செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 3 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி


நல்லதை தயங்காமல் சொல்லுங்கள்

‘சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்’ - இது நம்மாழ்வாரின் பாசுர வரி.

இதிலுள்ள ஆன்மீகக் கருத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த வரி நம் வாழ்வியலுக்கும் சில செய்தியை அழுத்தமாகச் சொல்வதை உற்று கவனித்தால் உணர முடியும்.

நாம் வாழும் காலம் கலிகாலம்.

கலி காலத்தின் பண்புகளில் ஒன்று நல்ல விஷயங்களைச் சொல்பவர்கள் குறைவாக இருப்பார்கள். 

அப்படிச் சொன்னாலும் அவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்.

மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. தங்கள் பிழைப்பைக் கெடுக்க வந்ததாகக்கருதி அவர்களிடம் விரோதம் கொள்வார்கள்.

அப்படியானால் பொறுப்புள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

விரோதம் பாராட்டினாலும் பரவாயில்லை. அவர்கள் நல்லபடியாக வாழ்கின்ற வார்த்தைகளைச் சொல்லியே ஆக வேண்டும் என்ற உறுதி வேண்டும்.

அதாவது ஆன்மீகத்தை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இன்று சமூக சேவை, ஆன்மீகச் சேவை, கல்விச் சேவை, மருத்துவச் சேவை எனச் செய்பவர்கள் சிலருண்டு. அவர்கள் சில நேரம், வேண்டாம் விரோதம் என்று சோர்ந்து, சலித்து, விடுவதுண்டு.

அவர்களுக்காகத்தான் ஆழ்வார் சொல்கிறார். “சொன்னால் விரோதம் வரும் தான். ஆனாலும் சொல்லுங்கள்”. ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? காரணத்தைப் பார்ப்போம்.
எல்லையில்லாத இப்பிரபஞ்சத்தில், கோடானு கோடி சூரியன்களும், அச்சூரியன்களைச் சுற்றி கிரகங்களும் இருப்பதை நாம் அறிவோம்.

ஆயிரக்கணக்கான கோள்களை ஆராய்ந்து பார்த்தும் கூட, நம் பூமி போன்ற ஓர் அமைப்பு பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை. அதிக சூடும் (புதன், வெள்ளிபோல்) அதிக குளிர்ச்சியும் (செவ்வாய், வியாழன் போல்) இல்லாதபடிக்கு தகுந்த இடைவெளியில் நீரோடும், காற்றோடும் சூரியனின் இதமான வெப்பத்தோடும் நம் பூமியைச் சுழல விட்ட சக்தி எது? இந்த பூமியில் எத்தனையோ உயிரினங்கள், ஈ எறும்பு முதல் யானை வரை எத்தனையோ ஜீவன்கள்! அதில் ஓர் முழுமை நிறைந்த படைப்பான மனிதன்?

ஒவ்வொரு உயிரினமும், இவ்வுலக இயற்கையினை ஒட்டி தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கிறது.

ஆனால் மனிதன்? மனிதனை - இறைவனோ, இயற்கையோ படைத்ததன் நோக்கம்?

புல், பூண்டு முதல் உலகத்திலுள்ள அத்தனை ஜீவ ராசிகளையும் தம் பேரறிவாலும், ஆற்றலாலும் மனிதன் காப்பாற்றுவான் என்று தான் மனிதனைப் படைத்தான்.

எம்பார் என்றொரு மகான். ஓடும் பாம்பின் துன்பத்தைத் துடைக்க அந்தப் பாம்பைக் கையிலெடுத்து அதன் வாயில் தைத்திருந்த முள்ளை எடுத்தார்.

ஓர் வாழை இலையை நறுக்கும் போது வரும் நீரினை இரத்தமாகக் கருதி, துடித்து மயங்கினார் கூரத்தாழ்வான் என்கிற மகான்.

இப்படிப் பல சமயங்களிலும் மகான்கள் உண்டு. இவர்கள் நடந்துக் கொண்டது, எல்லா உயிரினங்களையும் தமது கருணையால் காப்பாற்றியே ஆக வேண்டிய கடமையை மனிதன் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத் தான்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? உலகம் எதை நோக்கிச் செல்கிறது?

ஒவ்வொரு நாட்டிலும் தீவிரவாதம், வன்முறை... தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தாலே இரத்த வாடை வீசும்படியான காட்சிகளைக் காண்கிறோம். செய்தித்தாள்களை புரட்டினாலும் அப்படியே!
கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞானக் கருவிகள் இன்றைக்கு உலக சுகாதாரத்தை சூனியமாக்குகின்றன.

மனிதர்களின் மனங்களிலே சுயநலமும், பேராசையும், பொறாமையும் மிதமிஞ்சி வளர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

இயற்கைப் பேரழிவுகள் என்றைக்கோ ஒருநாள் ஏற்படுகின்றன.

ஆனால் தினந்தோறும் மனிதர்கள் பிற மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும், தாம் வாழுகின்ற பூமிக்கும் செய்து வரும் அழிவு வேலைகளின் அளவு என்ன?

இன்றைக்கு பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், நல்லவனாக இரு; நியாயமாக இரு; கருணையோடு இரு; தெய்வ பக்தியோடு இரு என்று சொல்லி வளர்ப்பதாகத் தெரியவில்லை.
மாறாக எப்படியாவது படி; எதையாவது படி; நிறைய சம்பாதி; என்றே சொல்லி வளர்க்கின்றனர்.

ஒருவனுடைய அறிவின் அளவுகோலும், திறமையும், அவனுக்குத் தரப்படும் கௌரவமும் அவன் சம்பாத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் அவலத்தை நாம் கூட்டாகச் செய்து வருகிறோம்.

உலகப் பேரழிவுகளிலே இதுதான் மிகப் பெரிய பேரழிவு!

மிகப் பெரிய ஆச்சரியம்!

இன்றைய ஆன்மீகவாதிகள் கூட, உலகியல் வெற்றிகளை எப்படிப் பெறுவது என்ற வித்தைகளையே கற்றுக் கொடுக்கிறார்கள்.

காலில் ஒரு பெரிய குண்டைக் கட்டிக்கொண்டு வலியோடு நடப்பவன், தன் வலிக்கு மருந்துக் கேட்கிறான். உடனே வலிக்கு மருந்து தருகிறார்கள். மருந்து ஒரு சில மணி நேரம் வேலை செய்து வலியைப் போக்குகிறது. ஆனால், மறுபடியும் வலி வருகிறது.

ஆனால், உண்மையான மருத்துவர் என்ன செய்வார்?

மருந்து தருவதை நிறுத்திவிட்டு வலிக்குக் காரணமான குண்டை கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்த்து விடுவார்.

ஆனால், முற்றிலும் நோய் நீங்கும் காரியத்தைச் செய்து கொள்ள நோயாளிகளே விரும்புவதில்லை. இதற்கு நிரந்தர தீர்வு சொல்லும் மருத்துவரையும் நாடிச் செல்வதில்லை.

இன்றைய ஆன்மீகம் இந்த வழியில்தான் சென்று கொண்டிருக்கிறது.

ஆம்; உலகம் நன்றாகப் படித்தவர்களாலும், சிந்திப்பவர்களாலும் பேரழிவு நோக்கி நடத்திச் செல்லப்படுகிறது. இந்தப் பேரழிவிலிருந்து இவ்வுலகம் காப்பாற்றப்பட வேண்டும். அதுவே நம் பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.

ஸர்வ ஸுகினோ பவந்து!

எல்லா மக்களும் மன அமைதியோடு வாழ வழி காண வேண்டும்.

மனிதன் தன்னை உணர்ந்து, தம் செயல்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

உள்ளுக்குள் ஊடுருவிப் பார்த்து ஆன்மீக வெளிச்சத்தை வெளிக் கொணர வேண்டும்.

அந்த ஆன்மீக வெளிச்சத்தில் நடப்பதன் மூலம் தான் இப்பேரழிவிலிருந்து இவ்வுலகமும், இவ்வுலக உயிர்களின் சகலமும் காப்பாற்றப்படும்.

இன்றைய உலக்தைத் திருத்த வேண்டிய பணி நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதற்கு முன் நாமே தெளிவு பெற வேண்டும். அந்தத் தெளிவை நோக்கி நகர்த்துவது தான் ஆழ்வாரின் அற்புதமான பாசுர வரி “சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்” என்கிற வாழ்வியல் செய்தி. நல்லவற்றை தயங்காமல் சொல்லுங்கள்.

வாழ்க்கை நெறிகள் வளரும்…

நன்றி - சப்தகிரி மார்ச் 2018

நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக