மயக்கும் தமிழ் - 19 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நாட்டை உயர்த்திய நல்லோர்கள்!

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதத்திற்கு அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா? துலா மாதம் என்று சொல்லப்படுகிற ஐப்பசி மாதத்தில்தான் அடுத்தடுத்து மூன்று ஆழ்வார்கள் அவதாரம் நிகழ்ந்தது. ஆமாம், முதல் ஆழ்வார்கள் என்றழைக்கப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் அவதரித்தனர். ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் பொய்கையாழ்வாரும், அவிட்டம் நட்சத்திரத்தில் பூதத்தாழ்வாரும், சதய நட்சத்திரத்தில் பேயாழ்வாரும், இந்த மண்ணும் மக்களும் உயர்வு பெற அவதாரம் செய்தார்கள். இவர்களை பன்னிரு ஆழ்வார்களில் ஏன் முதலாழ்வார்கள் என்று அழைக்கிறார்கள்? ஏனைய ஆழ்வார்களுக்கு முந்தித் தோன்றிய கால முதன்மையாலும், திவ்யப்பிரபந்தங்களை முதலில் பாடி அடுத்த ஆழ்வார்களுக்கு வழிகாட்டியதாலும், இவர்கள் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.


சங்க காலம் நீதி நூல் காலத்தையும், அடுத்து வந்த காலகட்டமான பக்தி வளர்த்த காலத்தில் தோன்றிய இந்தபெருமக்களின் பாசுரங்கள் கலப்பற்ற பசுந்தமிழில் ஆனவை. கருத்துச்செறிவு, சொற்கட்டு, இயற்கைப் புனைவு போன்றவற்றை உள்ளடக்கிய இந்தப் பாசுரங்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. இவர்களை பாலேய்தமிழர், செந்தமிழ் பாடுவார், பெருந்தமிழர் என்றும் அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் பக்தி இலக்கிய காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப்போது இங்கே பல்லவர்களின் ஆட்சிக்காலம் நிலவியதாகச் சொல்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில்தான் ஆழ்வார் பெருமக்களும், நாயன்மார்களும் தோன்றி திருக்கோயிலுக்குச் சென்று பண்ணோடு இசைந்த பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டனர்.

கலைநயத்துடன் கூடிய உள்ளத்தை உருக்கும் இனிய இசைப்பாடல்கள் படித்தவர்களையும், படிக்காதவர்களையும் ஆட்கொண்டு களிப்பூட்டின; தமிழ் மக்களை எட்டிய மறைத் தமிழாய் உயர்ந்தன. முதலாழ்வார்கள் தம் இறை அன்பையும் பக்திக் கனிவையும் ஈரத்தமிழில் பாடி தமிழகத்தில் திருமால் நெறியை முதலில் நிலைநிறுத்தினார்கள். பின்னால் வந்த ஆழ்வார் பெருமக்கள் இந்த உணர்வுகளை உணர்ச்சிப் பூர்வமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திலும், பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை என்று சொல்லப்படுகிற மாமல்லபுரத்திலும், பேயாழ்வார் மயிலாப்பூரிலும் அவதரித்தனர். மூன்று பேரும் தனித்தனியாக நூறு பாசுரங்களை படைத்துள்ளனர். மொத்தம் முந்நூறு பாசுரங்கள். முந்நூறும் ரத்தினங்கள், நவமணிகள். இவர்களின் பாசுரங்கள் அனைத்தும் அந்தாதி அமைப்பில் வெண்பாவாக அற்புதப் படையலாக மிளிர்ந்திருப்பதைக் காணலாம். இவர்களின் பாசுரங்களில் மனத்தைப் பறி கொடுத்த வைணவ குரு பரம்பரையில் போற்றத்தக்க குருவாக கருதப்படுகிற நிகமாந்த மகாதேசிகன் என்று அழைக்கப்படுகிற வேதாந்த தேசிகர்,

‘பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒருகால்
மாட்டுக்கு அருள்தரும் மாயன் மலந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடை விளங்க
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் அம்மெய் விளக்கே!’

என்று இம்மூவரையும் போற்றுகிறார். திருக்கோவிலூரில் உள்ள இறைவன் திரிவிக்கிரமன் மூலம், அந்த ஆயன் மாமாயன் மூலம் ஞானம் பெற்ற இந்த மூன்று ஆழ்வார்களும் மூன்று திருவந்தாதிகளைப் பாடி மக்களின் அஞ்ஞானம் என்கிற அறியாமையை நீக்கி பக்தி, பிரபத்தி என்கிற சரணாகதி மனப்பான்மையை பாமர மக்களிடம் ஏற்படுத்தினார்கள் என்று வேதாந்த தேசிகர் இவர்களை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். வேதாந்த தேசிகரைப் போலவே வைணவ குரு பரம்பரையில் மிகவும் போற்றத்தக்க ஆசார்ய பெருமகனான மணவாள மாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில், 

‘‘மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து’’

என்று மிக அழகாக இந்த முதலாழ்வார்களின் பங்களிப்பைப் பெருமைபட சொல்கிறார்.‘‘நல்ல தமிழால், அதாவது ‘நற்றமிழால் நூல் செய்து’ என்கிறார். நல்ல தமிழால் என்ன செய்தார்களாம்? நாட்டை உயர்த்தினார்களாம். நாட்டை உயர்த்துவது என்றால் நாட்டில் உள்ள மக்களை எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்வது. ‘மன மாசு தீரும் அருவினையும் சாரா’ என்பார்களே, அதைப் போல, பக்தர்களின் மன அழுக்குகளை போக்கி அவர்களை மன ரீதியாகவும், குண ரீதியாகவும் மேம்படச் செய்தால்தான் மண்ணும் மனிதர்களும் பயன் பெறுவார்கள் என்கிற பொதுநலச் சிந்தனையில் விளைந்தவைதான் இந்தப் பாசுரங்கள் என்கிறார் மணவாள மாமுனிகள். திருமாலுக்கு அடிமைத்தொழில் செய்வதையே முக்கிய தலையாய பணியாகக் கொண்டு, ஞான பக்தி வைராக்கியங்களுடன் செயலாற்றி வந்த இவர்கள் திருமாலிடமே சிந்தை வைத்து திவ்யதேச யாத்திரை மேற்கொண்டு இறையருளால் பெண்ணையாற்றங்கரையோரம் உள்ள திருக்கோவலூரில் சென்று சேர்ந்தனர். அதன் பிறகு மூவரையும் ஆட்கொண்டான் எம்பெருமான் திருவிக்கிரமன்.

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை