திங்கள், 27 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 16 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

மதுரகவியாழ்வாரின் ஆசார்ய நிஷ்டை


எந்த உயர்ந்த அர்த்தங்களும் பரதெய்வத்தை மதித்து வணங்குவதைப் போல் குருவையும் மதித்து வணங்குபவனுக்கே சொல்லப்பட வேண்டும். குருவை தெய்வமாகக் கொள்ள வேண்டும். தைத்திரீய உபநிஷத் “ஆச்சார்ய தேவோ பவ” என்கிறது.


குரு தான் பிரம்மம். குருதான் மேலான வழி. குரு தான் மேலான வித்தை. குருதான் மேலான பொருள். குருதான் அடையத்தக்கவன். குருதான் மேலான செல்வம். குருதான் எல்லாம். இதுவே ஆசாரிய சிஷ்டை. பகவானைப் பற்றி உபதேசம் செய்வதால் எம்பெருமானைக் காட்டிலும் சிறந்தவன்.


ஆசாரியனே சிறந்தவன்! :


வேதங்கள், தேவதைகளிடம் பக்தி செய்யச் சொல்வதை விட, ஆசார்யனிடம் பக்தி செய்ய வேண்டுவதையும், அவன் காட்டிக் கொடுக்கும் பரதெய்வத்திடம் பக்தி செய்ய வேண்டுவதையுமே அதிகம் வலியுறுத்தின. யார் ஆசாரியன் என்றொரு கேள்வி. 


அம்பொன் அரங்கற்கும், ஆவிக்கும், 
சம்பந்தங்காட்டி, தடை காட்டி, 
உம்பர் திவம் (பேறு) என்னும் வாழ்வுக்கு 
சேர்த்த நெறி (உபாயம்) காட்டுபவன் ஆசாரியன். (விளாஞ்சோலைப் பிள்ளை வாக்கு)


பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் பாலம் அமைப்பவன் குரு. இதயத்தில் உள்ள அஞ்ஞான இருட்டை விரட்டி அடிப்பவன் குரு.


ஈஸ்வர சம்பந்தம் நல்லதுதான். ஆனால் அது பந்தம், மோட்சம் இரண்டுக்கும் பொதுவாக இருக்கும். ஆனால் ஆசாரிய சம்பந்தம் என்பது மோட்சத்துக்கு ஹேதுவாக இருக்கும் என்கிறது ஸ்ரீவசன பூஷணம். 


ஆசாரிய அபிமானமே மதுரகவியாழ்வார் வாழ்க்கை :


இந்த ஆசாரிய நிஷ்டையை உலகுக்குத் தன் செயலாலும், சொல்லாலும் நிரூபித்துக் காட்டியவர்தான் மதுரகவியாழ்வார். இதைச் சொல்வதே மதுரகவி ஆழ்வார் வாழ்க்கைச் செய்தி. பாண்டிய நாட்டில் உள்ள திவ்ய தேசம் திருக்கோளூர். அது தான் மதுரகவியாழ்வார் அவதரித்த ஊர்.


எம்பெருமானுக்கு “வைத்த மாநிதிப் பெருமாள்” என்று பெயர். குபேரன் தன்னுடைய நிதிகளை எல்லாம் இழந்து, வைத்த மாநிதிப் பெருமாளை நோக்கி தவம் இருந்து நவநிதிகளையும் பெற்றதாக தல வரலாறு கூறும். நமக்கும் மதுரகவியாழ்வார் மூலமாக நவ நிதியத்தை வைத்த மாநிதிப் பெருமாள் தந்திருக்கிறார். அவர் மூலமாகத் தான் நவநிதியங்களான ஆழ்வார்களின் அருளிச் செயல் பாசுரங்களும் நமக்குக் கிடைத்தன.


பிராமண குலத்தில் பிறந்த இவர் வேத வேதாந்தங்கள் என்று மரபுக்கே உரிய கல்வியைக் கற்று, இளம் வயதிலேயே பெரிய பண்டிதர் ஆனார். இறையனுபவம் பெற வேண்டி வடமதுரை, காசி, கயை, நைமிசாரண்யம், சாளக்கிராமம், பதரிகாச்ரமம் என்று அத்தனைத் தலங்களையும் தரிசித்தவர், ஸரயூ நதிக்கரையில் அமைந்திருக்கும் அயோத்தி மாநகரத்தை அடைந்தார்.


அங்கே அர்ச்சாவதார அழகனாய் எழுந்தருளியிருக்கும் இராமபிரானைச் சேவித்துக் கொண்டே பல நாட்கள் தங்கியிருந்தார். ஓர் நாள் இரவு. தான் பிறந்த ஊரான திருக்கோளூரின் திசை நோக்கித் தொழுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மதுரகவிகள், அன்றும் தென்திசை நோக்கி தியான ரூபமாய்த் தொழுது நின்றபோது, வானத்தில் அதிசயிக்கத்தக்க ஓர் ஜோதியைக் கண்டு வியந்தார். ஜோதி தெரியும் திசையையே ஆதாரமாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். 


நம்மாழ்வாரே குரு :


பல நாட்கள் நடையாய் நடந்து திருக்குருகூர் அடைந்தார். அங்கே அழகே ஓர் வடிவாய், சின்முத்திரையோடு, ஆடாது அசையாது, வாடாது, வதங்காது, அமர்ந்திருக்கும் பாலகனின் எழில் தோற்றத்தைக் கண்டார். உள்ளுணர்வும் மெய்யுணர்வும் உந்தித் தள்ள தன் குருவைக் கண்டார். அடுத்த கணம் வயதில் மூத்தவரான மதுரகவிகள், ஞானத்தில் மூத்தவரான நம்மாழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்தார். ''அடியேனை ஏற்றருள வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.


இப்படிப்பட்ட சீடருக்காகவன்றோ வேறு யார் தொடர்பும் இல்லாமல், இத்தனை காலம் காத்திருந்தார் அவர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆழ்வார் செந்தமிழால் எம்பெருமானைப் பாட ஆரம்பித்தார். அவற்றை மதுரகவியாழ்வார் ஓலைப்படுத்திக் கொண்டே வந்தார். வேதம், தமிழில் ஆழ்வாரின் வாய்மொழியாக வெளிப்பட்டது. அதை மதுரகவியாழ்வார் எழுதிக் கொண்டே வந்தார். ஆழ்வார்கள் 12 பேர். அதிலே தலையானவர் நம்மாழ்வார்.


“அவயவி” என்பார்கள். “பிரபன்ன ஜன கூடஸ்தர்”, என்றும் சொல்லுவார்கள். வேதங்களை நான்காக வகுத்து அதனை உலகமெல்லாம் பரப்பியவர் வேத வியாசர். வியாசரைப் போன்ற நம்மாழ்வாரின் தமிழ் வேதமான திருவாய்மொழியைப் பாடிப் பரப்பியவர் மதுரகவியாழ்வார். 


நம்மாழ்வாரும் மதுரகவிகளும் :


பகவானைப் பார்த்து, பகவானே “நீ எனக்கு அமுதமாக இருக்கிறாய்” என்று பாடினார் நம்மாழ்வார். அப்படிப் பாடிய நம்மாழ்வாரின் திருப்பெயரை “தென்குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே என” அதரத்தில் ஊறும் அமுதமாகக் கொண்டார் மதுரகவி ஆழ்வார். ஆவியே அமுதே என அச்சுதனைப் பற்றினார் அவர் (நம்மாழ்வார்). "தேவுமற்றறியேன்" என்று நம்மாழ்வாரை விடாப்பிடியாகப் பிடித்து கொண்டவர் மதுரகவியாழ்வார். அதனால்தான்
“அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும் தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே!” என்று மதுரகவியாழ்வாரின் ஏற்றத்தை வேதாந்த தேசிகர் பாடினார். 


சத்ருக்கண நிஷ்டை :


இராமாயணத்திலே பரதனைத் தவிர வேறு அறியாத சத்ருக்கணனின் தன்மையில் ஆழ்வார் பாவம் இருப்பதாக தமது விரிவுரையில் நம்பிள்ளை பேசுவார்.


பிதுர் வாக்ய பரிபாலனம் போன்ற சாஸ்திர தர்மங்களை நடத்திக் காட்டிவன் இராமன். அவனுக்கு ஒழிவில் காலமெல்லாம் வழுவிலா அடிமை செய்தவன் இலக்குவன். (பகவத் தொண்டு) அதனால் ஸ்ரீமாந் ஆனவன். பகவான் உகந்த தொண்டையும் பகவான் நியமித்த தொண்டையும் செய்தவன் பரதன். அதனால் நிகரிலா புகழை அடைந்தவன். பரம பாகவதன் என்று நிலை அடைந்தவன். அந்த பாகவதனுக்கு அருகிருந்து தொண்டு செய்தலையே தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவன் சத்ருக்ணன். இதைத்தான் பக்தியின் நிறைவான நிலை (சரம பர்வ நிஷ்டை) என்பர். அந்த நிஷ்டையே மதுரகவியின் நிஷ்டை. ஆசாரிய நியமனத்தாலே பகவானை தரிசித்தவர். ஆசாரியர்களிலே வடுக நம்பியின் நிஷ்டையும் இதுதான்.


ஆசாரிய அபிமானம் காட்டும் பிரபந்தமே இவருடையது :


ஆசாரிய அபிமான பிரபந்தமே கண்ணிநுண்சிறுத்தாம்பு.
“வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல் 
சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்த புகழ் ஆரியர்கள் 
தாங்கள் அருளிச் செயல் நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” என்று இதன் சிறப்பை உபதேச ரத்னமாலையில் போற்றுவர் ஸ்ரீமணவாள மாமுனிகள்.


வேதங்களின் சுருக்கம் திருமந்திரம். அந்த எட்டெழுத்து மந்திரத்தின் இடையில் உள்ள பதம் “நம:” பதம். “ம” என்றால் எனக்கு; “ந” என்றால் இல்லை என்று அர்த்தம். "நான் எனக்கு உரியவன் அல்ல" என்பது தான் நம பதத்தின் பொருள். “நான் எம் பெருமானுக்கு சேஷமானவன்” என்று சொல்வதுதான் அந்தப் பதத்தின் பொருள்.


நான் என்னுடையவன் அல்ல என்று சொன்னால் அடுத்த கேள்வி எழும். பின் நீ யாருக்கு உரியவன் என்று. சாதாரண விடையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பெருமானுக்கு உரியவன் என்று சொல்லலாம். சிறப்பான பொருளில் இதன் பொருளைத் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னால் இந்த ஆத்மாவானது ஆசாரியனுக்கு உரியது என்று தான் விடை வரும். இந்த விடையைச் சொல்வது தான் கண்ணிநுண்சிறுத்தாம்பு பிரபந்தம்.


ஆழ்வார்கள் அருளிச் செயலின் பாசுரங்களை எல்லாம் ஒரு தட்டிலும், மதுரகவி ஆழ்வார் பாடிய கண்ணிநுண்சிறுதாம்பு பாசுரத்தை ஒரு தட்டிலும் வைத்தால் கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரம் வைத்த தட்டு தான் பாரத்தால் இறங்கி இருக்கும். காரணம் அது ஆசாரிய அபிமானத்தைக் காட்டும் பிரபந்தம். 


இங்கேயே மோட்சம் :


பெருமானின் கிருபை இருந்தால் நாம் இறப்பிற்குப் பின் சென்று வைகுந்தத்தை காண முடியும்.
ஆச்சாரிய அபிமானமும் அருளும் நம்பிக்கையும் இருந்தால் அந்த வைகுந்தத்தை இங்கேயே காணலாம்.


“குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார்வதி வைகுந்தம் காண்மினே” என்று இதைத்தான் தன் அனுபவமாகப் பாடினார் மதுரகவி.


நாதமுனிகள் தந்த சாவி :


எம் பெருமானைத் தெரிந்து கொள்வதற்கு 4000 பாசுரங்கள் வேண்டும். 4000 பாசுரங்கள் எம்பெருமானைக் காணுவதற்கான வாசல் என்று சொன்னால் அந்த வாசலைத் திறக்கின்ற சாவிதான் கண்ணிநுண்சிறுதாம்பு.


மதுரகவியாழ்வார் அருளிச் செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற சாவி கொண்டுதான் நாதமுனிகள் 4000 பாசுரங்களையும் பெற்றார். நம்மாழ்வார் மதுரகவியாழ்வாரை தனக்காக எழுதிக் கொண்டதை “ததேக சேஷி” என்ற பதத்தால் ஸ்ரீநாதமுனிகள் தனியனிலே காட்டுகின்றார்.


வேதத்தின் உட்பொருள் இதுதான் :


பாட்டு கேட்கும் இடமாக பரமபதத்தையும், கூப்பாடு கேட்கும் இடமாக பாற்கடலையும், குதித்த இடமாக விபவத்தையும், வளைத்த இடமாக அர்ச்சாவதாரத்தையும் காட்டுவார்கள்.


மதுரகவியாழ்வாருக்கு இந்த இடங்கள் அனைத்தும் நம்மாழ்வார் தான். அவரை சமஸ்த விஷயமுமாய் (எல்லாமுமாய்) அன்னையாய் அத்தனாய் தன்னை ஆண்டிடும் தெய்வமாய் நினைத்தார். “ஆராவமுதே” என அழைத்து புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக் கீழ் புகுந்தேன் என்று பரமாத்மாவின் திருவடிகளில் சரண் புகுந்தார் நம்மாழ்வார். அந்த “நம்மாழ்வார் பாசுரங்களைப் பாடி” “நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் பாவின் இன்னிசை பாடி மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே” என்று ஆழ்வாரிடம் சரணம் புகுந்தார் மதுர கவியாழ்வார். 

வைணவத் தத்துவத்தில் ஆண்டவனுக்கு, அடிமைப்படுதலை “முதல் நிலை” என்பர். அவன் அடியார்க்கு அடிமைப்படுதலை “இறுதி நிலை” (சரம நிலை) என்பர். இதனை மதுரகவியாழ்வாருக்கு யார் சொல்லித் தந்தது? நம்மாழ்வார்! எப்படி? மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்று ஆசாரியனின் உதவியை காட்டி கண்ணீர் வடிக்கிறார் மதுரகவி (பாட்டு9) “பயிலும் சுடரொளி” என்கிற திருவாய்மொழி மூலமும் “நெடுமாற்கு அடிமை” என்ற திருவாய்மொழி மூலமும் இதனைச் சொன்னார்.


"கல்லைக் குழித்து நீரை நிறுத்துவாரைப் போல" இந்த அற்புதமான கருத்துக்களை நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் மனத்திலே நிறுத்தி விட்டதாக நஞ்சீயர் விரிவுரை இடுவார். 


நம்மாழ்வார் நிஷ்டையும் மதுரகவிகள் நிஷ்டையும் :


பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும் கூட கிருஷ்ணாவதாரம் சிறப்பானது. அதிலும் அவருடைய பால லீலைகள் சிறப்பானது. காரணம் பகவான் தன் மேன்மையையும் பெருமையையும் எளிமையையும் ஒன்றாக காட்டியது அதில்தான். வெண்ணெய் திருடி அகப்பட்டுக் கொண்டு ஆய்ச்சியின் குறுந்தாம்பினால் கட்டுப்பட்டவன்.


மத்துறு கடை வெண்ணெய் களவினில் ஆப்புண்டு 
எத்திறம் உரலிடை இணைந்திருந்து ஏங்கிய எளிவே! என்று சௌலப்பிய குண விசேஷத்தில் ஆறு மாதம் மோகித்து விழுந்தார் நம்மாழ்வார். அப்படி மயங்கி கிடந்த நம்மாழ்வாரிடம் மயங்கினார் மதுரகவி ஆழ்வார். 


பிடித்தார் பிடித்தாரைப் பற்றி :


வேத வேதாந்தங்களின் அர்த்தத்தை தன்னுடைய சீடனுக்கு மறைக்காமல் காட்டுவது ஆசாரியன் வேலை. அப்படிக் காட்டிக் கொடுத்த ஆசாரியனுடைய புகழைப் பரப்புவது சீடனின் வேலை.
ஆச்சாரியரான நம்மாழ்வாரின் நான்கு வேதத்துக்கு நிகரான நான்கு பிரபந்தங்களையும் பரப்பியவர் மதுரகவி ஆழ்வார். அதற்காக தாமிரபரணி தண்ணீரைக் காய்ச்சி ஒரு திரு உருவத்தையும் பெற்றார். எங்கெங்கும் அவர் புகழைப் பரப்பினார்.


“பெருமான் வகுளாபரணன் அருள் கூர்ந்து ஓவா துரையா பிரமா மறையின் ஒரு சொல் பெறுமோ உலகிற் கவியே” என நம்மாழ்வார் பிரபந்த ஏற்றத்தை நாடு போற்ற பரப்பினார். அதன் பெருமைக்கே மதுரமான வாக்கினால் பதினோரு பாசுரங்களைப் பாடினார். ஆசாரியனைப் பற்றிய பாடல்கள் “மதுரம்” என்பதினாலேயே இவருக்கு மதுரகவியாழ்வார் என்று பெயர்.


ஆசாரிய சேஷத்துவத்தின் சிகரம் என்று மதுரகவி ஆழ்வாரை அழைப்பர். அவர் பகவானைப் பிடித்தார். பகவானைப் பிடித்த ஆழ்வாரை இவர் பிடித்தார். “பிடித்தார் பிடித்தாரைப் பற்றி” என்று இதுவும் நம்மாழ்வார் காட்டிக் கொடுத்த வழிதான். ஆயிரம் திருவாய்மொழி படிக்க அவகாசமில்லாதவர்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு 11 பாடல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்! ஆசாரிய அபிமானத்தைப் பெற அதுவொன்றே வழி. 


ஸ்ரீமதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்.


வாழ்க்கை நெறிகள் வளரும்.....


நன்றி - சப்தகிரி ஏப்ரல் 2019


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக