ஐந்தாவது ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்
(ஜடபரதன் ரஹோகண மன்னவனுக்குத் தத்வோபதேசம் செய்தல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பால் ஸிந்து தேசங்களுக்கும் ஸௌவீர தேசங்களுக்கும் ப்ரபுவாகிய ரஹோகண மன்னவன் கபில முனிவரிடம் தத்வங்களை அறிய விரும்பி அவர் இருக்குமிடம் தேடிப்போய்க் கொண்டிருக்கையில் வழியில் இக்ஷமதியென்னும் நதியின் கரையில் பல்லக்குத் தூக்க ஆள்வேண்டித் தேடும் ஸமயத்தில், பல்லக்கு எடுப்பவர்களின் தலைவன் ஆங்கிரஸருடைய புதல்வனாகிய ஜடபரதனைத் தெய்வாதீனமாய்க் கண்டு, “இவன் உடம்பெல்லாம் பருத்து யௌவன (வாலிப) வயதும் அமைந்திருக்கிறான். இவனுடைய அங்கங்களெல்லாம் கட்டுத் தளராமல் உறுதியாயிருக்கின்றன. ஆகையால் இவன் வ்ருஷபம் (எருது) போலும் கழுதைபோலும் பாரம் சுமக்கவல்லவன்” என்று ஆலோசித்து முன்னமே வெட்டிக்குப் பிடித்துக் கொண்டவர்களோடு இவனையும் பலாத்காரமாகப் பிடித்துச் சேர்த்துக்கொண்டான். அம்மஹானுபாவன் பல்லக்குத் தூக்கத் தகாதவனாயினும் அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். அந்த ப்ராஹ்மண ச்ரேஷ்டனாகிய ஜடபரதன் ஜந்துஹிம்ஸை (ப்ராணிகளுக்கு துன்பம்) வாராமைக்காக ஒரு பாணத்தளவு தூரம் பூமியைப் பார்த்துக்கொண்டே மெதுவாக நடந்தானாகையால் ஜடபரதரது நடை மற்றவரது நடையோடு ஒத்திருக்கவில்லை. அதனால் பல்லக்கும் அடிக்கொருதரம் கோணலாகப்போக ஆரம்பித்தது. ரஹோகண மன்னன் அதை ஆலோசித்துப் பல்லக்குத் தூக்கும் புருஷர்களைப் பார்த்து ஓ பல்லக்கு எடுக்கிறவர்களே! நன்கு நடப்பீர்களாக. ஏன் பல்லக்கை இங்கனம் கோணலாய்த் தூக்கிக்கொண்டு போகிறீர்கள்?” என்றான். அவர்கள் அம்மன்னவன் அதட்டிச் சொன்ன வார்த்தையைக் கேட்டுத் தண்டிப்பானென்று பயந்து அவனைக் குறித்து “மன்னவனே! நாங்கள் மன ஆக்கத்தவறுதலின்றி உனது கட்டளைக்குட்பட்டு நன்றாகவே சுமக்கின்றோம். பின்னையென்னவெனில், இவன் இப்பொழுதே தூக்க வந்தவனாயினும் வேகமாய் நடக்கமாட்டாதிருக்கின்றான். இவனோடுகூட எங்களால் தூக்கமுடியாது” என்றார்கள். அவர்கள் இங்கனம் மன இரக்கத்திற்கிடமாக மொழிந்த வசனத்தைக்கேட்ட மன்னவன், ஒருவனுடைய தோஷம் அவனுடைய ஸம்பந்தத்தினால் மற்றெல்லோர்க்கும் உண்டாகிறதென்று நிச்சயித்துப் பெரியோர்களைப் பணிந்து படித்தவனாயினும் இயற்கையில் ஏற்பட்ட ரஜோகுணத்தினால் பரவசனாகிச் சிறிது கோபங்கொண்டு ப்ரஹ்மதேஜஸ் வெளித்தோற்றாமல் உள்ளே அடங்கியிருப்பவரும் நீறுபூத்த நெருப்புப் போன்றவருமாகிய அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து “அப்பா! வாஸ்தவம் (உண்மையில்) நிரம்பவும் இளைப்புற்றிருக்கின்றாய்; வெகு நேரமாய் நீயொருவனே நெடுந்தூரம் பல்லக்குச் சுமந்து வந்தாயல்லவா? மற்றும், நீ மிக்க பருமனில்லாமல் இளைத்திருக்கின்றாய். அன்றியும், உன்னுடம்பெல்லாம் கட்டுத் தளர்ந்து உறுதியற்றிருக்கின்றன. அதுவுமன்றிக் கிழத்தனத்தினால் வருந்தியிருக்கின்றாய். நண்பனே! உன்னோடு கூடத்தூக்குகிற மற்ற இவர்களெல்லோரும் நெடுந்தூரம் நடக்காமல் ஸுகமாகவே இருக்கின்றனர்” என்று பலவாறு பரிஹாஸத்துடன் (கிண்டலுடன்) விரட்டிச் சொல்லினும், கர்மத்தினால் பரிணமித்த பஞ்சபூதங்களும் சப்தாதி விஷயங்களும் செயல்களும் இந்திரியங்களும் மனமும் வாஸனையும் அமைத்து எப்பொழுதும் ஒருவாறாய் இல்லாமல் மாறிக்கொண்டேயிருப்பதும் அவயவங்களின் சேர்க்கையாலே ஏற்பட்ட ஒரு ஆகார விசேஷமாயிருப்பதும் (உருவமயிருப்பதும்) சரம (கடைசி) சரீரமுமாகிய தேஹத்திலும் அதைத்தொடர்ந்த மற்றவைகளிடத்திலும் நானென்றும் என்னுடையதென்றும் விளையும் பொய் எண்ணங்களின்றிப் பரப்ரஹ்ம ஸாயுஜ்யத்தை (சேர்த்தியை) அடைய ஸித்தமாயிருப்பவராகையால் அவர் அவன் சொன்னதை ஒன்றும் பொருள் செய்யாமல் முன்போலவே பல்லக்கைச் சுமந்து கொண்டு நடந்தார். மீளவும் தன் பல்லக்கு முன்போல் கோணலாய்ப் போவதைக் கண்டு ரஹோகண மன்னன் மிகவும் கோபித்து அந்த ப்ராஹ்மணரைப் பார்த்து “இதென்ன? அடே! நீ ஜீவித்திருந்தும் செத்தாற் போலிருக்கின்றாய். என்னைப் பொருள் செய்யாமல் ப்ரபுவாகிய எனது கட்டளையைக் கடந்து நடக்கின்றாய். யமன் ப்ராணிகளைத் தண்டிப்பதுபோல், நீ உன்னுடைய இயற்கையில் நின்று நன்றாக வேலை செய்யும்படி மன ஆக்கமற்றிருக்கிற உன்னை நான் தண்டிக்கிறேன்” என்றான். ரஜோகுணமும் தமோகுணமும் தொடரப்பெற்றுத் தன்னை மன்னவனென்றும் பண்டிதனென்றும் நினைத்துப் பெருமதங்கொண்டு பாகவதர்களையெல்லாம் அவமதிக்கின்ற அவ்வரசன் இங்கனம் பொருளற்ற பல பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருக்கையில், பரப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்கரித்தமையால் ப்ரஹ்மஸ்வரூபியும் மஹானுபாவருமாகிய அவ்வந்தணர் ஸமஸ்த பூதங்களுக்கும் நன்மையையே நினைக்கும் மனமுடையவராகையால் யோகேச்வரர்களின் நடத்தையில் பரிசயப்படாத (பழக்கமில்லாத) மதியுடைய அம்மன்னவனைப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டு சிறிதும் கர்வமின்றி மேல்வருமாறு மொழிந்தார்.
ப்ராஹ்மணர் சொல்லுகிறார்:- “மன்னவனே! நீ மொழிந்தது உலகரீதியில் வாஸ்தவமே (உண்மையே). உண்மையில் ஒன்றின் தர்மத்தை மற்றொன்றில் ஏறிட்டுச் சொன்னாயாகையால் உன் வார்த்தையெல்லாம் பொய்யே. வீரனே! சுமக்கிறவனுக்குப் பாரம் உளதாயின், அது எனக்குக் கிடையாது. நான் சுமக்கிறவனல்லேன். நடக்கிறவனுக்குப் போய்ச் சேரவேண்டிய இடம் உண்டாயின், அது ஸாக்ஷாத்தாக எனக்குக் கிடையாது. நான் நடக்கிறவனல்லேன். பருமன் தேஹத்திற்கேயன்றி எனக்குக் கிடையாது. இங்கனமே ஆத்மஸ்வரூபத்தை அறிந்தவர்கள் வழங்குவார்கள். பருமன் இளைப்பு சரீர (உடல்) வ்யாதிகள் (நோய்கள்) மனோ வ்யாதிகள் பசி தாஹம் பயம் கலஹம் காமம் கிழத்தனம் தூக்கம் விஷயங்களில் ஆஸக்தி (ஒட்டுதல், ஈடுபாடு) கோபம் அஹங்காரம் மோஹம் இவையெல்லாம் தேஹத்திற்கேயன்றிப் (உடலுக்கே அன்றி) பிறவி முதலிய விகாரங்கள் எவையும் தீண்டப்பெறாத எனக்குக் கிடையாது. ராஜனே! ஜீவித்தலும் மரணம் அடைதலும் ஆதி அந்தங்களையுடையதும் விகாரங்களுக்கிடமுமாகிய தேஹத்திற்கேயன்றி அவை ஆத்மாவுக்கில்லை.
பெருமையுடையவனே! ஒருவன் ப்ரபுவாயிருக்கையும் மற்றொருவன் அவனுக்குத் தாஸனாயிருக்கையுமாகிற ஸ்வஸ்வாமி பாவமென்னும் (தனக்கு எஜமானர், தலைவர் என்கிற) ஸம்பந்தம் எவரிடத்தில் நிலைநின்றிருக்குமோ, அத்தகைய புருஷர்களிடத்தில் தான் ஸ்வாமியாய் இருப்பவன் கட்டளையிடுவதும் தாஸனாயிருப்பவன் இட்ட வேலையைச் செய்வதுமாகிய இவற்றின் சேர்க்கை நிலைநின்றிருக்கும். அந்த ஸம்பந்தம் ஜீவாத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்குமே நிலை நின்றிருக்கும். நீ என்றும் இப்படியே ப்ரபுவாயிருப்பாயென்கிற நியதி (விதி,கட்டளை) இல்லை. உனக்கு ராஜ்யம் கைசோர்ந்து எனக்கு வருமாயின் உன் ப்ரபுத்வமும் என்னுடைய தாஸத்வமும் மாறிப்போகுமல்லவா? ஆகையால் ப்ரபுவல்லாத உன்னை நீ ப்ரபுவாக நினைத்துக் கொண்டிருப்பது ப்ரமமே (மனக்கலக்கமே). “நீ ப்ருத்யன் (வேலைக்காரன்); நான் ப்ரபு” என்று வாயால் சொல்லுவது ஒழிய அங்கனம் பேதமாக (வேறாக) நினைப்பதற்குச் சிறிதும் இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்படியிருக்க யார் ப்ரபு? யார் தாஸன்? நீயும் எனக்கு ப்ரபுயில்லை நானும் உனக்கு தாஸனல்லேன். நான் சொல்லுவது உனக்கு இஷ்டமாயிராது. ஆயினும் என்ன செய்யலாம்? வஸ்து ஸ்வரூபத்தை மாற்றமுடியாதே? பரப்ரஹ்மஸ்வரூபனான ஆத்மாவை அனுபவிப்பதில் நிலைநின்று பித்தன் ஊமை குருடன் மூடன் இவர்கள் போன்று பிறர் விரட்டுதல் அடித்தல் முதலிய பரிபவங்களை விரும்புகிற எனக்கு உன்னுடைய தண்டனையால் என்ன ப்ரயோஜனம்? நான் ஆத்ம ஸ்வரூபத்தை அறியாத ஸம்ஸாரியாகவே வருந்திக் கொண்டிருப்பேனாயினும் உன்னுடைய தண்டனை பிஷ்டபேஷணம் (அரைத்த மாவை அரைப்பது) போல் பயனற்றதேயாம்” என்றார். கோபமில்லாமை முதலிய குணங்களையே இயற்கையாக உடையவரும் வேறு சரீரம் உண்டாவதற்கிடமான கர்ம ஸம்பந்தமற்றவரும் சரீரமாகிற ப்ராரப்த கர்மத்தை அனுபவத்தினால் கழித்துக் கொண்டிருப்பவருமாகிய அம்முனிச்ரேஷ்டர் அம்மன்னவன் சொன்னதற்கெல்லாம் “மறுமொழி கூறி முன்போலவே அவனது பல்லக்கைச் சுமந்து சென்றார்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனே! ஸிந்துஸெளவீர தேசங்களுக்குப் பதியாகிய அந்த ரஹோகணனும் ச்ரத்தையுடன் தத்வத்தை அறிய முயன்றவனாகையால் அஜ்ஞானத்தைப் போக்குவதும் பல யோக க்ரந்தங்களுக்கு இணங்கினதுமாகிய அவ்வந்தணரது வசனத்தைக் கேட்டு மன்னவனென்னும் கர்வத்தைத் துறந்து பல்லக்கினின்று இறங்கி அவர் பாதத்தருகே வந்து நமஸ்கரித்துத் தான் அவரிடம் பட்ட அபராதத்தை பொறுப்பிக்க முயன்று “ப்ராஹ்மணர்களில் நீர் யாவர்? ப்ரஹ்ம தேஜஸ்ஸை வெளியிடாமல் மறைத்துக்கொண்டு திரிகின்றீர். நீர் யஜ்ஞோபவீதம் தரித்துக் கொண்டிருக்கிறீராகையால் ப்ராஹ்மணரென்பதில் ஸந்தேஹமில்லை. எல்லோரும் அவமதிக்கும்படியான வேஷமுடையவராய் இருக்கின்றீர். நீர் யாருடைய புதல்வர்? யாருடைய சிஷ்யர்? உமது இருப்பிடம் யாது? எதற்காக நீர் இவ்விடம் வந்தீர்? ஒருகால் என்னுடைய க்ஷேமத்திற்காக வந்த கபில முனிவராய் இருக்கக்கூடுமோ? நான் தேவேந்த்ரனுடைய வஜ்ராயுதத்தினின்றாவது ருத்ரனுடைய சூலாயுதத்தினின்றாவது யமனுடைய தண்டாயுதத்தினின்றாவது அக்னி ஸூர்யன் சந்த்ரன் வாயு குபேரன் இவர்களுடைய அஸ்த்ரங்களினின்றாவது பயப்படமாட்டேன். ஆனால் ப்ராஹ்மண குலத்தை அவமதிக்கையாகிற மஹாஸ்த்ரத்தினின்று (பெரிய அஸ்த்ரத்திடம்) மிகவும் பயப்படுவேன். ஆகையால் எனக்கு உமது உண்மையைச் சொல்வீராக. நீர் பற்றற்று ஜ்ஞானமாகிற உமது வீர்யத்தை மறைத்துக்கொண்டு அறிய முடியாத அபிப்ராயமுடையவராய் மூடன்போல் திரிகின்றீர். உமது வார்த்தைகள் யோக சாஸ்த்ர மர்யாதையால் மறைந்திருக்கின்றன.
நல்லியற்கையுள்ளவரே! எவ்வளவு ஸூக்ஷ்ம புத்தியால் ஆலோசித்துப்பார்க்கினும் உமது வசனத்தின் கருத்தை எனக்கு அறியமுடியவில்லை. நான் தத்வங்களை உணர்ந்தவர்களில் தலைவரும் ஹிதோபதேசம் செய்பவரும் ஜ்ஞானத்தின் அம்சத்துடன் அவதரித்த ஸாக்ஷாத் விஷ்ணுவுமாகிய கபில முனிவரிடம் சென்று இந்த ஸம்ஸாரத்தில் எது ரக்ஷகமென்று வினவித் தெரிந்துகொள்ள முயன்று செல்கின்றேன். உலகங்களை ரக்ஷிக்கும்பொருட்டு அந்தக் கபிலரே இங்கனம் மாறுவேஷத்தினால் மறைந்து திரிகின்றாரோ? இல்லறவாழ்க்கையில் இழிந்த என்னைப்போன்ற மூடன் யோகீச்வரர்களின் கதியை எங்ஙனம் அறிவான்? ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டவனாயினும் தேஹ ஸம்பந்தத்தினால் யுத்தாதி (போர் முதலிய) கர்மங்களைச் (செயல்களைச்) செய்யும் பொழுது ச்ரமம் உண்டாவது எனக்கு அனுபவ ஸித்தமாயிருக்கின்றது. பாரத்தைச் சுமந்துகொண்டு வழிநடக்கிற உமக்கும் அங்கனமே இருக்குமென்று நான் ஊஹிக்கிறேன். “உலகத்தார் அங்கனம் வழங்குவது மாத்ரமேயன்றி அது உண்மையன்று” என்னில், சொல்லுகிறேன்.
குடம் முதலியன உளவாயின் ஜலம் கொண்டுவருகை முதலியன உண்டு. அவை இல்லாத பக்ஷத்தில் இல்லை. ஆகையால் உலக வழக்கமும் ப்ரமாணமென்றே ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகையால் உலகத்தில் வழங்குவது உண்மையன்று என்று சொல்லலாகாது. பாத்ரத்தை நெருப்பில் வைத்துக் காய்ச்சினோமாயின், அதிலிருக்கும் தண்ணீரும் கொதிக்கின்றது. அதினிடையில் சேர்ந்த அரிசியும் பக்வமாகின்றது. அங்கனமே தேஹம் இந்திரியம் ப்ராணன் வாஸனை மனம் இவற்றின் ஸம்பந்தம் பரிஹரிக்க (விட்டுவிட) முடியாமல் தொடர்ந்து வருகின்றமையால் சுத்த ஸ்வரூபனான ஆத்மாவுக்கும் துக்கங்களுக்கிடமான ஸம்ஸாரம் உண்டாகக்கூடும். நான் கர்மவசத்தினால் அரசனாய் இருக்கும்பொழுது வழியைக் கடக்கின்ற ப்ரஜைகளைச் சிக்ஷிப்பவனும் நல்வழியில் நடப்பவர்களைக் காப்பவனுமாயிருக்கிறேன். பகவானுக்கு அடிமை பூண்டு வர்ணாச்ரம தர்மங்களால் அவனை ஆராதிக்க முயன்று தவறான வழியில் நடப்பவர்களைத் தண்டிப்பதும் நல்வழியில் நடப்பவர்களை அனுக்ரஹிப்பதுமாகிய பகவத் ஆராதன ரூபமான க்ஷத்ரிய தர்மத்தை அனுஷ்டிப்பேனாயின், அது எப்படி பிஷ்டபேஷணம் (அரைத்த மாவை அரைப்பது) போல் நிஷ்பலமாகும் (பயனற்றதாகும்)? தனக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்து வருவானாயின், பாப ராசிகளை (பாப கூட்டங்களை) எல்லாம் போக்குவானல்லவா? வருந்தினவர்களுக்குப் பந்துவாயிருப்பவரே! இங்கனம் தத்வத்தை அறிய விரும்புகிறேனாகையால் “மன்னவன்” என்னும் துரபிமானத்தினால் (வீணான தற்பெருமையினால்) மயங்கி பெரியோர்களை அவமதிக்கின்ற என் பிழைகளைப் பொறுத்து என்னை ஸ்நேஹம் நிறைந்த கண்களால் கடாக்ஷிப்பீராக. அதனால் நான் பெரியோர்களை அவமதித்தமையால் உண்டான பாபங்களைக் கடப்பேனாக. நீர் ஜகத்திற்கெல்லாம் நண்பனாகிய பரமபுருஷனுக்கு மிகவும் நண்பனாயிருப்பவர். நீர் எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமே என்னும் நினைவுடையவர்; தேஹாத்மாபிமானமற்றவர் (இவ்வுடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் இல்லாதவர்); ஈச்வரனுக்கு உட்படாத ஸ்வதந்த்ரவஸ்து (தன்னிச்சைப்படி இருக்கும் பொருள்) உண்டென்னும் ப்ரமம் (மனக்கலக்கம்) அற்றவர். ஆகையால் உமக்கு நான் செய்த அவமதியால் மனக்கலக்கம் உண்டாகாது. “ஆயினும் என்னைப்போன்ற ஜந்துக்கள் சூலபாணியான ருத்ரனைப்போல் ஸமர்த்தர்களாயினும் பெரியோர்களை அவமதிப்பார்களாயின் தாம் செய்த அந்த பாப தோஷத்தினால் சீக்ரத்தில் நசித்துப்போவார்கள். ஸ்தாவர ஜன்மத்தைப் பெறுவார்கள். ஆகையால் என் பிழையைப் பொறுத்து எனக்குத் தத்வத்தை உபதேசிப்பீராக” என்றான்.
பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.