ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 9 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் 4

[பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும் அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஶேஷணமாகும். அநுசிந்தநமானது - கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யானித்தலாகும். பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் கூரத்தாழ்வான் முதலிய பூர்வ புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று, யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும்.]

அடுத்தது 4 வது ஸ்லோகம்:

கீழே சொன்ன ஸ்லோகத்தின் பிரதிபலிப்பு இந்த ஸ்லோகம். யாரெல்லாம் மனம் மொழி மெய் ஆகியவற்றை உன்னிடம் செலுத்தியிருக்கிறார்களோ அப்படிப் பட்ட பக்தர்களிடம் எனக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடு. அவர்களுக்குத் தாஸனாக்கு என்பது 3 வது ஸ்லோகத்தில் பிரார்த்தனை. சரி என், மனம் மொழி மெய் இவைகள் என்ன செய்யவேண்டும். அவைகள் தேவரீரிடம் ஈடுபடுமாறு செய்யவேண்டும். 

மோக்ஷம் கொடுப்பதற்கு பகவான் தயாராகத்தான் இருக்கிறார். நாம் தயாரா போவதற்கு? இதர விஷயத்தில் இருக்கின்ற ப்ராவண்யம் குறையவேண்டும். பகவத், பாகவதர்களைத் தவிர லௌகீக விஷயங்களில், சிற்றின்பத்தில் ஆசை இருக்கின்றதில்லையா? அதைக் குறைத்து, பேரின்பத்தில் ஆசையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த லௌகிக ஆசை குறைந்து, பேரின்பத்தில் ஆசை வளரவேண்டுமானால் அதற்கு ஆசார்யரிடம் பிரார்த்திக்க வேணும். அதைத்தான் இங்கு பிரார்த்திக்கிறார். எனது முக்கரணங்களும், மனம், மொழி, மெய் ஆகியவை இதர விஷயங்களில் இருந்து அகற்றி உன் விஷயத்தில் ஈடுபாடு கொள்ளுமாறு செய்யவேண்டும் என்று ஆசார்யனைப் பிரார்த்திக்கிறார்.


नित्यं यतीन्द्र तव दिव्यवपुस्स्म्रुतौ मे सक्तम् मनो भवतु वाग्गुणकीर्तनेSसौ
क्रुत्यञ्च दास्यकरणं तु करद्वयस्य व्रुत्त्यन्तरेSस्तु विमुखं करणत्रयञ्च ॥ (4)

நித்யம் யதீந்த்ரதவ திவ்யவபு:ஸ்ம்ருதௌமே 
ஸக்தம் மநோபவது வாக்குணகீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்யகரணம் து கரத்வயஸ்ய 
வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச || (4)

ஹே யதீந்த்ர – ஹே ஸார்வபௌமனான எம்பெருமானாரே,   

மே மந: தவ, திவ்யவபு: ஸ்ம்ருதௌ நித்யம் ஸக்தம் (விருப்பமுடையதாய்) பவது – அடியேனுடைய மனமானது, (உன்னைப்பற்றி நினைக்காமல் வேறு விஷயங்களையே நினைத்துப் பழகிய மனது) தேவரீருடைய மிகவும் அழகிய திவ்யமங்கள திருமேனியை நினைப்பதில் நிரந்தர தியானத்தில் எப்போதும் பற்றுடையதாக இருக்கட்டும். என் மனது எப்போதும் உன் திருமேனியை நினைப்பதாகவே ஆகட்டும். இதைத்தான் எம்பார் ஸாதித்தார்: “எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிரே”, என்று பாடினார்.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக