"இதுவோ திருநகரி, ஈதோ பொருநை இதுவோ பரமபதத்து எல்லை"
ஆழ்வார்களால் மங்களாசாசனம் அதாவது பெருமாளை, அவனுடைய கல்யாண குணங்களை, அழகை, அந்த தலத்தின் எழிலைப் பாடுவதை மங்களாசாசனம் என்பார்கள். நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் 106ஐ சேவித்தவர்களை அவர்களுடைய வாழ்நாள் முடிந்தபிறகு மற்ற இரண்டு திவ்ய தேசங்களான திருப்பாற்கடல், வைகுந்தத்திற்கு பெருமாளே அழைத்துச் சென்று காட்சி தருகிறார் என்பது ஒவ்வொரு வைணவனின் தலையாய கொள்கையாகும். பன்னிரண்டு ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் எந்த திவ்ய தேசங்களையும் போற்றிப் பாடவில்லை. மாறாக நம்மாழ்வாரையே போற்றி புகழ்ந்து பரவசப்பட்டு பாடியிருக்கிறார்.
எல்லா திவ்ய தேசங்களுமே அழகுதான். அற்புதம்தான்! நம்மாழ்வார் சொல்வதைப்போல, ‘‘கண்டோம்... கண்டோம்... கண்ணுக்கு இனியன கண்டோம்... எல்லோரும் வாரீர்!’’எல்லா திவ்ய தேசங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும் அமைந்திருக்கிறது. இதில் விசேஷமாக நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒன்பது திவ்ய தேசங்களும் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. நம்மாழ்வார் அவதாரம் செய்த இடமான ஆழ்வார்திருநகரி, மதுரகவியாழ்வார் அவதாரம் செய்த திருக்கோளூர் இந்த ஒன்பது திருப்பதிகளில் அடங்கும். ஒன்பது திருப்பதிகளில் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு எழிலோடும் பொழிலோடும் காணப்படுகிறது.
புளியங்குடி கிடந்து வரகுண மங்கையிருந்து
வைகுந்தத்தில் நின்று
தெளிந்த என் சிந்தை சுகங்கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கருளி
நளிந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப,
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்
கனிவாய் சிவப்பா நீ காண வாராயே!
நம்மாழ்வாரின் அதிஅற்புதமான திருவாய்மொழிப் பாசுரம் இது. எம்பெருமானே! நீ இந்த திருப்புளியங்குடியில் சயனத் திருக்கோலத்தில் அம்சமாக இருக்கிறாய். ஸ்ரீவைகுண்டத்தில் நின்றுகொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறாய்! வரகுணமங்கை தலத்தில் அமர்ந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாய். இவ்வாறு மூன்று நிலைகளிலும் நிலைத்து நின்று என் உள்ளத்தை ஆள்கிறாய். நாங்கள் ஆடிப்பாடி மகிழ்கிறோம். எங்களைக் காண நீ ஓடோடி வரவேண்டும். உன் கனிந்த சிவந்த வாய் அழகை நாங்கள் பார்க்க வேண்டாமா? என்று உணர்ச்சி மேலீட்டால் நம்மாழ்வார் பாடியிருக்கிறார்.
ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு தனித்த சிறப்புக்களையும் பெருமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. தாமிரபரணிக் கரைதோறும், அந்த வற்றாத ஜீவநதியின் தாலாட்டில் பெரும்பாலான நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. ஆழ்வார் திருநகரியில் பொலிந்து நின்றபிரானாக பெருமாள் சேவை சாதிக்கிறார். வைணவத்தை அதன் சித்தாந்தத்தை தூக்கி நிறுத்தி தூய்மையான பக்திக்கு எதுவும் தடையாக இருக்க முடியாது என்று உலகிற்கு எடுத்துக்காட்டிய பகவத் ராமானுஜர் ஆழ்வார் திருநகரிக்கு வருகிறார். தாமிரபரணிக்கரை தென்படுகிறது. உடனே, ராமானுஜரின் மனதில் மின்னலென நம்மாழ்வார் ஞாபகம் வந்து
விடுகிறதாம்.
‘‘இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
இதுவோ பரமபதத்து எல்லை
இதுவேதான் வேதம் பகிர்ந்திட்ட
மெய்ப்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்.’’
என்று இந்த தலத்து சிறப்பை எடுத்துச் சொன்னாராம். நம்மாழ்வார் அவதாரம் செய்த திருக்குருகூர் என்கிற ஆழ்வார்திருநகரியை ராமானுஜர் பரமபதத்து எல்லை என்கிறார். அப்படியென்றால் அந்த ஊர் எப்படிப்பட்ட சிறப்புடையதாக இருக்கும். நாம் வாழும் காலத்திலேயே அந்த ஊருக்குச் சென்று இன்றைக்கும் நம்மாழ்வார் தவம் செய்யும் அந்த மேலான புளிய மரத்தை பார்க்க கண்கோடி வேண்டுமே! நம்மாழ்வார் வைணவ குலபதி இல்லையா? அவருடைய மூச்சுக்காற்று இன்னமும் அங்கே குடிகொண்டு இருக்கிறதே! அதனால்தான் நம்மாழ்வார்.
‘‘வானவரேத்த நின்ற திருக்குருகூர்
அதனுள் ஆடு புட்கொடி,
ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதே!’’
இந்தப் பெருமானை வானவர்கள் என்று அழைக்கப்படுகின்ற தேவர்கள் வந்து வணங்குகிறார்களாம். இன்னொருபடி மேலே போய் பரமபதநாதன் இருக்கும் எல்லை நிலம் என்கிறார் என்றால், இதைவிட இந்த ஊருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்? ஆழ்வார் திருநகரி என்றில்லை, பக்கத்திலுள்ள தென்திருப்பேரையும் அழகிய தலம்தான். மகர நெடுங்குழைக்காதன் அருள்பாலிக்கின்ற அற்புத ஸ்தலம்.
‘‘தென்திருப்பேரையில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன்
மாயன் நூற்றுவரை
அன்று மங்க நூற்ற நிகர் இல்
முகில்வண்ணன், நேமியான்,
என் நெஞ்சம் கவர்ந்து
எனை உழியானே!’’
நம்மாழ்வார் பராங்குச நாயகியாக நாயகி பாவத்தில் அருளப்பட்ட திருத்தாயார் பாசுரம் இது. தென்திருப்பேரையில் வீற்றிருக்கும் அழகு பொருந்திய, ஒளி பொருந்தியவள் இந்த மகர நெடுங்குழைக்காதன் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டவன் துரியோதனனை அழியும்படி செய்தவன், அவன். என்னை மட்டுமல்ல என் நெஞ்சையும் கவர்ந்து சென்றவன். இறைவன்மேல் உள்ள மாளாக் காதலால் படைக்கப்பட்ட பாசுரம். தென்திருப்பேரைக்குச் சென்று பார்த்தால்தான் தெரியும். அவர் நம்மாழ்வாரை மட்டுமல்ல அங்கு வரும் அத்துணை அடியார்களின் சிந்தனைகளையும் கவரக்கூடியவள் என்று தெரியும். இது சத்தியம். அந்த ஊர் எப்படிப்பட்ட ஊராம்? தெரியுமா?
‘‘வேத ஒலியும் விழா ஒலியும்
பிள்ளைக்குழா விளையாட்டு ஒலியும் அறா
திருப்பேரையில் சேர்வன் நானே!’’
தென்திருப்பேரையில் அவன் பேரின்ப வெள்ளத்தை உடையவனாய் வீற்றிருக்கிறான். வேத முழக்கமும் திருவிழா ஒலியும் குழந்தைகளின் விளையாட்டு ஒலியும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிற ஊராம். நம்மாழ்வார் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரவசப்பட்டு பாடியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதனை பார்க்கப் போனால் இன்றைக்கும் அவன் நம் கண்களுக்கு பேரின்ப பெரு வெள்ளமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர முடியும். அவசியம் ஆழ்வார் ‘திருநகரிக்கும் தென்திருப்பேரைக்கும் சென்று அவனை அனுபவியுங்கள். அருளைப் பெறுங்கள்.
நன்றி - தினகரன்