திங்கள், 27 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 17 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

நம்மாழ்வாரும் திருமலையப்பனும்


ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் தலையானவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் என்கிற திருநாமம் அவர் ஒருவருக்கே உண்டு. அது அவருடைய ஏற்றத்தால் ஏற்பட்டது.


"நம்பெருமாள் நம்மாழ்வார் நம்பிள்ளை நஞ்சீயர் என்பர் அவரவர் தம் ஏற்றத்தால்" என்று உபதேசரத்தின மாலையில் (உ.ர.மா.50) மணவாளமாமுனிகள் குறிப்பிடுகின்றார்.


நம்மாழ்வார் அவதரித்த நட்சத்திரம் விசாகம். மாதம் வைகாசி, திருத்தலம் திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி), நான்கு வேதங்களுக்கு நிகராக நான்கு நூல்களைப் பாடி இருக்கிறார். அப்படி பாடிய நூல்களில் சிறந்தது சகல வேத சாரமான திருவாய்மொழி. இதற்கு இணையான ஒரு நூல் இல்லை.


“உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு?” என்று திருவாய்மொழியின் ஏற்றத்தையும், ஆழ்வார் ஏற்றத்தையும் இரண்டு பாசுரங்களால் விவரிக்கின்றார் மணவாள மாமுனிகள்.


நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியும் அதன் உரையும் பகவத் விஷயம் என வழங்கப்படுகிறது. திருவாய்மொழி துவய மஹா மந்திரத்தின் விரிவு என்றே ஆசாரியர்கள் விளக்கியருளியிருக்கின்றனர்.

துவய மகா மந்திரம் 25 எழுத்துகளால் ஆனது. இரண்டு வாக்கியங்கள். தகுதி உடையோருக்கும், தக்க நெறி உடையவருக்கும் மட்டுமே சொல்ல வேண்டும் என்றார் திருக்கோட்டியூர் நம்பி. ராமாநுஜருக்கு இம்மஹா மந்திரத்தைத் தரும் போது தகுதியற்ற யாருக்கும் இதனை சொல்லி விடாது இருக்க சத்தியம் வாங்கிக் கொண்டார். மந்திர ரத்னமான துவய அனுசந்தானமே உயிருக்கு ஒரே பாதுகாப்பு என்பது இராமாநுஜரின் உறுதியான நிர்ணயம்.


எவனொருவன் இவ்வுலக பந்தத்திலிருந்து விடுபட்டு, வாழ்ந்து, அவ்வுலகமாகிய மோட்சத்தை அடைய விரும்புகின்றானோ அவனுக்கு முமூட்சு என்று பெயர். அதாவது மோட்சத்தில் விருப்பம் உடையவன். அதற்குத் தடையாக இருப்பது மற்ற உலக ஆசைகள்.


அதனால் தான் வேறு ஆசைகளைக் கொடுக்காதே; “மற்றை நம் காமங்கள் மாற்று” என்று பகவானிடம் வேண்டினாள் ஆண்டாள். அவனுக்கு வேறு பற்றுக்கள் கூடாது. எம் பெருமானே புகல் என்று பற்ற வேண்டும். தனக்கு அவன் மோட்சம் தருவான் என்ற நம்பிக்கை வேண்டும். அதை அடையும் எண்ணம் வேண்டும். அதுவரை திவ்ய தேசங்களைச் சேவிக்க வேண்டும். அங்கங்கே பாகவதர்களோடு சேர்ந்து பகவத் விஷய அனுபவம் பெற வேண்டும். வேதகப்பொன் அல்லவா இவர்கள் தொடர்பு. இந்த பாகவத அனுபவம் அவன் குறைகளைப் போக்கி குணங்களை ஒளிபெறச் செய்யும்.


எல்லாவற்றுக்கும் மேலாக ஆசாரியனிடத்தில் அபிமானம் வேண்டும். “ஆசாரிய அபிமானமே உத்தாரகம்”. இப்படி இருக்கும் அதிகாரிக்குதான் மூல மந்திரங்கள் மூன்றும் வசப்படும். அது வசப்பட்டால்தான் வானம் (மோட்சம்) வசப்படும்.


அதாவது மோட்சத்தில் ஆசையுள்ளவன் அறிய வேண்டிய மந்திரங்கள் மூன்று. இதனையே ரகசியத்ரையம் (இரகசியம் - மந்திரங்கள், த்ரையம் - 3) என்பார்கள்.


1) திருமந்திரம், 2) துவயம், 3) சரம சுலோகம். இம் மூன்று மந்திரங்களும் வேத உபநிடதங்களின் சாரம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தனிச் சிறப்பும் கொண்டவை. உதாரணமாக, “திருமந்திரம் ஆன்மாவால் பேறு கிடைக்கும் என்கிறது. சரம சுலோகம் ஈஸ்வரனால் பேறு கிடைக்கும் என்கிறது. துவய மகா மந்திரமும் பெரிய பிராட்டியாராலே பேறு” என்று ஆழமாகப் போகிறது.


துவய மஹா மந்திரத்தின் பொருள் “தீர்க்க சரணாகதி”. அதுவே "திருவாய்மொழி". துவயார்த்தம் தீர்க்க சரணாகதி என்பது ஸார ஸங்கிரகத்திலே, என்பர் அழகிய மணவாள பெருமாள் நாயனார். (“ஸார ஸங்கிரகம்” பிள்ளை லோகாச்சாரியார் எழுதிய ரகசிய நூல்.)


இந்தத் தீர்க்க சரணாகதியைத் தான் பேசுகிறது திருவாய்மொழி. திருவாய்மொழி துவயத்தின் பத்து அர்த்தங்களையும் ஒவ்வொரு பத்துக்களில் சொல்லுகின்றது. 

1. அவன் திருமகள் கேள்வனாக விளங்க வேண்டும். 
2. அவன் நாராயணனாக இருக்க வேண்டும்.
3. அவன் திருவடித்தாமரைகளே புகலிடம் என்றறிய வேண்டும். 
4. அவன் திருவடிகளே அனைத்தும் செய்யும் என்ற அறிவு பெற வேண்டும். 
5. தொண்டை தந்து அருள்வதற்கு உறுப்பான திருமகள் நாயகனே சரண் என்று தெளிந்து
6. அவர்களுடைய நித்திய சம்பந்தம் பற்றிய தெளிவும் பிறக்க வேண்டும். 
7. தொண்டுக்குக் காரணமான இறைவனின் எல்லையில்லாத இனிமை அறிய வேண்டும்.
8. எல்லாப் பொருட்களுக்கும் அவன் தலைவனாக விளங்கும் தன்மை அறிதல் வேண்டும்.
9. நித்தியமாகவும் உறுதியாகவும் உள்ள தொண்டினைப் பெற வேண்டும்.
10. அதற்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்தும் நீங்கும் என்ற தெளிவும் பெற வேண்டும். 


இதுதான் பத்து விஷயங்கள். துவயத்தின் இந்த பத்து அர்த்தங்களையும் அனுசரித்து எங்கே சரணாகதி பெற வேண்டும் என்று நிர்ணயித்த நம்மாழ்வார் விண்ணுக்கும் மண்ணுக்கும் வைப்பான நிதியாய், ஆன்மாவிற்கு கடைத்தேற்றும் கதியாய், கலிகாலக் கண் கண்ட தெய்வமாய் விளங்கும் திருமலையப்பனின் திருவடித் தாமரைகளில் சரண் புகுகிறார்.


திருவாய்மொழி 1102 பாசுரங்களின் சாரமான விஷயம் இந்த ஒரு பாசுரத்தில் வெளிப்படுகிறது. 


“அகல கில்லேன் இறையும் என்றலர்மேல் மங்கையுறை மார்பா, 
நிகரில்புகழாய். உலக மூன்றுடையாய். என்னை ஆள்வானே, 
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தான் 
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.”


கீழ் ஒன்பது பாட்டாலும் சரண்யனான எம்பெருமானுடைய இயல்பையும் தம்முடைய ஆற்றாமையையும் சொன்னார். இப்பாட்டில், தம்முடைய கைமுதலின்மையையும் வேறு கதி அற்ற நிலையையும் தெரிவித்துக் கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.


காரணம் எம்பெருமானுடைய திருமார்பிலே நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டியார்.


ஐயோ! அகல நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் ஒரு கணப்பொழுதும் பிரிந்திருக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாளாம் பிராட்டி.


தாமரை மலரில் தோன்றின அலர்மேல் மங்கைக்கு (ஸ்ரீமஹாலக்ஷ்மி) அந்தப் பூவில் வாழப்பிடிக்காது பகவான் திருமார்பிலே வந்து சேர்ந்தது அத்தனை சந்தோஷம்.


"உறை மார்பா!" அப்படிப்பட்ட பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணும்படியான திருமார்பையுடையவனே என்பது பெருமானுக்குச் சிறப்பு!


உலகில் புருஷகாரம் செய்பவர்களுக்கு இரண்டு தன்மைகள் வேண்டும்.


1) எவர் விஷயத்தில் புருஷகாரம் செய்ய வேணுமோ அவர் விஷயத்தில் நெஞ்சார்ந்த அன்பு இருக்க வேண்டும். இந்த மாதுர்யமும் பிராட்டியிடம் உண்டு. 


2) யாரிடத்தில் புருஷகாரம் செய்ய வேணுமோ அவரிடத்தில் தம் வாக்கு வெற்றி பெற்றே தீரும்படியான செல்வாக்கு இருக்க வேண்டும். இந்த சாதுர்யமும் பிராட்டியிடம் உண்டு.


இவளுடைய குற்றம் பொறுக்கும் தன்மைக்கு சாட்சியம் தான் இராமாவதாரத்தில் சீதையாக அசோகவனத்து அரக்கிகளிடம் நடந்து கொண்ட முறை.


இவளை இடைவிடாது படாதபாடுபடுத்தின அரக்கிகளின் கொடுமையை மரத்தின்மேல் மறைந்திருந்து கண்டவர் திருவடி (அனுமன்)


இராவணனை வென்ற பிறகு இவர்களைப் பார்த்துக் கொள்வோம் என்று ஆறியிருந்தார்.


இராவணன் தோற்ற பிறகு, ஓடி வந்து “இவ்வரக்கிகளின் அபராதங்களைக் கணக்கிட்டு சித்திரவதம் பண்ண நினைத்திருக்கும் எனக்கு நியமனம் (அனுமதி) வேண்டும்” என்று (பிராட்டியை நோக்கிக்) கேட்கிறான்.


அப்போது அவள் சொன்ன வார்த்தை. “மாருதி! யார் தவறு செய்யாதவர்கள்? தங்கள் மன்னனின் ஆணைகளை நிறைவேற்றிய இவர்களைத் தண்டிப்பது முறையல்ல” என்று சொல்லிக் காப்பாற்றுகிறாள். இது தான் புருஷகாரத்தின் எல்லை நிலம். காகாசுரன் விஷயத்திலேயும் இப்படியே நடக்கிறது.


"உறைமார்பா" என்பதனால் புருஷகார பூதையான பிராட்டியும் ஈச்வரனுமான சேர்த்தியானது எப்போதும் உண்டென்று காட்டப்பட்டதாகும்.


ஞானம் ஆனந்தம் முதலியவை எப்படி எம்பெருமானுக்கு இயல்போ அப்படியே ஸ்ரீபதித்வமும் நிரூபகமாகையாலே இவளோடே கூடியே ஈச்வர ஸத்பாவமென்று கொள்கை.


சேதனர்களின் அபராதங்களைக் கணக்கிட்டு தண்டிக்க வல்லவனாய் எம்பெருமானுடைய ஸ்வாதந்தரியத்தையும், சேதநர் செய்யும் குற்றங்களின் மிகுதியையுங் கண்டு "ஐயா! என்னாகுமோ” என்கிற பயத்தாலே இவள் எம்பெருமானை விட்டு ஒரு நொடிப் பொழுதும் அகல மாட்டாள்.


பிராட்டியானவள் எப்போதும் எம்பெருமானோடு கூடியேயிருக்கின்றாளென்று தெரிந்து கொண்டால் எந்த சமயத்திலும் எம்பெருமானை சரணடையலாமென்பது நம்மனம் தேறி நிற்கும். 


"நிகரில் புகழாய்!" என்பதால் புருஷகாரம் பலித்த அளவிலே எம்பெருமானுடைய தன்னிச்சைத் தன்மை தலைமடிந்து வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம், ஸௌலப்யம் என்கிற குணங்கள் தலையெடுக்கும். இச்சேதநன் தன் தோஷங்களைப் பார்த்து அஞ்சும் போது செய்வனோ செய்யானோ என்கிற சந்தேகம் உண்டாகும்போது இனி அவன் பொறுப்பு எனும் தன்மைக்கு இக்குணங்கள் அநுஸந்திக்கப்படுகின்றன.


1) “நிகரில் புகழாய்!” என்று வாத்ஸல்யத்தையும் 
2) “உலகம் மூன்றுடையாய்” ஸ்வாமித்வத்தையும் 
3) “என்னை யாள்வானே” என்று ஸௌசீல்யத்தையும் 
4) “நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே” என்று ஸௌலப்யத்தையும் சொல்லும் பதங்களாகும்.


பக்தர்களில் கைங்கர்ய நிஷ்டர்கள் (தொண்டு செய்வோர்) என்றும், குணாநுபவ நிஷ்டர்கள் என்றும் (பகவானின் குணங்களை நினைத்து வழிபடுபவர்) என இரண்டு வகுப்புண்டு.


அப்பாகுபாட்டைக் காட்டவே "அமரர் முனிக்கணங்கள்" என்ற பதங்களையிட்டார் நம்மாழ்வார். ஆயிரம் திருவாய்மொழியின் சாரார்த்தம் இங்கு இந்த ஒரு பாசுரத்தால் நிரூபிக்கப்படுகிறது.


துவயமே தீர்க்க சரணாகதி. அதுவே திருவாய்மொழி. அது செய்யப்பட்டது திருமலையிலே. செய்தவர் நம்மாழ்வார். சரணாகதன் திருமலையப்பன். திருமலையப்பனிடம் எல்லையற்ற ஈடுபாடு ஆழ்வாருக்கு.


எனவே திருவாய்மொழியில் திவ்ய தேசங்களைப் பாடுகின்ற போது முதல் முதலில் திருவேங்கடத்தையே பாடுகிறார்.


நம்மாழ்வார் திருவேங்கடவனுக்கு எல்லா காலத்தும் எல்லா நிலையிலும் எல்லா அடிமையும் செய்யப்பாரிக்கிறார்.


“திருவேங்கடம் ஒன்றைத் தொழ நம்வினை ஓயும் மூப்பு பிறப்பு பிணி வீயுமாறு செய்வான்” என்பது அவர் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த ஆழ்வாரின் நம்பிக்கை தான் இன்றும் தினசரி பல்லாயிரம் பக்தர்களைத் திருமலைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது. “கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர் வெற்பனே” (1.8.3) என்று துவங்கியவர் ஒவ்வொரு பத்திலும் திருவேங்கடவனைப் பாடாமல் இருந்ததில்லை. திருமலையப்பனிடம் இப்பாசுரத்தால் தீர்க்க சரணாகதி செய்து காட்டிய நம்மாழ்வாரின் திருவடி வாரத்தில் நாம் தண்டனிட்டுப் பணிவோம்.


வாழ்க்கை நெறிகள் வளரும்.....


நன்றி - சப்தகிரி மே 2019


நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக