திங்கள், 27 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 17 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்


ஸ்லோகம் – 8 

ஸ்ருதி முதலானவைகளாலே சொல்லப்பட்ட அனைத்து ஆத்மகுணங்களும் (அஹிம்ஸை, மெய்பேசுதல், கொடுமையில்லாமை, தூய்மை, பொறியடக்கம், கொடைத்தன்மை, மனவடக்கம், பொறுமை, அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும்.) நிறம்பினவர் மணவாளமாமுனிகள் என்று சிறந்த ஞானபக்தி நிஷ்டர்களான கூரத்தாழ்வான் போல்வார்கள் கூட என்னைக் கொண்டாடும் அளவுக்கு நான் நடந்து கொண்டிருக்கிறேன். கூரத்தாழ்வானை ஏமாற்ற முடியுமா? முதலியாண்டானை ஏமாற்ற முடியுமா? நான் ஏமாற்றி இருக்கின்றேன். இவர்கள் எல்லோரும் மஹா ஞானிகள். ஏன் ஏமாறுகிறார்கள் தெரியுமோ. இவன் ராமானுஜர் ஸம்பந்தி என்ற பெயர் வைத்து இருப்பதால் ஏமாந்துவிட்டனர்.

எறும்பியப்பா தான் எழுதிய க்ரந்தத்திலே, திருமண்காப்பு நன்றாக இருக்கிறது. ராமானுஜதாஸன் என்று தாஸ்ய நாமா வைத்துக் கொண்டிருக்கிறாரே. இப்படி இருக்கிறவர்கள் முதல் கோஷ்டி என்கிறார். இவர்களிடம் நாம் தப்பே பண்ணக் கூடாது. அபசாரப் படக்கூடாது என்கிறார். அவர்களுக்கு வேண்டிய நல்லதைச் செய்துவிட்டு விலகிப் போய்விடவேண்டும் என்கிறார். இவர்களுக்குத்தான் நாம ரூப ப்ரதானர்கள் என்று பெயர் கொடுத்துள்ளனர். 12 திருமண்காப்பு இருக்கும். துளசி மணிமாலைகள் எல்லாம் அணிந்துகொண்டிருப்பர். அடியேன் ராமானுஜதாஸன் என்று ரொம்ப அழகாகச் சொல்லுவர். ஆனால் அநுஷ்டானம் இருக்குமா என்றால் தெரியாது. இவர்களிடமும் நீ அபசாரப் படாதே. ஏன் என்றால் அந்த அளவுக்கு பின்பற்றுகிறார்கள் அல்லவா? இது இருந்துவிட்டது என்றால் நாளைக்கு தேறிவந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் அல்லவா? இவர்களிடம் அபசாரப்படாதே என்கிறார்.

அத்யா அபி வஞ்சநபர: அத்ர யதீந்த்ர! வர்த்தே – இப்படித்தான் அடியேன் நடந்துகொண்டு வருகிறேன். தேவரீர்தான் போக்கிக் கொடுக்கவேண்டும் என்று ஏழாவது ஸ்லோகத்தில் பிரார்த்தித்தார்.

எட்டாவது ஸ்லோகம்: 

खावहोहमनिशं तव दुष्टचेष्टः शब्दादिभोगनिरतः शरणागताख्यः ।
त्वत्पादभक्त इव शिष्टजनैघमध्ये मिथ्या चरामि यतिराज! ततोSस्मि मूर्खः ॥ (8)

து:காவஹோ அஹம் அநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க: || (8)

அடியேன் மூர்க்கன். ஏன்? உம்மைச்சுற்றி அடியவர்கள் கூட்டம் நின்று கொண்டு ராமானுஜ ராமானுஜ என்று சொல்லிகொண்டு இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்குள் சத்தம்போடாமல் நானும் நுழைந்தேன். அந்த கூட்டத்துக்குள் நுழைவதற்கு ஏதாவது யோக்யதை இருக்கிறதா என்று கேட்டீர்களானால், எனக்கும் அந்தக் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. எந்த யோக்யதையும் எனக்குக் கிடையாது ஆனால் நுழைந்தேன். என்ன என்ன தப்பு பண்ணியிருக்கிறீர் என்று ஸ்வாமி யதிராஜர் கேட்டார்: 

ஹே யதிராஜ – யதிராஜரே, எம்பெருமானாரே

துஷ்டசேஷ்ட: - துஷ்ட சேஷ்டை உடைய, ஸாஸ்திரங்கள் விலக்கிய காரியங்களை செய்யும் அடியேன், அதோடு அநுதாபமோ, அய்யோ இப்படிச் செய்கிறோமே என்ற வருத்தமும் இல்லாதவன். சாஸ்திரம் சொன்னதைச் செய்யவில்லையே என்று வெட்கமும் படவில்லை. ஒருவருக்கு 75 வயது. விடாமல் நித்திய நைமித்திக கர்மங்களைப் பண்ணிக் கொண்டிருக்கிறார். தகப்பனார் போய் 40 வருடங்களாக விடாமல் மாத தர்ப்பணம், அமாவாசை தர்ப்பணம் சிரார்த்தம் எல்லாம் பண்ணிக் கொண்டிருக்கின்றார். சரியாக கவனிக்காமல் ஒரு சிரார்த்த தேதியை விட்டுவிட்டார். விட்டுவிட்டோமே என்று துக்கமும் பயமும் இருக்கவேண்டாமோ. பண்ணாம விட்டது முதல் தப்பு. விட்டதுக்கு அனுதாபப் படாமல் இருப்பது இரண்டாவது பெரிய தப்பு நான் ஸாஸ்திரப்படி பண்ணவுமில்லை, வெட்கமோ, அநுதாபமோகூடப் படவுமில்லை என்று சொல்கிறார். இதுதான் துஷ்ட சேஷ்டை.

அஹம் – இப்படி கெடுதியான வியாபாரத்தை உடைய அடியேன், 

ஸப்தாதி போகநிரத: – ஸப்தாதி நீச விஷயங்களை அநுபவிப்பதில் மிகவூன்றியவனாய், 
நாமும் இப்படித்தானே ஸப்தாதி விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். வேளாவேளைக்கு சாப்பாடு தேடுகிறோமே. அப்ப அப்ப நொறுக்குத் தீனியை வேறு நாடுகிறோமே. எங்காவது போனால் ஏதாவது சாப்பிடக் கிடைக்காதா என்று தேடுகிறோமே. இப்படியே இருக்கு என்றால். ஆமாம் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்றியாக வேண்டும். இதை நினைத்துக் கவலைப்படவேண்டாம். மாறவேண்டும் என்ற புத்தி வந்தால் போதும். புத்தி வந்தால் மட்டும் போதாது. வந்தவுடன் யதிராஜ விம்ஶதியைச் சொல்லி ஸ்வாமியிடம் பிரார்த்திதோமானால் தன்னைபோல இதிலிருக்கும் விருப்பத்தைக் குறைத்துக் கொடுத்துவிடப் போகிறார். சப்தாதி விஷயங்களில் ஆஸக்தி உடையவனாகவும்

ஸரணாகத ஆக்ய: – (ஒரே ஒரு பேர்மட்டும் வாங்கிவிட்டேன்.) ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய், சரணாகதனுக்கு உண்டான பண்புகள் இருக்கிறதா. அதெல்லாம் இல்லை. கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கிய கெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (அதனால்) சரணாகதன் என்ற பெயரை உடையவனாகவும்.,

இதனாலே என்னை விட்டுவிடவும் முடியாது. ஏனெனில் சரணாகதன். என்னைப் பிடித்துவிடவும் முடியாது. ஏனென்றால் ஒரு ஆத்ம குணமும் வரவில்லையாதலால். விடவும் முடியாது. சேர்த்துக் கொள்ளவும் முடியாது என்ற நிலையில் வைத்துவிட்டேன் அல்லவா? அதனால்

தவ து:க ஆவஹ: – தேவரீருக்கு துக்கத்தை உண்டுபண்ணுமவனாய் இருக்கிற, இவன் கிட்ட என்ன பண்ணுவது என்று ஸ்வாமி துக்கப்படுகிறார். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சரணாகதி பண்ணியவனை ராமானுஜர் விட்டுவிட்டாரே என்று ஊரார் சொல்லுவர். இவனை ஏற்றுக் கொண்டோம் என்றால் ஒரு ஆத்ம குணமும் இல்லாதவனை ராமானுஜர் ஏற்றுக் கொண்டாரே என்றும் சொல்வர். இவன் படுகிற பாட்டை நம் தலையில் வைத்து விட்டானே என்று ஸ்வாமி துக்கப்படும் அளவுக்கு வைத்துவிட்டர். குற்றத்தை அவ்வளவு நன்றாகச் சொல்லிக் கொள்கிறார் மாமுனிகள் என்று அர்த்தம். 

யதிராஜர் ஒரு துக்கமும் படப் போவதில்லை. அவருடைய ஒரு கடாக்ஷத்திலே அனைத்து பாவங்களும் போய்விடாதோ! ஒரு நிமிஷத்தில் மோக்ஷம் கொடுக்கவும் வல்லவர். ஆனால் அந்த வல்லமைக்கு முன்னால் நான் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டுள்ளேன் என்று சொல்ல வேண்டும் அல்லவா. ஆக சரணாகதன் என்ற பெயரை உடையவனாய் எக்காலமும் உமக்கு துக்கத்தையே கொடுப்பவனாய் நிற்கின்றேன். 

சிஷ்டஜந ஔக மத்யே த்வத் பாத பக்த: இவ – அதீத ஞானம், உண்மையான பக்தி இருக்கின்றவர்கள் சிஷ்ட ஜநங்கள். ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில், தேவரீர் திருவடிகளில் பக்திபூண்ட, அன்பிருப்பவன்போல் சொல்லிக் கொண்டு உள் நுழைந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து நேற்று உத்ஸவத்துக்கு வந்திருந்தீர்கள் அல்லவா என்று எல்லோரும் கேட்கும் படி நடந்து கொள்கிறேன். அவர்களைப் பார்த்து நிறைய உத்ஸவங்களில் உம்மைப் பார்த்துள்ளேன். ஆனால் ஆனிமாத பெரியாழ்வார் உத்ஸவத்துக்கு வரவில்லை போலிருக்கிறதே என்று கேட்பேன்.. அவர்கள் பார்த்து இவர் பரம பக்தராக இருக்கிறார். நம்மால் எல்லாவற்றுக்கும் போக முடியவில்லையே என்று நினைக்கும்படி பண்ணிவிட்டேன். மிகவும் ப்ரேமம் உடையவன் போலே. 

மித்யா சராமி – நேர்மையில்லாத பொய்யனாகவே திரிகின்றேன்,

தத: மூர்க்கஅஸ்மி – அக்காரணத்தினால் (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன், மூர்க்கன் என்றால் எந்த இடத்தில் ஸ்நேஹம் இருக்கணுமோ அங்கு இல்லை. எங்கு ஸ்நேஹம் வைக்கக் கூடாதோ அங்கு வைத்திருக்கிறேன். கீதையில் அர்ஜுனனை கண்ணன் வைதுவிடுவார். எங்கு ஸ்நேஹம் வைக்கக் கூடாதோ அங்கு ஸ்நேஹம் வைக்கிறாய். தகாத இடத்தில் கருணை கொண்டுள்ளாய் கீதார்த்த ஸங்க்ரஹத்தில். 

“அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்”

எதில் ஸ்நேஹம் இருக்கக் கூடாது? சப்தாதி விஷயங்களில் ஸ்நேஹம் இருக்கக் கூடாது. ருசியால் மீனும், ஸப்தத்தால் மானும், ஸ்பர்சத்தால் யானையும், மாட்டிக் கொள்கிறது அல்லவா. அதனால் கூடாது. ஆனால் அடியேன் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கின்றேன். இதர விஷயத்தில் ஒரே ஆசை உன்னிடத்தில் ஆசையில்லை சரணாகதன் என்று பேர் மட்டும் வாங்கி வைத்திருக்கிறேன். அதனால் என்னைக் கைக் கொள்வாயா கைவிடுவாயா என்றே தெரியவில்லை. கூரத்தாழ்வான் ஸாதிக்கிறார், “ஶரணம் என்ற வார்த்தைகூட என் வாயில் வந்திருக்காது. உன் அநுக்ரஹத்தால் வந்தது” ஶரணம் என்ற சொல் மட்டும் தெரிகிறது. பொருள் தெரியாது. [ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறுகதியில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதும் உடையேனல்லேன் என்றபடி. ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக்கூடிய நன்மையே செய்யவேண்டுமென்று நினைத்தல், தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிச்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல், தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல், வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய ஸ்வபாவங்களில் ஏதும் உடையேனல்லேன் என்றபடியும் ஆம்] அந்தச் சொல்லை வைத்துக் கொண்டுதான் தேவரீர் அநுக்ரஹிக்கவேண்டும். 

விலகியாவது போயிருக்கவேண்டும் அல்லவா. என்னிடம் உண்மையான பக்தி இல்லை. இந்த பக்தர்கள் கூட்டத்தில் நுழைந்து குழப்பம் விளைவித்து விட்டேன். என்னை என்ன பேர் வைத்து அழைப்பது. சரணாகதன் நான் சொன்னேன். மூர்கன் என்று நீர் சொல்லுவீர். அவ்வளவுதான் சொல்ல முடியும். ஆனால் மூர்கன் என்ற கோஷ்டியில் சேர்த்து என்னை தள்ளிவிட்டுவிட வேண்டாம். உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கியருளவேணும்.

து:காவஹோ அஹம் அநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க:||

எட்டாவது ஸ்லோகம் முற்றும். 

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக