திங்கள், 13 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி - 2 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

மாமுனிகள் ஆர்த்திப்ப்ரபந்தத்தில்,

“தேசந்திகழும் திருவாய்மொழிப்பிள்ளை* 
மாசில் திருமலையாழ்வார் என்னை* நேசத்தால் 
எப்படியே எண்ணி நின்பால் சேர்த்தார் எதிராசா* 
அப்படியே நீ செய்தருள்”  

என்கிறார். 

உலகமே கொண்டாடக் கூடிய திருவாய்மொழிப்பிள்ளை, மாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். மாசில்லாத திருமலையாழ்வார் (திருவாய்மொழிப்பிள்ளையின் மற்றொரு திருநாமம் திருமலையாழ்வார்) திருவாய்மொழிப்பிள்ளைக்கு நம்மாழ்வாரிடம் ஈடுபாடு அதிகம். நம்மாழ்வார்தானோ இவர் என்ற அளவுக்கு திகழ்ந்தார். ஆழ்வாருடைய திருவாய்மொழியை உலகத்தில் பிரச்சாரம் பண்ணுவதற்கென்றே திருமலையாழ்வார் அவதரித்தார். அவரது மற்றொரு பெயர் ஸ்ரீஶைலேஶர். திருவாய்மொழியில் இவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாட்டினால் இவருக்கு திருவாய்மொழிப்பிள்ளை என்று பெயர் வந்தது. 

ஒரு வாக்குறுதி

அந்த நாளில் ஸம்ஸ்க்ருதத்தில்தான் அவ்வளவு ஊற்றம் இருந்திருக்கும். ராமானுஜர் எழுதிய ஸ்ரீபாஷ்யத்தைத்தான் விடாமல் காலக்ஷேபம் செய்து வருவர். ஆனால் மணவாள மாமுனியின் கையைப் பிடித்துக் கொண்டு அவரது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை ஒரு வாக்குறுதி வாங்கிக் கொள்கிறார்., “நீர் உம் ஆயுள் காலத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே ஸ்ரீ பாஷ்யத்திற்கு காலக்ஷேபம் செய்யவேண்டும்.  நூற்றுக் கணக்கான முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்து கொண்டே இருக்கவேண்டும்”  என்று உறுதி வாங்கிக் கொள்கிறார். அப்படியென்றால் சம்ஸ்க்ருதத்தில் இருந்து அவரை தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கச் செய்துள்ளார். இப்படி தமிழுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பதை 600 – 700 வருடங்களுக்கு முன்பாகவே ஒரு வைஷ்ணவ ஆசாரியர் வலியுறுத்தியிருக்கிறார். இனிமேல் தமிழ்தான் நிற்கும் என்பதற்கே அன்றே இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தவர் திருவாய்மொழிப்பிள்ளை.

இப்படி ஆசார்யர் என்னை உம் திருவடியில் சேர்த்தார் எதிராசா. உம்மையே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் எண்ணி அதையே பாடுகிறேன் என்று யதிராச விம்ஶதியை அருளியுள்ளார். கைங்கர்யப் ப்ரார்த்தனைக்காக ஆர்த்திப்ரபந்தம். சரணாகதிக்காக யதிராச விம்ஶதி.


ஸ்தோத்திர ரத்தினம்

இதில் ஒரு கணக்கு தொக்கி நிற்கிறது. ஆளவந்தார் என்ற மகாசாரியார் ஸ்தோத்திர ரத்தினம் பாடினார். அதில் மொத்தம் 65 ஸ்லோகங்கள். 65க்கு ஒரு கணக்கு உள்ளது. “ஓம் நமோ நாராயணாய” என்பது திருமந்திரம் அது எட்டெழுத்து. 

“ஸ்ரீமன் நாராயண சரணௌ ஶரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம:” என்பது த்வயம் மஹாமந்திரம் 25 எழுத்து. சரமஸ்லோகம், “ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் விரஜ! அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுசக” இது 32 எழுத்து. ஆக 65 எழுத்து. (8+25+32) இந்த 65 எழுத்துக்காகத்தான் ஸ்தோத்திர ரத்தினம் 65 ஸ்லோகங்கள் கொண்டதாக அமைத்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

ரஹஸ்யத்ரயம்தான் இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ரொம்ப முக்கியம். ஆசார்யரிடத்தில் நாம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொள்கிறோம். அப்பொழுது ஆசார்யர் ரஹஸ்யத்ரய உபதேசமே செய்துவைக்கிறார். ஆக அந்த 65 எழுத்துக்களுக்கு 65 ஸ்லோகங்கள். இதே மாதிரி இந்த மூன்று மந்திரங்களின் சொற்கணக்கு திருமந்திரத்தில் 3 பதங்கள், துவயத்தில் 6 பதங்கள், (சொற்கள்) சரம ஸ்லோகத்தில் 11 பதங்கள். (11+6+3 = 20) ஆக இந்த ரஹஸ்யத் த்ரயத்திலிருக்கும் 20 பதங்களுக்கு ஈடாக யதிராச விம்ஶதியில் 20 ஸ்லோகங்களை அமைத்து அருளினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள். இரண்டும் ரஹஸ்யத் த்ரயம் விவரணம்.

இப்படி யதிராச விம்ஶதியை மணவாள மாமுனிகள் பாட அங்கு சூழ்ந்திருந்த அனைத்து ஆசார்யர்களும் கீழே கண்ட பாடலைப் பாடினர்.:

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்துவைத்து
சொல்லார வாழ்த்தும் மணவாள மாமுனி தொண்டர்குழாம் 
எல்லாம் தழைக்க யதிராச விம்ஶதி ஈந்தளித்தோன் 
புல்லாரவிந்த திருத்தாள் இரண்டினையும் போற்று நெஞ்சே!

திராக்ஷா பாகம்

ராமானுஜர் புகழ் கூற யதிராச விம்ஶதி பாடிய மணவாள மாமுனியின் தாமரையன்ன திருவடிகளை நெஞ்சே போற்று என்கின்றனர். யதிராச விம்ஶதி சொன்னால் யதிபதி ப்ரஸாதினி என்று சொல்கின்றனர். யதிபதி ப்ரஸாதினி என்றால் இந்தப் ப்ரபந்தந்த்தைச் சொல்பவர்களுக்கு ராமானுஜருடைய அனுக்கிரஹம் சட்டென எளிதாகக் கிட்டும் என்று பொருள். ஏனெனில் நமக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் செய்யக் கூடிய பிரபந்தம் இது. இது திராக்ஷா பாகம். எளிதாக திராக்ஷையை ரசித்துவிடலாம். நாரிகேள பாகம் அல்ல. தேங்காய்ப் பாலைச் சாப்பிட பல முயற்சிகள் செய்யவேண்டும். சில பிரபந்தங்களை இரும்புக் கடலை என்பர். அவ்வளவு கடினமாக இருக்கும்  ஆனால் இந்த பிரபந்தமோ திராக்ஷையைக் காட்டிலும் இனிமையாக இருக்கும் என்று சொல்வர்.

சரமபர்வ நிஷ்டை

ரஹஸ்யத்ரயத்தை விவரிக்க யதிராச விம்ஶதி பிறந்தது. இது திராக்ஷாபாகம், தேனினும் இனியது. நம் ஸம்சாரிகளுக்கு வேண்டிய நன்மைகளை அனைத்தும் செய்து கொடுக்கும். எல்லாவற்றுக்கும் மேலே ஆசார்யனிடம் நிஷ்டையோடு இருக்க வேண்டும் என்று காட்டும். பகவானிடம் நிஷ்டை இருக்க வேண்டியது முதல் படி. ஆசார்யனிடம் நிஷ்டை இருக்கவேண்டியது இறுதிப் படி. அதைத்தான் சரமபர்வ நிஷ்டை என்று சொல்வர்.

ஸ்ரீவசன பூஷணத்தில்

பகவானைப் பற்றுவது, சரணாகதி செய்வது என்பது சரி, ஆனால் ஆசார்யர் பகவானிடமிருந்து வேறுபட்டவர் அல்லவா? அவரிடம் சரணாகதி செய்யலாமா? ஆசார்யன்தான் பகவானது திருவடிகள். அதனால் வேறுபட்டவர் அல்ல. இதை பிள்ளை லோகாசாரியார் தன் ஸ்ரீவசன பூஷணத்தில் ரொம்பத் தெளிவாக சாதித்துள்ளார்.

பகவானிடம் போய் தேவரீர் மோக்ஷம் கொடுக்கவேண்டும் என்று வேண்டினால் அது அவரது கையைப் பிடித்துக் கொண்டு பிரார்த்திப்பதைப் போலவாம். ஆனால் ஆசார்யரிடத்தில் போய் அவரது திருவடிகளைப் பற்றி மோக்ஷம் வேண்டும் என்று பிரார்த்தித்தோமானல் அது பகவானது திருவடிகளைப் பற்றிப் பிரார்த்திப்பது போலாகும். காலில் விழுந்து கெஞ்சுவதற்கும் கையைப் பிடித்துக் கெஞ்சுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? காலைப் பிடித்துக் கெஞ்சினால் உதற முடியாது. ஆசார்யருடையை திருவடியைப் பற்றுவது பகவானைப் பற்றுவதேயாகும். பகவானிடம் நேரே போனோமானால் நம் முயற்சி பலனளிக்காமல் போக வாய்ப்புள்ளது. ஆசார்யர் மூலம் போனால் நம்மை ஸம்சாரத்திலிருந்து விடுவித்து மோக்ஷம் அளித்துவிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக