சனி, 18 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 7 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

கலியும் கெடும் கண்டு கொண்மின்!


“கலியும் கெடும் கண்டு கொண்மின்" என்பது நம்மாழ்வாரின் வாக்கு. கலியின் கொடுமை தீர ஆம் முதல்வன் இவன் என்று அவதரித்தவர் இராமாநுஜர்.


கலியின் கொடுமைகளில் ஒன்று தீண்டாமை. ஆமைகளிலே இந்த ஆமை மட்டும் ஒருவரை தீண்டி விட்டால் அவர் உள்ளம் விஷமாகிவிடுகிறது. அவர் சாத்திர ஞானமும் ஆன்மீக முயற்சிகளும் அவருக்கு கர்ணனுக்கு ஆபத்தில் உதவாத அஸ்திர பயிற்சி போல் உதவாமல் போகிறது.


தீண்டாமையை - ஆன்மீகத்தின் சமூகப் பார்வையாக ஆழ்வார்கள் வழி நின்று இராமாநுஜர் எதிர்த்தார். இராமாநுஜர் எண்ணங்களைச் சிந்திக்கும் போது ஒரு போதும் தீண்டாமையை ஆதரிக்கவில்லை . இராமாநுஜர் 1000 வருடங்களுக்கு முன்னாலேயே தாழ்த்தப்பட்டவர்களை திருக்குலத்தார் என்று பெயரிட்டு ஆலயப்பிரவேசம் செய்து வைத்தார்.


இராமாநுஜரின் காலச் சூழல் - சமூகச் சூழல் பின்னணியோடு இச்செயலை ஆராய்ந்து பார்த்தால் அவர் செய்த மகத்தான புரட்சியை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.


இராமாநுஜர் வாழ்வில் அவர் காவேரிக்குத் தீர்த்தமாடச் செல்லும் போது முதலியாண்டான், கூரத்தாழ்வானைத் தொட்டுச் செல்வதையும், தீர்த்த மாடிவிட்டு திரும்பி வரும்போது, பிராமணரல்லாத பிள்ளை உறங்காவில்லியைத் தொட்டுக் கொண்டு திரும்புவார்.


இராமாநுஜர் வருணாசிரமத்தை ஏற்றுக் கொள்கின்றார். இது ஒரு சமூகத்தின் நிர்வாக வசதிக்கான அமைப்பே தவிர ஒருவரை மட்டம் தட்டி அவமானப்படுத்த இது கருவியல்ல என்றே கருதினார்.
இன்று இருப்பது போல் 30,000 ஜாதிகள் அன்று இல்லை. சாதுர்வர்ணம் மயா சிருஷ்டம் (நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டன - கீதை) என்னால் படைக்கப்பட்டன என்றால் ஏன் படைக்கப் பட்டன என்ற கேள்வி எழும்.


ஒன்றையொன்று அநுசரித்து - வேலைகளைப் பிரித்துக் கொண்டு - குறுக்கீடின்றி அமைதியாக வாழ்வதற்காக வருணங்கள் படைக்கப்பட்டன. அந்தணர்களுக்கு சில சிறப்புக்களையும் பொறுப்புக்களையும் கொடுத்தார் என்பது உண்மைதான். அது பிறப்பின் அடிப்படையில் மட்டுமே வந்த பெருமையாகக் கருதியதில்லை.


அந்தணர்களாகப் பிறந்தாலும் வேத நெறிப்படி பிசகாமல் வாழ்வதின் மூலமே அவர்கள் தகுதி பெறுகிறார்கள்.


பிராமணர்கள் பிறருக்காக வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்பது அதில் முதல் தகுதி. வள்ளுவர் “அந்தணர் என்போர் அறவோர்., பிறருக்குச் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர்” என்றார். உண்மையான அந்தணனாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை சாத்திர பூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்!


இங்கே வாழ்வது என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும். அந்தணர் குலத்தில் பிறப்பது பற்றிப் பேச்சில்லை. அந்தணனாக வாழ்வது பற்றித்தான் பேச்சு.


பிரம்மத்தை அறிவதற்கும் - பகவானை உணர்வதற்கும் - வாழ்வின் நோக்கத்தைப் பெறுவதற்கும் - வைணவனாக வாழ்வதற்கும் - பிராமணனாக வேண்டிய அவசியமும் - அவர்கள் செய்வதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியமுமில்லை.


அதைப்போலவே, பிராமண வகுப்பிலே பிறந்து விட்டதாலேயே, மோட்சம் அடைவதற்கோ, பகவானை அடையும் உபாயமாகவோ, அப்பிறப்பு வழி ஏற்படுத்திக் கொடுத்து விடுவதேயில்லை.


திருக்குறுங்குடியிலே - நம்பாடுவான் சரித்திரத்திலே குரு பிரம்ம ராட்சசன் வருவாரே - அவர் அந்தணராக இருந்து சரியான மந்திரம் சொல்லாததால் பிரம்ம ராட்சசனாக மாறியவர்.


அவரை அதிலேயிருந்து விடுவித்தவர் குலம் தாங்கு சாதிகளில் கீழ்ச்சாதி என்று சொல்லப்பட்ட நம்பாடுவான். கடவுளால்கூட அன்று பிரம்ம ராட்சசனைக் காப்பாற்ற முடியவில்லை.


நம்பாடுவான் என்று பகவானால் அன்பு பாராட்டப்பட்ட பாணன்தான் பிரம்ம ராட்சசனைக் காப்பாற்றுகிறான்.


இதைத்தான் இராமாநுஜரும் இறைவனுக்கு - இறைவனை அடைவதற்கு ஜாதி குலம் தடையில்லை என்பதை ஆணித்தரமாக விளக்கியிருக்கின்றார்.


ஆனால், ஒரு விஷயத்தை நாம் உன்னிப்பாக கவனித்து அறிய வேண்டும். நாம் பெரும்பாலும் Religious எனப்படும் ஆசார விஷயங்களைப் பற்றியே கவலைப்படுகிறோமே தவிர, Spiritual - ஆன்ம விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதாரணமாக ஒரு விஷயம். பிராமணனுக்கு விதிக்கப் பட்டது சந்தியாவந்தனம்.


இராமாநுஜர் அதைச் செய்யும் போது சொல்வார். பிராமணனாகப் பிறந்ததால் இது தவிர்க்க முடியாதபடி செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் சாத்தாத வைணவர்களுக்கு (பிராமணர் அல்லாதவர்க்கு) இந்த வேலையில்லை. அந்த நேரத்தில் பகவத் பாகவத கைங்கரியத்திலும் ஈடுபடலாம் என்பார். இந்த உளப்போக்கை அறியும் போதுதான் இராமாநுஜரை உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்ள முடியும்.


ஒரு வைணவனை, “வைணவனாக மட்டுமே பார். அவன் பிறந்த ஜாதியைத் தவறிப் போய்க் கூட கேட்காதே. அதன் அடிப்படையில் கூடுதல் மரியாதையோ - குறைந்த மரியாதையோ தராதே!" என்பது அசல் வைணவம்.


ஒரு சின்ன சம்பவத்தின் ஆழத்தைப் பாருங்கள். அந்தணரான இராமாநுஜர் தான் மிகவும் மதிக்கின்ற வைசியரின் (திருக்கச்சி நம்பிகள்) சேஷத்தை (உண்ட பிரசாதத்தின் மிச்சத்தை) ஏற்றுக் கொள்ளக் கருதுகிறார்.


ஆனால், திருக்கச்சி நம்பிகள் அதை உறுதியாக மறுத்து தந்திரமாகத் தவிர்த்து விடுகிறார். ஆன்மீக விழிப்புணர்வில்தான் - மனிதகுல வாழ்க்கைச் சிக்கல்களுக்கான அத்தனைத் தீர்வுகளும் ஒளிந்திருக்கின்றன என்பது இராமாநுஜரின் வாழ்வியல் சிந்தனை!


வெளித் தோற்றமான - சிற்சில ஆசார பேதங்களை மையப்படுத்தி - தர்க்கம் செய்வதை விட்டு விட்டு, ஆன்மீகத்தின் சுடரை, ஏற்றிவிட்டுப் பார்த்தால் பரமாத்மா தரிசனம் கிடைக்கும்.


அரசியல்களமோ, ஆன்மீகக் களமோ - நிறைவாக நோக்கம் இதை நோக்கிய பயணம் தான்.


அந்தப் பயணத்திட்டத்தை ஆன்மீகத்தில் சாத்தியமாக்கியவர் இராமாநுஜர்.


வாழ்க்கை நெறிகள் வளரும்…


நன்றி - சப்தகிரி ஜூலை 2018


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக