பாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான் - மனத்துக்கினியான்

பாமாலை பெற்று புகழ்மாலை தந்த பிரான் - மனத்துக்கினியான்


அது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. தென்பாண்டி நாடான நெல்லைச் சீமையை நாயக்க மன்னரின் அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தவர் வடமலையப்ப பிள்ளை. ஆலயத் திருப்பணிகள் பல ஆற்றியவர்.  பக்தர், புலவர், புரவலர்.. இப்படி எல்லாம்தான்.

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது தென்திருப்பேரை தலம். பாண்டிநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டுள் ஒன்றான இது நம்மாழ்வார் அபிமானித்த நவ திருப்பதிகளுள் ஒன்று.  இவ்வூரை திருப்பேரை என்கிறது திருவாய்மொழி. இத்தலத்தின் பெருமான் மகரநெடுங்குழைக்காதர். இக்குழைக்காதரைக் கண்ணனாகக் கண்டு, தாம் வகுளபூஷண நாயகியாகி மோகித்துப் பார்க்கிறார்  நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் உள்ளம் கவர்ந்த குழைக்காதர், திருப்பேரைத் தலத்தில் வாழ்ந்துவந்த நாராயண தீட்சிதர் என்பாரது உள்ளத்தையும் தன்பால் ஈர்த்துவிடுகிறார். வடமலையப்பரின் காலத்தில் வாழ்ந்துவந்த நாராயண தீட்சிதர், மகர நெடுங்குழைக்காதரிடம் மட்டுமல்லாது நம்மாழ்வாரிடத்தும் தீவிர பக்தி கொண்டவர். தினமும் தவறாது திருப்பேரையில் இருந்து  திருநகரிக்குப் போய் ஆழ்வாரை தரிசித்த பின்பே மற்ற வேலைகளைத் தொடங்குவார். கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற தீட்சிதர் தமக்குரிய நில புலன்கள் கொண்டு மனநிறைவோடு வாழ்ந்து வந்தவர்.

ஒரு வருடம்... வானம் பொய்த்தது. எங்கும் வறட்சி. விளைச்சல் குன்றியது. இவரால் அரசு வரியை உரிய காலத்தில் செலுத்த முடியவில்லை. திருப்பேரைவாசிகள் சிலருக்கும் இதே நிலை வரி  வசூலிக்கும் அதிகாரியோ கொடுமையானவன். அவன் கையில் அதிகாரம் கிடைத்தால்.. வாட்டி வதைக்கத் தொடங்கினான்.

தீட்சிதரும் பிறரும் தங்கள் குறையைச் சொல்லி தவணை கேட்டனர். அதிகாரி அதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவர்களை நெல்லைக்குக் கொண்டு சென்று சிறையிலிட்டான். தீட்சிதர்  தமக்கு சிறைவாசம் நேர்ந்தது பற்றி மனம் நொந்தார்.

விதியின் சதியெனத் தேற்றிக் கொண்டார். மதிப்பு, மரியாதை இழந்தோமே உற்றார் உறவினர், வீடு, மனை, நிலம், மக்கள் என சகல வசதிகளையும் இழந்து இப்படி சிறைப்பட்டோமே என்று அவர்  வருந்தவில்லை. மாறாக குழைக்காதரையும் நம்மாழ்வாரின் மோன வடிவையும் முத்திரைக் கையையும் தினமும் தரிசித்து வந்தோமே அது முடியாமல் போய்விட்டதே என்று அழுது புலம்பினார்.

போதெலாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்... என்றவாறு பூமாலை தொடுத்துப் பார்க்க இயலாத நிலையில் பாமாலை தொடுத்துப் பாடத் தொடங்கியது அவருள்ளம். இப்படி  உருவானதுதான் மகர நெடுங்குழைக்காதர் பாமாலை என்ற பக்திப் பனுவல்.

நாட்கள் சில சென்றன. தீட்சிதர் பக்த கவி ஆயிற்றே. பிரார்த்தனையே பக்தர்களின் உயிர்மூச்சு அல்லவா நாளொரு பாடலாக மலர்ந்தது. மாதம் ஒன்று கழிந்தது. அவர் பாமாலையில் இருபது பா மலர்கள்  தொடுக்கப்பட்டிருந்தன.

21 ஆம் பாட்டில் - திங்கள் ஒன்றாகச் சிறையிலிருந்தோம் இச்சிறை அகற்றி எங்கள்தம்பால் இரங்காத தென்னோ- என்று தீட்சிதர் பெருமூச்சு விடுகிறார்.

திடீரென இவர் உள்ளம் வடமலையப்பரைப் பற்றி எண்ணுகிறது. அவர் நீதிமான். புலவர். நல்ல தமிழ் ரசிகரும் அல்லவா - எண்ணியபோது, தம் நிலையை அவரிடம் யார் எடுத்துரைப்பார் என்றும் மனது  சஞ்சலப்படுகிறது. அதேநேரம் உள்மனம் அருள்கடைக்கண்பார் என்று பிரார்த்திக்கிறது.

இப்படிப் பகுத்தறிவு எய்த்து விழுந்த இடத்திலேயே குழைக்காதர் அருள்புரிகிறார். பாமாலையின் 23 ஆம் பாட்டில் மெய்யுருக மீண்டும் பாடுகிறார் தீட்சிதர்.

வள்வார் முரசதிர்கோமான் வடமலையப்பன் முன்னே
விள்வாருமில்லை, இனி எங்கள் காரியம் வெண்தயிர்பால்
கள்வா அருட்கடைக்கண்பார் கருணைக் களிறு அழைத்த
புள்வாகனா அன்பர்வாழ்வே தென்பேரைப் புராதனனே

இப்பாடலைக் கண்ணீர் மல்க பாடிப் பாடிக் கசிந்துருக, இவர் படும் பாட்டைச் சற்று தமிழ் பயின்ற காவலன் கேட்கிறான். பாடல் அவன் மனத்தைக் கவர்ந்தது. கரைத்தது. தம் தலைவன் வடமலையப்பன்  பெயர் இப்பாடலில் வர, ஏதோ விஷயம் இருக்கிறது என்று எண்ணி, வடமலையப்பரிடம் சென்று சொல்கிறான். பதறித் துடித்த வடமலையப்பர் தீட்சிதரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் விடுவிக்கிறார்.

அவர்களுக்குத் தக்க உதவிகள் செய்து நடந்துவிட்ட தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறார். பிறகு தீட்சிதரின் நிலங்களை வரியில்லாத நிலங்களாகச் செய்து விடுகிறார். பாமாலை சூட்டிய பக்தருக்கு மகரநெடுங்குழைக்காதர் அளித்த புகழ்மாலை, பெருமான் நிகழ்த்திய எத்தனையோ அற்புதங்களில் ஒன்றாகிப் போனது.


நன்றி - தினமணி
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை