நந்தி பணி செய்த நந்திபுர விண்ணகரம்!
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை
என்று முனியாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு
கூட எழில் ஆர்மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள்
தாம் மலர்கள் தூய் நண்ணி உறைகின்ற நகர்
நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே
- திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வாரின் ஆன்மா குடிகொண்டிருக்கிற ஊரே கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் புண்ணிய ஸ்தலம் திருநந்திபுர விண்ணகரம், நாதன்கோவில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். பொன்னியின் செல்வன் கதை நடந்த முக்கிய இடமான பழையாறைக்கு கூப்பிடும் தூரத்தில் உள்ளது இந்த திவ்யதேசம். அது சரி மற்ற திவ்யதேசத்திற்கு இல்லாத அப்படி என்ன பெரிய பெருமை இந்த புண்ணிய தலத்திற்கு இருக்கிறது என்கிறீர்களா? ஊர் பேர் என்ன? நந்திபுரவிண்ணகரம். வைணவத் தலமான இந்த ஊருக்கு நந்திபுரவிண்ணகரம் என்று எப்படி ஏற்பட்டது? மகா விஷ்ணுவை தரிசனம் செய்ய விரும்பினார் அதிகார நந்தி எனப்படும் நந்திகேஸ்வரர். சிவபெருமானின் வாகனம் இல்லையா? நந்திகேஸ்வரரின் அனுமதி இல்லாமல் பரமேஸ்வரனை யாரால் தரிசிக்க முடியும்?
கயிலாயத்திலிருந்து புறப்பட்டு உடனடியாக ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்றார். வைகுண்டத்தின் வாயிலில் நிற்கும் துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்ய உள்ளே சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த துவார பாலகர்கள் சினம் கொண்டு நந்தியம் பெருமானுக்கு சாபம் கொடுத்ததன் விளைவு நந்திகேஸ்வரருக்கு உடல் முழுவதும் கடும் வெப்பம் ஏற்பட்டுவிட்டது! துடிதுடித்துப் போனார் நந்தியம்பெருமான். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தார். உடனே, தனது பெருந்தலைவரான சிவபெருமானிடம் நடந்த விஷயத்தை சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட சிவபெருமான் தவறு செய்துவிட்டாய். மகாவிஷ்ணுவிற்கு எந்நேரமும் காவல் புரியும் துவார பாலகர்கள் இட்ட சாபம் மகாவிஷ்ணுவின் கோபத்தைவிட அதிகம் சக்தி வாய்ந்தது. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழிதான் இருக்கிறது.
திருமாலின் திருமார்பில் இடம் பெறுவதற்கு திருமகள், மகாலட்சுமி தவமிருந்த ஷெண்பகாரண்யத்திற்கு சென்று கடும் தவம் செய் என்று கட்டளையிட்டார்.
சிவனின் கட்டளையை சாசனமாக ஏற்று நந்திகேஸ்வரர் தவம் புரிந்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்று தன் பாவத்தை போக்கிய தலமே இது. நந்தியம்பெருமானின் தவத்தில் குளிர்ந்துபோன திருமால், ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’’ என்று ஆணையிட ‘‘நாதனே, திருமகள் கேள்வனே, நான் தவம் செய்த இந்த இடம் என் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்’’ என்று தன் உள்ளத்து உணர்வுகளை தெரிவிக்க, மகாவிஷ்ணுவும் நந்திகேஸ்வரரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அருளாசி வழங்கினார். அன்று முதல் நந்திபுரவிண்ணகரம் என்று இந்த ஊர் அழைக்கப்படுகிறது.
மகாவிஷ்ணு அருள் பாலிக்கும் நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இந்த ஒரு இடத்தில்தான் சிவபெருமானின் வாகனமான நந்தியம்பெருமான் கருவறையில் அதாவது, மூலஸ்தானத்தில் மகாவிஷ்ணுவிற்கு பணி செய்யும் விதமாக அமையப் பெற்றிருக்கிறது. இதைத்தான், ‘‘நந்தி பணி செய்த நந்திபுர விண்ணகரம்’’ என்று திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு இதைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும். நாதன்கோவில் மகாவிஷ்ணு ஜகந்நாதப் பெருமாளாக சேவை சாதிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரம். தாயாரின் திருப்பெயர் ஷெண்பகவல்லி. மகாலட்சுமிக்கும், நந்தி பகவானுக்கும் சிபி சக்ரவர்த்திக்கும் பகவான் காட்சி கொடுத்திருக்கிறார். இங்குள்ள தாயாருக்கு ஒன்பது வாரங்கள் வெள்ளிக் கிழமைகளில் அர்ச்சனை செய்து பாசிப் பயிறு பிரசாதத்தை நிவேதித்து பிரார்த்தித்துக் கொண்டால் சர்வ காரியமும் கைகூடும்.
அதுவும் ஐப்பசி மாத வெள்ளிக் கிழமை மிகவும் முக்கியமாக தாயாருக்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஊரைப் பற்றியும் இங்கு சேவை சாதிக்கும் எம்பெருமான் போக ஸ்ரீநிவாசனாக, ஜகந்நாதப் பெருமானாக விளங்கும் மகாவிஷ்ணுவைப் பற்றியும் பத்து பாசுரங்களால் அதுவும் தூய தமிழில் விளையாடி இருக்கிறார், திருமங்கையாழ்வார். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பாசுரமே இதற்குச் சான்று. தியானம் செய்வதற்கு இங்குள்ள இறைவனே உகந்தவன். சனகாதி முனிவர்களும், ரிஷிகளும், சித்த புருஷர்களும் இவனைப் பாடிப் பரவசப்பட்டிருக்கிறார்கள். தேவர்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு இங்கு வந்து இதுபோல் மண்ணுலகில் ஊர் இல்லை என்று பரவசப்பட்டு தூய மலர்களால் இறைவனை வணங்கினார்கள். இன்றும் மானசீகமாக வணங்குகிறார்கள்.
நந்தியம்பெருமான் பணி செய்த அற்புத திருத்தலத்திற்கு சென்று ஏ மனமே! நீ செல்வாயாக... என தன் நெஞ்சுக்கு உத்தரவு இடுகிறாள். மற்றொரு ஆழ்வாரின் அற்புதமான பாசுரத்தை பார்ப்போம். தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர்தான் கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர் நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே!
தன் தம்பி லட்சுமணனோடும், காதல் மனைவி சீதையுடனும் சக்கரவர்த்தித் திருமகனான ராமபிரான் தீ உமிழும் அடர்ந்த காட்டில் உலவி வந்தான். ராமபிரான் எழுந்தருளியுள்ள இந்த நந்திபுரவிண்ணகரத்துச் சோலைகளில் குயில்கள் கூவுகின்றன.
குயிலின் இனிய கூவலைக் கேட்டு மயில்கள் தங்கள் தோகையை விரித்து ஆடுகின்றன. இப்படி எழிலும் பொழிலும் கொண்டு குளிர்ந்த சோலைகளை உடைய இத் திருத்தலத்திற்கு மனமே நீ செல். அங்கே நீ போனால் நானும் உன் கூடவே வருவேன். ரம்மியமான குளிர் சோலைகள் சூழ்ந்த ஷெண்பகாரண்யமான அந்த புனித இடத்திற்கு செல் என்று மனதிற்கு கட்டளையிடுகிறார். ஆழ்வாருக்கே அந்த நிலைமை என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? அதுவும் எண்பத்தாறு திவ்ய தேசங்களுக்கு தன்னுடைய ஆடல்மா குதிரையில் பயணம் செய்த திருமங்கை ஆழ்வார் மண்ணில் இதுபோல் நகர் இல்லை என்று பரவசப்பட்டு நிற்கிறார்.
ஆழ்வார் வாக்கு அமுத வாக்கு. ஆழ்வார் சொல்லி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்குக் கூட நாதன் கோவில் சென்று பாருங்கள். ஆழ்வார் பாசுரத்தில் சொன்ன உண்மையை அறிவீர்கள். இந்த விஞ்ஞான யுகத்திலும் மெய் ஞானத்திற்கு சாட்சியாக விளங்கும் புண்ணியத் தலம்.
நூற்றியெட்டு திவ்ய திருத்தலங்களில் தேவலோகத்திற்கு ஈடாக ஆறு தலங்கள் கருதப்படுகிறது. நந்திபுரவிண்ணகரம் (நாதன் கோவில்), அரிமேய விண்ணகரம் (குடமாடு கூத்தன் - திருநாங்கூர்), வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்), காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி), திருவிண்ணகர் - ஒப்பிலியப்பன், பரமேஸ்வர விண்ணகரம் - காஞ்சிபுரம். இந்த ஆறும் மனதிற்கு நெருக்கமானவைகளாக இருக்கிறது என்கிறார். விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் பல அரிய திருப்பணிகளை இந்த நாதன்கோவிலுக்கு செய்தியிருப்பதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இதனால் இவருக்கு இந்தக் கோயிலில் அழகான சிலையும் இருக்கிறது. வானமாமலை திருமடத்தின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த நாதன் கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லாப் பெருமைகளையும் சிறப்புகளையும் பெற்று மகிழ்வீர்கள்!
நன்றி - தினகரன்