20 ஸ்லோகங்கள்
இந்த யதிராச விம்ஶதி இருபதே ஸ்லோகங்களே உள்ளதானாலும், இதில் யதிராசருடைய பெருமையையும், ரஹஸ்யத்ரயத்தின் பெருமையும் சொல்லியிருப்பதாலே ஆழ்ந்த கருத்துக்களுள்ள பிரபந்தம் ஆகும். இதற்கு இரண்டு, மூன்று ஆசார்யர்கள் வியாக்கியானம் எழுதியுள்ளனர். முதலில் அனைத்துக்கும் வியாக்யானம் எழுதிய பிள்ளைலோகம் ஜீயர் இதற்கு உரை எழுதியுள்ளார். ஸுத்த ஸத்துவம் தொட்டையாசார்யர் ஸ்வாமி வியாக்யானம் செய்துள்ளார். திருமழிசை அண்ணா அப்பங்கார் ஸ்வாமி ஒரு உரை எழுதியுள்ளார். இன்னும் சின்னச் சின்னதாக பல மஹாசாரியர்கள் உரைகள் தந்தருளியுள்ளனர். இதுவரை அவதாரிகை பார்த்தோம். முன்னுரை என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.
இனி இந்த பிரபந்தத்தில் ஸ்வாமி என்ன ஸாதித்துள்ளார் என்பதைப் பார்ப்போம். 20 ஸ்லோகங்கள். எளியதான அர்த்தம். ஆனால் அதை அநுஷ்டானத்துக்குக் கொண்டுவந்துவிட்டோமானால் கிடைக்கப் போவது பெறும் பேறு.
தனியன் – எழுதியவர் எறும்பியப்பா
முதலில் இந்த இருபது ஸ்லோகங்களைப் பாடிய ஸ்ரீ மணவாள மாமுனி எனும் ஆசிரியரை வணங்க வேண்டும். இந்தப் பிரபந்தத்தின் தனியன்: இந்த தனியன் எழுதியவர் எறும்பியப்பா (14 – 15 வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழசிம்மபுரத்திற்கு அருகில் உள்ள ஊர் எறும்பி. அந்த ஊரில் பிறந்ததால் அவர் பெயர் எறும்பியப்பா ஆனது. மணவாள மாமுனிகளின் பிரதான சிஷ்யர்களாய் இருந்தவர்களை அஷ்ட திக்கஜங்கள் என்பர். பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகள், வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர், திருவரங்கம் கோயில் அண்ணன், திருவேங்கட ஜீயர், பட்டர்பிரான் ஜீயர் போன்றோர் அதில் அடங்குவர். அதில் ஒருவர்தான் எறும்பியப்பா.
இவர் “வரவரமுனி ஸதகம்” என்ற பிரபந்தத்தை மணவாளமாமுனியின் பெருமையைச் சொல்வதற்காக அருளியுள்ளார். மணவாள மாமுனிகள் தினசரி காலையிலிருந்து இரவு வரை என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கு இரண்டு பிரபந்தகள் பாடியுள்ளார். ஒன்று பூர்வ தினசரியா மற்றொன்று உத்தர தினசரியா. இரண்டையுமே நாம் தினசரி அனுசந்திக்க வேண்டும். தினசரியா என்றால் ஒரு நாளில் நாம் செய்ய வேண்டிய கடமைகள். மணவாள மாமுனிகள் பகல் பொழுதில் என்ன செய்வார் என்பதற்கு பூர்வதினசரியாவும் மதியம் என்ன செய்வார் என்பதற்கு உத்தர தினசரியாவும் எழுதியுள்ளார். ததியாராதனம் வைக்கும் போது பரிஶேஷணம் செய்வதற்கு முன் இந்த பூர்வதினசரியா, உத்தரதினசரியா சொல்லிவிட்டுத் தான் சாப்பிடவே ஆரம்பிப்பார்கள்.
முதலில் தனியனைப் பார்ப்போம்:
ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜவிம்ஶதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||
பதவுரை:- ய: – யாவரொருவர், யதிபதி ப்ரஸாதிநீம் – யதிராஜரான எம்பெருமானாரை அருள் செய்யும்படி பண்ணுவதான யதிராஜவிம்ஶதி – அந்த யதிராஜர் விஷயமான இருபது ச்லோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஶதி என்னும் பெயருடையதாகிய, (ஒவ்வொரு ஸ்லோகத்திலும் யதிராசருடைய நாமம் வந்துகொண்டே இருக்கும் ஆகவே இதற்கு யதிராஜவிம்ஶதி என்று பெயர்.
ராமானுஜ நூற்றந்தாதி என்று ஏன் பெயர். ஒவ்வொரு பாசுரத்திலும் ராமாநுஜ என்ற திருநாமம் வந்துகொண்டே இருக்கும். யதிரஜருக்குப் பல திருநாமம் இருந்தும் இந்த ஒரு ராமாநுஜ என்ற திருநாமத்தின் பெருமையைச் சொல்லவே 108 பாசுரம் காணவில்லையே என்பது கருத்து.
யதி - ப்ரஹ்மத்தை அடைவதற்கு யத்தனம் செய்து கொண்டிருப்பவர் யதியாகும், ப்ரஹ்மத்தை தவிர உலகவிஷயத்தில் வைராக்யம் உடையவர் யதி. யதிகளுக்கு அரசரானதால் யதிராஜர். (குறிப்பு: நாமும் பிரஹ்மத்தையே அடைவதற்கு முயற்சி செய்பவராய் இருந்தால் நாமும் யதிதான்)
ஸ்துதிம் வ்யாஜஹார - ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தாரோ
ப்ரபந்நஜந சாதக அம்புதம் – ப்ரபந்ந ஜநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேகம் போன்றவரான
தம்ஸௌம்யவர யோகிபுங்கவம் – அந்த அழகிய மணவாளரென்னும் பெயர் கொண்ட முனிஸ்ரேஷ்டரை (அழகியமணவாள மாமுனிகளை)
நௌமி – துதிசெய்கிறேன்.
இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது. யதிபதி ப்ரஸாதிநீ – இந்த யதிராஜ விம்ஶதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்திப்பவர்கள் விஷயத்தில் யதிபதியான எம்பெருமானாரை அருள் செய்தல்லாது நிற்கவொண்ணாதபடி பண்ணவல்லதென்றபடி. ப்ரபந்நஜநசாதக அம்புத: – சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப்பொழியுமதான மேகம் போன்றவர். மோக்ஷமளித்து உயிர்காக்கும் எம்பெருமானார் என்பது இதன் கருத்து . யோகி புங்கவ: – முனிவர் பெருமான் – மஹாமுனிகள்.
சாதகப் பறவை என்பது நேரடியாக மழைநீரை மட்டுமே அருந்தும். அதற்காகவே காத்துக் கிடக்கும். அதுபோல ப்ரபன்னர்களும் பகவானையே நோக்கியிருப்பர்.
என்நான் செய்கேன்? யாரே களைகண்? எனைஎன் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறைவேண்டேன்;
கன்னார் மதின்சூழ் குடந்தைக் கிடந்தாய்! அடியேன் அருவாழ்நாள்
சென்னாள் எந்நாள்? அந்நாள் உனதாள் பிடித்தே செலக்காணே.
இது திருக்குடந்தை ஆராவமுதாழ்வானைப் பற்றிய நம்மாழ்வாரின் பாசுரம். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போவதில்லை. பிறத்தியார் யாரும் ரக்ஷிக்கப் போவதில்லை. நீதான் என்னை ரக்ஷிக்கவேணும் என்னை மற்றவரிடம் காட்டிக் கொடுத்துவிடாதே. நீயே தான் ரக்ஷிக்கவேணும் என்று காத்திருக்கிறார் அல்லவா அதுதான் சாதகப் பறவையின் தன்மை.
மழை நீருக்காகவே காத்திருக்கும் சாதகப் பறவைபோல பகவானையே நோக்கியிருத்தல் ப்ரபன்னர்களின் பாங்கு. ப்ரபன்னர்களுக்கு மேகமாக இருக்கிறவர் மணவாள மாமுனிகள்.
உடையவரின் திருவடியில் அதீத ப்ராவண்யம் வேண்டும். அதுதான் நாம் உய்வதற்கு ஒரே வழி என்று மணவாளமாமுனி தன் ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளை சொல்லிக் கொடுத்ததை இங்கு சொல்லியுள்ளார். பகவானிடம் சரணாகதியா, ஆசார்யரிடத்தில் சரணாகதியா என்று கேட்டால் ஆசார்யரிடம் சரணாகதி செய்வதே சிறந்தது என்கிறார். பகவானிடம் நேரடியாக சரணாகதி அநுஷ்டித்தால் மோக்ஷம் கொடுக்கவேணும் என்ற நிர்பந்தமே பகவானுக்கு இல்லை..
உபதேச ரத்தினமாலையில் மணவாள மாமுனிகள்
தன்குருவின் தாளிணைகள் தன்னில் அன்பொன்றில்லாதார்*
அன்புதன்பால் செய்தாலும் அம்புயைகோன்* இன்பமிகு
விண்ணாடு தானளிக்கவேண்டியிரான்* ஆதலால்
நண்ணாரவர்கள் திருநாடு.
இதுவும் ராமானுஜப் பிரபாவம் சொல்லவந்த பிரபந்தம் தான்.
ஆசார்யரிடம் அன்பில்லாமலோ, கைங்கர்யங்களோ செய்யாமலோ நேரே பெருமாளிடம் போனால் அவர் இவனைத் திரும்பிகூடப் பார்க்க மாட்டார். ஆசார்யர் யார் என்று தெரியாதவர்கள் கூட இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்கள். பகவானிடம் நேரே போனால் ஒரு ஆபத்து உள்ளது. கண்டாகர்ணனோ, ராவணனோ, சிசுபாலனையோ, தந்தவக்ரனையோ அவர் பார்த்துத்தான் ஆகவேண்டும். அப்பொழுது நாமும் போய் நின்றால் எப்படியிருக்கும், ஜாடை அதே போலத்தான் இருக்கும். ராவணன் தான் வந்துவிட்டான் என்று அம்பை விட்டுவிட்டார் என்றால் என்ன ஆகும். அதனால் அவரிடம் நேரே போகாமல் பாகவதோத்தமர்களான ஆசார்யனிடம் போனோமானால், அங்கு ராவணனோ குமபகர்ணனோ இருக்கமாட்டார்கள்.
ஆசார்யரிடம் அன்பு செலுத்தினோமானால், நம்மை அவர் பகவானுக்குச் சிபாரிசு செய்வார். காட்டிக் கொடுப்பார். ஆசார்யர்கூட சென்றோமானாலோ, எதுவும் கேட்காமல் உள்ளே விடுவார்கள் அல்லவா? திருப்பதியில் சாத்துமுறைக்குச் செல்கிறோம். அப்பொழுது ஆசார்யரோடு சென்றோமானால் விட்டுவிடுகிறார்கள் அல்லவா? அந்த ராமானுஜர் திருவடிதான் உய்வதற்கு ஒரே வழி என்று காட்டிய மணவாளமாமுனிகளின் திருவடிகளில் வணங்குகிறேன். இதற்காகத் தான் மணவாள மாமுனிகள் இந்த பிரபந்தத்தைப் பாடியுள்ளார்.
அவதாரிகை
‘தொண்டர்க்கு அமுதுண்ண சொல்மாலைகள் சொன்னேன்’ என்கிறபடியே பூதுரர்களான பரம ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு போக்யமாய் இருந்தது திருவாய்மொழி. அமுதமாய் இருக்கும் திருவாய்மொழி. சொற்சுவை நன்றாக இருக்கிறது. பொருட்சுவை நன்றாக இருக்கிறது. பாவம் நன்றாக உள்ளது. இந்த மூன்றையும் நன்றாகத் தெரிந்து கொண்டார் மணவாளமாமுனிகள். அதை எல்லோரிடத்திலும் காலக்ஷேபம் மூலம் உபதேசம் பண்ண ஆரம்பித்துவிட்டார். ஸ்ரீரங்கத்திலே அரங்கன் கோயிலிலே பெரிய பெருமாள் சன்னதிக்கு நேராக உள்ள சந்தன மண்டபத்தில் ஓராண்டு காலம் திருவாய்மொழி காலக்ஷேபம் ஸாதித்து அருளினார் பெரிய ஜீயர். நம்பெருமாளுக்கும் இதைக் கேட்கவேண்டும் என்று ஆசை. அதனால் உத்ஸவத்தை எல்லாம் பெருமாள் நிறுத்திவிட்டு மணவாள மாமுனிகளின் காலக்ஷேபத்தைக் செவி ஸாதித்து அருளினார். கடைசி நாள் சாத்துமுறை ஆகப்போகிறது.
சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய பரநன்மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞானவின்பமேயோ*
சூழ்ந்ததனில் பெரிய என்னவாவறச் சூழ்ந்தாயே. திருவாய் 10-10-10
அவாவறச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி*
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன*
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும்* முடிந்த
அவாவிலந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே. திருவாய் 10-10-11
கடைசிப் பாசுர வியாக்யானத்தைச் சொல்லி முடிக்கிறார் மணவாள மாமுனிகள். அப்பொழுது அர்ச்சகருடைய ஐந்து வயதுள்ள ரங்கநாயகம் என்ற குழந்தை வடிவத்தில் பகவானே எழுந்தருளி இப்பேர்பட்ட ஆசார்யனுக்கு நாம் ஒரு தனியன் சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆசைகொண்டு மணவாள மாமுனிகளின் பிரபாவத்தை எடுத்து உரைக்கிறார்.
“ஸ்ரீஶைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம்” என்ற தனியனை சம்ர்ப்பித்து உள்ளார்.
“ஸ்ரீஶைலேசர் என்ற திருவாய்மொழிப் பிள்ளையினுடைய தயையைப் பெற்றவராய், ஞானம், பக்தி ஆகியவை நிரம்பிய கடலாய், ராமானுஜரிடம் பக்தியே உருவானவராய், இருக்கும் அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்” என்று திருவரங்கநாதனே ஸமர்ப்பித்தார்.
எல்லாக் கோயில்களிலும் சேவிக்கும் பொழுது ராமானுஜரையும், மணவாள மாமுனிகளையும் சேவித்து இருப்போம். இருவருமே ஆதிஶேஷன் அவதாரம்தான். ஆனால் மணவாள மாமுனிகள் மட்டும் ஆதிஶேஷ பீடத்தில் அமர்ந்திருப்பதை சேவித்து இருப்போம். ஏன் மணவாள மாமுனிகளுக்கு மட்டும் இந்த பீடம். ஏனெனில் ஸ்ரீ ரங்கநாதர் தனியன் சொல்லும்போது தன்னுடைய ஆதிஶேஷனை அவருக்கு ஆசார்ய தக்ஷணையாக ஸமர்ப்பித்தார். அதனாலேயே மாமுனிகளுக்கு ஆதிஶேஷ பீடம்.
ஆழ்வார்திருநகரியிலும், ஸ்ரீரங்கத்திலும் இவரது திருமேனி மிகவும் சிறிய விக்ரஹத்தில்தான் அமைந்துள்ளது. இவருக்கு ஐப்பசி மூல நக்ஷத்திரத்தின் சமயம் உற்சவம் நடக்கும். ஆனால் புறப்பாடு கிடையாது.
ராமானுஜர் நடந்த திருவீதிகளில் நமக்கு உற்சவ புறப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் மாமுனிகள். அவ்வளவு ஒரு பிரேமம் யதிராஜரிடம். அந்த பக்தியோடு ஸ்வாமி இருந்ததனால்தான் வைபவங்கள் எல்லாம் கோவிலுக்குள்தான்.
ஸ்ரீரங்கம் நன்றாக வாழ்ந்துவருகிறது என்றாலே அது மணவாளமாமுனிகளின் அநுக்ரஹத்தாலே என்று எறும்பியப்பா ஸாதிக்கிறார். வரவரமுனி ஸதகம் என்று ஒரு பிரபந்தம் எறும்பியப்பா பாடியுள்ளார். அதில் ஒரு ஸ்லோகம்:
ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்கலானி ||
ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும். அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும். ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்கலங்களைச் செய்துகொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.
பெரிய ஜீயரின் சிஷ்யர்கள் அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான பிரதிவாதி பயங்கரம் அண்ணா அவர்கள் ஒரு ஸ்லோகத்தில் “திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் யாரென்றால், நம் மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் எப்பொழுதும் விட்டு விலகாமல் எழுந்தருளியிருப்பவர்” என்று ஸாதித்துள்ளார். அப்படிப்பட்ட மாமுனிகள் ஸ்ரீராமனுஜரைப் பற்றிப் பாடியது இந்த அற்புதமான “யதிராஜ விம்ஶதி” என்ற ஸ்லோகமாகும்.
திருவாய்மொழிப்பிள்ளை சொல்லிகொடுத்த அர்த்தம் பகவான் திருவடியினை பற்றுவது உபாயம் என்று இருக்கட்டும். ஸ்ரீராமானுஜரின் திருவடியைப் பற்றுவதே உபாயம். அந்த நாளில் ஒவ்வொர் ஆசார்யரும் சொல்வார்களாம். ராமானுஜருக்கு நேர் சிஷ்யன் கூராத்தாழ்வான். கூரத்தாழ்வான் தன் சிஷ்யர்களிடம் சொல்வாராம், “ஏதோ பெரிய சாஸ்த்ரஜ்ஞரை பற்றியிருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். உங்களையெல்லாம் எங்களிடம் அனுப்பியது ஏதோ குருவி தலையில் பனங்காயை கட்டியது போலாகும். எல்லோரும் ராமானுஜருடைய திருவடியையே பற்றுங்கள். அதுவே உங்களை சம்ஸாரக் கட்டிலிருந்து விடுவிக்கும்” என்று. இதேபோலத்தான் எல்லா ஆசார்யர்களும் ராமானுஜரையே பற்றுங்கள் என்பர். அதையேதான் இப்பொழுது திருவாய்மொழிப்பிள்ளையும் தன் சிஷ்யரான மணவாள மாமுனிக்கும் நேரே ராமானுஜரின் திருவடியையே பற்று என்று சொல்லிக்கொடுக்க, அதனால் தன் ஆசார்யனைப் பாடாமல் ஆசார்யனுக்கு, ஆசார்யனுக்கு, மேலே உள்ள ஆசார்யரான ராமானுஜரைப் பாடுகிறார்.
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772
நன்றிகள் ஸ்வாமி.