செவ்வாய், 18 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 57

மூன்றாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம் முதல் 
பத்தொன்பதாவது அத்தியாயம் வரை

ஸ்ரீ வராஹ அவதாரம் 

மைத்ரேயரும் விதுரரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மைத்ரேயர் விதுரருக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கெல்லாம் விடை கூறி விளக்கிக் கொண்டு வருகிறார். ப்ரஹ்மா உலகத்தைப் படைப்பதைக் கருதி, பின்னால் படைப்புத் தொழிலில் உதவி செய்வதற்காக, ஸனகர், ஸனத் குமாரர் முதலான நான்கு பிள்ளைகளை அவர் தன் மனத்திலிருந்தே உருவாக்கினார். ஆனால், பரப்ரஹ்மத்தைத் தியானிப்பதில் மட்டுமே ஈடுபாடு கொண்ட அவர்கள், படைப்புத் தொழிலில் உதவிக்கு வர மறுத்தார்கள். சற்றும் அயராத நான்முகன், ஸ்வாயம்புவ மனு என்னும் குமாரரை உருவாக்கினார். அவர் மூலம் மேற்கொண்டு சிருஷ்டியைத் தொடர வேண்டும்; உலகத்தையெல்லாம் மக்களால் நிரப்ப வேண்டும்; நல்ல தர்மங்களை அனைவரையும் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும் - என்பதே நான்முகனின் குறிக்கோள். 

ஸ்வாயம்புவ மனு, சதரூபை என்பவளைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு ப்ரிய வ்ரதன், உத்தான பாதன் என்ற இரு மகன்கள் பிறந்தார்கள். ஸ்வாயம்புவ மனு உலகத்தைப் படைக்கத் தொடங்கியவர், மேற்கொண்டு தொடர முடியாமல் நிறுத்தினார். ஏனென்றால், ஹிராண்யாக்ஷன் என்னும் அசுரன் பூமாதேவியை எடுத்து ப்ரளய ஜலத்துக்குள்ளே ஒளித்து வைத்து விட்டான். மக்களைப் படைத்தால், அவர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது - என்பதால் ஸ்வாயம்புவ மனு தன் தந்தையான நான்முகனிடத்தில் வந்து, ‘பூமியை விடுதலை செய்யுங்கள்; அதன் பின்தான் படைப்பைத் தொடர முடியும்’ என்று வேண்டினார். 

இதை எப்படிச் செய்யலாம் என்று ப்ரஹ்மா யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவருடைய மூக்கிலிருந்து, சிறிய அளவில் வராஹ ரூபம் ஒன்று தோன்றியது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அது நெடுநெடுவென வேகமாக வளர்ந்து, ஒரு யானை அளவுக்கும், பின்னர் ஆயிரக்கணக்கான யானைகள் அளவுக்கும் நெடிது உயர்ந்து பருத்தது. அவரே வராஹப் பெருமான். திருமாலின் முக்கியமான அவதாரம். பன்றியின் தனிச்சிறப்பு, அதனால் நிலத்தில் நடக்க முடியும். நீரில் நீந்தவும் முடியும். சகதியிலும் சுலபமாக நடக்க முடியும். பூமா தேவி கடலுக்குள் இருந்தபடியால், இந்தத் திறமைகள் எல்லாம் இருந்தால்தான் அவளைக் காக்க முடியும் என்பதற்காக, பகவான் பன்றியாகத் தோன்றினார். 

ஸ்வாமி நம்மாழ்வார் தம்முடைய திருவிருத்தம் என்னும் ப்ரபந்தத்தில், வராஹ அவதாரத்தின் மேன்மையை உரைக்கிறார். 

‘ஈனச் சொல்லாயினுமாக, எறிதிரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் இடந்தபிரான், இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும், அல்லாதவர்க்கும், மற்ற எல்லாயவர்க்கும்
ஞானப்பிரானை அல்லால் இல்லை, நான் கண்ட நல்லதுவே...’
என்று சபதம் செய்கிறார். 

அதாவது, “அடியேன் ஏழை. ஏழை சொல் அம்பலம் ஏறாமல் போனாலும், எனக்குத் தெரிந்த நல்லதை உலகத்தாருக்கு உரைக்கிறேன். பன்றியாய் அவதரித்து, பூமாதேவியைப் ப்ரளயக் கடலிலிருந்து மீட்டான் வராஹன். அதே போல, ஸம்சாரம் என்னும் பெருங்கடலில் அமிழ்ந்திருக்கும் நம் அனைவரையும், அதே வராஹப் பெருமான் மீட்பான். இது உறுதி. பூலோகத்தில் உள்ளவர்களுக்கும், வானத்தவர்களுக்கும், ஏன் வைகுந்தத்தில் இருக்கும் நித்யஸூரிகளுக்கும் கூட, இந்த வராஹப் பெருமான் திருவடிகளே ஒரே புகல். இந்த வார்த்தை உண்மை. இதுவே நானறிந்த நன்மை! என்னை நம்பும் அனைவரும் வராஹனையே நம்ப வேண்டும்” - என்கிறார் நம்மாழ்வார். 


அவதாரங்கள் எத்தனையோ இருந்தாலும், இந்த அவதாரத்திற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று கூரத்தாழ்வாரின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர் அருள்கிறார். இப்போது சொல்லப்போகும் அர்த்தத்தை நன்கு கருத்தில் கொள்க. மற்ற அவதாரங்களைக் குறைத்துக் கூறுவதற்காக, இது சொல்லப்படவில்லை. வராஹ அவதாரத்தின் பெருமையை நிலை நாட்டவே இக்கருத்து கூறப்படுகிறது. இலக்கியக் கண்கொண்டு மட்டும் ரசித்திடல் வேண்டும் இதனை! 

‘முதல் அவதாரமான மத்ஸ்ய அவதாரம் மீன். தண்ணீரை விட்டுக் கரை ஏற முடியாத மீனாக இருக்கும்போது, ஸம்ஸாரக் கடலிலிருந்து நம்மை அது கரை ஏற்ற முடியுமா? இயலாது. அடுத்து கூர்மம். ஆமையான அவதாரம். அதன் முதுகையே மந்தர மலை அழுத்துகிறபோது, ஸம்ஸார பாரத்தைச் சுமந்து கொண்டு, அதனால் அழுத்தப்படும் நம்மை அது மீட்க முடியுமா? இயலாது. நரசிம்ம அவதாரம் சிறந்தது. ஆனால் கழுத்துக்கு மேலே சிங்க உருவமும், கழுத்துக் கீழே மனித உருவமும் கொண்டிருக்கிறான். இரண்டு உருவம் கொண்டவனை நம்ப இயலுமா? விட்டு விடுவோம். 

‘அடுத்து வாமன அவதாரம். உலகத்தையே தாவி அளந்த திருவிக்கிரமனாக வளர்ந்தவன். ஆனால், சிறிய காலைக் காட்டி மூன்று அடி மண் வேண்டி, பின்னால் பெரியதாக வளர்ந்து, அளந்து கொண்டவன். ஆகையால், அவனிடத்தில் நமக்கு நம்பிக்கை பிறவாது. சரி. 

‘அடுத்து, ஆவேச அவதாரமான பரசுராமனைப் பற்றலாம் என்றால், அவரே பெரும் கோபக்காரர். நாமோ கோபத்திலிருந்து விடுதலை அடையத் தவித்துக் கொண்டிருக்கிறோம்; அவரை எப்படிப் பற்ற முடியும்? அடுத்து ஸ்ரீ ராமனைப் பற்றலாம். ஆனால், அவரோ சக்ரவர்த்தித் திருமகன். மிகவும் உயர்ந்தவர். எளிதில் நாம் அவரை அண்டி விட முடியாது. கண்ணன் எளியவனாயிற்றே. அவனைப் பற்றலாமா? ஏலாப் பொய்கள் உரைப்பான்; சொல்லொன்று, செயலொன்றாக இருப்பான்; ஆகையால், அவனை நம்ப முடியாது. அவன் அண்ணன் பலராமனோ, எப்போதும் சண்டைக்காரர். பாரத யுத்தத்தின்போது, தம்பியையே கை விட்டு விட்டு, தீர்த்த யாத்திரை சென்று விட்டவர். நம்மையும் கை விட்டு விடுவாரோ, என்னவோ! 

‘கடைசியான கல்கி அவதாரமோ இன்னும் ஏற்படவே இல்லை. எங்கே பற்ற? ஆகவே, இவை அனைத்தையும் விடுத்து, ப்ரளயக் கடலில் மூழ்கி இருந்த பூமாதேவியைக் கிளர்ந்து எடுத்த வராஹப் பெருமானையே நாம் பற்ற வேண்டும். அவனே நம் அனைவருக்கும் புகலாவான்’. இப்படி, பராசர பட்டர் என்னும் மஹான் ரசித்து அனுபவிக்கிறார். 

ஆண்டாள் ஒரு பாசுரத்தில்,
‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டொரு நாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாபன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,
பேசி இருப்பனகள், பேர்க்கவும் பேராவே’
என்று கூறுகிறாள். 

‘பூமாதேவி பாசி பிடித்து, தண்ணீருக்குள் மறைந்திருந்தாள். தன்னுடைய திருமேனியில் நீர் சொட்ட, பகவான் வராஹனாக பூமா தேவியை கிளர்ந்தெடுத்தான். அவளுக்குப் பல தர்மங்களை உரைத்தான். அவனே நம் அனைவருக்கும் அடைக்கலம்! தன்னை பக்தியுடன் நினைப்பவர்களை, தன்னிடம் சராணகதி அடைபவர்களை கடைசி வரைக்கும் நினைவில் கொண்டு, முக்தி கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறான். அந்த வார்த்தையில் நம் அனைவருக்கும் நம்பிக்கை வேண்டும்’ - என்கிறாள் ஆண்டாள். 

ஸ்ரீ வேதாந்த தேசிகன் தன்னுடைய மறைபொருள் விளக்க நூலில் வராஹப் பெருமானின் பெருமையை, மற்ற அனைவரோடும் ஒப்பிட்டு தனிச் சிறப்பாக விளக்குகிறார். இப்படிப் புராணங்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் கூறியபடி பார்த்தால், வராஹப் பெருமான் நம் அனைவருக்கும் ஒரே புகல். இந்த எம்பெருமானைச் சேவிக்க வேண்டுமானால், ஸ்ரீ முஷ்ணத்தை அடையலாம். அங்கே ஸ்ரீ பூவராஹ ஸ்வாமியாக அற்புதமாகக் காட்சி கொடுக்கிறார். ஏன்? திருமலை திருப்பதியே மிக மிகப் பழைய காலத்தில் வராஹ க்ஷேத்திரம்தான். பின்னாளில்தான் ஸ்ரீனிவாசப் பெருமாள் அங்கே வந்து அடைந்தார். 

அதேபோல் வால்டேர் சிம்மாச்சலம். ஆந்திரத்தில் விசாகப்பட்டினத்திற்கு அருகே இருக்கும் திருத்தலம். அங்கே பெருமான், வராஹனாகவே காட்சி கொடுக்கிறார். ஆண்டு முழுவதும் சந்தனத் திருக்காப்பு சாற்றிக் கொண்டு, அட்சய த்ருதியை அன்று மட்டும் சந்தனக் காப்பு களையப்பட்டு, வராஹ பகவான் நரசிம்மனாகக் காட்சி கொடுக்கிறார். இப்படி இமயம் முதல் குமரி வரை, எத்தனையோ திருத்தலங்களில் பகவான் வராஹனாக உள்ளார். இவர் எதற்கு அவதரித்தார்? ஏன் இராண்யாக்ஷனால் பூமிப்பிராட்டி ஒளித்து வைக்கப்பட்டாள்? அந்தப் பின்புலத்தைச் சற்றே பார்ப்போம். 

அடியேன் ஓரோர் அத்தியாயமாகத்தான் கூறிக் கொண்டு வந்தேன். ஆனால், இப்போதோ ஸ்ரீ வராஹ அவதாரத்தைச் சொல்லும் ஏழு அத்தியாயங்களையும் ஒரு சேரக் கூறுகிறேன். ஏனென்றால் செய்தி, கோர்வையாகப் புரிய வேண்டுமானால், இவை அனைத்தையும் சேர்த்துச் சொன்னால்தான் எளிதில் விளங்கும். 

ஒரு முறை ப்ரஹ்மாவினுடைய மகன்களான ஸனகர், ஸனத் குமாரர் முதலானோர் வைகுந்தத்தை அடைந்து பெருமானைத் தரிசிக்க விரும்பினார்கள். பகவானுடைய திருக்கோயிலை த்வார பாலகர்களும், க்ஷேத்ர பாலகர்களும் அதாவது - கோயில் காப்பான், வாயில் காப்பான் ஆகியோர் காத்துக் கொண்டிருந்தார்கள். குமுதன், குமுதாக்ஷன், புண்டரீகன், வாமனன், ஸங்கர்ஷணன், ஸர்ப்பநேத்ரன், ஸுமுகன், ஸுப்ரதிஷ்டிதன் ஆகிய எண்மர் க்ஷேத்ர பாலகர்கள். கிழக்குப் புறத்தில் சண்டப் பிரசண்டர்கள்; தெற்குப் புறத்தில் பத்ரன், ஸுபத்ரன்; மேற்குப் புறத்தில் ஜெயன், விஜயன்; வடக்குப் புறத்தில் தாதா, விதாதா ஆகியோர் த்வார பாலகர்கள். 

ஸனகர், ஸனத்குமாரர் முதலானோர் மேற்குப் புறத்திலிருந்து உள்ளே நுழைய முற்பட்டார்கள். அப்போது பகவான் யோக நித்திரை கொண்டிருந்தார். ஆகவே, ஜெயன், விஜயன் ஆகிய த்வார பாலகர்கள், ப்ரஹ்மனின் மகன்களைத் தடுத்தார்கள். சற்று நேரம் பொறுத்துப் போய் தரிசிக்கலாம் என்றனர். அது கண்டு கோபம் கொண்ட ஸனகர், ஸனத்குமாரர்கள் ஜெயன், விஜயன் ஆகியோரை ‘நீங்கள் பூலோகத்தில் போய் பிறக்கக் கடவீர்கள்’ என்று சபித்தார்கள். தாங்கள் செய்த குற்றத்தை உடனே உணர்ந்து கொண்ட ஜெய - விஜயர்கள் மன்னிப்பு வேண்டினார்கள். 

அரவம் கேட்டு, எல்லாம் அறிந்த எம்பெருமான், ஏதும் அறியாதவர் போல் எழுந்து வந்தார். தன்னிடம் தொண்டு புரிபவர்களுக்காக, தானே ஸனகர், ஸனத்குமாரர்களிடத்தே மன்னிப்பு வேண்டினார். இது கண்டு நெகிழ்ந்து போன குமாரர்கள், ‘பகவானே! தாங்கள் இவர்களுக்கு எமது சாபத்தை எவ்விதத்தில் கொடுத்தாலும் அது எங்களுக்குச் சம்மதம். நாங்கள் தடை சொல்ல மாட்டோம்’ என்றனர். 

பெருமானோ, ப்ரஹ்மாவின் குமாரர்களின் சாபத்தை வீணாக்கக் கூடாது என்கிற எண்ணத்தோடே, தானே கூறினார். ‘நீங்கள் பூலோகத்தில் மூன்று முறை அசுரர்களாகப் பிறப்பீர்கள். அப்போது என்னிடத்திலேயே கோபம் கொண்டு எதிர்ப்பீர்கள். இடைவிடாமல் கோபத்தோடே என்னைப் பற்றியே சிந்திப்பீர்கள். இதன் மூலமாக நானே உங்களை அழிப்பேன். நீங்கள் அனைவரும் இறுதியில் என்னை வந்து சேர்வீர்கள்’ என்றார். 

இதன்படியாக ஜெயனும், விஜயனும் மும்முறை பூலோகத்தில் பிறந்தார்கள். அதில் முதல்முறை க்ருத யுகத்தில் ஹிரண்ய கசிபு - ஹிரண்யாக்ஷனாகவும், அடுத்து த்ரேதா யுகத்தில் ராவணன் - கும்பகர்ணனாகவும், அடுத்து த்வாபர யுகத்தில் சிசுபாலன் - தந்தவத்ரனாகவும் பிறந்தனர். இவர்கள் அனைவரையும் பகவானே அழித்தார். இறுதியில் இவர்கள் வைகுந்தத்தைத் திரும்ப அடைந்தார்கள். இதுதான் ஹிரண்யன், ஹிரண் யாக்ஷன் ஆகியோர் பிறந்ததன் பின்புலம். 

இவர்களைப் பெற்றவர்களைப் பற்றிக் கூறுகிறேன். திதி தேவி கச்யபரை மணந்தாள். தவறான காலத்தில் அவரோடு கூடியபடியால், மிகுந்த வீர்யமுள்ள கொடுமைக்காரர்களான இரண்டு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். அவர்களே மூத்தவனான ஹிரண்ய கசிபுவும், இளையவனான ஹிரண்யாக்ஷனும். இவர்கள் வேள்வி, தர்ம காரியங்கள், குழந்தைகள், பெண்கள் ஆகிய அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். ஸ்ரீமன் நாராயணனைத் தங்களுக்கு முதல் விரோதியாக நினைத்து, அவரோடே யுத்தம் செய்து அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்கள். 

ஆகவே, ஹிரண்யாக்ஷன், உலகம் நலிவதற்காக பூமாதேவியை ஒரு துணி போலச் சுருட்டி, அண்டவெளிக்கு அப்பால் உள்ள ப்ரளயக் கடலில் கொண்டு போய் அமிழ்த்தி விட்டான். இவனை அழிப்பதற்காகத்தான் திருமால் வராஹமாக அவதரித்தார். இனி நாம் விட்ட இடத்தைத் தொடர்வோமா? 

பூமியை எப்படி மீட்கலாம் என்று யோசித்தார் ப்ரஹ்மா. அவருடைய மூக்கிலிருந்து சிறிய பன்றிக்குட்டி வெளிவந்து வெகு வேகமாக வளர்ந்தது. எவ்வளவு பெரியதாக வளர்ந்தார்? அவர் என்ன அற்புதச் செயல்களைச் செய்தார்? - என்பதையெல்லாம் அடுத்த வாரம் நோக்குவோம். 

(தொடரும்) 

ஒரு திருத்தம்

அத்தியாயம் 55-ல் ருதுவைப் பற்றி வெளியான விவரங்கள் சரியல்ல. சரியான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்த ருதுவென்றும்; ஆனி, ஆடி க்ரிஷ்ம ருதுவென்றும்; ஆவணி, புரட்டாசி வர்ஷ ருதுவென்றும்; ஐப்பசி, கார்த்திகை சரத் ருதுவென்றும்; மார்கழி, தை ஹேமந்த ருது என்றும்; மாசி, பங்குனி சிசிர ருது என்றும் சொல்லப்படுகின்றன.

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக