சனி, 18 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 8 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்லோகம் 3

ஆசார்யரை ப்ரத்யக்ஷத்தில் ஸ்தோத்திரம் பண்ணுகிறார் மூன்றாவது ஸ்லோகத்தாலே:

वाचा यतीन्ड्र मनसा वपुषा च युष्मत्पादारविन्दयुगलं भजतां गुरूणाम् ।
कूराधिनाथकुरुकेशमुखाध्यपुंसां पादानुचिन्तनपरस्सततं भवेयम् ॥ 3

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத் 
பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாதகுருகேஸமுகாத்யபும்ஸாம் 
பாதாநுசிந்தநபரஸ்ஸததம் பவேயம் || 3

ஹே யதீந்த்ர – யதிராஜரே, யதிகளுக்குத் தலைவரான எம்பெருமானாரே, 

மநஸா வாசா வபுஷா ச – மனத்தினாலும் நாவினாலும் (பேச்சாலும்) மனம் மொழி மெய் என்று மூன்று சொல்கிறோம் அதில் மெய் அல்லது காயம், உடல் என்பதை வபுஷா என்கிறார். தேஹத்தினாலும்,

யுஷ்மத் பாதாரவிந்தயுகளம் பஜதாம் – தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகளின் இரட்டையை, நிரந்தரமாக யாரெல்லாம் ஸேவித்துக் கொண்டிருக்கிறார்களோ, திருவடிகளை ஸ்தோத்திரம் பண்ணி வணங்குகிறவர்களாகிய,

குரூணாம் – ஆசார்யர்களாகிய குணபூர்த்தியுடையவர்கள், ஸ்ரீ ராமானுஜருடைய சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் ஆசார்யர்கள் ஆகிவிடுகிறார்கள் அல்லவா. 74 ஸிம்மாசானாதிபதிகளை யதிராஜர் ஏற்படுத்தினார். சிஷ்யர்களாகிய அவர்கள் எல்லோரும் பெரிய ஆசார்யார்களானார்கள் ஆயிரம் வருஷமாக அவர்களுடைய சந்ததியில் வந்தவர்கள் இன்றளவும் எழுந்தருளி இருக்கிறார்கள். அல்லவா! 

கூராதிநாதகுருகேஸமுக ஆத்யபும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான் பிள்ளான் (திருவாய்மொழிக்காக முதன்முதலில் ஆறாயிரப்படி வியாக்யானம் ஸாதித்து வைத்தவர்.) முதலிய பூர்வாச்சார்யர்களுடைய, 

ஸததம் பாதஅநுசிந்தந பர: பவேயம் – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக, (அடியேன்) ஆகக்கடவேன். என்பது பிரார்த்தனை.

ராமானுஜருடைய திருவடித்தாமரைகளை பற்றி ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டிருக்கும் அவரது சிஷ்யர்களான பூர்வாசார்யர்களின் திருவடியில் எப்போதும் என் சிந்தனை ஊன்றியிருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார். பகவானைப் பற்றுவது ஒன்று. அதற்கடுத்து ஸ்ரீ ராமானுஜர். பகவானது அடியாரைப் பற்றுவது. அதற்கு அடுத்து அடியானுக்கு, அடியானுக்கு அடியார்களைப் பற்றுவது. இறங்கி இறங்கிப் போகும்போது அந்த அளவுக்கு நமக்கு அஹங்காரம் தொலைகிறது என்று அர்த்தம். பகவானிடம் போவதற்குப் ப்ரியம் இருக்கும்.

பெரிய முதலாளியிடம் வேலைபார்ப்பது பிடிக்கும். சின்ன முதலாளியிடம் வேலைபார்ப்பதற்கு மனம் இடம் கொடாது. கோயிலுக்கு போங்கோ. நன்கு பூ தொடுத்துக் கொடுங்கள் என்றால் சரி என்று செய்வர். அதே பூவை தொடுத்து பசுவினுடைய ப்ருஷ்ட பாகத்தில் போடுங்கள் என்றால் எதற்கு என்பர்? பகவானை ஏழப்பண்ண வாருங்கள் என்றால் வருவர். பின்னால் கோசாலையில் மாடு சாணி போட்டிருக்கிறது. அந்த இடத்தை துப்புரவு பண்ணுங்கள் என்றால் தயக்கம், வரமாட்டார்கள். ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது. இன்னும் அகங்காரம் தொலையவில்லை என்று தெரிகிறது. அந்த அஹங்காரம் தொலைவதற்குத்தான் கீழே கீழே இறங்குகிறார். அடியார், அடியார், அடியார்க்கு அடியார்க்கு அடியார் என்று ஆழ்வாருடைய பாசுரம். அதே ப்ரகாரத்தில் தான் இந்த ஸ்லோகமும். 

இந்த ஸ்லோகத்தில் ஆசார்யனைப் ப்ரத்யக்ஷமாக அடியேன் ஸ்துதிக்க வேண்டும். அந்த ஆசார்யனுக்கு எத்தனை பேர் சிஷ்யர்களாக இருந்திருக்கிறார்களோ, எவர்கள் மனதாலும், வாக்காலும், தேஹத்தாலும் ராமானுஜரையே வாழ்த்திக் கொண்டிருக்க்கிறார்களோ அவர்களுடைய திருவடிகளிலும் அடியேன் பிரேமம் கொண்டு ஸ்துதிக்க வேண்டும். இரண்டு சிஷ்யர்களின் பெயர் சொல்லியிருக்கிறார். ஆனால் ராமானுஜருக்கு 700 ஸந்நியாசிகள், 74 ஸிம்மாசானாதிபதிகள், 12000 க்ரஹஸ்த சிஷ்யர்கள், எண்ணிறந்த பெண்கள் சிஷ்யர்களாக இருந்திருக்கிறார்கள். இவ்வளவு பேரும் ராமானுஜர் தலைமையில் ஸ்ரீரங்கம் வீதியில் ஊர்வலம் வந்துகொண்டிருக்கும்போது எவ்வளவு கோலாகலமாக இருந்திருக்கும். பூலோக வைகுண்டம் என்று சொல்லலாமா அல்லது வைகுண்டமே இதுதான் என்று சொல்லிவிடலாம்.

பகவானைப் பற்றுவது என்பது முதல் படி. ஆசார்யனைப் பற்றுவது என்பது மேல்படி. அவரது சிஷ்யர்களைப் பற்றுவது என்பது மிக உயர்ந்தபடி. வாய் அவனை அல்லது வாழ்த்தாது. 

வாய் அவனை அல்லது வாழ்த்தாது, கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய்முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண் கேளா செவி.

பகவான் விஷயத்தைத் தவிர என்வாய் பாடாது என்று ஆழ்வார்கள் சொல்கின்றனர். ஆழ்வார்கள் விஷயத்தைதவிர வேறு எதையும் என்வாய் பாடாது என்று ராமானுஜரும், ராமானுஜரைத் தவிர வேறு எவரையும் என்வாய் பாடாது என்று கூரத்தாழ்வான் முதலிய அவரது சிஷ்யர்களும், கூரத்தாழ்வான், வடுகநம்பி போன்றவர்களைத் தவிர என் வாய் மற்றவரைப் பாடாது என்றும் நாம் சொல்லவேண்டும். நாக்குக்கு வேறு ஒன்றையும் விஷயமாக்காமல் ராமானுஜர் பற்றியே விஷயமாக்க வேண்டும். 

வாசா அடுத்து மனஸா – மனதால் நினைக்கவேண்டும். மனதைத்தான் முதலில் சொல்லியிருக்கவேண்டும். இங்கு வாயை முதலிலும் மனதை அதற்கடுத்தும் சொல்லியிருக்கிறது. மனப்பூர்வோ வாக் உத்தர என்பர். மனம் முன்னாடி நினைக்கவேண்டும், வாக் பின்னாடி வரவேண்டும். ஆனால் ராமானுஜர் விஷயத்தில் அப்படி இல்லை. வாக் ராமானுஜ, ராமானுஜ என்று சொல்லிக்கொண்டே இருக்கும். அப்பொழுது மனதில் ராமானுஜரைத் தியானம் பண்ணிக்கொண்டே இருக்கும். கை தனியாக பூத் தொடுக்கும் கைங்கர்யம் செய்துகொண்டே இருக்கும். இதுக்கும் அதுக்கும் சம்பந்தப்படுத்த வேண்டியதில்லை. உலக விஷயமாக இருந்தது என்றால் மனதால் நினைத்ததைத்தான் வாய் பேசமுடியும். ஆனால் பகவத் விஷயமாக இருந்தால் கால், கை, வாய் போன்ற இந்திரியங்களுக்கு ஒரு சக்தி வந்துவிடுகிறது. மனது நினைத்துத்தான் வாய் பேச வேண்டியதில்லை. அதே போல மற்ற இந்திரியங்களும் கைங்கர்யத்தை தன்னால் செய்ய ஆரம்பித்துவிடும். 

நான் ஒருவரைக் கண்ணால் பார்க்கிறேன். மனதுக்குச் செய்திபோய் இவர் இன்னாரென்று தெரிகிறது. மீண்டும் அவரைப் பார்க்கும்போது மனது நினைத்தால்தானே அவர் இன்னாரென்று தெரிந்து பேசமுடியும். பகவானுடைய விஷயம் என்றால் கண் தனியாக ஆசைப்படுமாம். காது தனியாக ஆசைப்படுமாம். மனதினுடைய சகாயம் தேவையே இல்லையாம். 

மதுரகவி ஆழ்வார் பாடும்போது, “நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன். மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்று பாடினார். நாவால்தானே பேசமுடியும், கண்ணால் பேசமுடியுமா? ஒரு குழந்தை இரவு பூராவும் படித்தாள். பக்கத்துவீட்டுக்காரியிடம் தாயார் ஆத்தாமைப் பட்டு இந்த இரண்டு கண்ணால் ராத்திரி முழுக்கப் படித்தாள் என்று சொல்லுவாள். கண்ணால்தான் படிக்கமுடியும். கண்ணால் ஜலம் விட்டு அழுதாள் என்பர். பின்னர் காதாலா அழமுடியும். நாவினால் நவிற்று என்றால் நாவினால் மனதில் நினைக்காமல் பாடினேன் என்று பொருள்.

“வாசா மனஸா வபுஷா யுஷ்மத் பாதார விந்தயுகளம் பஜதாம் குரூணாம்” இப்படி ஒவ்வொரு இந்திரியமும் தனித்தனியே அவரையே விரும்பும். “நித்தியம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்” நித்தியம் இங்கே எந்தத் திருவடிகளை வணங்கினோமோ எங்கே போனாலும் அதே திருவடிகளை வணங்குவோம். இது ஒரு அழகான செய்தி இந்த லோகத்தில் இருக்கிறபோது ராமானுஜர் திருவடி என்று சொல்லிவிடுவோம். அவர் அனுக்ரஹத்தால் வைகுண்டம் போய்விட்டோம். போன பிற்பாடு அங்கு யாருக்குக் கைங்கர்யம் பண்ணுவோம். ஸ்ரீமன் நாரயாணனுக்குத்தானே செய்யவேணும். இதை யோசித்தாலே இவருக்கு மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது. ஏறி வந்த ஏணியை மாத்தச் சொல்கிறீரா ஸ்வாமி. ராமானுஜர் மூலம் வைகுண்டம் வந்திருக்கிறோம். வந்தபிறகு மாற்றி விடுவது நல்லதா? 

ஆளவந்தார் அன்றே பாடி வைத்துவிட்டார். இங்கே எந்த ஆசார்யருக்கு கைங்கர்யம் செய்தேனோ அதே ஆசார்யருக்குத்தான் கைங்கர்யம் செய்வேன். 

“அத்ர பரத்ரசாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்” - ஸ்தோத்ர ரத்னம். 

சரி “அவரை அங்கு பார்ப்பேனா ஸ்வாமி?” நமக்கு சந்தேஹம். எதுவுமே அங்கு நடக்கும் இங்கு உள்ள துன்பங்கள் அங்கு ஞாபகம் வராது. இந்த லோகத்தில் சேவித்த திவ்ய தேச எம்பெருமான்களையும் அங்குபோனால் சேவிக்க முடியும். எதையுமே நடத்தக்கூடிய சாமர்த்தியம் நமக்கு வந்துவிடுமென்றால் இந்த நல்லத்தையெல்லாம் பகவான் மறைத்துவிடமாட்டார். 

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத் 
பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் | 

இப்படி உம்முடைய திருவடிகளை தியானித்து, பாடி, கைகளால் தொழுது இருக்கிற குருக்கள், பஜிக்கையாவது திருவடிகளை நெஞ்சினால் நினைக்கை. சரீரத்தால் பஜிக்கை – ப்ரணமாமி என்பதை விஷயமாக்குகை. திருவடிகளின் வைலக்ஷண்யத்தைப் புகழுகை. ராமானுஜர் திருவடிகளின் பெருமையை நன்கு புகழ்தல். இது வாக்கால் பண்ணுகிற கைங்கர்யம். அந்தத் திருவடிகளுக்குப் பூத்தொடுக்கிறது, சந்தனம் அரைக்கிறது ஆகியவை கையால் பண்ணுகிற கைங்கர்யம். அதை மனதால் அடிக்கடி நினப்பது மனதால் பண்ணுகிற கைங்கர்யம். 

இப்படி இருக்கிற ‘பஜதாம் குரூணாம் கூராதிநாத குருகேஸ முகாத்யபும்ஸாம்’ கூரத்தாழ்வானும் சரி, திருக்குருகைப் பிள்ளான் இதுமுதலான ஆசார்யர்கள், (வடுக நம்பிகள், சோமாஸியாண்டான், கிடாம்பியாச்சான், எங்களாழ்வான், முதலியாண்டான், நஞ்சீயர், எம்பார், பட்டர், 74 ஸிம்மாசானாதிபதிகள், 700 ஸன்யாசிகள், 12000 க்ரஹஸ்தர்கள் போன்ற சிஷ்யர்களை சேர்த்துக் கொள்ளலாம்) 

பாதாநுசிந்தநபரஸ்ஸததம் பவேயம் - இவர்களுடைய திருவடிகளையே எப்பொழுதும் மனதில் நினைப்பவனாக இருக்கவேண்டும். “உன் தொண்டர்களுக்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்தே” ராமாநுச நூற்றந்தாதி கடைசியில் சொல்லுகிறோம். 

இன்புற்ற சீலத்து இராமானுசா! * என்றும் எவ்விடத்தும் 
என்புற்ற நோயுடல்தோறும் பிறந்து இறந்து* எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவதொன்றுண்டு உன்தொண்டர்கட்கே 
அன்புற்றிருக்கும்படி * என்னை ஆக்கி அங்காட்படுத்தே. 107

தேவரீரிடத்து அன்பு மாறாமல் இருக்கவேண்டும். தேவரீரின் தொண்டர்களிடம் எனக்கு அன்பு மாறாமல் இருக்கவேண்டும். ஏன் ஏன்றால் நான் பாதை மாறிபோனாலும் உன் தொண்டர்கள் என்னைத் திருத்தி உன்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள். மூன்றாவது ஸ்லோகம் முற்றிற்று. 

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத் 
பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாதகுருகேஸமுகாத்யபும்ஸாம் 
பாதாநுசிந்தநபர: ஸததம் பவேயம் || 3

அவர்களது திருவடிகளை எப்போதும் நான் நினைக்க ஆக்கிக்கொடுக்க வேணும் என்று மூன்றாவது ஸ்லோகத்தில் பிரார்த்தித்தார்.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக