ஸ்லோகம் – 10
हा हन्त हन्त मनसा क्रियया च वाचा योहं चरामि सततं त्रिविधापचारान् ।
सोहं तवाप्रियकरः प्रियक्रुद्वदेव कालं नयामि यतिराज! ततोस्मि मूर्खः ॥ (10)
ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (10)
இப்படித்தான் காலக்ஷேபம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப்பார்த்தாலே தெரிந்துவிடும்.
யதிராஜ – யதிராஜரே,
ய: அஹம் – எத்தகைய அடியேன்,
மநஸா வாசா க்ரியயா ச – மனத்தாலும், வாக்காலும், செயலாலும்,
த்ரிவித அபசாராந் – மனம், மொழி, மெய், இந்த மூன்றாலும் இத்தனை நாள் பண்ணிக் கொண்டிருப்பது அபசாரங்களையே. மூன்று மூன்றாகப் பார்க்க வேண்டியது தான். காலம் மூன்று: நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம். மனம், வாக்கு, காயம் என்று மூன்று உள்ளது, அபசாரம் மூன்று: பகவதபசார, பாகவதாபசார, அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்கள் உள்ளது., மனத்துக்கு மூன்று காலம், ஒவ்வொரு காலத்திலும் மூன்று வித அபசாரங்களும். அதுபோல மொழிக்கும், மெய்க்கும். 27 அபசாரங்கள். கணக்கே தெரியாமல் போய்விட்டது ஸ்வாமி. மூன்று வித கரணங்களாலே, மூன்று காலங்களில், மூன்றுவிதமான அபசாரப்பட்டிருக்கின்றேன்.
ஹா ஹந்த ஹந்த - பகவத் வைபவத்தை அநுஸந்திக்க வேண்டிய மனதாலே, பகவானுக்குக் கைங்கர்யம் பண்ணவேண்டிய க்ரியையால் அஞ்சலி முதலான அநுகூல விருத்தியைப் பண்ணியிருக்கணும். அஞ்சலி பண்ணறது, ப்ரணாமம் செய்வது ஆகிய ஶரீரத்தாலும், நடந்து போவதற்கு கால், நாம ஸங்கீர்த்தனம் பண்ணும் வாக்காலும், தியானம் செய்யும் மனத்தாலும் செய்திருக்கவேண்டும். இதற்குத்தான் பகவான் இவைகளைக் கொடுத்துள்ளார். இவைகளை வைத்துக் கொண்டு
ஸததம் சராமி – மூன்று வித காலங்களிலும் இடைவிடாமல் பகவத், பாகவத அஸஹ்யாபசாரங்களை செய்துகொண்டே வந்திருக்கின்றேன்
ஸ: அஹம் – அத்தகைய அபராதங்கள் நிறைந்திருக்கிற அடியேன், தேவரீரிடம் எப்படி நடந்திருக்கவேண்டும்?
தவ – அடியேனிடம் பரமதயாளுவாய்ப்பேரன்பு பூண்ட தேவரீருக்கு, இவன் குற்றங்களையெல்லாம் போக்கி நல்லவனாக்கவேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிற தங்களிடம்
அப்ரியகர: ஸந் – உங்களுக்குப் பிரியம் ஏற்படுகிற காரியம் எதுவும் பண்ணவில்லை. இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய் இருக்கிறேன்.அப்படி இருக்கிறபோதும்
ப்ரியக்ருத்வத் ஏவ – ராமானுஜருக்கு விருப்பமானவற்றையெல்லாம் இந்த ஸ்வாமிதான் பண்ணியிருக்கிறார் என்று ஊர் எண்ணி ஏமாந்து போகிற அளவுக்கும், தேவரீரும் ஏமாந்துபோகிற அளவுக்கும் இப்படிப்பட்ட க்ருத்ரியமான செயலாலே
காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன்.
தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன்,
ஹா ஹந்த ஹந்த – கஷ்டம், கஷ்டம், ஐயஹோ கஷ்டம், இதிலிருந்து எப்படி வெளி வருகிறது என்று தெரியவில்லை. முக்கரணங்களாலும் உம்மை ஏமாற்றுவதற்காக மூன்று காலங்களிலும், மூன்றுவித பாபங்களைச் செய்து வந்திருக்கின்றேன். பகவத், பாகவத, அஸஹ்யாபசாரங்களைச் செய்தவன் ராமானுஜருக்குப் பிரியமானவனாக ஆகமுடியுமா?
ஆனால் இவன் என்ன செய்வான் தெரியுமா? நிறையப் முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, திராட்சை போன்ற பொருட்களும், 10000 ரூபாய்க்கு திருப்பரியட்டம் முதலியவைகளை சமர்ப்பிக்கின்றது. பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள். என்ன நல்ல குணம் இருந்தால் 10000 ரூபாய்க்கு வஸ்திரம் எல்லாம் வாங்கி வந்திருப்பார் என்று கொண்டாடுவர். எவ்வளவு ப்ரீதி, ப்ரீதி என்பர். ஆனால் எல்லாம் பொருட்களோடு நிறுத்திவிட்டேன். நீர் சொன்னது எதையும் உள்ளத்தில் பின்பற்றுவதே கிடையாது நிறையப் பேர் திருவாதிரைக்கு உண்மையாகவே வருகின்றவர்கள் இருப்பார்கள். ஆனால் நான் திருவாதிரைக்கு வருவதே மற்ற 26 நாட்கள் செய்த அபசாரத்தை மறைக்கத் தான். பார்க்கிறவர்கள் எல்லாம் திருவாதிரை தவறினாலும் இந்த ஸ்வாமி தவறமாட்டார் என்பார்கள். நானோ படாடோபத்துக்குத்தான் எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். தடங்கலில்லாமல் முக்கரணங்களினாலும்அபசாரப் பட்டிருக்கின்றேன்.
லக்ஷ்மணன் ராமரிடத்தில், “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி”. “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” அனைத்தையும் செய்யவேண்டும் என்று கேட்டார் அல்லவா? நானோ மனதால் மட்டும் அல்ல, மொழியாலும், மெய்யாலும் அபசாரப்பட்டேன். அஹம் ஸர்வம் கரிஷ்யாமி. மூன்று அபசாரத்தாலும் குறைவில்லாமல் பண்ணியிருக்கிறேன். ஆகவே நான் மூர்க்கன் என்றுதான் சொல்லிக் கொள்ளவேண்டும் வேறு என்ன சொல்ல?
தத்வாரய – அந்த மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.
ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (10)
10வது ஸ்லோகம் முடிந்தது.
(மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருளவேணும் என்கிறார். ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால், வ்ருத்த்யா பஸு: (7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும், ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதையொட்டி மெய்யின் செயலையும், ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும், பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும் ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார்ஸ்வாமி.
பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்மருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும், ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும், அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம்.
பாகவதாபசாரமாவது – தனது தனலாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும் ஸ்ரீவைஷ்ணவருக்குப்பண்ணும் விரோதம் ஆகும்.
அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியேயிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும், ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும்.)
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772
நன்றிகள் ஸ்வாமி.