் பல கர்மங்களைச் செய்வது எனக்கு நலமாகத் தோன்றவில்லை. ஆத்ம ஸ்வரூபத்தை அறிய வேண்டுமென்னும் விருப்பம் உண்டாகாத வரையிலும் அவ்வஜ்ஞானத்தினால் ஆத்ம ஸ்வரூபம் மறைந்து தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமிக்கும் புத்தி தொடர்ந்து வரும். இந்திரியங்களின் திருப்திக்காகக் காமங்களைச் செய்யும் வரையில் மனம் மேன்மேலும் சரீர ஸம்பந்தம் (பிறப்பு - ஜீவனுக்கு ஏற்படும் உடல் ஸம்பந்தமே அவனுக்கு பிறப்பு) விளையுமாறு கர்மங்களில் தாழ்வுற்றிருக்கும். இங்கனம் கர்ம ஸம்பந்தத்திற்கிடமான அவித்யையால் (அறிவின்மையினால்) தீண்டப்பட்டிருப்பது பற்றி மனம் ஜீவனைக் கர்மங்களில் தூண்டுகிறது. அதனால் தேஹ பந்தத்தைப் பெறுகிறான். ஆகையால் ஸர்வாந்தராத்மாவான என்னிடத்தில் ப்ரீதிரூபமான பக்தி உண்டாகாத வரையில் தேஹ பந்தத்தினின்று விடுபடமாட்டான். தனக்குப் புருஷார்த்தமான ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அனுஸந்திப்பதில் ஊக்கம் தவறுதலின்றி, “சப்தாதி விஷயங்களில் இந்திரியங்களுக்குள்ள விருப்பம் ஆத்மாவுக்கு இயற்கையில் ஏற்பட்டதன்று. தேஹ ஸம்பந்தத்தைப் பற்றினது” என்பதை விவேகத்துடன் ஆராய்ந்து அறியாதிருக்கும் வரையில் ஜீவன் ஆத்ம பரமாத்மாக்களின் ஸ்வரூபத்தை மறந்து அறிவழிந்து ஸ்த்ரீ புருஷர்களின் புணர்ச்சியையே (சேர்க்கையையே) முக்யமாகப் பெற்ற இல்லற வாழ்க்கையில் இறங்கி அதில் பலவகையான தாபங்களை அனுபவிக்கிறான். ஸ்த்ரீ புருஷர்கள் ஒருவரையொருவர் புணரும் புணர்ச்சியே அவ்விருவர்க்கும் மனத்தில் முடிச்சுபோல் அவிழ்க்க முடியாத கர்ம வாஸனைக்கு இடமென்று சொல்லுகிறார்கள். இக்கர்ம வாஸனையே ஜீவனுக்கு தேஹத்தில் நானென்னும் புத்தியும் மனை, கழனி (வயல்), புதல்வன், நண்பன், பணம் முதலியவற்றில் என்னுடையதென்னும் புத்தியுமாகிற பெரிய மோஹத்திற்கிடமாகின்றது. போக்க முடியாமல் உறுதியாயிருப்பதும் நெடுநாள் கர்மங்களை ஓயாமல் செய்தமையால் ஏற்பட்டதும் மேன்மேலும் கர்மங்களைச் செய்வதற்கு ஹேதுவுமாகிய ஹ்ருதய க்ரந்தி (மனத்தின் முடிச்சு) என்கிற வாஸனை தீரும்பொழுதுதான் ஜீவன் இந்த ஸம்ஸாரத்தினின்று விடுபட்டுப் புண்ய பாபங்களைத் துறந்து பரமபுருஷனைப் பெறுவான். 


பரிசுத்தனும் குருவுமாகிய என்னிடத்தில் பக்தியும் அனுவ்ருத்தியும் சப்தாதி விஷயங்களில் ப்ரீதியில்லாமையும் குளிர் வெயில் முதலியவற்றைப் பொறுக்கையும் இஹலோகம் பரலோகம் ஆகிய எல்லா இடங்களிலும் ஜந்துவுக்கு வ்யஸனம் (கஷ்டம்) தொடர்ந்தே வருமென்கிற அனுஸந்தானமும் நன்மை தீமைகளை அறிய வேண்டுமென்னும் விருப்பமும் உபவாஸரூபமான தவமும் வீணாசை தீரப்பெறுகையும் என்னுடைய ஆராதன ரூபமான வர்ணாச்ரம கர்மங்களைச் செய்கையும் என் கதைகளைக் கேட்கையும் என்னையே தெய்வமாக நினைத்திருக்கும் பாகவதர்களோடு ஸஹவாஸமும் என் குணங்களைக் கீர்த்தனம் செய்கையும் வைரம் (விரோதம்) இல்லாமையும் எல்லாவற்றையும் ஸமமாக நினைக்கையும் இந்திரிய நிக்ரஹமும் (புலன் அடக்கமும்) தேஹத்தில் நானென்னும் புத்தி வீடு வாசல் முதலியவற்றில் என்னுடையதென்னும் புத்தி இவற்றைத் துறக்கையும் ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை அனுபவிக்கையும் பரிசுத்தமான ஆஹாரத்தை உட்கொள்கையும் ப்ராணன் இந்திரியம் மனம் இவற்றை வெல்லுகையும் ஸத் உபாயத்தில் (நல் வழியில்) ச்ரத்தையும் ஸ்த்ரீ ஸம்போகம் (சேர்க்கை) இல்லாமை முதலிய ப்ரஹ்மசர்யமும் எப்பொழுதும் செய்யவேண்டிய செயல்களில் மன ஆக்கம் தவறாமையும் வாக்கை அடக்குகையும் எல்லாம் பரப்ரஹ்மஸ்வரூபமே என்கிற நினைவும் சாஸ்த்ர ஜ்ஞானத்தினால் கிளர்கின்ற த்யான ரூபமான ஜ்ஞானமும் ஸமாதியோகமும் ஆகிய இவற்றையெல்லாம் தைர்யம், ப்ரயத்னம் (முயற்சி), நிச்சயம் (உறுதி) இவற்றோடு நடத்திக்கொண்டு வருவானாயின் ஹ்ருதய க்ரந்தி (மனத்தின் முடிச்சு) என்கிற வாஸனையை அழித்து அஹம்புத்திக்கு விஷயமான தேஹத்தைத் துறப்பான். பெரியோர்கள் உபதேசித்தபடி இந்த யோகத்தை அனுஷ்டித்துக் கர்மங்களுக்கு வழிகாட்டுகிற அஹங்கார மமகாரங்களாகிற அவித்யையால் ஏற்பட்ட வாஸனையென்னும் ஹ்ருதய க்ரந்தியை (மனத்தின் முடிச்சை) மனவூக்கத்துடன் நன்றாகப் போக்கிக்கொண்டு அப்பால் இதினின்று மீள வேண்டுமன்றி இடையில் இதைக் கைவிடலாகாது. என்னுடைய ஸாரூப்யத்தை விரும்பி என் அனுக்ரஹத்தையே ப்ரயோஜனமாக நினைப்பவன் தந்தையாயின் இதை அறியாத புதல்வர்களுக்கும், ஆசார்யனாயின் இதை அறியாத சிஷ்யர்களுக்கும், அரசனாயின் இதை அறியாத ப்ரஜைகளுக்கும், இதைக் கற்பிக்கவேண்டும். கர்மங்களில் மதி மயங்கின (புத்தி கலங்கின) அவர்களை மீளவும் அக்கர்மங்களிலேயே மூட்டலாகாது (ஈடுபடுத்தக்கூடாது). இந்த யோகத்தைச் சொல்லியும் அவர்கள் கர்ம வாஸனையால் இதை அங்கீகரிக்காமல் போயினும் அவர்கள்மேல் கோபம் கொள்ளாமல் மேன்மேலும் தொடர்ந்து அவர்களுக்கு இதில் ருசியை விளைவிக்க வேண்டும். உலகத்திலுள்ள ஜனங்கள் அறிவற்றவர்கள். அவர்கள் பெரிய ஆவலுடன் சப்தாதி விஷயங்களைப் பெறுதற்காகவே பல யத்னங்களைச் (முயற்சிகளைச்) செய்யும் தன்மையுடையவர்கள். அவர்கள் மதி மயங்கி அற்ப ஸுகங்களுக்கு இடமான சப்தாதி விஷயங்களுக்காக ஒருவர்மேல் ஒருவர் த்வேஷத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள்; மேலே தங்களுக்கு மஹத்தான துக்கம் வரப்போகிறதென்பதை அறியவே மாட்டார்கள். நன்மை தீமைகளை உணர்ந்து மன இரக்கமுடைய எந்த விவேகி தான் இங்கனம் அஜ்ஞான ஸாகரத்தில் மூழ்கிக் கிடக்கின்ற அத்தகைய ஜந்துக்களைக் கண்டும் கெடுமதியரான (கெட்ட புத்தி உடைய) அவர்களை மீளவும் அக்கர்ம மார்க்கத்திலேயே தூண்டுவான்? தவறான வழியில் நடக்கிற குருடனைக் கண்டும் வழிதெரிந்தவர் மீளவும் அதே வழியில் நடக்கும்படி சொல்லுவார்களோ? 

ஸம்ஸாரத்தில் விழுந்து உழல்கின்ற புருஷனுக்கு இந்த யோகத்தை உபதேசித்து அவனை அதினின்று விடுவிக்க “யத்னம் (முயற்சி) செய்யாத ஆசார்யன் ஆசார்யனேயல்லன். அத்தகைய பந்து பந்துவல்லன். தந்தையும் தந்தையல்லன். தாயும் தாயாகமாட்டாள். தெய்வமும் தெய்வமன்று. கணவனும் கணவனல்லன். இந்த என் சரீரம் மற்ற சரீரங்களைப்போல் ஒன்று என்று நிரூபிக்கத்தக்கதன்று. என்னுடைய ஹ்ருதயம் ஸத்வ குணம் நிறைந்திருக்கும். ஸத்வ குணத்தில் தர்மம் முன் நின்றிருக்கும். அதர்மம் பின்னே தள்ளுண்டிருக்கும். இங்கனம் என் சரீரம் ஸத்வ குண ப்ரசுரமானது (மிகுதியானது) பற்றியே பெரியோர்கள் என்னுடைய மேன்மையைக் கருதி என்னை ருஷபனென்று சொல்லுகிறார்கள். ஸத்வ ப்ரசுரமான ஹ்ருதயத்தையுடைய அச்சரீரித்தினின்று உண்டான நீங்களெல்லோரும் ஸத்வம் தலையெடுத்தவர்களே. ஆகையால் உங்கள் ஸஹோதரனும் பூஜ்யனுமாகிய இந்தப் பரதனைக் கபடமின்றிப் பணிந்து வருவீர்களாக. அதுவே எனக்குச் செய்யும் சுச்ரூஷையும் ப்ரஜைகளைப் பாதுகாக்கையுமாகும். உலகத்திலுள்ள பூதங்களுக்குள் ஸ்தாவரங்களைக் (அசையாத மரம், செடி, கொடிகளைக்) காட்டிலும் ஜங்கமங்களும் (அசையும் ஜீவராசிகளும்), அவற்றில் அறிவில்லாத பூச்சிப் புழு முதலியவற்றைக் காட்டிலும் அறிவுடைய பசு பக்ஷி முதலியவைகளும் சிறப்புடையவை. அவற்றைக் காட்டிலும் மனுஷ்யர்களும் அவர்களைக்காட்டிலும் ப்ரதம கணங்களும், அவர்களைக் காட்டிலும் கந்தர்வர்களும், அவர்களைக் காட்டிலும் ஸித்தர்களும், அவர்களைக் காட்டிலும் கின்னராதிகளும், அவர்களைக் காட்டிலும் அஸுரர்களும், அவர்களைக்காட்டிலும் இந்த்ரன் முதலிய தேவர்களும், அவர்களைக் காட்டிலும் தக்ஷர் முதலிய ப்ரஹ்ம புத்ரர்களும் சிறப்புடையவர். அவர்களைக் காட்டிலும் ருத்ரன் மேலானவன். அவனைக்காட்டிலும் ப்ரஹ்மதேவன் மேற்பட்டவன். அவனைக்காட்டிலும் நான் மேற்பட்டவன். நான் ப்ராஹ்மணர்களையே தெய்வமாக உடையவன். ஆகையால் ப்ராஹ்மணர்கள் எல்லோரிலும் மேன்மையுடையவர்கள். 

ஓ ப்ராஹ்மணர்களே! நான் மற்ற எந்த ப்ராணியையும் ப்ராஹ்மணர்களுக்கு ஈடாக நினைக்கமாட்டேன். அந்த ப்ராஹ்மணனாகிற அக்னியில் ஹோமம் செய்த அன்னாதிகளை நான் ப்ரீதியுடன் புசிக்கின்றேன். வைதிகமான யாகாதி கர்மங்களில் அக்னியில் ஹோமம் செய்த அன்னாதிகளை நான் அங்கனம் புசிக்கிறதில்லை. அனாதியான வேதமாகிற என் சரீரத்தை இவ்வுலகில் ப்ராஹ்மணர்கள் தரித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் பரிசுத்தமான ஸத்வ குணம் இவர்களிடத்தில் நிலைநின்றிருக்கின்றது. இந்த ப்ராஹ்மணர்களிடத்தில் சமம் தமம் ஸத்யம் அனுக்ரஹம் தவம் பொறுமை ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின அனுபவம் ஆகிய இவையெல்லாம் நிலைநின்றிருக்கின்றன. உலகத்தில் மேன்மையுடையவர்களான ப்ரஹ்மாதி தேவதைகளைக் காட்டிலும் மேலாகி ஸ்வர்க்க மோக்ஷங்களைக் கொடுக்கும் ப்ரபுவாகிய என்னிடத்திலும் அவர்களுக்கு வேண்டிப் பெறவேண்டியது ஒன்றுமே இல்லை. அவர்கள் கைம்முதலொன்றுமில்லாத ஏழைகள். என்னிடத்தில் பக்தியைச் செய்யும் தன்மையரான அவர்களுக்கு மற்ற ஐஹிக (இவ்வுலகில்) புருஷார்த்தத்தினால் (அடைய வேண்டிய பலன்களால்) ஆகவேண்டியது என்னிருக்கின்றது? (இங்கனம் என்னிடத்தில் பக்தியைத் தவிர மற்றொன்றையும் விரும்பாத மஹானுபாவர்களான ப்ராஹ்மணர்களை அன்புடன் பணிந்து வருவீர்களாக). 

புதல்வர்களே! ப்ரக்ருதி, புருஷன், ஈச்வரன் என்கிற இம்மூன்று தத்வங்களும் ஒன்றுக்கொன்று விலக்ஷணமாயிருப்பவை (வேறு வேறாய் இறுப்பவை) என்னும் புத்தியுடைய நீங்கள் ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்தபூதங்களும் என்னுடைய சரீரங்களேயென்று பாவித்து அவற்றை அடிக்கடி வெகுமதிக்க வேண்டும். அதுவே என்னுடைய ஆராதனமாம். மனம் வாக்கு கண் மற்ற இந்திரியங்கள் ஆகிய இவற்றின் வ்யாபாரத்திற்கு ப்ரத்யக்ஷமான பலன் என்னை ஆராதிக்கையே. என்னை ஆராதிக்காத புருஷன் கால பாசத்தில் (கயிற்றில்) மூட்டுவிக்கவல்ல (ஈடுபடுத்தவல்ல) மஹாமோஹத்தினின்று (பெரும் மன கலக்கத்திலிருந்து) தன்னை விடுவித்துக்கொள்ள எவ்விதத்திலும் வல்லவனாகமாட்டான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனும் ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனுமாகிய ருஷபனென்னும் பேருடைய பகவான் தன் புதல்வர்களுக்கு நன்மை தீமைகள் நன்றாகத் தெரியுமாயினும் அதை அறியாத உலகத்திற்குக் கற்பிக்கும் பொருட்டுத் தன் பிள்ளைகளுக்கு அதை விரிவாக உபதேசித்து, ப்ரவ்ருத்தி கர்மத்தினின்று நீங்கி இந்திரியங்களை அடக்கியாளும் தன்மையரும் பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை தியானிக்கும் தன்மையருமான பெரியோர்களுக்கு பரமஹம்ஸர்கள் ஆசரிக்கும் தர்மமாகிய பக்தி ஜ்ஞான வைராக்யங்களைக் கற்பிக்க விரும்பி தன் புதல்வர்களில் தலைவனும் பாகவதர்களையே முக்யமாகப் பணியும் தன்மையனும் பாகவத ச்ரேஷ்டனுமாகிய பரதனென்னும் புதல்வனைப் பூமண்டலத்தை ஆளும்படி அபிஷேகஞ்செய்து ஆடை ஆபரணம் முதலிய சரீர பரிக்ரஹங்களையெல்லாம் வீட்டிலேயே துறந்து ஆகாயத்தையே ஆடையாகக்கொண்டு தலை மயிர்களை விரித்து பித்தம் (பைத்தியம்) பிடித்தவன் போன்று தான் பரிபாலித்து வந்த ஆஹவனீய அக்னியை தன்னுள் நிலைநிறுத்தி ப்ரஹ்மாவர்த்தத்தினின்று (ருஷபன் ஆட்சி செய்து வந்த தேசத்திலிருந்து) புறப்பட்டுப் போனான்.

பிறரால் பேசப்பெற்றும் ஜனங்களினிடையில் மூடன், குருடன், செவிடன், ஊமை, பிசாசம், பித்தம் பிடித்தவன் இவர்களைப் போன்று எல்லோரும் அவமதிக்கும்படியான வேஷம் பூண்டு மௌன வ்ரதத்தை ஏற்றுக்கொண்டு அது முதல் பேசாதிருந்தான். அவன் வழிகள் தோறும் ஆங்காங்குள்ள பட்டணம், க்ராமம், பொன் வெள்ளி முதலியன விளையுமிடம், பயிர்செய்பவர் வஸிக்கும் க்ராமம், வேடர் முதலியவர் வஸிக்குமிடம், பூந்தோட்டம் முதலிய இடம், ஸேனை இறங்குமிடம்; பசுக்கள் கட்டுமிடம், இடைச்சேரி, யாத்ரை செய்பவர்களின் கூட்டம், பர்வதம் (மலை), ரிஷிகளின் ஆச்ரமம் முதலிய இடங்களில் மூடஜனங்களால் விரட்டுதல், அடித்தல், மூத்ரம் பெய்தல், காறி உமிழ்தல், கல்லெடுத்து அடித்தல், மண்ணை வாரி இறைத்தல், அபானம் விடுதல், துர்ப்பாஷையாக வைதல் ஆகிய இவற்றால், தேனீக்களால் காட்டு யானை போல், அவமதிக்கப் பெறினும் அவற்றைப் பொருள் செய்யாமல் ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அனுபவிக்கையாகிற தன் மஹிமையில் தான் நிலை நின்றிருக்கையால், அசேதனமான ப்ரக்திருயின் பரிணாமமும் அஜ்ஞானிகள் ஆத்மாவென்று ப்ரமிப்பதற்கிடமுமாகிய தேஹத்திலும் அதைத் தொடர்ந்த மற்றவையிலும் அஹங்கார மமகாரங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஸர்வ ஸ்வரூபியான பரப்ரஹ்மத்தின் ஸாக்ஷாத்காரத்தினால் ஒருவாறான மதியுடையவனாகித் தனியனாகவே பூமி முழுவதும் சுற்றினான். அவனுடைய கை, கால், மார்பு, புஜம், தோள், கழுத்து, முகம் முதலிய அவயவங்களெல்லாம் மிகவும் மென்மைக்கிடமாகி அழகாயமைந்திருக்கும். அவன் இயற்கையாகவே அழகாயிருப்பான். ஸ்வபாவ ஸித்தமான புன்னகையினால் அழகான முகமுடையவன்; அப்போதலர்ந்த செந்தாமரை மலர்போன்று குளிர்ந்த கருவிழிகள் அமைந்து சிவந்து நீண்ட கண்களால் அழகாயிருப்பான். ஏற்றக்குறைவின்றி அழகான கபோலம் (கன்னம்), காது, கழுத்து, மூக்கு இவைகளை உடையவன். புன்னகை உள்ளடங்கின முகவிகாஸமாகிற மஹோத்ஸவத்தினால் பட்டணத்துப் பெண்களின் மனத்தில் மன்மதனை எழுப்பும் திறமையுடையவன். அவன் இத்தகையனாயினும் பொன்னிறமுடைய தன் சுருண்டு நீண்டு பரந்த குழற்கற்றையைப் (தலைமயிர்கற்றையை) பின்னே விரித்து அழுக்கடைந்த சரீரத்துடன் பேய் பிசாசு முதலியவற்றால் பிடியுண்டவன்போல ஜனங்களுக்குத் தோற்றினான். அவன் உலகத்திலுள்ள ஜனங்களெல்லோரும் யோகத்திற்கு நேரே விபரீதமாக நடப்பதைக் கண்டு அதற்கு ப்ரதீகாரம் (எதிர்ப்பு) செய்வது நிந்தைக்கிடமென்று நினைத்து மலைப்பாம்புபோல் ஒரே இடத்தில் இருந்து ப்ராரப்த கர்மத்தை அனுபவிக்கையாகிற அஜகர (மலைப்பாம்பு) வ்ரதத்தை அனுஷ்டிக்க முயன்று ஓரிடத்தில் படுத்து அன்னம் முதலியவற்றைப் புசிப்பதும் அவல் முதவியவற்றை மெல்லுவதும் ஜலம் முதலியவற்றைப் பருகுவதும் அதே இடத்தில் படுத்திருந்தே மல மூத்ரங்களை விடுவதுமாகி மலத்தின் மேல் புரண்டு உடம்பெல்லாம் அந்த மலத்தையே பூசிக்கொண்டிருந்தான். அவனுடைய மலம் நல்லமணம் வீசிக்கொண்டிருந்தது. அம்மலத்தின்மேல் பட்டு வீசுங்காற்று நாற்புறத்திலும் பத்துயோஜனை தூரம் வரையில் நன்மணம் கமழ்ந்தது. இங்கனம் பசு, மிருகம், காக்கை இவற்றைப்போல் நடப்பதும் நிற்பதும் இருப்பதும் படுப்பதுமாமிருந்தான். மற்றும் காக்கை, மிருகம், பசு இவற்றைப் போல் புசிப்பதும் பருகுவதும் மலமூத்ரங்களை விடுவதுமாயிருந்தான். 

விதுரனே! ஓயாமல் மஹாநந்தத்தை அனுபவிப்பவனும் மோக்ஷத்தைக் கொடுக்கும் ப்ரபுவுமாகிய அந்த ருஷபனென்னும் பகவான் இவ்வாறு பலவிதமான யோகவ்ரதங்களை அனுஷ்டித்துக்கொண்டு தன்னைச் சரீரமாகவுடையவனும் ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவுமான வாஸுதேவ பகவானுடைய ஸ்வரூபத்தைத் தனக்குத் தெரியாதபடி மறைக்கும் கர்மங்களெல்லாம் தொலையப்பெற்று எல்லாம் பரப்ரஹ்மஸ்வரூபமே என்னும் நினைவு நிலைநின்று பரப்ரஹ்மத்திற்கு உட்படாத ஸ்வதந்த்ரவஸ்து உண்டென்கிற பேதபுத்தி சிறிதும் இல்லாமல் ஸமஸ்த புருஷார்த்தங்களும் கைகூடப் பெற்று நிறைவாளனாயிருந்தான். ஆனதுபற்றி, யோக மஹிமையால் 
வைஹாயஸம் – ஆகாயத்தில் ஸஞ்சரிக்கை
மனோஜவம் – மனோவேகம் போன்ற தேஹ வேகம் உண்டாகப்பெறுகை.
அந்தர்த்தானம் – இருந்த இடத்திலேயே இருந்து பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைகை
பரகாயப்ரவேசம் – தன் சரீரத்தை விட்டுப் பிறர் சரீரத்தில் பிரவேசித்தல்.
தூரதர்சனம் – வெகுதூரத்தில் இருப்பதையும் பார்க்கும் திறமை
தூரக்ரஹணம் – வெகுதூரத்தில் உள்ளதையும் கேட்கும் திறமை
முதலிய யோகைச்வர்யங்கள் தானே உண்டாயினும் ஸம்ஸார வர்த்தகங்களென்றும் மோக்ஷ விரோதிகளென்றும் அவற்றை அவன் மனத்தினாலும் அபிநந்திக்கவில்லை (விரும்பவில்லை). 

ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை