திருவரங்கப் பெருநகரில் அரவணையில் துயிலும் அரங்கன், ஏனோ எப்போதும் துயில்கின்றானோ என்றே தோன்றியது அந்தத் தொண்டருக்கு. கண்வளரும் பெருமானை துயில் எழுப்பிடத் துணிந்தார் அவர். அரங்கன் திருப்பள்ளியில் இருந்து எழ, பள்ளியெழுச்சி பாடி துயிலெழுப்பினார். கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தான், இருள் அகன்றது இக் காலையில். பெருமானே துயிலெழு என பாசுரங்கள் வெளிப்பட்டன.
இன்றும் அரங்கன் கோயில் மட்டுமல்லாது எல்லா வைணவக் கோயில்களிலுமே..... இவ்வளவு ஏன்.. வைணவர்கள் இல்லங்களிலுமே பள்ளியெழுச்சி பாடாது காலை பூஜைகள் தொடங்குவதில்லை. சிறப்பு மிகுந்த அந்தப் பெருந்தொண்டரோ, தன்னை தொண்டருக்கும் தொண்டராய் இருத்தி, தம்மை தொண்டர் அடிப்பொடியாய் அழைப்பதிலேயே பெருவிருப்பம் கொண்டார்.
சோழ நாட்டில் மண்டங்குடி எனும் திருத்தலத்தில் (கி.பி. 8ம் நூற்றாண்டு) பராபவ ஆண்டு மார்கழி தேய்பிறை சதுர்த்தசியில் கேட்டை நட்சத்திரத்தில் பெருமாளின் ஸ்ரீவனமாலை அம்சத்தவராக அவதரித்தார் விப்ரநாராயணர் என்னும் தொண்டரப்பொடியாழ்வார். ஆண்டாளின் திருப்பாவையால் மார்கழிக்கு சிறப்பு உண்டு என்றால், பள்ளியெழுச்சி பாடிய தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அவதரித்துச் சேர்த்த இன்னொரு சிறப்பும் மார்கழிக்கு உண்டானது.
திருமணம் செய்துகொள்ளாமல் தலங்கள் தோறும் சென்று பெருமாளை தரிசித்து நந்தவனக் கைங்கரியம் செய்வதில் பெருவிருப்பம் கொண்டிருந்த விப்ரநாராயணர் வாழ்வில், தேவதேவி எனும் ஆடல் நங்கையின் மூலம் சோதனை உருவானது. தன் அழகால் இவரைக் கவர்ந்து அடிமையாக்குவேன் என்று இட்ட சபதத்தை அவள் நிறைவேற்ற, அரங்கனே இவருக்கு எழுந்த சிக்கலைத் தீர்க்க, அடியவன் கோலம் பூண்டு சிக்கல்களை விடுவித்து, இவர் வாழ்க்கையில் ஞான ஒளியேற்றினான். விப்ரநாராயணர் தம் தவறை உணர்ந்தார். துளவத் தொண்டு மறந்து, பொருட் பெண்டிர் பின் சென்று, சிற்றின்ப பொய்மை மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததற்காக மனம் வருந்தினார். பின்னர் தகுந்த பெரியோர்களைச் சார்ந்து, இதற்கான பிராயச்சித்தம் வேண்டினார்.
பெரியோர்களும் பாவங்கள் யாவும் நீங்குதற்கு ஏற்ற பிராயச்சித்தம்- பாகவதர்களுடைய திருவடி தீர்த்தத்தை உட்கொள்வதே என்றனர். மன அமைதியடைந்த ஆழ்வார், வைணவர்களின் திருவடிகளில் கீழ்ப்படிந்து அடிமைபூண்டு ஒழுகி, அதனால் தமக்கு அதுவே பெயராக அமையும்படி, தொண்டர் அடிப்பொடி ஆனார்.
அர்ச்சாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, திருவரங்கப் பெருமானுக்குத் துளசி, மலர்கள் அளித்து, தொண்டு புரிந்து வாழ்ந்து, தமது அனுபவத்தைப் பிரபந்தப் பாசுரங்கள் மூலமாகப் பிறர்க்குத் தெரிவிக்கக் கருதி திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய திவ்யப் பிரபந்தங்களை அருளிச் செய்தார்.
தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரங்கள் யாவும் இன்னிசை உடையனவாக, பக்திச் சுவையோடு தேனினும் இனிய அனுபவத்தைத் தருவனவாகப் பொலிகின்றன. அவரின் திருப்பள்ளியெழுச்சியே, தமிழின் முதல் பள்ளியெழுச்சி ஆனது. அவர் இறைவனைத் துயில் எழுப்பிய தொண்டரும் ஆனார்.
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கனவிருள் அகன்றது காலைஅம் பொழுதாய்
மதுவிரிந்தொழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (1)
சூரியன் கிழக்கே தோன்றிவிட்டான். கருமை இருள் அகன்றுவிட்டது. காலைப் பொழுது மலர்கின்றது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண் -பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்திரு என்று அரங்கநாதப் பெருமானை எழுப்புகிறார்.
நன்றி - தினமணி