மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி - 4 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி - 4 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்,
தக்க சீர் சடகோபன் என்நம்பிக்கு
ஆட்புக்ககாதல் அடிமைப் பயனன்றே.
- கண்ணிநுண் சிறுத்தாம்பு


மதுரகவி ஆழ்வார் பாடியது. வேதத்தின் பொருள் என்றால் பகவானைப் பற்றுவது. பகவான் திருவடியே உபாயம். வேதத்தின் உட்பொருள் என்றால் ஆசார்யனைப் பற்றுவது. அதாவது ஆசார்யன் திருவடியே உபாயம். அதைச் சொல்லிக் கொடுத்து, ஶேஷித்வம், ஶரண்யத்வம், ப்ராப்யத்வம் என்பது, திருமந்திரத்திலிருக்கும் மூன்று அர்த்தம். பகவான் தான் ஶேஷி. பகவான் தான் உபாயம். பகவான் தான் அனுபவிக்கத்தக்க போக்யமான ப்ராப்யம். 


இதையே மாற்றி அப்படியே திருவாய்மொழிப்பிள்ளை சொல்லிகொடுக்கிறார். ராமானுஜர்தான் ஶேஷி, ராமானுஜர் திருவடி தான் உபாயம். ராமானுஜர் திருவடி தான் அனுபவிக்கத்தக்க போக்யமான ப்ராப்யம். சரமோபாயம். இந்த சம்ப்ரதாயத்தில் ஐந்து உபாயங்கள். 1. கர்ம யோகம், 2. ஞான யோகம், 3. பக்தி யோகம், 4. ப்ரபத்தி அல்லது சரணாகதி, 5. ஆசார்ய அபிமானம். இந்த ஐந்தாவது சரம உபாயம், அந்திமோபாயம் என்பர். அதுவே ஆசார்ய அபிமானம். 


ஆசார்யர் நம்மை அபிமானித்து, இவன் நம்ம பிள்ளை, பெருமாளிடம் சொல்லி மோக்ஷம் வாங்கிக் கொடுத்துவிடுவோம் என்று நினைப்பது ஆசார்ய அபிமானம் என்பர். இதைத்தான் சரம பர்வ நிஷ்டை, சரமோபாயம் என்பர். இதுவே இறுதியான நிஷ்டை. ராமானுஜருடைய திருவடிகளில் பிரதிபக்தி வரவேணும் என்பதற்காக மணவாள மாமுனிகள் அருளிச்செய்தது இந்த யதிராஜ விம்ஶதி. இருபது ஸ்லோகங்கள் கொண்டது. 


முதல் ஸ்லோகம் மங்கள ஸ்லோகமாக அமைகிறது. இதில் ராமானுஜரின் ஞானத்தின் பெருமையைக் கூறுகிறது. இரண்டாவது ஸ்லோகம் ராமானுஜரின் அநுஷ்டானத்தின் பெருமை. ஞானமும் தேவை அநுஷ்டானமும் தேவை. நிறையப் படித்துள்ளார். படித்ததன்படி நடந்து கொண்டும் வருகிறார். 


கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக. 
- திருக்குறள்.


நன்றாகக் கற்க வேண்டும். ஞானத்தின் ஏற்றம் முதல் ஸ்லோகம். பின் அதன்படி நடக்க வேண்டும். அநுஷ்டானத்தின் சீர்மை இரண்டாவது ஸ்லோகம். 

இப்பொழுது முதல் ஸ்லோகத்தினைப் பார்க்கலாம். ஆழ்வாருடைய திருவடிகளில் ராமானுஜருக்கு இருக்கிற அதிமாத்ர பிரேமம். ராமானுஜருக்கு நம்மாழ்வாருடைய திருவடிகளில் அவ்வளவு அன்பு என்பதையும், யாரெல்லாம் ராமானுஜருடைய திருவடிகளைப் பற்றுகிறார்களோ அவர்களுடைய துக்கங்களையெல்லாம் ராமானுஜரே போக்குகின்றார். அவர்களுக்கு இருக்கிற அஹங்காரம், காமம், க்ரோதம், லோபம் போன்ற அனைத்தையும் ராமானுஜரே போக்குகின்றார்.


இந்த ஸ்லோகம் தெரிவிக்கும் வரிசை – பகவான் – பிராட்டி – நம்மாழ்வார் – ராமானுஜர் – நாம் – இது ஒரு பரம்பரை வரிசை.


முதல் ஸ்லோகம்:


माधवान्ग्री जलजद्वय नित्य सेवा प्रेमा विलाशय परान्गुश पादभक्तम् ।
कामादि दोष हरमात्म पदस्रुतानाम् रामानुजम् यतिपतिम् प्रणमामि मूर्ध्ना ॥


ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா
பிரேமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம்|
காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா ||


பதவுரை:-


யதிபதிம் ராமாநுஜம் மூர்த்நா ப்ரணமாமி – பொறிகளையடக்கியவரும் துறவிகளுக்குத் தலைவருமான, ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை, தலையால் வணங்குகிறேன்.


ராமானுஜரைத் தலையால் வணங்குகிறேன். தலை படைத்த பயன் ராமானுஜரை வணங்குவது. வாய் படைத்தது அவரைப் பாடத்தான். கை இருப்பதே அவரைத் தொழத்தான். கால் இருப்பதே ஸ்ரீபெரும்பூதூர், ஸ்ரீரங்கத்துக்கு போவதற்கே. இதை வலியுறுத்தவே தலையால் வணங்குகிறேன் என்கிறார். குலசேகர ஆழ்வார் முகுந்தமாலையில் பாடுகிறார்:


ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முராரிபும் பஜே ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ ஸமர்ச்சயாச்யுத கதா ஸ்ரோத்ரத் வயத்வம் ஶ்ருணு।
கிருஷ்ணம் லோகய லோகசந்த்வய ஹரேர்கச்சாங்கிரியுக்மாலயம்
ஜிக்ரக்ராண முகுந்த பாத துலஸீம் மூர்தந்நாம தோக்ஷஜம் ॥ 16.

மிகவும் அழகான ஸ்லோகம். கை, கால், வாய், மூக்கு முதலிய இந்திரியங்களும், அவயவங்களும் படைத்த பயன் எல்லாவற்றையும் பகவானிடம் ஸமர்ப்பிப்பதற்குத்தான். இராமானுஜரை வணங்கவே இந்தத் தலை.


ஸ்ரீமாதவ – மா என்றால் மஹாலக்ஷ்மி, தவ என்றால் தலைவன், நாராயணன். லக்ஷ்மி நாராயணன் என்று வந்துவிட்டது. மஹாலக்ஷ்மிக்குத் தலைவன் நாராயணன். மா என்றாலே ஸ்ரீ என்றுதான் அர்த்தம். பின் எதற்காக ஸ்ரீ என்ற அடைமொழி அது மாதவனுக்கு விஶேஷணம். உயர்த்திக்காக திரு, ஸ்ரீ என்றெல்லாம் சொல்லுவோம் அல்லவா? ஸ்ரீ – காந்தி பொருந்திய, பெருமை பொருந்திய மாதவன் என்று பொருள். ஸ்ரீயப்பதியான பெருமானுடைய.,

அங்க்ரி ஜலஜத்வய – (திருவின் மணாளனுடைய) இணைத் தாமரையடிகள், திருவடிகள், அதற்குத்தான் நாலாயிரம் படியுங்கள் என்கிறார்கள். இணைத் தாமரையடிகள் என்பது புரியும். இரண்டு தாமரை மலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க பெரிய ஸம்ஸ்க்ருத வித்வான் ஸ்ரீ ராமானுஜர். அவருக்கு யாருடைய திருவடிகளில் ப்ரேமை, காதல் என்றால் தமிழுக்காகவே வாழ்ந்த நம்மாழ்வார் திருவடிகளில் ப்ரேமம் அதிகம். யதிராஜ விம்ஶதி ஸம்ஸ்க்ருதத்தில் பாடிய பெரிய ஜீயர் ஸம்ஸ்க்ருத வித்வான். யதிராஜரும் அப்படியே. ஆனால் இவர்கள் யார் பின்னால் போகிறார்கள். பெண்பாவனையில் பெருமானிடம் தமிழில் அழுது கொண்டிருக்கிறாரே அவரது திருவடிகளின் பின்னால் செல்கின்றனர். ஏன் பின் செல்கின்றனர்? பெருமாளாலே ஆசைக்கு உட்பட்டவர் நம்மாழ்வார். 


யாரிடம் பெருமாளுக்கு ஆசை இருக்கிறதோ அவருடைய நிழலில் நாம் நின்றோம் என்றாலே நமக்கு வழிகாண முடியும். எங்கோ நாம் நம்ம முயற்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் கிடைக்காது போய்விடும் அல்லவா?


ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா - அந்த பெருமானின் திருவடிகளில் கைங்கர்யம் நித்யம் பண்ணவேண்டும். 


பிரேம ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய திருவுள்ளத்தை உடையவர், அந்த திருவடிகளில் கைங்கர்யம் செய்யவேண்டும் என்ற அன்பு நம்மாழ்வாருக்கு மிகவும் அதிகம். அதனால் கலங்கிய திருவுள்ளம்.


நம்மாழ்வார் என்றாலோ, ராமாநுஜர் என்றாலோ, நாதமுனிகள் என்றாலோ என்ன ஞாபகம் வரும். நாதமுனிகள் என்றாலே தாளம் அமைத்து, இசை கூட்டிப் பாடுவார் என்பது ஞாபகம் வரும். ஆளவந்தார் என்றால் ராமானுஜரையே கடாக்ஷித்தவர் என்றும், மணவாள மாமுனி என்றவுடன் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்து பெருமாளையே தனக்கு சிஷ்யனாகக் கொண்டவர். நம்மாழ்வார் என்றால் அழுதுகொண்டே இருப்பார். உள்ளம் கலங்கியிருப்பார். பேசவே வராது. கண்களில் ஜலம் ஜலமாக இருக்கும்., காலெல்லாம் நடுங்கும். ஆறாறு மாதம் மயக்கமாக விழுந்துவிடுவார். பரம பக்தர். ஏதோ உபதேசம் பண்ணுவார் என்று சொன்னீர்களே? அழுதுகொண்டே இருப்பார் என்கிறீர்களே? அதனால்தான் பரம பக்தர். கிடு கிடு என்று பகவானைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் பக்தன். பேசமுடியாமல் தவித்தான் என்றால் பரம பக்தன். பேசிக்கொண்டே இருக்கிறவர்களெல்லாம் பரம பக்தர்களாக மாட்டார்கள். பகவானுடைய திருவடிகளில் ஆழ்வாருக்கு அன்பு. ஆகவே ப்ரீதியாலே கலங்கிய திருவுள்ளத்தை உடையவர் நம்மாழ்வார்.


பராங்குஸ – (அத்தகைய) பராங்குஸரென்னும், பிறருக்கு அங்குசம் இட்டவர் பராங்குசர். பர என்பதற்கு எதிரி என்றும் பரமாத்மா என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. எதிரிகள் என்றால் வேதத்திற்கு எதிரானவர்கள். புறச்சமயிகள். பகவானுக்கு எதிரானவர்கள். அவர்கள் வாயையே திறக்க முடியாமல் அங்குசம் இடுகின்றார். ஆகவே பராங்குசர். 


பகவானே நம்மை சிக்ஷிக்கவேண்டும் என்று வந்துவிட்டால், நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரத்தை சேவித்தோமானால், அந்த யானைக்கு அங்குசம் இட்டாற்போல பகவான் நின்றுவிடுவார். யானை அங்குசத்தைத் தாண்டி போகவே போகாது. கடல் ஆர்ப்பரிக்கும். ஆனால் கரையைத் தாண்டி போகவே போகாது. யானை அங்குசத்தைத் தாண்டி போகாது. நம்மாழ்வாருடைய பாசுரம்தான் அங்குசம்.


வேதத்தின் முன்செல்க* மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க* குணம்கடந்த
போதக்க டல்எங்கள் தென்குரு கூர்ப் புனிதன் கவி* ஓர்
பாதத்தின் முன்செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 
1 சடகோபர் அந்தாதி


வேதத்தைப் பகவான் தாண்டிச் செல்வார். பிரம்மா முதலிய தேவர்களைத் தாண்டி விடுவார். இதிகாச புராணங்களையும் தாண்டிச் செல்வார். ஆனால் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தைத் தாண்டி ஒரு நாளும் பகவான் செல்லமாட்டார். பெருமாளையே அங்குசம் இட்டுவைத்திருக்கிறவர்தான் பராங்குசராகிய நம்மாழ்வார்.


இதுவரை யாருடைய பெருமையைப் பார்த்தோம். ஸ்ரீமாதவன் என்பதால் பகவானுடைய பெருமை. ப்ரேம ஆவில ஆஸய என்பதால் பராங்குசரின் பெருமை பார்த்தோம்.


பராங்குச பாதபக்தம் – நம்மாழ்வாரின் திருவடிகளில் பரம பக்தி பூண்டவர். ஒருவரின் பெருமை சொல்ல அவரை இந்திரனே, சந்திரனே என்று புகழ்வது போல அல்லாமல், நம்மாழ்வாரின் பெருமை அவர் மஹாலக்ஷ்மியின் திருவடியைப் பற்றியவர். மஹாலக்ஷ்மியோ பகவானை பற்றியவர். அதுபோல ஸ்ரீ ராமானுஜரோ நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றியவர். இதன் மூலமே அவரது பெருமை விளங்கும். ஒருவருக்குள்ள தனிப்பட்ட பெருமையைச் சொன்னால் அது உகந்ததல்ல. அவரது ஆசாரியாரின் பெருமையைச் சொன்னோமானால் இவர் எத்தகைய ஆசாரியரை அணுகியுள்ளார் என்பதிலேயே இவரது பெருமை வெளிப்படும். இங்கு ராமானுஜருக்கு எல்லாம் எது தெரியுமோ?


உறுபெருஞ்செல்வமும் தந்தையும் தாயும்* உயர்குருவும்
வெறிதரு பூமகள் நாதனும்* மாறன் விளங்கிய சீர்
நெறிதரும் செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர்
அறிதரநின்ற* இராமானுசன் எனக்காரமுதே.


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 


நன்றிகள் ஸ்வாமி.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை