திங்கள், 13 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 1 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

மார்கழியில் துதிப்போம்! தையில் சிறப்போம்!!


மார்கழி திங்கள் - திருப்பாவையின் முதல் வரி. இந்த வரியில்தான் எத்தனை அர்த்தம். எத்தனை வாழ்வியல் செய்திகள். இந்த மாதத்திற்கு தனுர் மாதம் என்றொரு பெயர் உண்டு. பனிக்காலத்தில் உடம்பை வில்போல் வளைத்துக் கொண்டு தூங்குவார்கள். அப்படி வளைக்க வைக்கும் மாதம் மார்கழி மாதம்.


சமய சார்பில் - குறிப்பாக வைணவ மரபில் - இம்மாதத்தைத் “திருப்பாவை மாதம்” என்றே அழைப்பார்கள் காரணம் ஆண்டாள் அருளிய "திருப்பாவை".


உலகத்திலேயே மார்கழி என்று மாதத்தின் பெயரோடு துவங்கும் ஒரே நூல் திருப்பாவை தான்.
அதைப் போல அந்த நூலின் பெயரோடு அழைக்கப்படும் மாதமும் மார்கழி மாதம் தான்!


திருப்பாவை 30 பாசுரங்கள். நாளுக்கு ஒரு பாசுரமாகக் குறிப்பார்கள்.


வைணவர்கள் ஆண்டாளைப் போலவே இம்மாதம் முழுக்க - அடியார்களை எழுப்பி - குழுவாக - திருப்பாவைப் பாடல்களைப் பாடி வீதி வலம் வருவார்கள்.


கடிதம் எழுதும் போது கூட மார்கழி 1,2 என்று குறிப்பிட மாட்டார்கள். மாயனை என்று குறிப்பிடுவர்கள். சிற்றம் என்று குறிப்பிடுவார்கள்.


மாயனை என்பது திருப்பாவையின் ஐந்தாவது பாடல். மார்கழி மாதம் 5ம் தேதியைக் குறிப்பிடுகிறார்கள் என்று கொள்ள வேண்டும். சிற்றம் திருப்பாவையின் 29வது பாடல். மார்கழி 29ம் தேதி என்று கொள்ள வேண்டும்.


இப்படி வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த மாதம் “மார்கழி மாதம்”.


பராசர பட்டர் என்கிற மகானிடம் ஒருவர் போனார். “ஸ்வாமி! நான் இறையருள் பெற என்ன வழி?” என்று கேட்டார்.


“வேதம் படிக்க வேண்டும்!”


“என்னால் படிக்க முடியாதே! வட மொழி தெரியாதே!”


“தமிழ் தெரியுமா?”


"தெரியும்”


“அப்படியானால் ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரம் படி!”


“நாலாயிரமா? எப்படி முடியும்? வயிற்றுப் பாட்டுக்கு உழைத்து உண்பதற்கே நேரம் சரியாகப் போய்விடுகிறது! இதில் நாலாயிரம் எங்கே படிப்பது?”


“சரி! திருப்பாவை முப்பது பாசுரங்கள்தான். அதைப்படி!”


“முப்பதா! முடியாதே ஸ்வாமி!”


“சரி! திருப்பாவையின் கடைசி இரண்டு பாசுரங்களாவது படிக்கலாமே!”


“அது கூட சிரமம் தான்!”


“சரி! வேண்டாம்! திருப்பாவையைப் பாடி வலம் வரும் அடியார்களை வணங்கி அவர்கள் பாடும் சங்கத் தமிழ் மாலையைக் கேள்! இது முடியுமல்லவா!”


“முடியும்…” 


“இனி கவலைப்படாதே! உன் வாழ்வும் விடியும்!”


ஆம். மார்கழியில் பிறந்த கீதை தான் ஆண்டாளின் திருப்பாவை.


மார்கழி மாதத்திற்கு உள்ள சிறப்பு வேறு எந்த மாதத்திற்கும் கிடையாது.


மார்கழி என்றாலே “மார்க்கத்தைக் காட்டும் வழி” என்று பொருள். (மாஸானாம் மார்க சீர் ஷோதகம்)
தேவர்களின் விடியல் என்று போற்றப்படும் மார்கழி மாதம், “தனுர் மாத பூஜை” என்று சொல்லப்படும் மார்கழி நோன்புக்கு உரிய மாதமாகும்.


மார்கழியில் நோன்பிருந்து, போகியில் வேண்டாத பொருட்களையும், எண்ணங்களையும் கழித்து, தை முதல் நாளான மகர சங்கராந்தியில் ஒளி கொடுக்கும் சூரியனுக்குப் பொங்கலிட்டு, புது வழியில் வாழ்க்கையைத் துவங்கும் மரபு, காலம் காலமாக இருந்து வருகிறது.


மார்கழியில்தான் மகாபாரதப் போர் நடை பெற்றது. மகாபாரதப் போருக்கு முன்னுரையாக கண்ணனின் கீதை பிறந்ததும் மார்கழியில்தான்.


மார்கழியில் பிறந்த கீதை - மார்க்கத்தைக் காட்டும் வழியாக - சரணாகதி உபாயத்தைச் சொல்லுகின்றது.


“சர்வதர்மான் பரித்யஜ்ய” - எல்லாதர்மங்களையும் விடு. - இது கண்ணன் சொல்லும் வழி. (கீதை)


“எல்லாவற்றையும் என்பதில் அனைத்து தர்மங்களையும் விட்டு என்ற பொருள் மறைந்து இருக்கிறது.”


தீவினைகளை விட்டு விடலாம். நல் வினைகளை ஏன் விட வேண்டும் என்ற கேள்வி எழும்?
தீவினைகளைப் போலவே - நல்வினைகளின் பயன்களும் அனுபவித்தே கழிக்க வேண்டியிருக்கிறதே!


வரவேண்டிய கடனாக இருப்பினும் (நல்வினை) தர வேண்டிய கடனாக இருப்பினும் (தீவினை) - கடன் தீரும் வரை நமக்குப் பொறுப்பு இருக்கிறதே!


இந்தப் பொறுப்பை கிருஷ்ணரிடம் “கிருஷ்ணார்ப்பணம் ஸர்வம்” என்று ஒப்படைத்து விட்டால் எத்தனை நிம்மதி!


இந்த நிம்மதியைத் தரும் மாதம் தான் மார்கழி! மார்கழி முடிவில் தை பிறக்கிறது! தை பிறந்தால் வழிபிறக்கும் அல்லவா!


மகாபாரதப் போரில் பீஷ்மர் அடிபட்டு அம்புப் படுக்கையில் இருக்கிறார். உயிர் போகவில்லை! ஆத்ம சமர்ப்பணத்திற்காகக் காத்திருக்கிறார்.


எல்லோரும் சூழ்ந்து கொண்டு கேட்கிறார்கள். “இப்படித் துடித்து சரசயனம் கொள்ள வேண்டுமா? எதற்குக் காத்திருக்கிறீர்கள்?”


“என் ஆன்மா செல்ல வேண்டிய வழிக்காகக் காத்திருக்கிறேன்…”


“அந்த வழி எப்போது கிடைக்கும்?” 


“தை பிறந்தால் வழி பிறக்கும்!”


உத்தராயணபுண்ய காலமான மகர மாதம் (தை) பிறந்ததும் ஒளி வழி கிடைத்தது.


ஆம். உயர்ந்த வழி கிடைக்க வழி விடும் மாதம் மார்கழி! மார்கழியில் துதிப்போம்! தையில் சிறப்போம்!


வாழ்க்கை நெறிகள் தொடரும்....


நன்றி - சப்தகிரி ஜனவரி 2018


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக