திங்கள், 13 ஏப்ரல், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 110


ஐந்தாவது ஸ்கந்தம் – இரண்டாம் அத்தியாயம்

(ஆக்னீத்ரனுடைய வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இங்கனம் தந்தையாகிய ப்ரியவ்ரதன் மோக்ஷம் அடைகையில், அவனுடைய ஆஜ்ஞையில் நிலைநின்றிருக்கிற ஆக்னீத்ரன் தர்மத்தில் கண்வைத்து ஜம்பூத்வீபத்திலுள்ள ப்ரஜைகளைத் தன் புதல்வர்களைப் போல் பாதுகாத்து வந்தான். அவன் தனக்கு ஸத்புத்திரன் வேண்டும் என்று விரும்பி மந்திர மலையின் அடிவாரத்தில் பூஜைக்கு வேண்டிய வஸ்துக்களையெல்லாம் ஸித்தப்படுத்திக்கொண்டு (தயார்படுத்திக்கொண்டு) மனவூக்கமாகிற தவத்தினால் ப்ரஹ்மதேவனை ஆராதித்தான். ப்ரஹ்மதேவனும் அதை அறிந்து தன் ஸபையில் பாடுகின்ற பூர்வசித்தியென்னும் அப்ஸர மடந்தையை அவனுடைய இஷ்டத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்பினான். அவளும் அம்மன்னவனுடைய ஆச்ரமத்திற்கு அருகாமையில் வந்து உலாவிக்கொண்டிருந்தாள். அவ்வாச்ரமம் பல வ்ருக்ஷங்கள் (மரங்கள்) அடர்ந்து அவற்றின் கிளைகளில் அழகிய பொற்கொடிகள் பிணைந்து ரமணீயமாயிருந்தது. அக்கொடிகளில் மயில் முதலிய நிலப் பறவைகள் இணையிணையாய்க் கலந்து ஷட்ஜ முதலிய ஸ்வரங்களைக் (நிஷாத, ரிஷப, காந்தார, ஷட்ஜ, மத்யம, தைவத, பஞ்சம என்கிற ஏழு ஸ்வரங்கள் நம்முடைய மூக்கு, தொண்டை, மார்பு, மேல்வாய், நாக்கு, பல் என்கிற ஆறு உறுப்புக்களிலிருந்து கிளம்புவதால் ஷட்ஜ என்று அழைக்கப்படுகின்றன; ஷட்ஜ என்றால் ஆறு இடங்களிலிருந்து தோன்றியவை என்று பொருள்)  கூவிக்கொண்டிருந்தன. அங்குள்ள மடுக்களிலும் தாமரையோடைகளிலும் நீர்க்கோழி, நீர்க்காகம், கொக்கு, கலஹம்ஸம் முதலிய நீர்ப்பறவைகள் அந்நிலப் பறவைகளின் ஸ்வரங்களைக் கேட்டுவிழித்து விசித்ரமாய் ஒலித்துக்கொண்டிருந்தன. இப்படிப்பட்ட ஆச்ரமத்தினருகில் மிகவும் அழகாக அடியிட்டு விலாஸத்துடன் (ப்ரகாசத்துடன் ஒய்யாரமாய்) நடக்கிற அந்த அப்ஸர மடந்தையின் பாதங்களில் அடிக்கடி ஒலிக்கின்ற சிலம்புத்தண்டைகளின் சப்தத்தை அந்த ராஜகுமாரன் கேட்டு ஸமாதி யோகத்தினால் மூடப்பட்ட கண் கமலத்தைச் சிறிது விழித்துப்பார்த்தான். அருகில் பெண் வண்டுபோல் புஷ்பத்தை மோந்துகொண்டு தேவதையென்றும் மனுஷ்யனென்றும் பேதமின்றி அனைவருடைய மனங்களையும் கண்களையும் ஆநந்த ஸாகரத்தில் ஆழ்த்தவல்ல அங்கங்களாலும் ஸமஸ்த ப்ராணிகளுடைய மனத்திலும் மன்மதனுக்கு நுழைய இடங்கொடுக்கும் திறமை அமைந்து, அம்ருதம்போல் இனியதும் மத்யம்போல் (கள் போன்று) மதிமயக்கத்தை விளைப்பதுமான புன்னகையோடு கூடின பேச்சைப் பேசும்பொழுது வெளியாகின்ற மூச்சின் வாஸனையை மோந்து மதிமயங்கி மேல்விழுகின்ற வண்டுகளின் உபத்ரவத்தினால் (தொந்தரவினால்) விரைந்து அடியிட்டுச் செல்லுகையால் அழகாய் அசைகின்ற கொங்கைகளும் குழற்கற்றையும் அரைநாண் மாலையுமுடைய அந்த அப்ஸர மடந்தையை அம்மன்னவன் பார்த்துக்கொண்டிருக்கையில் மன்மதன் இது ஸமயமென்று நுழைந்து அவனைத் தன்வசமாக்கினான். அங்கனம் காமனுக்காளான அவ்வரசன் ஸ்த்ரீகளை என்றுமறியாதவன் போல் அம்மடந்தையை நோக்கி இங்கனம் மொழிந்தான்.

மன்னன் கூறினான்:- “முனிவர்களில் சிறந்தவனே! நீயார்? இம்மலையில் என் செய்ய விரும்புகின்றாய்? நீ பரதேவதையான பகவானுடைய மாயையாய்த் தோற்றுகின்றாய். நாணில்லாத இரண்டு தனுஸ்ஸுக்களைத் தரிக்கின்றாயே (புருவங்களைப் பார்த்துச் சொல்லுகிறான்) இதுவென்? உனது நண்பனாகிய என்னைப் போன்றவனுக்காவது உனக்காவது இவற்றால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் ஏதேனும் உண்டா? அல்லது அரண்யத்தில் மனவூக்கமற்றிருக்கிற மான்களை அடிக்கத் தேடுகின்றனையா?, இதோ புலப்படுகிற உனது பாணங்கள் தாமரையிதழ்களையே இறகுகளாகப் பெற்று ஓய்ந்தாற் போலிருக்கின்றன (கடைக்கண்ணோக்கத்தைச் சொல்லுகிறான்). அவை பிடியில்லாதவையாயினும் அழகாயிருக்கின்றன.” மிகவும் கூரான நுனியுடையவை. இவ்வனத்தில் உலாவுகின்ற நீ இப்பாணங்களை எவர்மேல் தொடுக்க விரும்புகின்றாயோ, தெரியவில்லை. ஆகையால் நாங்கள் பயந்து உன்னை வேண்டுகிறோம். உன்னுடைய இப்பராக்ரமம் மூடபுத்திகளான எங்களுக்கு க்ஷேமத்தை விளைக்குமாக. உன் சிஷ்யர்கள் இதோ நாற்புறத்திலும் உன்னைத் தொடர்ந்து ரஹஸ்யத்தோடு கூடின ஸாமவேதத்தைப் படிக்கின்றார்கள் (வண்டுகளைச் சிஷ்யர்களாகவும், அவற்றின் த்வனியை ஸாமவேதமாகவும் சொல்லுகிறான்). ப்ரபூ! ரிஷிகள் வேதசாகைகளைப் பற்றுவது போல், உன் குழற்கற்றையினின்று (கூந்தலிலிருந்து) நழுவின புஷ்ப வர்ஷங்களை உன் சிஷ்யர்கள் பற்றுகிறார்கள். உன் பாதங்களிலுள்ள கூடுகளில் விளங்குகிற இத்தித்திரிப் பறவைகளின் ஒலியை மாத்ரம் கேட்கின்றோம் (சிலம்புத் தண்டைகளையும் அவற்றிலுள்ள ரத்னங்களையும் அவற்றின் ஒளியையும் சொல்லுகிறான்). அங்கனம் ஒலிக்கின்ற பறவைகள் மாத்ரம் புலப்படவில்லை. உன் அரையிலும் (இடுப்பிலும்) நிதம்பத்திலும் (முதுகுக்கும் இடுப்புக்கும் கீழுள்ள உடம்பின் பகுதி) கடம்பப் பூவின் ஒளி திகழ்கின்றது (அரையிலுள்ள ஆடையைச் சொல்லுகிறான்). இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? அவ்வொளியின்மேல் கொள்ளிக்கட்டையின் வட்டம் புலப்படுகின்றது (அரைநாண் மாலையைச் சொல்லுகிறான்). உன் மரவுரி எங்கே? அந்தணனே! உன் மார்பில் இரண்டு கொம்புகள் அழகாயிருக்கின்றன (கொங்கைகளைச் சொல்லுகிறான்). இவற்றுள் என்ன நிறைத்திருக்கின்றாய்? ஏதோ ஒரு இனிய வஸ்து இருக்கவேண்டுமென்று தெரிகின்றது. ஆனால் அது இன்னதென்று தெரியவில்லை. நீ இடையில் இளைத்திருக்கின்றாய். ஆயினும் வருத்தத்துடன் இவ்விரண்டு கொம்புகளை ஏந்திக்கொண்டிருக்கின்றாய். மற்றும், இவற்றில் என் கண்கள் பற்றியிருக்கின்றன. உன் கொம்புகளில் சிவந்த சேற்றை இங்கனம் பூசியிருக்கின்றாய் (குங்குமக் குழம்பைச் சேறென்கிறான்). அழகனே! இதனால் எனது ஆச்ரமம் முழுவதும் நன்மணம் வீசும்படி செய்கின்றாய்? எனது சிறந்த நண்பனே! உனது இருப்பிடத்தை எனக்குக் காட்டுவாயாக. அவ்விடத்திலிருக்கும் ஜனங்கள் என்னைப் போன்றவருடைய மனத்தைக் கலக்கும்படி ஆச்சர்யமான இத்தகைய அவயவங்களை மார்பினால் தரித்துக் கொண்டிருப்பார்களல்லவா? மற்றும், இனிய உரையோடும் விலாஸங்களோடும் கூடி மிகவும் அற்புதமான அம்ருதம் முதலியதும் அவரது வாயில் கிடைக்குமல்லவா? உன்னுடைய லோகத்தில் தேஹத்தை வளர்க்கும்படியான ஆஹாரம் யாது?

நண்பனே! நீ ஆஹாரம் புசிக்காமலே ஜீவிப்பதுபோல் தோற்றுகிறது. நீ விஷ்ணுவின் அம்சமாயிருக்கின்றாய். நீ விஷ்ணுவைப் போல் காதுகளில் மகரகுண்டலங்களை அணிந்திருக்கின்றாய். அசைகின்ற கண்களாகிற இரண்டு மீன்களும் பற்களின் வரிசையாகிற பக்ஷிகளின் (பறவைகளின்) வரிசையும் தொங்குகின்ற முன் நெற்றி மயிர்களாகிற வண்டினங்களும் அமைந்த உன் முகம் தாமரையோடைபோல் திகழ்கின்றது. உன் தாமரைக் கையினால் அடியுண்ட இப்பந்து நாற்றிசைகளிலும் சுழன்று மதிமயங்கி என் கண்களை அலையச் செய்கின்றது. உன்நெற்றியில் ஜடைகளின் பாரம் அவிழ்ந்து அலைவதை நீ நினையாது இருக்கின்றாயே? துஷ்டத்தனமுடைய இக்காற்று மனவிருப்பங் கொண்டு உன் அரையாடையின் முடிச்சை அவிழ்க்கின்றதே. இதையும் நீ பாராதிருக்கின்றாயே? தவத்தையே தனமாகவுடையவனே! தவஞ்செய்கிறவர்களின் தவத்திற்கு விக்னம் (இடையூறு) செய்யும்படியான இவ்வுருவத்தை நீ எத்தவத்தினால் பெற்றாய்? நண்பனே! நீ என்னுடன் இங்குத் தவஞ்செய்வாயாக. உலகங்களையெல்லாம் படைப்பவனாகிய அந்த ப்ரஹ்மதேவன் என்னிடத்தில் அருள் புரிகின்றானோ? அந்தணனே! நீ ப்ரஹ்மதேவனால் எனக்குக் கொடுக்கப்பட்டாய். ஆகையால் உன்னை நான் விடமாட்டேன். எனக்கு நீ அன்பிற்கிடமாயிருக்கின்றாய். என் மனமும் கண்ணும் உன்னிடத்தில் படிந்து நீங்காதிருக்கின்றன. அழகான கொம்புடையவளே! உன் ஸ்வாதீனமான என்னை உன் மனவிருப்பத்தின்படி அழைத்துக் கொண்டு போகலாம். உன்னுடைய ஸகிகளும் அனுகூலராகி என்னை அனுவர்த்திப்பார்களாக” என்றான். 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இங்கனம் ஸ்த்ரீகளை நல்வார்த்தை சொல்லுவதில் மிகவும் ஸமர்த்தனாகிய அம்மன்னவன் மதிமயங்கி க்ராமயங்களில் திறமையை வெளியிடுகின்ற பேச்சுக்களை மொழிந்து அந்த அப்ஸர மடந்தையை வெகுமதித்துத் தனக்கு அனுகூலையாக்கிக் கொண்டான். அவளும் வீரக்கூட்டங்களின் தலைவனாகிய அந்த அக்னீதரனுடைய புத்தி, உருவம், சீலம், வித்யை, வயது, செல்வம், மேன்மை இவைகளைக் கண்டு மனம் பறிக்கப்பட்டு பற்பல ஆண்டுகள் அடங்கின, பலகாலம் வரையிலும் ஜம்பூத்வீபத்திற்கெல்லாம் நாதனாகிய அம்மன்னவனுடன் பூமியிலுள்ள போகங்களையும் ஸ்வர்க்கலோகத்துப் போகங்களையும் அனுபவித்தாள். அவளிடத்தில் அவ்வரசன் நாபி, கிம்புருஷன், ஹரிவர்ஷன், இலாவ்ருதன், ரம்யகன், ஹிரண்மயன், குரு, பத்ராஸ்வன், கேதுமாலன் என்னும் பேருடைய ஒன்பது பிள்ளைகளைப்பெற்றான். அவ்வப்ஸரமடந்தை வர்ஷம் ஒன்றுக்கு ஒரு பிள்ளையாக ஒன்பது பிள்ளைகளைப் பெற்று அம்மன்னவனுடைய வீட்டிலேயே விட்டு மீளவும் ப்ரஹ்மதேவனிடம் சென்றாள். அவ்வாக்னீத்ரனுடைய பிள்ளைகள் ஒன்பதின்மரும் மாதாவின் அனுக்ரஹத்தினால் இயற்கையாகவே தேஹ உறுதியும் பலமும் அமைந்து, தந்தையால் தமது நாமங்களையே இட்டுப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்ட ஜம்பூத்வீபத்தின் கண்டங்களைப் பெற்று அனுபவித்து வந்தார்கள். ஆக்னீத்ரன் காமபோகத்தில் த்ருப்தி உண்டாகப் பெறாமல் அவ்வப்ஸர மடந்தையையே மனத்தில் நினைத்து வேதோக்தமான (வேதத்தில் சொல்லப்பட்ட) கர்மங்களைச்  செய்து, எங்கு வந்தவனைப் பித்ருதேவதைகள் களிக்கச் செய்கின்றார்களோ அப்படிப்பட்ட அவளுடைய லோகத்தை அடைந்தான். தந்தை லோகாந்தரம் சென்றபின்பு அவன் பிள்ளைகளான ப்ராதாக்கள் ஒன்பதின்மரும் மேருதேவி, ப்ரதிரூபை, உதக்ரதம்ஷ்ட்ரி, லதை, ரம்யை, ஸ்யாமை, காரி, பத்ரை, தேவவீதி என்னும் பேருடைய மேருவின் பெண்கள் ஒன்பதின்மரையும் மணம்புரிந்தார்கள். 

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக