வெள்ளி, 17 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 6 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

பாவோடு வாழ்த்துங்கள் பாங்காக வாழலாம்


பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்திலே ஆனி மாதத்தில் வளர்பிறை பொருந்திய ஏகாதசி நாளில் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் கருடாழ்வார் அம்சமாக அவதரித்தவர்.


ஆழ்வார்கள் வரிசையில் காலத்தால் முந்தியவரல்ல இவர். காலத்தால் முந்தியவர்கள் முதலாழ்வார்கள். எல்லா ஆழ்வார்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு திகழ்பவர் நம்மாழ்வார். வைணவ மரபிலே ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு.


ஆனால் இவருக்கு மட்டும் பெரியாழ்வார் என்ற பெயரும் பெருமையும் ஏன் வந்தது? வில்லிபுத்தூர் பட்டர் என்று அழைக்கப்பட்ட பெரியாழ்வாரின் இயற் பெயர் விஷ்ணுசித்தர்.


எப்பொழுதும் பகவான் விஷ்ணுவை சித்தத்தில் கொண்டிருப்பவர் என்ற பொருளில் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.


அவருடைய வாழ்வின் குறிக்கோளே பகவானை சதா சர்வகாலமும் தியானிப்பதுதான். இது தவிர அழகான ஓர் நந்தவனம் அமைத்து மலர் மாலைகள் தொடுத்து பகவானுக்குச் சமர்ப்பித்து வந்தார்.


பகவானை சதா தியானிப்பதன் மூலம் தன் துன்பங்கள் எல்லாம் மறைந்து மகிழ்ச்சியாக இருப்பர். அப்படி இருக்கிறேன் என்பதை நினைத்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியானே என்று பாடுகிறார்.


திருவோடு மால் இணைந்து திருமாலாக தன் மனத்திலே எப்போதும் எழுந்தருளியிருப்பதை அழகாகப் பாடுவார். 


“பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு, ஓடி வந்து என் 
மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ! 
தனிக்கடலே! தனிச்சுடரே! தனியுலகே என்றென்று 
உனக்கிடமாய் இருக்க என்னை உனக்குரித்து ஆக்கினையே!” 


பகவானே! உன்னுடைய பெருமை என்ன? சிறப்பு என்ன? உனக்கென்று எத்தனை இடங்கள் இருக்க, ஓடி வந்து என் மனக்கடலில் வாழும்படியாக இருப்பதை நான் என் சொல்வேன்? நீ அடியேனை உனக்கு உரியவனாக ஆக்கினாயே! இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தழு தழுக்கப் பேசுகிறார்.


பகவான் இவர் மனதில் புகுந்தான். அதுவும் எப்படி வந்தானாம்? தனியாக வரவில்லையாம்! அதையும் அனுபவித்துப் பாடுகிறார்.


“அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் 
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து 
பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள்கின்ற பிரானை 
பரவுகின்றான் விட்டு சித்தன்”


என்று பாடுகிறார். அதாவது பகவான் சம்சாரியாக குடும்பத்தோடு இவர் மனதில் வந்து குடியேறினானாம்.


இப்போது விஷ்ணுசித்தர் என்கிற பெயரையும், பின்னால் வந்து அவரை இன்றளவும் பெருமைப்படுத்தும் பெரியாழ்வார் என்கிற பெயரையும் இணைத்துப் பாருங்கள். ஓர் அருமையான கருத்து வெளிப்படும். எல்லோரும் பகவானிடம் போய் நான் வாழ வேண்டும்; என் குடும்பம் வாழ வேண்டும் என் பிள்ளை வாழ வேண்டும் என்று மட்டுமே வேண்டுவார்கள்.


முதல் முறையாக விஷ்ணு சித்தர் “பகவானே! நீ வாழ வேண்டும்” (பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்) என்று வாழ்த்தினார். இப்படி பகவானை வாழ்த்துவதை மங்களாசாசனம் என்று வைணவ மரபு போற்றுகிறது.


இந்த வைணவ மரபுக்கு ஓர் மலர்ப்பாதை அமைத்தவர் பெரியாழ்வார். பகவானுக்கே காப்பிட்டுப்பல்லாண்டு பாடிய பரிவு இவருடையது. வாழ்த்துவதற்கு வயது வேண்டாம். மனது வேண்டும் என்று சிந்தித்து செயலில் காட்டிய செயற்கரிய சீர்மையான மனம் பெற்றிருந்த காரணத்தினால் தான் பெரியாழ்வார் என்ற பெயரைப் பெற்றார்.


இதற்குப் பொங்கும் பரிவு என்று பாடி வியக்கிறார் சுவாமி மணவாள மாமுனிகள். மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்து அளவுதான் அன்றி - பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான். பெரியாழ்வார் என்னும் பெயர் (உபதேசரத்தின மாலை) என்று பெரியாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்கிறார் சுவாமி மணவாள மாமுனிகள்.


ஒருவரை அன்போடு நாம் நேசித்தால் அதை விட அன்போடு அவர் நம்மை நேசிப்பார். இது வாழ்வியலில் எளிய மக்களுக்கு மட்டுமல்ல, எம் பெருமானான பகவானுக்கும் பொருந்தும். விஷ்ணுவை இவர் சித்தத்தில் கொண்டார்.


தன் பக்தன் என்று விஷ்ணுவோ இவரை சித்தத்தில் கொண்டார். பகவானுக்கு இவர் பல்லாண்டு பாடினார். பகவான் கருடாரூடனாய் காட்சி தந்து, பெரியாழ்வார் என்ற பெருமையை இவருக்குத் தந்தான். மதுரையில் மெய்காட்டும் பொட்டல் என்ற இடத்தில் இன்றும் இந்நிகழ்வு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


பெரியாழ்வார் என்ற பெயரும் - வாழ்வும் சொல்லும் செய்தி இதுதான். எல்லோரிடமும் பரிவோடு இருங்கள். எல்லோரையும் வாழ்த்துங்கள். வாழ்த்தும், பரிவும் சொல்லப் படுபவர்களை மட்டுமல்ல; சொல்பவர்களையும் வாழ வைக்கும். வாழ்த்தும் மனமிருந்தால் என்றைக்கும் வாழ்வில் தாழ்வில்லை .


வாழ்க்கை நெறிகள் வளரும்…


நன்றி - சப்தகிரி ஜூன் 2018


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக