ஞாயிறு, 1 டிசம்பர், 2019

மயக்கும் தமிழ் - 21 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

என்னையும் உன்னிலிட்டேன் என்னப்பா!

இறைவனைப் பற்றுவதற்கும் அவன் அருளைப் பெறுவதற்கும் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று என்ன தெரியுமா? தூய்மையான பக்திதான். அதைத்தவிர அவன் நம்மிடம் வேறு என்ன எதிர்பார்க்கப் போகிறான்? அவனிடம் இல்லாதது நம்மிடம் என்ன இருக்கப் போகிறது? இந்த வாழ்வும் வளமும் அவன் போட்ட பிச்சைதானே. நமது இச்சை அதிகமாக அதிகமாக ஆசைகள் காட்டுச் செடிகள் போல வளர்ந்து அவனை மறந்து ஆசைத் தீயில் வெந்து போகிறோம். இதுதானே உண்மை! இறைவன் சர்வ சுலபன். அவன் மிகமிக எளிமையானவன். இறைவன் மிகவும் சாதாரணமாகவே நம் எண்ண வலைக்குள் அகப்படுவான். பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள எளிய உறவை திருமங்கையாழ்வார் அற்புதமாக ஒரு பாசுரத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார். எந்த ஊர் தெரியுமா?


பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரம்தான். ஆழ்வார்கள் காலத்தில் திருச்சித்ரகூடம் என்று பெயர் பெற்றிருந்தது. இந்த மண்ணையும் மனிதர்களையும் காக்கும் பொருட்டு நடராஜரும், கோவிந்தராஜனும் அருகருகே ஒரே கோயிலில் இடம் பெற்றிருப்பது  சாதாரணமான விஷயமா என்ன? சைவ வைணவ ஒற்றுமைக்கு சிதம்பரம் என்கிற திருச்சித்ரகூடம் பிரமாதமான எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. திருமங்கை ஆழ்வார் சிவபெருமானுக்குப் பிடித்த ராகமான சங்கராபரண ராகத்தில் பெருமாளுக்கு பத்து பாசுரங்களை படைத்துள்ளார்.

காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம்
ஐந்து தீயோடு நின்று தவஞ் செய்ய வேண்டா!
திருமார்பனைச் சிந்தையுள் வைத்து
மென்பீர் வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு
தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!

பிராட்டியை, அதாவது தாயாரை திருமார்பில் கொண்ட பெருமான் நம் சிந்தையில் வைப்பதற்காக அவனை தூய மனத்தோடு நினைப்பதற்கு காயையும் கனியையும் உண்டு, காற்றை சுவாசித்து ஐந்து விதமான தீயினை வளர்த்து கடுமையான தவத்தை செய்ய வேண்டாம். முறையாக வேதம் பயின்று ஓதும் மறையோர்கள் தினமும் வளர்க்கும் வேள்வித்தீ நிகழும் இடமான திருச்சித்ரகூடம் போய் சேர்வீர்கள் என்கிறார் திருமங்கையாழ்வார். எளிமையாகச் சொல்வதென்றால் மூச்சை அடக்குகிற ஜபதபங்கள் வேண்டாம். சாப்பாட்டை மறுதலித்து விட்டு காட்டில் கிடைத்த பழங்களை சாப்பிட வேண்டாம். உன்னை நீ சித்ரவதை செய்ய வேண்டாம். உடலை அடக்காதே! உள்ளத்தை அடக்கு! 

இல்லறத்திலேயே நல்லறமாக வாழ்க்கை வாழமுடியும் என்பார்களே, அதைப்போல காட்டில் இல்லாமலேயே நாட்டிலேயே நம்பிக்கை நாயகனை பேரண்டத்தை காக்கிற பெருமாளான கோவிந்தராஜனை சென்று வணங்குங்கள் என்று தன் அனுபவத்தாலும், ஆத்ம ஞானத்தாலும் நமக்கு வழிகாட்டுகிறார், கலியன் பரகாலன் நாலுகவிப் பெருமாள் என்றழைக்கப்படுகிற திருமங்கை ஆழ்வார். பெருமாளை நாம் வேறெங்கும் தேட வேண்டியதில்லை. அவன் நமக்குள்ளேயே இருக்கிறான். நம்மை நல்வழிப்படுத்தி நம்மை ஆற்றுப்படுத்தி நாம் சோர்ந்து போகும்போதெல்லாம் நமக்கு ஆறுதல் தருபவன் அவனைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள். இந்த ஜீவாத்மாவும், அந்த பரமாத்மாவும் பிரியாதபடி நாம் உணர்வு அலைகளால் பின்னிப் பிணைந்து உள்ளோம். எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் அற்புதப் பாசுரம் இந்த உணர்வுகளின் உண்மை நிலையை நமக்கு தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

‘‘பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
    நிறமெழவுரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
    மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
    என்னையும் உன்னிலிட்டேன்
என்னப்பா! என்னருடிகேசா!
    என் உயிர்க் காவலனே!’’

இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளெல்லாம் ஈரத்தமிழால் ஆனவை. பச்சைத்தமிழ் என்கிறார்களே... அந்தத் தமிழ் இந்தத் தமிழ்தான். மனிதனின் அதாவது, பகவான் மீது உணர்வுப் பூர்வமாக பக்தன் எப்படிப்பட்ட உறவுகளை கொண்டுள்ளான் என்பதை இவ்வளவு எளிமையாக இனிமையாக பெரியாழ்வாரைத் தவிர வேறு யாரால் எடுத்துச் சொல்ல முடியும்? பாசுரத்திற்கான விளக்கத்தைப் பார்ப்போம். ‘தங்கத்தை உரைகல் மேல் அதன் நிறம் தெரிய உரைப்பது போல, உன்னை அதாவது, பகவானை என் நாக்கின் மேல் மாற்றுக்குறையாமல் தேய்த்துக் கொண்டேன். உன்னை எனக்குள் வைத்தேன். என்னையும் உனக்குள் இட்டேன்’ என்கிறார்.

பாசுரத்தின் கடைசி வரிகள் எல்லாம் ராமானுஜர் கண்ட விசிஷ்டாத்வைதத்தின் ஆழமான தத்துவங்களை கொண்டிருக்கிறது. நாராயணன் நமக்குள் இருக்கிறான். நாமும் நாராயணனுக்குள் இருக்கிறோம் என்பது வைணவத்தின் தலையாய தத்துவ நிதர்சனம். பாசுரத்தை முடிக்கும்போது பெரியாழ்வார் நம்மைக் காத்து ரட்சிக்கிற எம்பெருமானை என்னுயிர்க் காவலனே என்கிறார் ஒருவித உருக்கத்தோடு. பக்தியிலே உருக்கம் இருந்தால்தான் அவனிடம் நமக்கு உண்மையான நெருக்கம் ஏற்படும். என்னைப் படைத்து வாழவைத்து இந்தப் பூவுலகில் நடமாட வைக்கும் மூல முதல்வன் நீதான் என்ற உணர்வு பெரியாழ்வாருக்கு மேலிட்டதால்தான் என்னுயிர்க் காவலனே என்கிறார்! பெரியாழ்வாரின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதுபோல் அமைந்திருக்கிறது திருமழிசை ஆழ்வாரின் அமுத வரிகள்.

‘‘நான் உன்னையன்றி இலேன்
கண்டாய் நாரணனே
நீ என்னையன்றி இலை’’

என்னால் உனக்குச் சிறப்பு, உன்னால் எனக்குப் பெருமை. நம் இருவருடைய உணர்வுகளையும் உறவுகளையும் இங்கு யாராலும் பிரிக்க முடியாது என்கிறார், திருமழிசை ஆழ்வார். பெரியாழ்வாருக்கும் திருமழிசை ஆழ்வாருக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல் ஓர் பாசுரம் ஆழ்வார்களின் தலைமகனான ஞானத் தந்தையாக விளங்குகிற நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம்... மற்றொன்று இல்லை; சுருங்கச் சொன்னோம்;

மாநிலத்து எவ்வுயிர்க்கும்
சிற்றவேண்டா; சிந்திப்பே அமையும்
கண்டிர்கள்; அந்தோ!
குற்றம் அன்று; எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றம் இல்சீர்கற்று, வைகல்
வாழ்தல் கண்டிர்  குணமே.

இறைவனை சிந்தித்தல் ஒன்றே போதும். உடலை வருத்த வேண்டாம்; வார்த்தைகள் வேண்டாம். அவனைப் பற்றுதல் மிக மிக எளிது இனிமையானது என்கிறார் நம்மாழ்வார். சுருங்கச் சொல்கிறோம் வேறு வழிகளைத் தேடி அலையாதீர்கள். சிந்தனை செய் மனமே என்கிறோமே அதைத்தான் சிந்தனையை அந்த மாலவன், மாயவன், மணிவண்ணன் மீது வையுங்கள். இதையெல்லாம் முன்னிறுத்தித்தான் நம் குடும்பத்து பெரியவர்கள் பிள்ளைகளுக்கு மாதவா, கேசவா, கோவிந்தா, நாராயணா என்று பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தார்கள். இதைத்தானே ஆண்டாளும் குறையொன்றுமில்லாத கோவிந்தா என்கிறார்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக