செவ்வாய், 14 ஏப்ரல், 2020

குறிப்பால் உணர்த்தும் கோசிகன் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி


“அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது” - என்பது ஒளவையின் அருள்வாக்கு. மானிடராய் பிறந்த யாவருமே மனிதர்களாக மாட்டார்கள் என்பது தொல்காப்பியரின் துணிந்த முடிவாகும். ஐம்புலன்களையும் வென்று அறவழிச் செலுத்தும் ஆறாவது புலனாகிய அறிவை ஆளுமை  படைத்தவர்தான் மக்கள். மற்றையோர் மாக்கள் என்பது அன்னாரின் கொள்கை. அவரைக் காட்டிலும் விளக்கம் தருவதில் ஒருபடி மேலே சென்றார் தாயுமானவப் பெருந்தகை. “மனிதரிலே மரங்களுண்டு, மிருகமுண்டு, பட்சியுண்டு மனிதரிலே மனிதருண்டு” என்றெல்லாம் நமக்கு விளங்குமாறு பாடியருளிப் போந்தார் அவர்தம் பாடலிலே. இவர் தம் கருத்தை மேலும் நமக்கு விளக்கமாக்கித் தருகிறார் ஒளவை மூதாட்டியார். அது என்ன நீண்ட வலுத்த கிளைகளைக் கொண்டு ஓங்கிவளர்ந்திருக்கின்றனவே மரங்கள். அவைகள் உண்மையிலேயே நல்ல மரங்களல்ல என்பது அவரது கொள்கை.

“கவையாகிக் கொம்பாகி காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்”

இதுதான் அன்னார் பாடிய பாடலின் முதலிரண்டு அடிகள். நல்ல பெரிய உருவத்தில் நீண்ட மரங்கள் மக்கள் நடமாட்டமற்ற பெருங்காடுகளில் தானே அதிகமாகக் காணப்படும். நாட்டிலா காணப்படும்? என்று நம் போன்றோர் எண்ணத்தான் தோன்றும். நமது மூதாட்டி அவ்வாறெல்லாம் ஏமாந்து விடுவாரா? அவர் வாயிலாகவே அன்னாரின் தெள்ளிய கருத்தை நாம் தெரிந்து கொள்ள முற்படுவோம்.

ஒரு அவை. அந்த அவைக்கண் பல பெரியோர்கள் - கற்றறிந்த பெரியோர்கள் கூடியிருக்கின்றனர். அங்கு அந்தச் சபை நடுவே ஓங்கி உலகளந்த உத்தமன் போன்ற உருவினனாய் ஒருவன் வந்து நிற்கின்றான். அவன் பால் ஒரு ஓலை கொடுக்கப்படுகின்றது. அதை அவன் கையில் வாங்கி அந்த ஓலையை மேலும் கீழும் பார்க்கிறான். ஆனால், அதிலுள்ள கருத்தைப் படித்து குறிப்பறிய அவனால் முடியவில்லை. அந்தோ பரிதாபம். மனிதனாய் பிறந்து குறிப்பறிந்து வாழ்க்கை நடத்த வேண்டிய ஒரு மனிதன் குறிப்பறிய மாட்டாமல் அவையின்கண் அவல நிலையில் நிற்கிறான். உலகில் இதைவிடப் பரிதாபம் வேறென்ன இருக்கமுடியும்? இத்தன்மையுள்ள ஒரு  மனிதனை ஒளவையாரும் பார்த்திருக்க வேண்டும். அவர் நமக்கெல்லாம் விளங்குமாறு

“சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்” 

என்று உண்மையான மரம் எது என்பதை நமக்குத் தெளிவுபடுத்திவிடுகிறார்.

ஆம். மனிதனாய் பிறந்து - மனித உருக்கொண்ட ஆறறிவு படைத்த எவனுக்கும் குறிப்பறியும் சக்தி பொருந்தியிருக்க வேண்டும். பிறர்தம் குறிப்புணரும் ஆற்றல் மனிதனுக்கு எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் பிறரை தம் குறிப்பால் உணர்த்தும் ஆற்றல் பெற்றிருப்பதும். இந்த உலக இயல்பை அறியாதவனா கம்பன். அவனும் இந்த கருத்தைத் தான் இயற்றிய இராமகாதையில் தகுந்த இடத்தில், தக்க முறையில் பொருத்தமான வகையில் புகுத்தத் தவறினானில்லை. இவ்வாறான சம்பவத்தைத் தம் காவியத்தில் புகுத்துவதற்கு அவர் அத்தகைய சந்தர்ப்பத்தை நாடி தேடிச் செல்லவில்லை. ஆனால் அவ்வாறான சம்பவமொன்று அவரைத் தேடி வந்து அன்னாரின் ஆற்றலை நாமும் அறியும்படி அவருக்கு உதவியது. தம்மைத் தேடி வந்த ஒரு அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டு விடுவாரா கவிச்சக்கரவர்த்தி. அதைத் திறம்பட பயன்படுத்திக் கொண்டார். அவர் வழியிலேயே நாமும் சென்று அவர் தம் கருத்தில் பங்கு கொண்டு களிப்புக் கடலில் ஆழ்வோம்.

காகுத்தனின் கன்னிப்போர் முடிந்து, காதி வேந்தனின் கருமங்களை முற்றுவித்துக் கோதமனின் பத்தினிக்கு கல்லுரு தவிர்த்து அவரையும் தம்முடன் அழைத்துச் சென்று அன்னாரைக் கோதமன் பால்விடுத்து கோசிக முனியுடனும் தன் இளையானுடனும் சனகனின் நகரமாகிய மிதிலைக்குள் சென்றான் அயோத்தி இளவரசன். அங்கே அவனுக்காக ஒரு பெரும் நிகழ்ச்சி காத்திருந்தது. சீதையை கன்னிமாடத்தில் கண்டதும் காகுத்தன் சிவ வில்லை முறித்து சானகியை கைத்தலம் பற்றியதும் நாம் அறிந்த உண்மைகள்.

நாம் ஒரு தங்கக் கட்டியைப் பார்க்கிறோம். தங்கம் இயற்கையிலேயே பளபளக்கும் சக்தி வாய்ந்தது. தங்கத்திற்கு ஒப்பானது தங்கம்தான். அதற்கு ஈடு வேறொன்றையும் கூற இயலாது. நல்லறிவு படைத்த குழந்தைகளைக் காண சந்தர்ப்பம் ஏற்படும்போது நாம் நம்மையறியாமலேயே அட என் தங்கக்கட்டியே என்று கூறிவிடுகிறோம். இதனால் தங்கக்கட்டி என்றால் என்னவென்பது நமக்கு புலனாகிறது. ஆனால் அந்த தங்கக்கட்டியை அந்த உருவத்திலேயே நாம் அணிய முடிவதில்லை. அதை ஆபரண வடிவில் பலவிதமாகச் செய்து அணிகிறோம். நகைகள் செய்தவுடன் அப்படியேவா அணிந்து விடுகிறோம். அவைகளுக்குத் தக்கமுறையில் மெருகு கொடுத்த பிறகே அவைகளை அணிகிறோம். பொன்னிலிருந்து அதனின்றும் மாறுபட்ட வகைகளில் கலன்களை நாமா செய்கிறோம். அதற்கென்று பொற்கொல்லர்கள் இருக்கிறார்கள். நாமணியும் அணிகளை நம் மனம் மகிழுமாறு நமக்குச் செய்து கொடுக்கத்தான் பொற்கொல்லர்கள் நம்பால் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பொற்கொல்லர்கள்தான் நம் கவிகள். அதிலும் சிறந்த பொற்கொல்லன் கம்பன். அதிலும் மெருகு கொடுக்கும் பாணியில் மிகவும் வல்லவன். அவன் செய்த பொற்கலன்தான் இராமகாதை என்பது நமக்குத் தெரியும். அவன் அதற்கு மெருகு ஏற்றியிருக்கும் அற்புதத்தைதான் நாமிங்கு காணப்போகிறோம்.

சனகனின் ஆத்தான மண்டபம். கோசிகமுனியும், குரிசிலர் இருவரும் அவன் எதிரில் அமர்ந்திருக்கின்றனர். இராம, இலக்குமணனாகிய அவ்விரு சிறார்களையும் - அழகு ஓவியங்களையும் வைத்த கண் வாங்காமல் மிதிலைக்கரசன் நோக்கிக் கொண்டிருக்கிறான். அவர் தம் அழகு, களைபொருந்திய முகங்கள் வீரத்தை விளக்கி காட்டும் வினோத முகங்கள் அந்தச் சனகனின் நோக்கை அவர்களிடமிருந்து மீட்க முடியாமல் செய்து விட்டது. அவர்கள் இன்னார் என்பதை அறிய அவன் மனம் அவா கொண்டது. அவனால் தன் ஆவலை அடக்க முடியவில்லை. இருக்கையினின்று எழுந்து அந்த அருந்தவசியாகிய கோசிகனின் அடிகளில் வணங்கி, “முனிவரே! இந்த அழகான சிறுவர்கள் யாவர்? தயைகூர்ந்து எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று இறைஞ்சி நின்றான். இதைக் கம்பன், 

“இருந்த குலக்குமரர்தமை யிருகண்ணும் முகத்தழகு பருக நோக்கி,
யருந்தவனை அடிவணங்கி யாரி வரை உரைத்திடு மினடிகளென்”

என்ற இரண்டடிகளில் தெள்ளத்தெளிய நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான்.

இவ்வாறான ஒரு வினாவை எழுப்புவான் சனகன் என்று எதிர்பார்த்துத்தான் இருந்தான் கோசிகன். அதற்கு விடையையும் தயாராகத்தான் வைத்திருந்தான் அவன். அதை உடனடியாக கூறியும் விட்டான்.

“விருந்தினர் கணின்னுடைய வேள்வி காணியவந்தார் வில்லுங்காண்பர்.
பெருந்தகை மைத்தயரதன் தன் புதல்வதெனலவர் தகைமை பேசலுற்றான்.”

என்று விடையளித்த கோசிகனின் சொல்வன்மை சனகனை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமா? நம்மையும் களிப்பூட்டத்தானேச் செய்கிறது.

“சனகரே! இவர்களை யாரென்றல்லவா கேட்டீர்கள்? தாங்கள் நடத்தும் வேள்வியைக் காண்பதற்காக என்னால் இவ்விடம் அழைத்து வரப்பட்டார்கள். இவர்கள் வேள்வி காண்பதற்கு மட்டுமா வந்தார்கள்? நீ சீதையை மணப்பதற்காக கன்னியாசுல்கமாக வைத்திருக்கும் வில்லைக் காணவும்தான் வந்திருக்கிறார்கள். வில்லின் ஆற்றல் பெரிதா? இவர்களின் ஆற்றல் பெரிதா? என்பதை நீயே கண்டு கொள்வாய்” என்று கூறுவது போல் அமைந்துள்ளது கோசிகப் பெருந்தகையின் விடை. என்னே! கம்பனின் கவியுள்ளம்! இந்தச் சிறுவர்கள் யாரென்று தெரிந்து கொள்ள நீ விரும்பினாயல்லவா? பெருந்தகைமை என்பதன்றி வேறொன்றையும் அறியாதத் தசரதச் சக்கரவர்த்தி இருக்கிறானே. அவனது அருமைச் சிறுவர்கள் இவர்கள் என்று சனகனிடம், இராமனையும், இளையவனையும் அறிமுகப்படுத்தி வைக்கும் கோசிகன் அதோடு விட்டுவிடாமல் அவனது முன்னோர்களின் பெருமைகளையும் எடுத்துக் கூறத் தவறவில்லை. சனகன் சந்திர குலத்தில் வந்தவன். இராமனோ சூரியவம்சம். ஆதலின் சூரிய வம்சத்தவரின் வரலாறுகள் அவனுக்கு நன்குத் தெரிந்திருக்கக் காரணமில்லை. அதனால் அதைத் தெளிவாகவே எடுத்துச் சொல்கிறான் கோசிகன்.

ஆதித்தன் குலமுதல்வன் மனுவினையும், பிணியரங்க வினையகலப் பெருங்காலம் தவம்பேணி மலரயனை வழிபட்டு, பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரையாங்காண அணியரங்கம் தந்த இட்சுவாகு மன்னனையும், தான்றனக்கு வெலற்கரியத் தானவரைத் தலை துமித்து, வான்றரக்கிற்றி கொலென்று குறையிரப்ப வரங்கொடுத்தாங்கு, வென்றெடுத்த சிலையினா யிகல் புரிந்த ககுத்த மன்னனையும் புலிப்போத்தும், புல்வாயுமொரு துறைநீர் உண்ண உலகாண்ட மாந்தாதா என்ற மன்னனையும் மறை மன்னு மணிமுடியுமாரமும் வாளெடு மின்னப் பொறை மன்னுவான வருந்தானவரும் பொருமொரு நாள் விற் பிடித்தவறமென்னவொரு தனியே, திரிந்த மராபதிக் காத்த முசுகுந்தச் சக்கரவர்த்தியையும், மென்பறவை மன்னுயிர்க்குத் தன்னுயிரை மாறாக வழங்கியச் சிபிச் சக்கரவர்த்தியையும், நீவரிநீர் கடறோட்டாராகியச் சகரர்களையும் அவிழ்கொன்றைப் பூநின்ற மவுலியையும், புக்களைந்த புனற் கங்கை வானின்று கொணர்ந்த அப்பகீரதனையும், வரிசிலையால் இந்திரனை வென்று திசையிரு நான்குஞ் செருவென்ற இரகு மகாராஜனையும், வில்லென்னும் நெடுவரையால் வேந்தென்னும் கடல் கலக்கி, யெல்லென்னு மணி முறுவலிந்து மதியெனுந் திருவை மல்லென்னும் திரள் புயத்துக் கணியென்ன வைத்த அந்த அஜமகாராஜனையும் பற்றிய வரலாறுகளையெல்லாம் வித்தாரமாக இதுவரைக்கும் பேசி வந்த கோசிகன் அயன் புதல்வன் தயரதனை யறியாதார் யார் என்றும் ஒரு கேள்வியைத் தொடுத்து நிறுத்தினான்.

இதுகாறும் சூரியக்குலத் தோன்றல்களைப் பற்றிய வரலாறுகளைக் கேட்டு இன்னமுத மாந்தியிருந்த சனகன் தயரதன் என்ற பெயரைக் கேட்டவுடனேயே சற்று அயர்ந்து விட்டான் என்றுதான் நாம் கொள்ள வேண்டும். அவ்வாறுதான் நாம் ஊகிக்குமாறு கம்பனின் கவிகள் தோற்றமளிக்கின்றன. தாம் கூறிய வரலாறுகளை தொடர்ந்து மேலும் கோசிகன் தயரதன் மகப்பேறு இல்லாமல் வருத்தமுற்றுக் கலைக்கோட்டு மாமுனிவரைக் கொண்டு மகாவேள்வி நடத்தி மகப்பேறடைந்த விவரங்களையும் எடுத்துக்கூறிக் கொண்டேச் செல்கிறான். அதே சமயம் தான் கூறி வந்த வரலாறுகளைக் கேட்டுக் கொண்டிருந்தச் சனகனின் முகக்குறிகளையும் காணத் தவறினானில்லை, அந்த கோசிகன். சனகனின் மனத்தில் என்னென்ன எண்ண அலைகள் மோதிக் கொண்டிருக்கின்றன என்பதை அவன் அறிந்து கொண்டான். குறிப்பறிதல்தானே பெரியோர்களின் அருங்குணம். குறிப்பு உணர்தல் மட்டும் போதுமா? குறிப்புணர்த்தும் வல்லமையும் கோசிகன் பால் இருந்தது. அவன் எவ்வாறு சனகனின் குறிப்புணர்ந்து அன்னானுக்கு மனந்தெளியுமாறு குறிப்பால் உணர்த்தினான் என்பதுதான் இங்கு நாம் காணப்போகும் ஒர் அரும்பெரும் சம்பவம்.

தசரத சக்ரவர்த்தி அறம் வழுவாது அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசு புரிந்தான் என்பது சனகனுக்குத் தெரியாத ஒரு உண்மையல்ல. அந்தத் தயரதன் சம்பாசுரனைப் போரில் வென்று இந்திரனுக்கு அமராவதியைத் திருப்பி அளித்த அற்புதத்தை அவன் அறிந்தவன்தான். அவனுடைய வீரத்திலோ, அறம் வழுவாத்தன்மையிலோ, அரசாட்சி புரியும் மேன்மையிலோச் சனகனுக்கு மகிழ்ச்சியே தவிர வேறில்லை. அவனிடம் இருந்த ஒரே ஒரு தீய குணத்தினால் அவன்பால் சனகனுக்கு சற்று வெறுப்பு என்று தான் கொள்ள வேண்டும். தயரதனுக்கு பலப்பல மனைவிமார் உண்டென்பதைச் சனகன் அறிவான்.  தான் கண்ணாகப் போற்றி வளர்க்கும் தன் ஒரே மகளாகிய சானகியை தயரதன் மகனாகிய இராமனுக்கு விவாகம் செய்து கொடுத்துவிட்டால் அந்த இராமன் தன் தகப்பன் செய்தது போல் மற்றும் சில மனைவிமார்களை மணம் செய்து கொண்டு சானகியைக் கவனிக்காமல் விட்டு விடுவானோ என்று சனகன் எண்ணியதில் தவறொன்றுமில்லையே? உலகியல்பு உணர்ந்தவன் அல்லவா சனகன். ‘பாத்திரமறிந்து பிச்சையிடு. கோத்திரம் அறிந்துப் பெண்ணைக் கொடு’ என்பது தானே நம் நாட்டுப் பழமொழி. இராமன் வில்லை முறித்து சானகியை மணந்து கொண்டால், அவனால் அவளுக்கு உண்மையில் இன்பமுண்டாகுமா என்று சனகனுக்கு ஐயம் மூண்டுவிட்டது. மேற்கூறியபடி இதை உணர்ந்து கொண்டான் கோசிகன். அவன் மனத்தை மாற்ற முற்கொண்டான்.

இந்த இடத்தில் நம் நாட்டுப் பழைய கதை ஒன்று நம் கவனத்திற்கு வருகின்றது. அந்தணன் ஒருவன் அகன்ற கானகத்திடையே ஒரு நாள் சென்று கொண்டிருந்தான். அயர்ந்தவனாய் ஒரு மரத்தடியே உட்கார்ந்தான். மரத்தின் மேலிருந்து ஒரு குரல், “குத்து, வெட்டு, ஆட்டுக்கறி ஆறுகாசு” என்றெல்லாம் சொல்வது அவனது செவிகளில் விழுந்தது. தலையைத் தூக்கி மேலே பார்த்தான். இவ்வாறு உரைத்தது ஒர் அஞ்சுகம் என்பதைக் கண்டான். அவ்விடத்தில் மேலும் தங்குவதற்கு மனமின்றி எழுந்து நடந்து சென்றான். பகல் உச்சிநேரம். களைப்பினால் அங்கேக் காணப்பட்ட மற்றொரு மரத்தடியில் சென்றமர்ந்தான். சற்று நேரத்திற்கொல்லாம் வேறொரு கிளியின் இனிமையான குரல் அவன் செவிகளில் விழுந்தது. “வரவேண்டும். வரவேண்டும். அந்தணரே! நும் வரவு நல்வரவாகுக. பசித்துக் காணப்படுகிறீர். உணவருந்த வாருங்கள்” என்பதுதான் அந்தக் கிளியின் குரல். திடுக்கிட்டான் அந்தணன். சற்று நேரத்திற்கு முன் வேறொரு மரத்தின் மேலிருந்த கிளி அவ்வாறுச் சொன்னதும், இப்பொழுது இந்தக் கிளி இவ்வாறு சொல்வதும், அவனுக்கு வியப்பூட்டியது. அந்தக் கிளியிடம் அன்று நடந்த இரண்டு சம்பவங்களையும் எடுத்துக்கூறி அவைகளுக்கு விளக்கமும் கேட்டான். கிளி சொல்லிற்று, “அந்தணரே! நாங்கள் இருவரும் ஓர் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்தாம். ஒரு சமயம் எங்கள் இருவரையும் ஒரு வேடன் பிடித்துச் சென்று என் சகோதரனாகிய அந்தக் கிளியை ஒரு கசாப்புக் கடைக்காரனிடம் விற்றுவிட்டு என்னை இங்கு அருகாமையிலிருக்கும் அந்தணர் கூட்டத்தினிடம் ஒப்புவித்துவிட்டு சென்றுவிட்டான். என் சகோதரன் அவன் வளர்ந்து வரும் இடத்தின் சூழ்நிலைக்கேற்ப தங்களிடம் உரையாடினான். அந்தணர் பால் பழகி வரும் எனக்கு இத்தகுதி வாய்த்தது. இதுதான் உண்மை. ஓர் தாயின் வயிற்றில் பிறந்தவர்களாயிருப்பினும் அவரவர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலைக்கேற்பத்தான் அவர்களது குணநலன்கள் இருக்கும்” என்று சொல்லியது அந்தக்கிளி. இது நம் புராண இதிகாசங்களில் காணும் ஒர் நீதிக்கதை. 

“நிலத்தியல்பான் நீர் திரிந்தற்றாங்கு மாந்தர்க்கு
இனத்தியல் பதாகும் அறிவு.”

என்பது தெய்வத் திருவள்ளுவரின் தெளிந்த வாக்கு கூறும் உண்மையல்லவா நமக்கு? இதைக் கருத்துட் கொண்ட கம்ப நாடரும் இந்தக் கருத்தினையே மையமாகக் கொண்டு கோசிகன் சொல் வாயிலாக நமக்கு ஒரு இன்பச் சுரங்கத்தை திறந்து காட்டுகிறான் தன் கவியின் மூலம். 
இராமனின் ஏகதார விரதத்தைப் பற்றி ஐயமுற்ற சனகனிடம் கோசிகன் பையப் பைய சொல்ல ஆரம்பித்தான். “உறையோடும் நெடுவேலாய்!” என்று சனகனை விளித்த கோசிகன், “திறையோடு மரசிறைஞ்சுஞ்செறி கழற்காற்றெசரதனாம் பொறையோடும் தொடர் மனத்தான்” என்று விளிக்க ஆரம்பிக்கிறார்.

சனகனின் வேலுக்கு வேலையேயில்லையாம். யாராவது பகைவர்கள் அவனை எதிர்த்து வந்தால்தானே அவனுடைய வேலுக்கு வேலையிருக்கப்போகிறது. அதனால் அவனுடைய வேல்- நெடியவேல்,  என்றும் அதனுடைய உறையின்னுள்ளேயே இருந்ததாம். சனகனை எதிர்க்க எந்த மன்னனுக்கும் தைரியமில்லை. அதனால் அவனுடைய வேல் உறையினுள்ளேயே எடுப்பாறற்று கிடந்தது என்று விளக்கம் தரும் வாயிலாக, “உறையோடும் நெடுவேலோய்!” என்று சனகனைப் பார்த்து கோசிகன் அழைத்ததில் நாமும் இரும்பூது கொள்ளாமல் எங்ஙனம் இருக்கமுடியும்.

தயரதனின் பெருமை மட்டும் சிறியதா என்ன. தயரதனின் அரண்மனை வாயிலிலும், அத்தாணி மண்டபத்திலும் அரசர்களின் கூட்டம் எங்கணும் நிறைந்திருக்கிறது. சிற்றரசர்கள் ஒவ்வொருவராக வரிசை வரிசையாக வந்து அவரவர்கள் செலுத்த வேண்டியக் கப்பங்களுடன் அந்தத் தயரதனின் கால்களில் வந்து வணங்குகிறார்களாம். ஆனால், இத்தனைக்கும் அவன் கர்வப்படவில்லையாம்.  தன்னைச் சரணாக வந்தடைந்து தனக்கு கப்பம் அளித்துக் கட்டிய கரங்களுடன் நிற்கும் அந்த அரசர்களிடம் அவன் கருணையைத் தவிர வேறு எந்த உணர்ச்சியையுமே காட்டியதில்லையாம். அப்படிப்பட்ட பொறையோடும் தொடர் மனத்தனாகிய தயரதனின், “புதல்வரெனும் பெயரேகாண்” இந்தச் சிறுவர்களுக்கு என்று சொல்லாமல் சொல்கிறான். 

‘புதல்வரெனும் பெயரேகாண்’ என்று சொல்லும் இந்தச் சொற்றொடரில் எத்தகைய இந்திரஜாலங்கள் நம் கண் முன்னால் காட்சியளிக்கின்றன என்பதை கூர்ந்து கவனியுங்கள். தயரதனின் புதல்வர்கள் என்பது பெயரளவில் தான் என்று சொல்லும்போது உண்மையிலேயே அவர்கள் அவனுடைய புதல்வர்கள் அல்ல என்று தானே விளக்கம் தருகிறது அந்தச் சொற்றொடர். ஆம். அதுவே தான் கோசிகனின் கருத்து. ஏன்? கம்பன் கருத்தும் கூட. நாம் மேலே கூறிய கிளியின் கதையை இங்கு ஒப்பு நோக்குங்கால் கோசிகனின் சொல் வன்மையின் நயம் நன்கு விளங்கும். தயரதனின் புதல்வர்களாகிய நால்வரும் தயரதனால் பரிந்து பெறப்பட்டவர்கள் ஆயினும் அவர்களை தயரதன் தன்பால் வெகுகாலம் வசிக்கும்படி வாய்ப்பளிக்கவில்லை. அதனால் அந்தத் தசரதனுடைய எந்தக் குணங்களும், அவர்கள் பால் பதிவதற்குக் காரணமில்லை யென்பதை நன்கு விளக்குகிறான் விசுவாமித்திரன். அது எவ்வாறு? அதைப் பார்ப்போம்.

அந்தணர்களுக்குப் போலவே அரசர்களுக்கும் உபநயனம் என்ற ஒரு சடங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. நல்ல திறமையான, தகுதியுள்ள நற்குண நற்செய்கைகளையுடைய நல்லாசான் ஒருவனிடம் தங்கள் குமாரர்களை உபநயனவிதி முடித்து வேத சாத்திரங்களை நன்கு கற்றறிந்து வர அவர்கள்பால் விடுத்து வைப்பது தான் பழைய அரச நெறி. அவ்வாறே தசரதனும் தன் குமாரர்களாகிய இராம, இலக்குவ, பரத, சத்ருக்கனர்களை தன் குலகுருவாகிய வசிட்டனிடம் குருகுலவாசம் செய்வதற்காக அனுப்பி வைத்து விட்டானாம். அந்த வசிட்டனும் அவர்களுக்கு முறைப்படியே உபநயனவிதிமுடித்து மறை ஓதுவித்து நலம்பெற வளர்த்து வந்தானாம். அங்ஙனமாதலின் அவர்களுக்கு வசிட்டரின் குணாதிசயங்கள் தான் நன்கு படிந்திருக்க வேண்டும். பெற்ற தகப்பனாயிருப்பினும் தசரதனின் குணங்கள் அவர்கள் பால் நிறைந்திருக்கக் காரணமில்லை என்பதை குறிப்பாகச் சனகனுக்கு உணர்த்துகிறான் காதி மன்னனாகிய கோசிகத்தவசி. இதைக் கம்பன், “உபநயன விதிமுடித்து மறையோது வித்திவரை வளர்த்தானும் வசிட்டன்காண்” என்று நம்மைப் பரவசமூட்டும் வகையில் குறிப்பாக உணர்த்துகிறான். “தசரதன் தன் புதல்வரெனும் பெயரே காண்” என்று இரண்டாமடியில் கூறிய கோசிகன் அதே வாயால் சனகனின் ஐயம் தவிர்க்க, “வளர்த்தானும் வசிட்டன் காண்” என்று சொல்லும் விந்தைச் சொற்கள் நம்மை மட்டுமல்லாமல் நானிலத்தார் எவரையுமே மகிழ்ச்சியடையத்தான் செய்யும்.

“வளர்த்தானும் வசிட்டன் காண்” என்ற சொற்றொடரில் ஒரு நயத்தைக் காட்டி நம்மை சிந்திக்க வைக்கும் கம்பனின் திறமை பாராட்டத்தக்கதொன்றாகும். வசிட்டர் இல்லற தர்மத்தை வழுவாது கடைசி வரையில் நலம் பெற நடத்தி வந்தவர். இல்லறத்தான் ஓம்ப வேண்டிய நெறிகள் யாவற்றையும் அவர் சிறிதளவும் குறையின்றி நடத்தி வந்தார் என்பது நன்கு புலனாகிறது. அவருக்கு உற்றதொரு வாழ்க்கைத் துணையாக வந்தமைந்தாள் அருந்ததி என்னும் கற்புக்கரசி. அவர்களுடைய வாழ் நாட்களில் அவர்கள் ஒருவரையருவர் பிரிந்திருந்ததாகக் கூட எந்த வரலாறும் நமக்குத் தெரிவிக்கவில்லை. கடிமணம் புரியும் காதலர்கள் இன்னும் அம்மி மிதித்து அருந்ததி காணல் என்ற ஒரு சடங்கைக் கடைப்பிடித்து வருவது நம்மில் பலர் அறிந்த உண்மையாகும். கம்பன் பாடிய இராமகாதை பாலகாண்டம் கடிமணப் படலத்தில் இராமனும் சீதையும் கடிமணம் புரிந்து கொண்டவுடன் அம்மி மிதித்து அருந்ததி கண்டதை, 

“வலங்கொடு தீயை வணங்கினர் வந்து
பொலம்புரி நூலவர் செய்பொருண்முற்றி
மிலங்கொளியம்மி மிதித்தெதிர் நின்ற
கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டார்” 

என்று நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறான். அருந்ததியை, அந்தக் கற்புக்கரசியை “கலங்கலில் கற்பின் அருந்ததி” என்று கூறும் பாணி நம்மை பரவச மூட்டத்தானே செய்கிறது.

பின்னர் இதே கம்பநாடன் தனது சுந்தரகாண்டம் சூளாமணிப் படலத்தில் அனுமன் சீதையைப் பார்த்துப் பேசும் வாயிலாக அந்தச் சீதையை நோக்கி “அருந்ததி உரைத்தி” என்று உரைக்கும் உரையும் இங்கு ஒப்பிட்டு நோக்க வேண்டிய ஒன்றாகும். சீதையை, அருந்ததி போன்றவளே என்றழைத்த அந்த அநுமனின் அறிவுத்திறன் கம்பனின் காவிய மூலமாக நம் சிந்தனைக்கு ஒரு விருந்தாக அமைந்திருக்கிறது.

அருந்ததி கற்புக்கரசி என்பது மேற்கூறிய வரலாற்றினால் நன்கு புலனாகிறது. ஆனால், வசிட்டனிடம் அந்த அருங்குணங்கள் பொருந்தியிருந்தால் தானே இராம, இலக்குவர்களுக்கு அந்த அருங்குணங்கள் அமைந்திருக்கும் என்று நமக்கு எண்ணத்தான் தோன்றும். ஆடவர்கள் கற்பு நெறி தவறாமல் இருந்தால்தான் பெண்களின் கற்பு நிலையும் நலமாக இருக்கும். ஆடவர் கற்புநிலை தவற நேர்ந்தால் பெண்டிரும் அவ்வாறே கற்பு நிலை தவறியவர்களாக ஆகிவிடுவார்கள் என்பது சான்றோர்களின் கருத்து மட்டுமல்லாமல் கம்பனின் கருத்தும் அதுதான் என்பது அவர் எழுதிய நூலிலேயே மற்றோர் இடத்தில் நாம் காணக் கிடைக்கிறது.

அவரது ஆற்றுப்படலம் முதல் பாடலிலேயே 

“ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண்ணெணும்
பூசலம்பு நெறியின் புறஞ்செலா
கோசலம்..........” 

என்று கோசல நாட்டில் ஆடவரும் அவர் வழி நின்ற பெண்டிரும் கற்பு நிலை தவறாது இருந்த பெருமையை கம்பன் எடுத்துக் காட்டும் காவிய நடையிலிருந்து நாம் நன்கு அறிய முடியும். ஆதலினால் தான் கோசிகனும் இராம, இலக்குவர்களை அறிவூட்டி வித்தைப் பயில்வித்து வளர்த்தவன் வசிட்டன்காண் என்று உறுதியாகச் சொல்கிறான். வசிட்டனின் குணநலன்கள்தான் அவன்பால் கல்வி கற்ற அந்த அரசக்குமாரர்களுக்கும் இருக்கும். பெற்றோனாகிய தசரதனின் குணபேதங்கள் எதுவும் அவர்கள் பால் இராது என்று சனகனை தெளிவுறுத்தும் வண்ணம் அவ்வாறு கோசிகன் கூறினான் என்று நாம் கொள்ளல் வேண்டும்.

கோசிகனின் சொற்களால் மனத் தெளிவடைந்த பின்னர் அந்த தாசரதியையே தனது மருமகனாகக் கொண்ட சனகனின் உள்ளத் தெளிவிற்கு கோசிகனின் குறிப்புணர்த்தும் வல்லமை தான் காரணம் என்று நாம் இப்பாடலின் மூலம் நன்கு அறிகிறோம்.

“திறையோடு மரசிறைஞ்சுஞ்செறி த ழற்காற்றெசரதனாம் 
பொறையோடுத் தொடர் மனத்தான் புதல்வரெனும் பெயரேகாண்
உறையோடு நெடு வேலாயுபநயன விதி முடித்து
மறையோடு வித்திவரை வளர்த்தானும் வசிட்டன்காண்”

இந்தச் சிறிய பாடலை - நான்கு அடிகளே கொண்ட நல்லதொரு நளினப் பாடலை நமக்குப் பரிந்தளித்து நம்மைப் பரவசமூட்டும் கம்பனின் கவிநயம் யாவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக