செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 2 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

குழந்தை வளர்க்கும்போது கவனிக்க வேண்டியவை…


பொதுவாக நாம் “வாழ்வியல் வேறு, ஆன்மீகம் வேறு” என்று கருதுகிறோம்.


ஆன்மீகத்திலிருந்து மாறுபட்டதாக வாழ்வியலைக் கருதாதீர்கள். வாழ்வியலுக்கு புறம்பானதாக ஆன்மீகத்தைக் கருதாதீர்கள்.


வாழ்வியலின் ஒரு பகுதியாக ஆன்மீகம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் - சில ஆசார அனுஷ்டானங்களைக் கூட தினசரி வாழ்வியலில் இணைத்து வைத்தார்கள்.


உதாரணத்திற்கு ஒன்று :


அன்றைக்குத் தனக்குரிய சாப்பாட்டுத் தட்டையும், குடிப்பதற்கான குவளையையும் பிரயாணத்தின் போது எடுத்துச் சென்றார்கள். அதை “ஆசாரம்” என்று கூறிச் சிரித்தோம்.


இன்றைக்குத் தண்ணீர் சரியாக இல்லை என்று, பாட்டில்களில் (5 லிட்டர், 10 லிட்டர்) - ஏன் கேன்களில் கூடக் கொண்டு செல்கிறோம்.


ஹோட்டல்களில் சாப்பிடுவது - கல்யாண வீடுகளில் சாப்பிடுவது ஆசாரக் குறைவு என்று அன்று சொல்லியதை “சுகாதாரக் குறைவு” என்று இன்று சொல்கிறோம்.


வார்த்தைகள் தான் வேறு தவிர, அர்த்தமும் நோக்கமும் ஒன்றுதான்.


பிரயாணங்கள் செய்து வீட்டுக்கு வந்தால், உடனே குளித்து விட்டு, மற்ற வேலைகள் தொடங்குவதை ஆசாரம் என்று பின்பற்றினார்கள்.


இன்றைக்கு அதுவே ஹைஜீனிக் (Hygenic) என்கிறோம்.


மேல் நாட்டுக்காரன் வெயிலுக்குத் தலைக்குத் தொப்பி போட்டுக் கொண்டான். நம் நாட்டுக்காரன் முண்டாசு கட்டிக் கொண்டான்.


இந்த ஆசார அனுஷ்டான விஷயங்களில்தான் எத்தனை நுட்பமான விஷயங்கள் உட் பொதிந்து வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

பாட்டன் கட்டிய கிணறு என்பதனால், பாழும் கிணற்றுத் தண்ணீரைக் குடிப்பது எவ்வளவு அறிவுக் கேடான விஷயமோ, அதைப் போலவே பாட்டன் கட்டினான் என்பதற்காக நல்ல தண்ணீரை விட்டு விட்டு சாக்கடைத் தண்ணீரைக் குடிப்பது கூட அறிவுக் கேடான விஷயம் தான்.


சில விஷயங்களுக்குக் காரணம் தெரியாமல் இருக்கலாம். முயன்றால் கண்டுபிடித்து விடலாம். நம்முடைய கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் பழைமை பழைமை என்று பேசி, பல ஆக்கபூர்வமான விஷயங்களை இழந்து விட்டோம். தொலைத்து விட்டோம்.


தொலைத்த பொருளைக் கண்டு பிடிப்பதற்கு ஒரே வழி தொலைத்த இடத்திலேயே தேடுவதுதான்!


இலக்கியங்கள் - பழம் பஞ்சாங்கங்கள் என்று தூக்கிப்போட்ட நாம் அதிலேயே ஊன்றித் தேடும் போது எத்தனையோ அபூர்வ விஷயங்கள் கிடைக்கும். இந்தக் கட்டுரையின் அடிப்படை நோக்கம், அதற்கான ஒரு தூண்டுதலை உண்டாக்குவதே தவிர வேறல்ல. இன்றைய நவீன உலகுக்கும் வாழ்வியலுக்கும் உரிய நல்ல விஷயங்கள் அதில் இல்லாமலில்லை என்று சொல்வதே நம் நோக்கம்.


குழந்தைகளைப் பற்றிய உளவியல் (Child Psychology) இன்றைக்கு மேல் நாட்டுச் சிந்தனையைப் போலப் பேசப்படுகிறது.


குழந்தைகள் நுட்பமான - மெல்லிய உணர்வு படைத்தவர்கள். இளம் பிராயத்தில் அவர்களைக் குறித்து பேசப்படும் சொற்களும் அவர்களைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளும் அவர்கள் மனதை ஆழப் பாதித்து விடுகின்றன.


அப்போதைக்கு அந்த உணர்வுகள் மறைந்திருந்தாலும் பின்னாளில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவைகள் வெளிப்பட்டு சமூக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.


குழந்தைகளை பிறர் முன்னே பாராட்டுங்கள். தவறு செய்தால் தனியாக அழைத்து இதமாகப் பேசி நல்வழிப்படுத்துங்கள். அதட்டிப் பேசி அவமானப் படுத்தாதீர்கள். தவறான வார்த்தைகளால் குத்திப் பேசாதீர்கள். பிற்காலத்தில் அதுவே தீராத மன நோயாக அவர்களிடம் வேலை காட்டி விடும்.


ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், மறந்து போய் கூட பிறர் முன்னால் உங்கள் குழந்தைகளை மட்டம் தட்டிப் பேசாதீர்கள்.


மறந்து போய்கூட என்கிற வார்த்தை முக்கியம். நம்மை அறியாமல் கூட நம் வாயிலிருந்து வந்து விடும். வரக்கூடாது. இந்தக் குழந்தைகளின் மன நிலையைப் பற்றி, ஏதோ இங்கிலாந்து நாட்டு அறிஞரோ அல்லது அமெரிக்க அறிஞரோ சொன்னதல்ல.


பெரியாழ்வார் சொன்னது. பாடலைப் பார்ப்போமா! 


கறந்த நற்பாலும் தயிரும் கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய் 
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே 
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே 
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனமாட நீ வாராய்! 


கண்ணா, வந்து நீராட வேண்டும்! கறந்த பால் தயிர் வெண்ணெய் எல்லாம் உனக்காகவே உள்ளது. உனக்கு மீறியது தான் எங்களுக்கு. பல குறும்புகள் நீ செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஆனாலும் கூட மறந்தும் பிறர் முன்னால் உன்னை மட்டம் தட்டி பேச மாட்டேன் கண்ணா! வா! வந்து நீராடு.


பெருமாள் கோயிலில் புருஷ சூக்தம் நாராயண சூக்தம் சேவித்த பின் இந்த நீராட்ட பாசுரம் சேவிப்பதைக் கேட்டிருப்பீர்கள். அதில் குழந்தையை வளர்க்கும் போது நாம் நடந்துக் கொள்ள வேண்டிய செய்தியை பெரியாழ்வார் இவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பதை கவனத்திருக்கிறீர்களா?


வாழ்க்கை நெறிகள் வளரும்... 


நன்றி - சப்தகிரி பிப்ரவரி 2018


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக