மயக்கும் தமிழ் - 18 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நெஞ்செல்லாம் இனிக்கும் அக்காரக்கனி

நாளை என்பதே நரசிம்மரிடம் கிடையாது என்பார்கள். நரசிம்ம அவதாரம் பிரகலாதன் என்கிற மாபெரும் பக்தனின் நம்பிக்கைக்கு உயிர் கொடுத்தது. பக்தனின் பரிபூரண நம்பிக்கைக்கு அவனுடைய சரணாகதி தத்துவத்திற்கு இலக்கணமாய் அமைந்தவர் நரசிம்மர்.‘‘எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப...’’அங்கு அப்பொழுதே தோன்றியவர் நரசிம்ம ஸ்வாமி. அசுர குலம் தழைக்க வேண்டும் என்று  இரணியகசிபு போர்க்குரல் கொடுத்து, மாபெரும் துன்பங்களை துயரங்களை பிரகலாதனுக்கு கொடுக்க நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிற திடபக்தியில் பிரகலாதன் நிற்க நெஞ்சு பொறுக்குதில்லையே என்று துடிதுடித்துப் போனான் இரணியகசிபு.‘‘எங்கே உன் இறைவன். அந்த மாயக் கண்ணன். இந்த தூணில் இருக்கிறானா’’ என்று மமதையில் ஆணவத் திமிரில் தூணை பிளந்தபோது இதோ பார் என்று இரணியகசிபு மூலமாக உலகிற்கே நிரூபித்துக் காட்டியவர்  நரசிம்மஸ்வாமி. 

இப்படி அகிலம் போற்றும் அற்புத சக்தியாக விளங்கும் நரசிம்மர் ஆந்திர மாநிலத்தில் அகோபிலம் என்ற புண்ணிய இடத்தில் நவநரசிம்மர்களாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். நம் தமிழகத்தில் அநேக இடங்களில் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழையை பொழிந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் மிகவும் புனிதமாகவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான சோள சிம்மபுரம் என்னும் திருக்கடிகை, அதாவது, வழக்குத் தமிழில் சோளிங்கர் என்று அழைப்பர். அரக்கோணத்திற்கு சமீபமாக இருக்கும் புண்ணிய பூமி. சப்த ரிஷிகளும் தவம் செய்த ஊர். இந்த ஊரின் மேன்மையைப் பற்றி இங்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிற யோக நரசிம்மரின் அருட்கடாட்சத்தைப் பற்றி விஷ்ணு புராணமும், பத்ம புராணமும் நிறைய தகவல்களை எடுத்துச் சொல்லியிருக்கிறது.

மலைமீது உள்ள சோளிங்கரில் யோக நரசிம்மராக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுவாமியின் திருநாமம் என்ன தெரியுமா? அக்காரக்கனி இதைவிட தூய தமிழ்ப் பெயரை நாம் வேறு எங்காவது பார்க்க முடியுமா? இந்த அக்காரக்கனி என்ற பெயர் வரும் வரையில், தித்திக்கும் தேன் தமிழில் திருமங்கையாழ்வார் அற்புதப் பாசுரத்தை படைத்திருக்கிறார். 

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் 
புக்கானை புகழ்சேர் பொல்கின்ற பொன்மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!

அது சரி அக்காரக்கனி என்றால் என்ன?


இனிப்பே உருவானவன். சுவைமிக்க கனியே இங்குள்ள இறைவன். ஆனந்தத்தின் உச்சம், மகிழ்ச்சியின் எல்லை, நம் சிந்தனை முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவன். திகட்டாத சர்க்கரைப் பொங்கல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இங்கே இருக்கிற யோக நரசிம்மரும் உற்சவப் பெருமாளான பக்தவத்சல பெருமாளும் அதாவது இவரை தக்கான் என்று சொல்கிறார்கள். சோளிங்கபுரம் என்ற ஊரின் இயற்கை எழிலை அப்படியே பாசுரத்தில் வடித்து எடுத்து இருக்கிறார் திருமங்கை ஆழ்வார். இங்குள்ள திருக்குளத்திற்கே தக்கான் குளம் என்று அழகிய பெயர். 

ஒருவித பயம், ஏவல், கூவல் எல்லாவற்றையும் போக்கக்கூடிய அருமருந்தானவர் இந்த நரசிம்ம பெருமாள். பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சோளிங்கர் மலைக்கு வந்து இறைவனை வழிபட்டால் அவர்களைப் பிடித்திருந்த நோய்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும் என்கிறார்கள் நம்பிக்கையோடு. இந்த சோளிங்கரைப் பற்றி எத்தனை எத்தனை செய்திகள்! சுமார் ஒரு கடிகை 24 நிமிடம் இங்கு தங்கினாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். கடிகை என்றால் நாழிகை என்று அர்த்தம். அசலம் என்றால் மலை. அதனால்தான் இந்த சோளிங்கர் கடிகாசலம் என்று புராணங்களால் அழைக்கப்பட்டு வருகிறது. 

சோழன் கரிகால் பெருவளத்தான் தன்னுடைய நாட்டை 48 மண்டலங்களாகப் பிரித்தபோது இப்பகுதியை கடிகைக் கோட்டம் என்ற பெயராலேயே அழைத்தான் என்கிற செய்தி பட்டினப்பாலை நூலில் இடம் பெற்றிருக்கிறது. ராமானுஜர் தமது விசிஷ்டாத்வைத வைணவக் கோட்பாடுகளை தழைக்க 74 சிம்மாசனாதபதிகளை நியமித்தார். அப்படி நியமித்த சிம்மாசனங்களில் இந்த சோளிங்கரும் ஒன்று. பகவானையே சதா சர்வகாலமும் நினைக்கும் பக்தர்களுக்கும் ஆசார்யர்களுக்கும் பகவான் எப்பொழுதும் ஆட்பட்டு இருப்பான் என்பது  நடைமுறை ஒன்று. இந்த சோளிங்கரில் அப்படி ஒரு சம்பவம் பிரத்யேகமாக நடந்து இருக்கிறது. தொட்டாச்சாரியார் என்பவர் படித்தவர். சாஸ்திர சம்பிரதாயங்களை கரைத்துக் குடித்தவர். இந்த ஊரில் பிறந்தவர். மண்ணின் மைந்தர். 

சோளிங்கர் பெருமாள் மீது இவருக்கு அபரிமிதமான காதல். அப்படி ஒரு சரணாகதி கூடவே காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் மீதும் தொட்டாச்சாரியாருக்கு கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு வருடமும் வரதராஜப் பெருமாளின் கருட சேவையை கண்ணாற தரிசிப்பார். உடல் தளச்சியடைந்ததனால் காஞ்சிக்குச் சென்று வரதனை சேவிக்க முடியவில்லை. ஆனால், உள்ளமும் எண்ணமும் வரதனையே சுற்றி சுற்றி வந்தது. பெருமாள் சும்மா இருப்பாரா? அதுவும் உண்மையான பக்தன் தூய உள்ளத்தோடு கூப்பிடுகிறான். அதனால் தொட்டாச்சார்யார் இருந்த சோளிங்கரிலேயே தன் அருட்பார்வை படும்படியாக வரதன் காட்சி கொடுத்தான். அன்புக்கும் அருள் மணத்திற்கும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிறவன் அல்லவா வரதன். 

இப்படி எண்ணற்ற அதிசயங்களை தன்னுள்ளேயே அடக்கி வைத்திருக்கிறது சோளிங்கர். தடைபட்ட காரியங்கள் இதுவரை நிறைவேறாத செயல்கள் எல்லாவற்றையும் நடத்திக்கொடுக்கக்கூடிய வல்லமை இந்த தலத்து எம்பெருமானுக்கு உண்டு. இது சத்தியம். காலம் காலமாக நடந்து வருகிற நம்பிக்கையின் வெளிப்பாடு. எத்தனையோ அந்நிய ஆக்கிரமிப்புகள் இந்த மண்ணில் நடந்தபோதும் இந்த ஆலயத்திற்கு எந்த சேதாரமும் ஏற்பட்டது கிடையாது என்கிறார்கள். கி.பி.1781ல் ஆங்கிலேயருக்கும் ஹைதரலிக்கும் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப் போர் இங்கே நடந்தபோதும் இங்குள்ள மக்களுக்கும் இந்த புனிதமான இடத்திற்கும் எந்த ஊறும் ஏற்பட்டதில்லை என்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள்! இங்கே இருக்கும் இறைவனைப் பற்றி தமிழில் அமுதமாக பாசுரங்களை நமக்கு அள்ளி வழங்கிய பேயாழ்வார் அற்புத பாசுரத்தை படைத்திருக்கிறார்.

‘‘பண்டு எல்லாம், வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் 
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில்போல் 
வண்டு வளம் கிளரும் நீள் சோலை 
வண் பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்.’’ 

எம்பெருமானான இறைவன் திருப்பாற்கடல், திருவேங்கடம் என்ற இடங்களில் உள்ளான். அப்படிச் சொல்லிக்கொண்டே வருகிற பேயாழ்வார். வண்டு வளம் கிளரும் நீள்சோலை வண்பூங்கடிகை என்று கடிகைத் தலத்தை அதாவது சோளிங்கரை நினைவுகூர்கிறார் என்றால் ஆழ்வார் மனது எல்லா திவ்ய தேசங்களுக்குச் சென்றாலும் சோளிங்கரிலேயே மையப்புள்ளியாக நின்று விட்டது என்பதுதான் உண்மை. இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நூற்றி எட்டு திருப்பதி அந்தாதியில்

‘‘சீரருளால் நம்மை திருத்தி நாம் முன்னறியாக்
கூரறியும் தந்தடிமை கொண்டதற்கே
நேரே ஒருகடிகையும் மனமே உள்ளுகிலாய்
முத்தி தரு கடிகை மாணவனைத்தான்.’’
இதன் அர்த்தம் என்ன தெரியுமா? 

கடிகாசலம் என்ற இந்த சோளிங்கர் திருத்தலத்தில் ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக்கனியான எம்பெருமானை சேவித்தால் மோட்சம் சித்திக்கும். அப்படி அங்கே செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகைப் பொழுது இங்குள்ள யோக நரசிம்மரான அக்காரக்கனியை நினைத்தாலே அவர்களுக்கு எல்லாம் கைகூடும் என்கிறார் நம்பிக்கை கலந்த குரலில். சோளிங்கபுரம் சென்று யோக நரசிம்மரையும் பக்கத்திலேயே மலைமீது இருக்கும் ஆஞ்சநேயரையும் தரிசித்து விட்டு வாருங்கள். நம் மனம்போல வாழ எல்லாம் வல்ல இறையருள் நம்மை நல்ல பாதையில் வழிநடத்தும்.

நன்றி - தினகரன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை