மூன்றாவது ஸ்கந்தம் - பனிரெண்டாவது அத்தியாயம்
பிரமன் படைக்கத் தொடங்குதல்
காலத்தின் பெருமையைக் கூறிய மைத்ரேயர், மேலும் ப்ரஹ்மா, சிருஷ்டித்ததை விளக்குகிறார். நான்முகன், தன்னுடைய மனத்திலிருந்தே ஸனகன், ஸனந்தன், ஸனாதனன், ஸனத் குமாரன் என்ற நான்கு குமாரர்களைத் தோற்றுவித்தார். அவர்களை சிருஷ்டித் தொழிலுக்கு வரும்படி அழைத்தார்.
ஆனால், அவர்களோ நாங்கள் ப்ரம்ம த்யானத்திற்காகப் பிறந்தவர்கள், உம்முடைய செயல்களுக்கு நாம் வருவதில்லை என்று கூறி விட்டார்கள். இது கண்டு நான்முகன் கோபமுற்று, தன் புருவத்தை நெறித்தார். அதிலிருந்து பிறந்தவர்தான் ருத்ரன். அவருக்கு நீலலோஹிதர் என்ற முதற்பெயர் ஏற்பட்டது.
ருத்ரன் பிறந்தவுடன் அழுதும், ஓடிக் கொண்டும், ‘எனக்குப் பெயர்களையும், இடங்களையும் கொடுக்க வேண்டும்’ - என்று தன் தந்தையான ப்ரஹ்மாவிடத்தில் வேண்டினார். உடனே பதினோரு பெயர்கள், பதினோரு மனைவியர், வாழ்வதற்கு பதினோரு இடங்கள் ஆகியவற்றை நான்முகன் தன் மகனுக்கு ஈந்தார்.
இன்றும் ஏகாதச ருத்ரர்கள், அதாவது பதினோரு ருத்ரர்கள் என்றே பரமசிவனாருக்குப் பெருமை. மனம், இந்திரியங்கள், பிராணன், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி, சூரியன், சந்திரன், தவம் ஆகிய பதினோரு இடங்களையும் ருத்ரனுக்கு ஈந்தார். மேலும் அவருக்குப் பெயர் சூட்டுவதற்காக, மன்யு, மனு, மஹேசானன், மஹான், சிவன், ருதத்வஜன், உக்ரரேதஸ், பவன், காலன், வாமதேவன், த்ருதவ்ரதன் என்று பெயர் சூட்டினார். அவருக்கு தீஹி, விருத்தி, உசனாஉமா, நியுத், ஸர்பி, இலா, அம்பிகா, இராவதி, ஸுதா, தீக்ஷா, ருத்ராணி ஆகிய மனைவியரையும் கொடுத்தார்.
மகனைப் பார்த்து தந்தை, “நீ மேலும் சிருஷ்டியை வளர்க்கலாம்” என்றார். ருத்ரன் தன் மகிமையால் ருத்ர கணங்கள் அனைவரையும் படைக்க, அவர்கள் உலகத்தையே நிறைத்தனர். அப்போது ருத்ரனிடத்தே நான்முகன், “இப்போது நீ தவம் புரியச் செல்லலாம். தவத்தினால், வலிமையை வளர்த்துக் கொண்டு, மேலும் நீ படைக்கலாம்” - என்று கூறினார்.
தொடர்ந்து நான்முகன், தன்னிடத்திலிருந்து பத்து ரிஷிகளை உருவாக்கினார். மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலகர், க்ருது, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷன், நாரதர் என்ற பதின்மரும் மிகுந்த திறமைசாலிகள், மகிமை உடையவர்கள். அவர்களைப் படைத்து விட்டு, தன்னுடைய நிழலிருந்து கர்த்தம ப்ரஜாபதியைப் படைத்தார்.
பிறகு நான்முகனுடைய நான்கு முகங்களிலிருந்தும் நான்கு வேதங்கள் வெளிப்பட்டன. கிழக்கு முகத்திலிருந்து ரிக், தெற்கு முகத்திலிருந்து யஜுர், மேற்கு முகத்திலிருந்து ஸாமம், வடக்கு முகத்திலிருந்து அதர்வணம் என்கிற வேதங்களும், ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், ஸ்தாபத்தியம் ஆகியவையும், இதிகாச புராணங்களுக்கான இலக்கணங்களும் ப்ரஹ்மாவிடத்திலிருந்தே தோன்றின.
மேலும் கல்வி, தானம், தவம், உண்மை ஆகிய நான்கும், தர்மத்தின் நான்கு கால்களாய் அவரிடத்திருந்து பிறந்தன. இது தவிர, நாம் செய்யுள் எழுதுவதற்குப் பயன்படும் சந்தஸ்கள், அதாவது காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதீ ஆகிய சந்தஸ்கள். வடமொழி ச்லோகத்தை நான்காகப் பிரித்தால், ஒரு கால் ச்லோகத்துக்கு ஒரு பாதம் என்று பெயர். ஒரு பாதத்திற்கு எத்தனை எழுத்துக்கள் என்கிற கணக்கின் படி சந்தஸ்கள் வேறுபடும்.
காயத்ரி சந்தஸ்கள் என்றால் ஆறு எழுத்துக்கள். உஷ்ணிக் என்றால் ஏழு எழுத்துக்கள். அனுஷ்டுப் என்றால் எட்டு எழுத்துக்கள். இப்படியாகக் கொள்ள வேண்டும். சந்தஸ்கள், எழுத்துகள் ஆகிய அனைத்தையும் தன்னிடத்திலிருந்து பிறப்பித்த நான்முகன் சப்த மயமாகவே தோற்றமளித்தார்.
மேலும் அவர் தியானிக்கும்போது தன்னில் ஒரு அம்சத்தை இரண்டாகப் பிரித்தார். ஒரு பகுதியிலிருந்து ஆணான மனுவும், மற்றொரு பகுதியிலிருந்து பெண்ணான ஸதரூபையும் தோன்றினார்கள். இவர்கள் இருவருக்கும் திருக்கல்யாணம் நடந்து, ப்ர்யம்வ்ரதன், உத்தானபாதன் என்கிற இரண்டு மகன்களும், ஆஹூதி, தேவஹூதி, பிரஸூதி என்கிற மூன்று மகள்களும் பிறந்தார்கள்.
இனிமேல் திருமால் அவதரிக்கப் போகிறார். ஸ்வயாம்புவ மனு படைக்க ஆரம்பிக்க, அவர், தான் படைத்தவர்களை வைப்பதற்குப் பூமியைத் தேட, ஹிராண்யக்ஷன் என்னும் அசுரன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். அவனை அழிக்கவே பெரும் பன்றி உருவத்தில் வராகப் பெருமான் அவதரிக்கப் போகிறார். எதிர் நோக்குவோம்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்