செவ்வாய், 28 ஏப்ரல், 2020

ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 18 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

திருக்கோட்டியூர் நம்பிகளும் எம்பெருமானாரும்

வைணவ குருபரம்பரை நாதமுனிகளிடம் இருந்து துவங்குகிறது. நாதமுனிகளுக்குப் பிறகு வைணவ தரிசனத்தைக் கட்டிக் காத்தவர் சுவாமி ஆளவந்தார். பெயருக்கு ஏற்ப வைணவத்தை ஆளவந்தவர் அவர்.

ஆளவந்தார் தன்னுடைய பல சிஷ்யர்களுள் ஐந்து பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு ஸம்பிரதாயத்தில் உள்ள ஸகல அர்த்த விசேஷங்களையும் கற்றுக் கொடுக்குமாறு நியமித்தார். அந்த ஐந்து பேரில், ரஹஸ்யத்ரயத்தினுடைய (திருமந்திரம், த்வயம், சரம சுலோகம்) அர்த்த விசேஷங்களைக் கற்றுக் கொடுக்குமாறு திருக்கோட்டியூர் நம்பியை நியமித்தார்.

திருக்கோட்டியூர் நம்பிகள் வைபவம் அற்புதமானது. ஒவ்வொரு வைணவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. ஆசார்யர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் கவனித்தாலே போதும்; நாம் பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதை "மேலையார் செய்வன" என்று ஆண்டாளும் “முன்னோர் மொழிந்த மொழி முறை தப்பாது” என்று மணவாள மாமுனிகளும் சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்கோட்டியூர் நம்பி ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கியவர். வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், காச்யப கோத்திரத்தில், திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக, சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில், குருசேகர் எனும் இயற்பெயரில் அவதரித்தார். கோஷ்டிபுரீசர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. ஆளவந்தார் பிறந்து பதினோரு வருடங்களுக்குப் பின் பிறந்தவர். இராமாநுஜரிடம் அளவு கடந்த அன்பு கொண்டவராக விளங்கியவர். எப்போது எல்லாம் இராமாநுஜரைக் காண வேண்டும் என்று விரும்புகிறாரோ அப்போதெல்லாம், “நான் கோயிலுக்கு சென்று வருகிறேன்” என்று வீட்டில் சொல்லிவிட்டு, இராமாநுஜரை சந்திக்கத் திருவரங்கம் சென்று விடுவாராம். தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும், தேவகிப்பிராட்டி எனும் ஒரே மகளையும் இராமாநுசருக்குச் சீடர்களாக்கியவர்.

திருக்கோட்டியூர் நம்பி தன் ஆசார்யரான ஆளவந்தாரிடம் கற்று கொண்ட ரஹஸ்யத்ரயத்தினுடைய (திருமந்திரம், த்வயம் மற்றும் சரம சுலோகம்) அர்த்த விசேஷங்களையே எப்பொழுதும் த்யானித்துக் கொண்டே இருப்பார். யாரிடமும் பேசாமல் யாருக்கு என் சொல்கேன் என்று இருந்தவர்.

திருக்கோட்டியூரில் வசிக்கும் ஒருவருக்கும் இவருடைய பெருமைகள் தெரியாது. ஸ்ரீராமாநுஜருக்கு பெரிய நம்பிகள் மூலம் இவருடைய பெருமைகள் தெரிந்ததால், மிகவும் ரஹஸ்யமான மந்திர அர்த்த விசேஷங்களைக் கற்றுக் கொள்வதற்காக 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடந்தே சென்றார் என்பது வரலாறு.

ஸ்ரீகண்ணபிரான் கீதையில் அருளிச் செய்த சாரமான வார்த்தை “சரம சுலோகம்”. “ஸர்வதர்மான் பரித்யஜ்ய…” எனத் தொடங்கும் சரம சுலோகத்தின் பொருளை அறிவதற்காகத் திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு நடைப்பயணமாகச் சென்றார் பகவத் ராமாநுஜர். ஸ்ரீ இராமாநுஜர் திருக்கோட்டியூர் சென்று அங்கே இருக்கும் கோயிலான சௌம்ய நாராயணப் பெருமாளைச் சேவித்து விட்டு, நம்பியின் திருமாளிகை (வீடு) எங்கே என்று விசாரித்து அதனை நோக்கித் தண்டனிட்டுக் கொண்டே சென்று நம்பிகளிடம் தனக்கு உபதேசம் வேண்டி நிற்க, நம்பியோ "இன்னொரு சமயம் பார்க்கலாம்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.


ஏன் அப்படி மறுத்தார் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சரம சுலோகத்தில் முக்கியமான அர்த்த விசேஷத்தைக் கூறும் வார்த்தை “ஏகம்”. அதாவது பகவான் மட்டுமே "உபாயம்". கர்ம, ஞான, பக்தி யோகங்கள் மற்றும் நாம் செய்யும் ப்ரபத்தி (சரணாகதி), மற்ற எதுவுமே உபாயம் அல்ல. இந்த ரஹஸ்யார்த்தத்தைத் தகுதி இல்லாதவர்களிடம் கூறினால், தான் செய்ய வேண்டிய கடமைகளைக் கூடச் செய்யாமல் இருக்கலாமோ என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். அதனால் இராமாநுஜருக்கு முன்னால் உள்ள ஆசார்யர்கள் இந்த அர்த்தத்தை ஓராண்வழியாகப் பாதுகாத்து வந்தார்கள். அதனால் நம்பியும் அவ்வளவு எளிதாக இராமாநுஜருக்குச் சொல்லவில்லை.

கடைசியில் 18வது முறைதான் நம்பி அவருக்குச் சரம சுலோகத்தினுடைய அர்த்த விசேஷத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தகுதி இல்லாதவர்களுக்கும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையான முயற்சி இல்லாதவர்களுக்கும் இதன் பொருளை உபதேசிக்கக் கூடாது. மீறினால் நரகம் புகுவாய்! என்று ஸத்தியம் செய்யுமாறு, நம்பி ஸ்ரீராமாநுஜரிடம் கேட்டார்.

இராமாநுஜரும் அதை ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஸத்தியம் செய்தார். நம்பி மிகவும் ரஹஸ்யமான சரம சுலோகத்தினுடைய பொருட் சிறப்பை அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால் ராமாநுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் அர்த்த விசேஷத்தைக் கற்றுக் கொண்ட பிறகு, இதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையுடையவர்களை அழைத்து, விளக்கமாகக் கூறினார்.

"ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும்" என்று பேசி வரம்பறுத்தார் என்று இராமாநுஜரின் அளப்பரிய கருணையை மாமுனிகள் கொண்டாடுகிறார்.

"ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் 
ஏரார் எதிராசர் இன்னருளால் 
பாருலகில் ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள்
கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்."

இதைக் கேள்விப்பட்டவுடன் மிகவும் கோபப்பட்டார் நம்பிகள். இராமாநுஜரை அழைத்து, “ஏன் இப்படி செய்தீர்?” என்று கேட்டபோது, ராமாநுஜர் தேவரீருடைய ஆணையை மீறியதால் அடியேனுக்கு வேண்டுமானால் நரகம் கிடைக்கும், ஆனால் பலருக்கு மிக உயர்ந்த பரமபதம் கிடைக்குமல்லவா என்று கூறினார்.

மற்றவர்கள் உய்ய வேண்டும் என்று கருணையோடு இருக்கும் ராமாநுஜருடைய பரந்த திருவுள்ளத்தைப் பார்த்து நம்பி அவருக்கு “எம்பெருமானார்” என்ற திருநாமத்தைச் சூட்டினார். இந்த இதயம் எமக்கில்லையே என்று கட்டித் தழுவிக் கொண்டார். இந்த வரலாற்றின் சில உட்கூறுகளை இனி ஆராய்வோம்.

இராமாநுஜர் திருக்கோட்டியூருக்கு 18 முறை நடந்ததாகக் கூறுகின்றார்களே, 18 முறையும் எந்த உபதேசமும் பெறாமல் திரும்பி வந்தாரா, என்ற ஒரு கேள்வி எழும்.

எந்த உபதேசத்தைப் பெற 18 முறை நடந்தாரோ அந்த உபதேசம்தான் முதல் 17 முறை தரப்படவில்லையே தவிர திருக்கோட்டியூர் நம்பி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு “உபதேசமாக” சில ஆத்ம விஷயங்களைக் கூறி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

18 முறை பெற்ற விஷயங்கள் வருமாறு: 

1. நம்பியின் முதல் நிபந்தனை “ஸம்ஸார பீஜம் தொலைத்து வாரும்!” என்பது. உய்வதில் ஆசை இருந்தால் வாழ்க்கையில் ஆசை நீங்க வேண்டும். அந்தப் பற்று இல்லை என்று இராமாநுஜர் உறுதி செய்து கொண்டார். 

2. அகங்கார மகாரங்கள் நீங்காமல் இருந்தால் உடம்பின் மீது கொண்டிருக்கும் ஆசை நீங்காது. எனவே அது தொலைத்து வாரும் என்றார். அகங்கார மகாரங்கள் நீங்குவதற்கான வலிமை இல்லாவிட்டால் ஆத்ம ஞானம் கிடைக்காது.

3. அடுத்து ஆத்ம ஞானம் பெறும் தகுதி குறித்து பரிசோதித்து வாரும் என்றார். காரணம் ஆத்ம ஞானம் பெறும் விருப்பமின்றேல் சுகமாக வாழ வேண்டும் என்கிற இச்சைதான் நீடிக்கும். உலகியலில் நீடிக்கும் ஆசை நீங்காமல் இறைவனிடத்திலே அன்பு பிறத்தல் என்பது முடியாது. 

4. “தேகப்பற்று நீக்கி வாரும்” என்றார். ஆத்ம ஞானம் பெரும் ஆசையிருந்தாலும் தேகப்பற்று அவ்வாசையை அவ்வப்போது தடை செய்யும். ஆத்மா வாட்டத்தோடு இருக்கிறது. அவ்வாட்டத்தை நீக்க வேண்டும் என்கிற உணர்வு வேண்டும். இதை திருமங்கை ஆழ்வார் "வாடினேன் வாடி வருந்தினேன்" என்று வருந்துகிறார். தேக வாட்டத்தில் தமக்கு கவலை இல்லை, ஆத்மாவில் தான் நோக்கு என்பதை உறுதி செய்து கொண்ட இராமாநுஜருக்கு ஐந்தாவது உபதேசம் கிடைத்தது. 

5. ஆத்ம ஞான அறிவு இருப்பினும் சிலருக்கு தன் ஆன்மாவை தானே அனுபவிக்கும் நோக்கம் இருக்கும். இதற்கு “கைவல்யம்” என்று பெயர். இது அஞ்ஞானத்தை விட மோசம். எனவே கைவல்ய ஆசை போக வேண்டும் என்றார். 

6. இறைவனிடத்திலே நமக்கு அன்பு பிறக்கவில்லை என்றால் நம் வாழ்வின் மீது கொண்ட பற்று நீங்காது. வாழ்வில் உள்ள பற்று நீங்கவில்லை என்று சொன்னால் நாம் இறைவனுக்காக வாழாதவர்கள் ஆகி விடுவோம். “நய நயோர் விஷயாந்தராணாம்” என்ற திருப்பாணரின் நிலைப்போல இறைவனைத் தவிர்த்த மற்ற விஷயங்களில் தமக்கு என்றுமே பற்றில்லை என்ற உறுதிக்காக உலகப்பற்றை அறுத்துக் கொண்டு வாரும் என்றார். 

7. உலகியலில் ருசி இல்லை. ஆனால் பகவத் விஷயத்தில் ஆசை உண்டா என்று அடுத்துச் சோதிக்கச் சொன்னார். 

8. இவ்வளவு இருந்தும் எதிலும் விருப்பம் இருக்கக் கூடாது. வெறுப்பும் இருக்க கூடாது. எனவே ராக துவேசங்கள் இருக்கக் கூடாதே என்றார். 

9. விருப்பு வெறுப்பு போனாலும் "தான்" என்கிற சுதந்திர உணர்வு அதாவது ஸ்வாதந்திரியம் இருக்கும். அது கூடாது என்றார். பரிபூரணனுக்கே அடிமை கொண்ட தனது பாரதந்திரிய குணத்தை தெளிவுபடுத்தினார் இராமாநுஜர். 

10. இறைவனுக்கு நாம் அடிமை (சேஷ பூதன்) என்ற நினைவோடு வாழ இயலாவிட்டால் நம்மிடத்தில் உள்ள காமம் (பொதுவான ஆசைகள்) நீங்காது. காமம் நீங்கவில்லை எனில் வைணவத்துவம் இல்லை. பத்தாம் முறையாக கோட்டியூர் நம்பி இராமாநுஜரின் வைஷ்ணவத்துவத்தை பரிசோதித்தார். இராமாநுஜரிடம் வைணவனுக்குரிய பண்புகள் யாவும் அமையப் பெற்றிருக்கின்றமையை உறுதி செய்து கொண்டார். காரணம் வைணவத்துவம் இல்லை என்றால் சாத்வீகம் வராது. 

11."ஸாத்விக பரிக்ரஹம் (நன் மக்களின் அபிமானம்) பெற்று வாரும்!" என்றார் நம்பி. காரணம் சாத்வீகம் வராது போனால் இறை அடியவர்களின் திருவடிகளில் அன்பு பிறக்காது. பெரிய நம்பி போன்ற பரம ஸாத்வீகர்களின் பேரன்பினைப் பெற்றார் இராமாநுஜர். 

12. சரி; இனி இறைவனின் அடியார்களுடைய திருவடிகளில் அன்பு கொண்டு வாரும் என்றார். இறை அன்பு இருப்பினும் இறைவனின் அடியார்களிடம் மதிப்பு இருக்காது. அப்படி இல்லாதவர்களுக்கு இறைவன் திருவடிகளிலும் அன்பு இருக்காது. அதையும் பெற்றார் இராமாநுஜர். 

13. பகவானிடம் கொண்ட அன்பை அதாவது உண்மையான ஆழமான அன்பை இனி சோதிக்க எண்ணினார். காரணம் இறைவனுடைய திருவடிகளில் அன்பு இல்லாவிட்டால் இறைவனுக்குத் தொண்டு செய்ய இயலாத ஒரு நெருக்கடி ஏற்பட்டு விடும். அரங்கனே நம் இராமாநுஜன் என்று கொண்டாடி மகிழ்வதை அறிந்து கொண்டார் கோட்டியூர் நம்பி. அறிந்து மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

14. “நாராயணனே நமக்குப் பறை தருவான்” என்று சொன்ன ஆண்டாளைப் போல் பிறருக்கு அடிமைப் படாது பகவான் நாராயணனுக்கு மட்டுமே அடிமை கொண்ட உறுதியைச் சோதித்தார் நம்பிகள். இதற்கு சம்பிரதாயத்தில் “அனன்ய சேஷத்வம்” (எம்பெருமான் ஒருவனுக்கே நாம் ஆட்பட்டவர் என்னும் எண்ணம்) என்று பெயர். இதுவும் இராமாநுஜரிடத்திலே இயல்பாக இருந்தது.

15. இவ்வளவு இருந்தும் மற்ற பலன்களில் அல்லது வேறு குறுக்கு வழிகளில் விருப்பம் இருக்கக்கூடாது. அதாவது அனன்ய ப்ரயோஜனத்வம் கூடாது. எம் பெருமானை அடைவதே ஒரே குறிக்கோள் என்னும் உறுதி வேண்டும். இராமாநுஜரின் இந்த உறுதியையும் அறிந்து கொண்டார் கோட்டியூர் நம்பி.

16. இனி வேறு அனுபவம், ஆனந்தம் கூடாது என்றார். அதாவது “அனன்ய போக்யத்வம்” (எம்பெருமானை அனுபவிப்பதே ஆனந்தம் என்னும் எண்ணம் தவிர மற்ற எண்ணம் இல்லாமை. “உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” என்ற எண்ணம் வேண்டும். மற்றை காமங்கள் இருக்கக் கூடாது. கண்ணனுக்கே ஆமது காமம் என்ற உணர்வொன்றே இருக்க வேண்டும். இதுவும் இருந்தது.

17. பதினாறு நிபந்தனை ஆகி விட்டது. இவ்வளவு இருந்தும் ஆசாரிய அபிமானம் இல்லாவிட்டால் எதுவும் பலிக்காதே. குருவருள் இல்லையேல் திருவருள் ஏது? ஆசாரிய அபிமானமே உத்தாரகமல்லவா. எனவே “ஆசார்ய அனுக்ரஹம் கிடைத்த பின் வாரும்!” என்றார் நம்பி. (அதாவது கோட்டியூர் நம்பியாகிய ஆசாரியனின் அன்பை பெற்றல்லாது மந்திரப் பொருள் கிடைக்க வழியில்லையே. தன்னைச் சோதிப்பதே தன் மீது கொண்ட அபிமானத்தினால் தான் என்பதை அவருக்கு உணர்த்தினார் இராமாநுஜர்.

இப்படி அவருடைய அபிமானத்தையும் உறுதி செய்து கொண்ட இராமாநுஜர் பதினெட்டாம் முறையாக சென்ற பொழுது, “அதிகாரி புருஷரே வாரும்; நீரே மந்திரப் பொருள் கொள்ள வேண்டிய ஸத் பாத்திரம்; வந்து கொள்ளும் இந்த பொக்கிஷங்களை”, என்று ஆவலோடு அழைத்தார்.

அதாவது மேலே சொல்லப்பட்ட பற்பலத் தகுதிகளோடு ஆசார்ய அபிமானமும் பெற்றவருக்கே பகவானுடைய மந்திரமாகிய மூன்று மந்திரங்களை ஏற்பதற்கு உரிய தகுதி கிடைக்கும்.

எனவே, மூன்று மந்திரங்களைப் பெற மேற்படி குணங்கள் அவசியம்.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு முறை இராமாநுஜரிடத்திலே சொன்ன திருக்கோட்டியூர் நம்பிகள், இதில் பக்குவமடைந்த இராமாநுஜருக்கு, சரம சுலோக மந்திரத்தின் தத்துவத்தைச் சொல்வதற்கு எந்தவிதமான தடைகளும் இனி இல்லை என்ற நிலையில், அவருக்கு அர்த்த விசேஷங்களையெல்லாம் கொட்டித் தந்தார் திருக்கோட்டியூர் நம்பிகள்.

இது பெரிதல்ல. அப்படி நடையாய் நடந்து பெற்ற மந்திரத்தை ஒரு நொடியில் ஆசையுடையவர்க்கெல்லாம் வாரி வழங்கினாரே, அந்த அருட்கருணைதான் அவரை எம்பெருமானை விடச் சிறந்த கருணை உடையவர் என்ற பொருளில் எம்பெருமானாராக்கியது.

இராமாநுஜரை வள்ளலாக்கி உலகுக்குத் தந்த வள்ளலின் வள்ளல் திருக்கோட்டியூர் நம்பிகள்.

திருக்கோட்டியூர் நம்பிகள் திருவடிகளே சரணம்.

வாழ்க்கை நெறிகள் வளரும்.....

நன்றி - சப்தகிரி ஜூன் 2019

நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக