ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி - 1 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

முன்னுரை


பகவான் ஜீவர்களுக்கு பிறவி கொடுப்பதன் காரணமே அவர்கள் ஏதோ ஒரு பிறவியிலாவது கர்ம, பக்தி, ஞான யோகங்களில் ஏதாவது ஒன்றின் மூலமாவது தன்னை வந்து அடையமாட்டார்களா என்ற நம்பிக்கையினால்  மட்டுமே. அந்த நம்பிக்கையும் பலிக்கிறது. மேலும் பகவான் ஸாஸ்திரங்களைக் கொடுத்து, ஆழ்வார் ஆசார்யர்களைப் படைத்து நன்கு அனுஷ்டித்துக் காட்டி, நமக்கும் மேலும் சாஸ்த்திரங்களை விளக்குவதற்காகவும்,  நல் வழி காட்டவும் செய்கிறார். 


எம்பெருமான் செய்த சிறந்த உபகாரமானது ஆசார்யர்களைப் படைத்தது. பகவானும் அவதரிக்கிறார். தன்னுடன் வைகுந்தத்திலிருக்கும் நித்ய ஸூரிகளையும் அவதரிக்கச் செய்கிறார். பகவானுடைய படுக்கையாக இருக்கும் ஆதிஶேஷனை பகவத் ராமானுஜராக பிறக்க அனுப்பினார் எம்பெருமான். ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் பொய்கை ஆழ்வார். கடைசி ஆழ்வார் திருமங்கை ஆழ்வார். ஆசார்யர்களில் முதல் ஸ்ரீமந் நாதமுனிகள். பூர்வாசார்யர்களில் கடைசி ஆசார்யர் மணவாள மாமுனிகள். இவர்கள் அனைவருமே அனேக பிரபந்தங்களை நமக்குக் கொடுத்துள்ளார்கள். ஆதிசேஷனே ராமானுஜராக அவதரிக்க, ராமானுஜரே மீண்டும் மணவாள மாமுனிகளாக ஆழ்வார்திருநகரியில் திருவவதாரம் செய்தார். 


திருவடியும் திருமுடியும்


இந்த ஸம்பிரதாயத்திற்கே உள்ள பெருமை ஆசார்யர்கள் பலரிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஸ்ரீ ராமானுஜரிடத்தே சங்கமிப்பார்கள் என்பதுதான் உண்மை. ராமானுஜருக்கு முற்பட்டவர்களாக இருந்தாலும், பிற்பட்டவர்களாக இருந்தாலும் அவருடைய சம்பந்தத்தாலேயே முக்தி என்பது பிரஸித்தம். முற்பட்டவர்களுக்கு இராமானுஜருடைய திருமுடி ஸம்பந்தத்தாலும், பிற்பட்டவர்களுக்கு திருவடி ஸம்பந்தத்தாலும் மோக்ஷம்.


ஸ்ரீ ராமானுஜர் இந்த பூவுலகத்தில் 120 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார். பகவான், ஆதிசேஷனை நியமிக்கும்போது பூவுலகில் அவதரித்து 200 ஆண்டுகள் இருந்து உபதேசங்களைச் செய்து, பக்தர்களைத் திருத்தி தம்மிடம் ஆட்படுத்தவேண்டும் என்று அனுப்பிவைத்தார். ஆனால் மனிதனின் முழு ஆயுளான 120 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து வைகுண்டம் அடைந்துவிட்டார். மீதி 80 ஆண்டுகள் இருக்கவே அவரே மணவாள மாமுனிகளாக அவதரித்தார்.


இராமனுஜரின் அவதாரம் ஆயிரத்துப் பதினேழு. புறப்பட்டது ஆயிரத்து நூற்றிமுப்பத்தியேழு. அதே போல ஸ்ரீ மணவாளமாமுனிகளின் அவதாரம் பதினாலாவது நூற்றாண்டில் ஏற்பட்டது. ஆயிரத்து முன்னூற்றி எழுபத்தி ஒன்றில் அவதரித்தார். ஆயிரத்து நானூற்றி நாற்பத்தி மூன்று வரை எழுபத்தி மூன்று ஆண்டுகள் இந்த பூவுலகில் இருந்தார். ஆக நூற்றி இருபதும் எழுபத்தி மூன்றும் சேர்த்தால் நூற்றி தொண்ணூற்று மூன்று வருடங்கள் ஆகிறது. இன்னும் ஏழுவருடங்கள் குறையுள்ளதே. ஆனால் பெரிய ஜீயர் வைகுண்டத்தைவிட்டு அதிக காலம் இருக்க விரும்பாமல் யதாஸ்தானம் எழுந்தருளிவிட்டார். 

ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமிழ் வேதத்தைப் பிரபலமாக்கினார். பல ப்ரபந்தங்களை எழுதியுள்ளார். அவர் ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி யதிராஜ விம்ஶதி என்ற இருபது ஸ்லோகங்கள் கொண்ட க்ரந்தம் அருளினார். பகவான் ஏன் ஸ்ரீ ராமானுஜரை பூவுலகிற்கு அனுப்பிவைத்தார் என்பதும், யதிராஜர் பெரிய பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பெரிய பெருமாளிடம் சரணாகதி செய்தாரே அதுவும் எல்லாருக்கும் புரிபடவேண்டும் என்பதற்காகவே பெரிய ஜீயர் இரண்டு கிரந்தங்கள் செய்தார். ஒன்று ஆர்த்தி பிரபந்தம், மற்றொன்று யதிராஜ விம்சதி.


ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளில் சரணாகதி


இந்த இரண்டுக்கும் கருத்து என்னவேன்றால் நாராயணனுடைய திருவடிகளைப் பற்றும் போது துவய மந்திரத்தைச் சொல்லுகிறோம். “ஸ்ரீமன் நாராயண சரணௌ ஶரணம் பிரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம:” என்பது துவயம். இதில் இரண்டு பகுதிகள் இருப்பதால் துவயம் என்று சொல்லுகின்றோம். முதல் பகுதியில் ஸ்ரீமன் நாராயணான உம்முடைய திருவடிகளை உபாயமாக, மோக்ஷத்தைக் கொடுப்பதற்காகப் பற்றுகிறேன். ஸ்ரீமதே நாராயணாய நம: என்பது இரண்டாவது வரி. அதன் பொருள் உமக்கும் பிராட்டிக்கும், இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் செய்யவேணும் என்று பிரார்த்திக்கிறேன். சரணாகதி பண்ணுகிறேன் அதற்குப் பலனாகக் கைங்கர்யத்தை வேண்டுகிறேன். இதுவே துவய மந்திரத்தின் பொருள்.


இது நாராயணனைக் குறித்துச் சொல்லப்பட்ட மந்திரம். இதைச் சொல்லும்போது ஒரு சந்தேஹம் வரவாய்ப்பு உள்ளது. நாராயணனோ ஸ்வதந்திரன். அவரிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் என்ன விருப்பப்படுவாரோ அதையே செய்வார். ஒரு யானையைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தாரானால் கஜேந்த்ரனுக்காக ஓடிவந்து காப்பார். ஒரு யானையைக் கொல்லவேண்டும் என்று தீர்மானித்தாரானால் குவலயாபீடம் என்ற யானையைப் பாகனோடு தீர்த்துக் கட்டினார். நாம், எந்த  யானை என்று தெரியவில்லையே. 


இந்த சந்தேஹம் பகவான் உள்ளத்திலும் எழுந்தது. அவர் அதனால் ஆசார்யனாகவே அவதரித்தார். பஞ்சாயுதங்கள் வைத்துக் கொண்டு இருப்பதற்குப்  பதில் சாஸ்த்திரம் வைத்துக் கொண்டார். அதைப் படித்து அதன் படி அநுஷ்டித்தும் காட்டுகிறார். நம்மை நல்வழிப்படுத்தவும் செய்கிறார்.


ராமானுஜருடைய திருவடிகளில் சரணாகதி


மணவாளமாமுனிகள் துவயம் மந்திரத்தை பற்றி சிந்தித்து அதை ராமனுஜருக்கு சமர்ப்பிக்கிறார் இப்படி, ”ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ ஶரணம் பிரபத்யே ஸ்ரீமதே ராமாநுஜாய நம:” நாராயணனுடைய சரணம் அல்ல ராமாநுஜருடைய சரணம். திருவடிகள். ராமாநுஜரே உம்முடைய திருவடிகளை மோக்ஷம் பெறுவதற்கு உபாயமாக பற்றுகிறேன். மோக்ஷம்பெற உம்மையே ஶரணமாகப் பற்றுகிறேன். அதற்கு என்ன பலன் வேண்டும்? என்றால், தேவரீருடைய திருவடிகளிலேயே கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கிறேன். 


முதலில் சொன்னது பெருமாள் – பிராட்டியிடம் சரணாகதி. அதற்குப் பலன் பிராட்டி பெருமாள் இருவருமான சேர்த்தியிலே கைங்கர்யம். இரண்டாவது சொன்னது ராமானுஜருடைய திருவடிகளில் சரணாகதி. அதற்குப் பலன் ஸ்ரீ ராமாநுஜருடைய திருவடிகளிலேயே கைங்கர்யம்.


இந்த ஆச்சர்யமான அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முன் வாக்கியத்துக்கு ஒரு பிரபந்தம். யதிராச விம்ஶதி. பின் வாக்கியத்திற்கு ஒரு பிரபந்தம் ஆர்த்தி பிரபந்தம். அப்பொழுது யதிராஜ விம்ஶதியில் என்ன சொல்லியிருக்கவேண்டும். அது எப்போது துவயத்தின் முதல் வாக்கியத்திற்கு அர்த்தமாகிவிட்டதோ அப்பொழுது அது சரணாகதியைத் தானே சொல்லியிருக்கவேண்டும். ஆர்த்திப் பிரபந்தம் என்ன சொல்லுகிறது. ஸ்ரீமதே ராமாநுஜாய நம: என்பதற்கு அர்த்தம் ஆனபடியால் கைங்கர்யத்தைச் சொல்லுகிறது.


உய்ய ஒரே வழி உடையவர் திருவடி


அதில் யதிராஜ விம்ஶதி பூர்வ வாக்கியமான ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ ஶரணம் பிரபத்யே என்பதின் விளக்கம். அனைத்துலகும் வாழப் பிறந்தவர் யதிராஜர். உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என்பது போல அனைவரும் உய்வதற்கு அவருடைய திருவடிகளே வழி. பணகாரரா ஏழையா, உயர்ந்த சாதியா – தாழ்ந்த சாதியா, ஆணா – பெண்ணா, செல்வாக்கு உள்ளவரா – இல்லாதவரா என்பதைப் போன்ற எந்த  ஏற்ற தாழ்வுகளுக்கும் இடமில்லாமல் அனைவரும் அடியேன் ராமானுஜதாஸன் என்று சொல்வதற்கு உரிய நிலையில் கொண்டுவந்து சேர்த்து விடுகிறதல்லவா? அப்படி உய்வதற்காகத் தோன்றியவரே யதிராஜர் .


“ஸ்ரீமத் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜ ஶேவாம் 
ஸ்ரீஶைலநாத கருணா பரிணாமதத்தாம்” 

என்று இந்த பிரபந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. மணவாள மாமுனிகள் ஆசார்யன் திருவடிதான் எல்லாமாகப் பற்ற வேண்டும் என்கிறார். 


அப்பொழுது அவருக்கு ஆசார்யர் யார்? அவருக்கு ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளை. ஸ்ரீஶைலேசர் என்பது அவருக்குத் திருநாமம். அதனால்தான் “ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் யதீந்த்ர - ப்ரவணம் வந்தே ரம்ய- ஜாமாதரம் முநிம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  அப்பொழுது அவர் திருவாய்மொழிப் பிள்ளையைத் தானே சொல்ல வேண்டும். என்றைக்கோ முன்னூறு வருடங்களுக்கு முன் அவதரித்த ஸ்ரீராமானுஜரின் திருவடியையா பற்றுவார். நாமும் நம் ஆசார்யரைதானே பற்றவேண்டும். நேரே ராமானுஜரையா பற்றுவர். 


உபகாரக ஆசார்யர் - உத்தாரக ஆசார்யர்


இரண்டு வழிகள் உள்ளன. சின்னத்தெரு மூலமாக பெரியவீதியை அடையவேண்டும். அப்புறம்தான் நெடுஞ்சாலையில் பிரயாணம் செய்ய முடியும். அதுபோல நாம் இன்று நம் ஆசார்யரைப் பற்றினால் அவர் நம்மை நெடுஞ்சாலையாட்டம் இருக்கிற ராமானுஜரிடம் சேர்ப்பார். ஆசார்யர்களுக்கு பெயர் கொடுத்துள்ளனர். நாம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ளும் ஆசார்யருக்கு உபகாரக ஆசார்யர் என்று பெயர். அவரது தனியனைச் சொல்லி அவருக்கே கைங்கர்யம் செய்கிறோம். அவர் உபகாரக ஆசார்யர். உதவுபவர் என்று பொருள். 


நம் ஆசார்யர் நேரே மோக்ஷத்துக்கு இட்டுச் செல்லமாட்டார். அவர் ராமானுஜரின் திருவடிகளில் சேர்த்துவிடுவார். ராமானுஜருக்கு உத்தாரக ஆசார்யர் என்று திருநாமம். உத்தாரகர் என்று சொன்னால் ஸம்ஸாரத்திலிருந்து தாண்டுவிப்பவர் என்று பொருள். ஸம்சாரத்திலிருந்து விடுவித்து வைகுண்டத்தில் சேர்த்துவிடுபவர் உத்தாரக ஆசார்யர் ஸ்ரீ ராமாநுஜர். இப்பொழுது மணவாள மாமுனிகளைப் பொறுத்தவரை உபகாரக ஆசார்யர் திருவாய்மொழிப்பிள்ளை. உத்தாரக ஆசார்யர் ஸ்ரீ ராமாநுஜர். யாருக்காக இருந்தாலும் உத்தாரக ஆசார்யர் மாறமாட்டார். உபகாரக ஆசார்யர் மாறுவார். 


திருவாய்மொழிப்பிள்ளை மணவாளமாமுனியின் ஆசார்ய நிஷ்டையைப் பார்த்து அவரை ராமானுஜரின் திருவடிகளையே பற்றிக் கொண்டிரும் என்று ஆணையிட்டார். இனி உமக்கு ப்ராபகமும் உடையவர் திருவடிகளே. ப்ராப்யமும் அதே உடையவர் திருவடிகளே என்று ஆசார்யன் காட்ட அவர் சொன்னபடிக்கு அடியேன் பாடுகிறேன் என்று ப்ரபந்தங்களைப் பாடினார்.


“எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து” என்று மாமுனிகள் இந்த பிரபந்தத்தைப் பாடுகிறேன் என்று சொல்கிறார் உபதேச ரத்னமாலையில்.


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர் - திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக