வெள்ளி, 17 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 7 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் 2 – தொடர்ச்சி

ஸ்ரீரங்கராஜசரணாம்புஜராஜஹம்ஸம் 
ஸ்ரீமத்பராங்குஸபதாம்புஜப்ருங்கராஜம் |
ஸ்ரீபட்டநாதபரகாலமுகாப்ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்நஶரணம் யதிராஜமீடே || 2

20 ஸ்லோகங்களில் யதிராஜர் திருவடிகளில் சரணாகதி செய்வதை பெரிய ஜீயர் ப்ரார்த்திக்கிறார். பகவானிடம் சரணாகதி அனுஷ்டித்து அவர் மோக்ஷம் கொடுப்பார் என்று இருப்பதைவிட எம்பெருமானாரிடம் சரணாகதி செய்து கண்டிப்பாக ஸ்வாமி முக்தி கொடுப்பார். ஸம்ஸாரத்தையும் நீக்கி, காம - க்ரோதாதிகள் அனைத்தையும் நீக்கி நமக்கு நற்கதியையும் அருளுவார் என்பது உறுதி. இதை நமக்கு அனுஷ்டித்துக் காட்டவேண்டும் என்பதற்காகத் தான் யதிராஜ விம்ஶதி ஸ்தோத்திரம் பாடப்பட்டது. நாம் ஶரணம் என்று போய் நிற்க வேறு எந்த நிர்பந்தமும் இல்லையானாலும், இன்னாரிடம்தான் பண்ணவேண்டும் என்கிற வரைமுறையுள்ளது. அதுமட்டுமல்லாமல் நம்மிடம் இருக்கிற குற்றம் குறைகளை விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். 

கோயிலுக்குப் போய் பெருமாளைச் சேவித்துவிட்டு வரும்போதும் நமக்கு வேண்டியதெல்லாம் பிரார்த்தித்துவிட்டு வந்தோமா என்று பார்ப்போம். ஆனால் அதைவிட ரொம்ப முக்கியம் வெகுநாளாக நாம் பண்ணி வருகிற குற்றங்கள், அது பகவதபசாரமோ, பாகவதாபசாரமோ, அஸக்யாபசரமோ எல்லாவற்றையும் சொல்லி, இப்படி இத்தனை குற்றங்கள் இருக்கிற அடியேன், வெட்கமில்லாமல் உன் முன்னே வந்து நிற்கிறேன். அதற்கு என்ன காரணம். என் மூர்க்கத்தனம்தான் காரணம். இத்தனை நாளா மூர்க்கனாகத்தான் இருந்திருக்கிறேன். உம் முன்னால் ஶரணம் என்று சொல்ல வந்திருக்கிறேன். வந்து நின்றால்கூட என் மூர்க்கத்தனம் மாறவேயில்லை பார்த்தீர்களா? எந்த யோக்யதையும் இல்லாதவன் தைரியமாய் உந்தன் முன் வந்து நிற்கின்றேனே. அதிலிருந்தே நான் மூர்க்கன் என்று தெரிந்து கொள்ளவில்லையா? சரணாகதி என்று செய்யும்போதே ஆநுகூல்யஸ்ய ஸங்கல்பம், ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம், ரக்ஷிஸ்யதி இதி விஸ்வாஸம், போக்த்ருத்வ வரணம் ததா, கார்ப்பண்ய ஆத்மநிஷேபே ஷட்விதா சரணாகதி என்று சொல்லுவார்கள். 

இதில் கார்ப்பண்யம் என்பது க்ருபணனுடைய தன்மை. க்ருபணன் என்றால் தன்னிடம் எதுவும் இல்லை என்பதாகும். இதை இரண்டு விதமாகச் சொல்லலாம், நல்லது எதுவுமில்லை. தீயது அனைத்தும் உள்ளன. பகவானிடம் போகும்போதெல்லாம் இதை நாம் விண்ணப்பம் பண்ணிக்கொள்ள வேண்டும். என்ன சந்தேகம் வரும் தெரியுமா? நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கோயிலுக்குப் போயிருந்தேன், இன்று போகப்போகிறேன். இந்த இடைப்பட்ட நாட்களில் நான் எந்த தப்பும் பண்ணவில்லையே? அப்ப எதற்காக பெருமாளின் முன்னே போய் தவறிழைத்தேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்? என்று தோன்றும். நம் வாழ்க்கை என்ன? இந்த 48 மணி நேரமா. எத்தனை அனந்தகோடி காலம் கழித்திருக்கிறோம். அதில் தெரிந்து செய்தவை, தெரியாமல் செய்தவை, செய்து அனுதாபப்பட்டவை, செய்து அனுதாபப்படாதவை என்று கணக்கு வழக்குப் பிரிக்க முடியாதவை. அப்படி அனாதி காலக் கர்மங்களைச் சேர்த்து வைத்திருக்கிறோம். ஆக இதற்கெல்லாம் ஒரு ஆயுள் காலமெல்லாம் பெருமாளிடம் போய் மன்னிப்பு வேண்டினால் முடியப் போகாது. 

ஆகவே ஶரணம் என்று போய் நிற்கும் போதெல்லாம், மறைக்காமல், மறக்காமல், மறுக்காமல் நம் குறைகளை அவரிடம் விண்ணப்பம் பண்ணிவிடவேண்டும். மறைக்க கூடாது என்றால், வைத்தியரிடம்போனால் கூட நாம் என்ன செய்தோம் என்று மறைக்காமல் சொன்னால்தான் அவர்களால் சரியான மருந்து கொடுக்க முடியும். மறந்து போய்விடவும் கூடாது. மறுக்கக் கூடாது. மறைக்கவும் கூடாது. அதைத்தான் மணவாள மாமுனிகள் யதிராஜரிடம் விண்ணப்பம் செய்யப் போகிறார். வந்தேன் என்பதானாலேயே ஏதோ தகுதி இருக்கிறது என்று வந்துவிட்டேன் என்பதல்ல. ஆர்த்திப் ப்ரபந்தத்தில் ஸாதிக்கிறார்: 


அன்னை குடிநீரருந்தி* முலையுண் குழவி     
தன்னுடைய நோயைத் தவிராளோ?* என்னே     
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்*     
உனக்கது தாழ்வோ உரை.

ஒருதாயார் கர்ப்பவதி. குழந்தை கர்ப்பத்தில் இருக்கிறது. குழந்தைக்கு மருந்து கொடுக்கமுடியுமா? தாயார்தான் மருந்து சாப்பிட்டு குழந்தையின் நோயைப் போக்கவேண்டும். குழந்தைக்கு ஆகாதது எதையும் தனக்குப் பிடித்திருந்தாலும் சாப்பிடக்கூடாது. தாய் தன் குழந்தையைக் காப்பாற்றுகிறாள் அல்லவா? குழந்தை நேரடியாக மருந்து சாப்பிடுவதாகத் தெரிவதில்லையே. அந்தக் குழந்தை செய்யவேண்டிய காரியம் என்ன? 

அந்த குழந்தை தான் தாய்க்குக் கட்டுப் பட்டவன் என்பதை ஏற்றுக்கொள்தல். அதுபோல நமக்கு இந்த ஸம்சாரம் என்பது பெரிய வியாதி. இதற்கிருக்கிற ஒரே மருந்து சரணாகதி. அந்த சராணாகதியும் இவனுக்குப் பண்ணத்தெரியுமா என்று தெரியவில்லை. அப்ப வழி? ராமானுஜர்தான் தாயாக இருந்து நம்மை சேயாக வைத்துக்கொண்டு அவர் மூலம் இந்த அருள் நமக்கு கிட்ட ஏற்பாடு செய்து, மோக்ஷம் கிட்டவேண்டும்.

தேவரீர் என்னிடம் யோக்யம் இருக்கா என்று கேட்டால் நான் எங்கே போவேன். “அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ*அதிகாரம் இல்லாதாற்கன்றொ யதிராசா நீ இரங்கவெண்டுவது” எல்லாவிதத்திலும் எனக்குத் தகுதி இருந்துவிட்டால் ரங்கராஜன் நேரேயே எனக்குக் கொடுத்துவிடுவார். தகுதியில்லாததால்தானே தேவரீரிடம் வந்து நிற்கின்றேன். நீரும் எனக்குத் தகுதி இருக்கிறதா என்று விசாரம் பண்ணினால் வேறு எங்கு போய் நிற்பேன்? என்பதுதான் ஸ்வாமியிடம் பிரார்த்தனை. யாருக்கும் எந்த தகுதி இல்லையெனினும் ராமானுஜர் ஏற்றுக் கொள்கிறார் என்பதுதான் வைபவம்.

இதைத் திருவரங்கத்தமுதனார் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடிவிட்டார்:


திக்குற்ற கீர்த்தி ராமானுசனை என் செய் வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப் பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆட் கொள்ளுமே.    26

பத்துத்திக்கிலும் பரவியிருக்கும் கீர்த்தியையுடைய ராமாநுசன், என்னுடைய அனாதிகால பாபங்களையெல்லாம் போக்கி, அதனால் மேகத்தைப் போல விளங்குகின்றார். அதனால் எக்குற்றம் பண்ணியவனாக இருக்கட்டும், எந்தப் பிறவியாக இருக்கட்டும், என்ன ஒழுக்கக்கேடனாக இருக்கட்டும் அந்தக் குற்றத்தோடேயும், அந்தப் பிறப்போடும் அந்த இயல்போடேயும் வா. ராமானுசர் ஏற்றுக் கொள்வார். ஏற்றுக் கொண்ட பிறகு குற்றத்தோடே இருக்கணும் என்பது தேவையில்லை. 

இந்த பாசுரத்தைப் பார்த்தால் நமக்கு எல்லாம் சந்தேகம் வந்துவிடும். எப்படி இருந்தாலும் வா என்கிறார்களே என்று. அவர்கள் சொல்வது நேற்றைக்கு எப்படி இருந்தாலும் வா என்பதே ஒழிய, வந்த பிற்பாடு நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என்று இந்த பாசுரங்களுக்கெல்லாம் அர்த்தம் கிடையாது. வந்த பிற்பாடு ஒழுங்காகத்தான் இருக்கவேண்டும். ஸ்வாமியின் திருவடியில் பக்தியுடன் தான் இருக்க வேண்டும்.


ஆகவே நாம் என்ன என்ன குற்றம் செய்திருந்தாலும் அதைப் பற்றி வெட்கப் படாமல் ஸ்வாமி முன் போய் நிற்கிறோம். எதனாலே? மூர்க்கத்தனம். வேற என்ன சொல்லமுடியும்? எனக்கு இருக்கிற மூர்க்கத்தனத்தையும், செய்தவற்றிற்கு அநுதாபமே படாத தன்மையையும் உம்மிடம் சொல்லிக் கொள்கிறேன் என்று மேலே பல ஸ்லோகங்கள் ஸாதிக்கப் போகிறார். யதிராச விம்ஶதி முதல் இரண்டு ஸ்லோகங்களின் அர்த்தத்தை நாம் பார்த்துவிட்டோம்.

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஸத்வய: அவருடைய ஞான வைபவத்தைக் கூறினார். நம்மாழ்வாருக்கும் அவருக்கும் உள்ள பிரேம ஸம்பந்தத்தைக் கூறினார். நாம் ராமானுசருடைய திருவடிகளைப் பற்றினால் காம குரோதம் முதலியன தொலைக்கப் படுகின்றன என்பதை முதல் ஸ்லோகத்தில் பார்த்துவிட்டோம்.


ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜ ஹம்ஸம்: மூன்று விஷயங்கள் இங்கே சொல்லப்பட்டன.

1) பகவத் ஸம்பந்தம், ரங்கராஜனுடைய திருவடித் தாமரைகளில் இருக்கின்ற ராஜ ஹம்ஸம். 


2) பாகவத ஸம்பந்தம், நம்மாழ்வாருடைய திருவடி, பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் திருவடிகளில் இவருக்கு உள்ள ஸம்பந்தத்தால் அவர்களுக்கு ஏற்படும் முக மலர்த்தி. 


3) சிஷ்ய ஸம்பந்தம். கூரத்தாழ்வானுக்கு எப்போதும் புகலாக இருப்பவர். ஆசார்ய லக்ஷண பூர்த்தி, சிஷ்ய லக்ஷண பூர்த்தி இரண்டும் உடையவர் கூரத்தாழ்வான். 


அனுஷ்டானத்தின் மகிமையையும் பார்த்தோம்.


இனி பார்க்கவேண்டியது 3 வது ஸ்லோகம்:

நமக்கு ஶரீரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பகவான் எதற்காக நம்மைப் படைத்தார். இந்த ஶரீரத்தை அவருக்கு ஸமர்ப்பிப்பதற்காகவே. கைகொண்டு கைங்கர்யங்களைப் பண்ண. வாய்கொண்டு நாமங்களைச் சொல்ல. மனத்தால் தியானிக்க. இப்படி நம் முக்கரணங்களும் பகவானுக்குச் சமர்ப்பிப்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்று 3 வது ஸ்லோகத்தில் சொல்லுகிறார்.


“விசித்ரா தேஹ ஸம்பந்தி: ஈஸ்வராய நிவேதிதும், பூர்வம் 
ஏவ க்ருதா ப்ரஹ்மன் அந்த வாதாதி ஸம்யுதா”


தேஹத்தைப் பகவான் படைத்திருக்கிறார். கை கால்களைக் கொடுத்திருக்கிறார் என்றால் அனைத்தையும் அவருக்கு ஸமர்ப்பிப்பதற்குத்தான். அவருக்கு ஸமர்பிப்பது என்பது எவ்வளவு தூரம் ஸாத்யம். கோவிலுக்குப் போய் கொஞ்ச நேரம் அவரைப் பற்றிப் பாடிக்கொண்டிருக்கலாம். பூத்தொடுத்து ஸமர்ப்பிக்கலாம். அதற்குமேலே பகவானிடம் பேசுவதற்கோ, பழகுவதற்கோ, நேரிடையான ஒரு தொடர்புக்கோ வழி கிடையாது அல்லவா? அவர் அர்ச்சா ரூபத்தில் இருக்கிறார். ஆனால் ஆசார்யர் அப்படி அல்லவே? 


ஏனென்றால் பகவானே வந்து நடமாடும் ரூபத்தில் ஆசார்யனாக அவதாரம் பண்ணியிருக்கிறார். அதனால் அவருடன் பேச முடியும். ஒரு கல்கண்டோ, முந்திரியோ, திராட்சைப் பழமோ வாங்கிக் கொண்டுபோய் கொடுக்க முடியும். இரண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு நன்றாக இருக்கிறது என்று சிஷ்யனைப் பார்த்து சிரிப்பார் அல்லவா! இதை பகவான் ஒருநாளும் பண்ண மாட்டாரல்லவா? எத்தனை சக்கரைப் பொங்கல் பண்ணி சமர்ப்பித்தாலும் திரும்ப வந்துவிடும். அவர் எடுத்துக் கொண்டார் என்றால் கொஞ்சம் ஸந்தோஷமாக இருக்கும். ஆனால் ஆசார்யனோ பிரஸாதம் பெற்றுக் கொள்வார். அவருக்கு ஒன்றும் தேவையில்லை. நாமாகப் போய் ஸமர்ப்பித்தால் ஏற்றுக்கொள்வார். “பிரத்யக்ஷே குரவஸ்துப்யா:” கண்முன்னே ஆசார்யரைத் துதிக்கவேண்டும்.


சாஸ்த்திரம் சொல்லுகிறது. இன்னன்னாரை இப்ப இப்பத்தான் ஸ்தோத்திரம் பண்ணவேண்டும் என்று: தன் பிள்ளை பெண்களை எப்பவுமே ஸ்தோத்திரம் பண்ணக்கூடாது. இடித்தும் காட்டலாம். மித்திரர்களையும் பந்துக்களையும் அவர்கள் இல்லாத இடத்தில் துதிக்கலாம். வேலைக்கு வைத்திருப்பவர்களை வேலை முடிந்த பிற்பாடுதான் தோத்திரம் பண்ணவேண்டுமாம். ஆசார்யரை கண்முன்னால் ஸ்தோத்திரம் பண்ணு என்கிறது கீழே கண்ட ஸ்லோகம்:


ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா: 
பரோக்ஷ்வ் மித்ர பாந்தவா: ।
கார்யாந்தே தாஸ ப்ருத்யாச்ச; 
ந ஸ்வபுத்ரா: கதாசன: ॥


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772


நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக