மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 18 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 9


नित्यम् त्वहं परिभवामि गुरुं च मन्त्रं तद्देवतामपि न किन्चिदहो बिभेमि ।
इत्थं शठोSप्यशठवद्भवदीयसङ्घे ह्रुष्टश्चरामि यतिराज! ततोSस्मि मूर्खः ॥ (9)


நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாம் அபி ந கிஞ்சித் அஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|| (9)


திரும்பவும் அப்படியே சொல்கிறார்:


யதிராஜ! – யதிராஜரே, 


அஹம் மூர்க்க: அஸ்மி – அடியேன் மூர்க்கனாக இருக்கிறேன். ஏற்கனவே உம்மிடம் பிரார்த்தித்தேன் அல்லவா? திருமந்திரத்தில் நிஷ்டை வரவேண்டும். அநந்யார்ஹ ஶேஷத்வம், அநந்யார்ஹ போக்யத்வம், அநந்ய ஶரணத்வங்கள் என்று பிரார்த்தித்தேன். அப்படியென்றால் என்னிடம் ஒன்று இருந்திருக்க வேண்டும். “மந்த்ரே தத் தேவதாயாம் ச ததா மந்த்ர ப்ரதே குரௌ இஷுபத்திஸ் சதா கார்யா தாஹிப்ரதம ஸாதனம்” என்று சொல்வர். மந்திரத்திலும் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ரப்ரதானான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால் அது கார்ய கரம் என்று பிள்ளைலோகாசாரியாரின் ஸ்ரீஸுக்தி. திருமந்திரத்திலும், திருமந்திரத்துக்கு உள்ளீடான வஸ்து நாராயணனிடத்திலும், மந்திரத்தை உபதேசம் பண்ணியிருக்கிற ஆசார்யரிடத்திலும் நிரம்ப ப்ரேமம் இருக்க வேண்டும். இந்த திருமந்திரம், நாராயணன், ஆசார்யன் ஆகிய மூன்று பேரிடம் நமக்கு பக்தி இருந்தால்தான் காரியமே நடக்கும். 


ஆகவேதான் பெரிய திருமொழியில் முதல் பத்தில் திருமங்கையாழ்வார் நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம், நாராயணா என்னும் நாமம் என்று திரும்ப திரும்ப சொல்கிறார். அடுத்த பத்து: திருப்பிரிதி திவ்ய தேசம். 


வாலிமாவலத்து ஒருவனது உடல்கெட*வரிசிலை வளைவித்து* அன்று
ஏலம் நாறு தண் தடம்பொழில் இடம்பெற* இருந்த நல் இமயத்து**
ஆலிமாமுகில் அதிர்தர அருவரை அகடுற முகடேறி*
பீலிமாமயில் நடஞ்செயும் தடஞ்சுனைப் பிரிதி சென்றடை நெஞ்சே. 1-2-1

தொடங்கி பத்து பாசுரம் மந்திரத்துக்கு உள்ளீடான நாராயணனை திருப்பிரிதியில் ஸேவித்துவிட்டார். 

அடுத்து மூன்றாம் பதிகம், நாலாம் பதிகம் திருபதரிகாசிரமம். 

முற்ற முத்துக் கோல் துணையா*முன்னடி நோக்கி வளைந்து*
இற்ற கால்போல் தள்ளி மெல்ல* இருந்து அங்கு இளையா முன் **
பெற்ற தாய்போல வந்த பேய்ச்சி* பெருமுலையூடு* உயிரை
வற்ற வாங்கியுண்ட வாயான் * வதரி வணங்குதுமே. 1-3-1

பதரிகாஸ்ரமப் பெருமாள்தான் திருமந்திரம் உபதேசம் பண்ணிய ஆசார்யன். வரிசையா மூன்று பதிகம். மந்திரத்தை முதல் பதிகத்திலும், மந்திரத்திற்கு உள்ளீடான நாராயணனை இரண்டாவது பதிகத்திலும், மந்திரம் உபதேசித்த ஆசார்யனை பதரிவிஶால் பெருமானை மூன்றாம் பதிகத்தில் சொன்னார். பெரிய திருமொழி ஆரம்பித்த விதமே இப்படித்தான்.

ஆனால் நான் என்ன செய்தேன் தெரியுமா? நீர் செய்த காலக்ஷேபம் எல்லாம் நன்றாகக் கேட்டேன். மந்திரத்தை, தேவதையை, மற்றும் ஆசார்யனை அவமதித்தேன். ஆனாலும் உம் முன்னாடி வந்து நிற்கிறேன்.

யதிராஜ! – யதிராஜரே, அஹம் - நான், நித்யம் து – தினமுமே, குரும் –, கு – இருள், ரு – போக்கக் கூடியவர், அஞ்ஞானமாகிய இருளைப் போக்ககூடிய ஆசார்யன், (அறியாதவற்றை அறிவித்து அகவிருளைப்போக்கும்), பெரிய திருமந்திரத்தை உபதேசித்திருக்கிற ஆசார்யனையும், 

மந்த்ரம் ச – (அவ்வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்திரமாகிய அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அநுஸந்திக்கிறவர்களை ரக்ஷிக்கக்கூடிய மந்திரத்தையும், மந்திரம் என்றால் “மனனாத் த்ராயதே இதி மந்த்ர:” மனனம் செய்பவனைக் காப்பாற்றுவது மந்திரம். அப்படிப்பட்ட மந்திரத்தையும், 

தத் தேவதாம் அபி – அம்மந்திரத்தால் சொல்லப்பட்ட ஸ்ரீமந்நாராயணனையும்,

பரிபவாமி – அவமதிக்கிறேன். 

கிஞ்சித் அபி, ந பிபேமி – சிறிதும் – இம்மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடுவிளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை. கவலையே படவில்லை. 

அஹோ – இது என்ன கஷ்டம், 

இத்தம் – இவ்விதமாக, 


ஸட:அபி – நேர்மையில்லாத துர்புத்தி, யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்திரத்தில் நம்பிக்கையில்லாதவனாயிருந்தும், 

பவதீயஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின் - மஹான்களின் பரம ஆஸ்திகர்களின் கோஷ்டியில், 

அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன்கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்கவேண்டுமென்று கூறும் ஸாஸ்திரத்தில் நம்பிக்கைமிக்க ஆஸ்திகன் போலவும், மந்திரமா அதுதான் எனக்கு வேணும் ஸ்வாமி, மந்திரத்தை உபதேசிக்கிறீரா? மந்திரத்துக்கான நாராயணான நீர் இட்ட பிச்சை, நீரே ஆசார்யன் என்று சொன்னதினால் இந்த மூன்றையும் இவன் மதிக்கிறவன் என்று நினைக்க வைத்துவிட்டேன். மந்திரம், தேவதை, ஆசார்யன் மூவரிடமும் அதீத ப்ரியம் இருக்கிறவன் போல நடந்துகொண்டு, 

 ஹ்ருஷ்ட: ஸந் சராமி – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைந்தவனாய்க் கொண்டு இவர்களிடையே ஸஞ்சரிக்கிறேன். நான் ஏமாத்தி இருக்கக் கூடாது அய்யகோ என்று பயப்பட்டிருக்கணும். ஆனால் எல்லோரையும் ஏமாத்திட்டேன். பயமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

தத: – அதனால் விவேக ஞானமே இல்லாமல் 


அஹம் மூர்க்க: அஸ்மி – அடியேன் மூர்க்கனாகத்தான் இருக்கிறேன்.

தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன தெரிந்து கொள்ளவேண்டும். 

1. மந்திரத்தை அவமதிப்பது என்றால் என்ன? 
2. மந்திரத்துக்கு உள்ளீடான தேவதையை அவமதிப்பது என்றால் என்ன? 
3. மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனை அவமதிப்பது என்றால் என்ன? 

மந்திரத்துக்கு அவமரியாதை: அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தப்பர்த்தத்தை சொல்வது. மந்திரத்தை யாரிடம் சொல்லக் கூடாதோ அப்படி தப்பானவர்களிடம் சேர்த்துவிட்டாலோ அவமரியாதை ஆகும். அக்ஷ்டாஷர மந்திரத்தை இதுதான் அர்த்தம் என்று தெரியாமல்:

குலம்தரும் செல்வம் தந்திடும்* அடியார் படும் துயர் ஆயினவெல்லாம் * 
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்* அருளொடு பெருநிலம் அளிக்கும்**
வலந்தரும் மற்றும் தந்திடும் * பெற்ற தாயினுன் ஆயின செய்யும் *
நலம்தருஞ்சொல்லை நான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.

இந்தப் பாசுரத்தைச் சொன்னால் செல்வம் சேரும். ஆயிரம் தடவை சொன்னால் எனக்கு பத்து லக்ஷம் கிடைக்கும் என்று சொன்னால் உண்மைதான் நடக்கும். ஆனால் ஆழ்வார் இந்த கருத்தில் சொல்லவில்லை. நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் என்பது, மோக்ஷம் தரும் மந்திரம் என்று கருத்து. பகவத் கைங்கர்யத்துக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுக்கும் என்பதற்காக “செல்வம் தந்திடும்” என்று சொல்லியுள்ளது. இதைபோல தப்பா புரிந்துகொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள் அல்லவா இது தான் மந்திரத்துக்குச் செய்யும் அவமரியாதை. பகவத்கீதை வியாபாரம் நன்றாக நடக்க உபன்யாசம் பண்ணுகிறீரா என்றெல்லாம் கேட்பார்கள். கீதை யோகத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காக ஆகார நியமம் போன்றவற்றை எல்லாம் சொல்லியிருக்கிறது. அதுவெல்லாம் அன்றாட லௌகிக வாழ்க்கையில் பொருள்வயமாக்கச் சொல்லவில்லை. கீதையில் சொன்ன கடமை அவரவர்க்கு உரிய வர்ண ஆஸ்ரமத்துக்குத் தகுந்த சாஸ்திரம் சொல்லிய கடமைகளைச் செய்வது. கர்மயோகம், ஞானயோகத்தை கடமை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அது ஒரு மோக்ஷ ஸாஸ்திரம். மாற்றிச் சொல்வது தான் மந்திரத்தைத் தப்பாகப் புரிந்துகொள்வது, யதார்த்தத்தை விட்டுவிட்டு, தப்பாகச் சொல்வது அதை அவமதிப்பது என்று பொருள்.


தேவதையை அவமதிப்பது: எம்பெருமானின் சரண்யத்தைப் பற்றல், பகவானைப் பற்றி மந்திரத்தில் இருந்து தெரிந்துகொண்டு விட்டோம் அப்புறம் நம் கரணங்கள் எல்லாம் அவரிடம் மட்டுமே ஈடு பட்டிருக்க வேண்டும். அவரிடம் ஈடுபடுத்தாமல் மனம், வாக்கு, காயம் இம்மூன்றையும் நாம் வேறிடத்தில் ஈடுபடுத்தி விடுகிறோம் அல்லவா? இதுதான் தேவதைக்கு பண்ணுகிற குற்றம். அவர் நம்மைப் படைத்திருக்கிறதே இந்த இந்திரியங்கள் அவருக்குச் சமர்ப்பிக்கவே. அதை விட்டு வேறு எங்காவது பயன் படுத்தினோம் என்றால் தவறு தானே. அது தேவதையிடம் அவமரியாதை ஆகும். 
ஆசார்யன் நிர்ஹேதுகமாக மந்திரத்தை உபதேசம் பண்ணுகிறார். அவரை அவமதிப்பது என்ன என்றால்; அவர் சொன்னதை மறந்துவிட்டாலோ, அவர் சொன்னதை மீறி நடந்தாலோ, அவரிடம் பிரதிபத்தி இல்லாமல் இருந்தாலோ, ஆசார்யனுக்கு அவமரியாதை.

நேர்மையில்லாமல் இருந்தாலும், குருவினிடத்திலும், மந்திரத்தினிடத்திலும், தேவதையிடத்தும் இவர் எவ்வளவு ப்ரேமை உடையவன் போல் இருக்கிறார் என்று நினைக்கிறார் போல நடந்து கொண்டு ஏமாற்றி வருகிறேன். ஆக விவேக ஞானமில்லாத மூர்க்கன் என்று தானே என்னைக் கொள்ள வேண்டும். என்று ஒன்பதாவது ஸ்லோகத்தில் ஸாதிக்கிறார். 


நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாம் அபி ந கிஞ்சித் அஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (9)


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 


நன்றிகள் ஸ்வாமி.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை