உன்னை விட்டால் வேறு கதி ஏது?
பன்னிரு ஆழ்வார்களும் வைணவத்தின் உயிர்நாடியான சரணாகதி தத்துவத்தை வலியுறுத்தி வந்துள்ளனர். இவர்களில் இந்த பிரபத்தி என்கிற பரிபூரண சரணாகதியை தன் உயிர்மூச்சாக பாவித்தவர் சேரநாட்டுத் தலைமகனான குலசேகர ஆழ்வார். திருவரங்கம் திருமலை என்று புகழ் பெற்ற தலங்களை தன்னுடைய ஈரத்தமிழால் பாசுரங்களைப் பாடி பரவசப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் கேரள தேசத்திலுள்ள திருவித்துவக்கோடு திருத்தலத்தையும் நாம் மறக்க முடியாது! திருவித்துவக்கோடு என்கிற இந்தப் புனிதமான இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிற பெருமாளின் பெயர் உய்யவந்த பெருமாள்! நம்முடைய உள்ளத்து உணர்வுகளை எல்லாம் செயல்படுத்தி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிற பெருமான். அதனால்தான் அவருக்கு உய்ய வந்த பெருமாள், அபயப்ரதன் என்கிற திருநாமம். தாயார் பெயர் வித்துவக்கோட்டுவல்லி, பத்மாஸனி நாச்சியார்.
இங்கே இந்தத் தலத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால்,
மகாபாரதத்து பஞ்சபாண்டவர்களின் ஆன்மா குடிகொண்டிருக்கிறது. இவர்கள் ஐந்து பேரும் இங்கே பெருமானை நோக்கி தவம் இருந்தார்களாம். திருமால் மட்டுமல்லாமல் சிவனுக்கும் தனிச் சந்நதி இருக்கிறது. திருவித்துவக்கோடு, திருமிற்றக்கோடு, திருவீக்கோடு என்றெல்லாம் அழைக்கப்படுகிற இந்த திவ்ய தேசம் பார்ப்பதற்கு பச்சை பசேல் என்று கண்ணுக்கு இனிமையாக இருக்கும் இயற்கை எழில்கொஞ்சும் கேரளாவில் அதுவும் இந்த திருவித்துவக்கோட்டில் தன்னை நாடி வருகிற பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கியபடி இருக்கிறார் உய்ய வந்த பெருமாள். கண்களில் நீர் ததும்பும் வகையில் இந்த திவ்ய தேசத்தைப் பற்றி குலசேகராழ்வார் அருளிய பத்து பாசுரங்களும் தனித்தன்மை வாய்ந்தவைகள். இதற்கு ஈடாக மற்றொரு பாசுரங்களையே உவமான உவமேயங்களை நம்மால் காண முடியுமா என்பது சந்தேகமே. ஒரு சில பாசுரங்களைப் பார்ப்போம்.
மகாபாரதத்து பஞ்சபாண்டவர்களின் ஆன்மா குடிகொண்டிருக்கிறது. இவர்கள் ஐந்து பேரும் இங்கே பெருமானை நோக்கி தவம் இருந்தார்களாம். திருமால் மட்டுமல்லாமல் சிவனுக்கும் தனிச் சந்நதி இருக்கிறது. திருவித்துவக்கோடு, திருமிற்றக்கோடு, திருவீக்கோடு என்றெல்லாம் அழைக்கப்படுகிற இந்த திவ்ய தேசம் பார்ப்பதற்கு பச்சை பசேல் என்று கண்ணுக்கு இனிமையாக இருக்கும் இயற்கை எழில்கொஞ்சும் கேரளாவில் அதுவும் இந்த திருவித்துவக்கோட்டில் தன்னை நாடி வருகிற பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கியபடி இருக்கிறார் உய்ய வந்த பெருமாள். கண்களில் நீர் ததும்பும் வகையில் இந்த திவ்ய தேசத்தைப் பற்றி குலசேகராழ்வார் அருளிய பத்து பாசுரங்களும் தனித்தன்மை வாய்ந்தவைகள். இதற்கு ஈடாக மற்றொரு பாசுரங்களையே உவமான உவமேயங்களை நம்மால் காண முடியுமா என்பது சந்தேகமே. ஒரு சில பாசுரங்களைப் பார்ப்போம்.
‘‘தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்ப் பொழில்சூழ் வித்துவக் கோட்டு அம்மானே,
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும், மற்றவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவேபோன்று இருந்தேனே!
இந்தப் பாசுரத்திற்கு தனி விளக்கமோ அர்த்தமோ வேண்டுமா என்ன? ஒரு பச்சிளம் பாலகனுக்கு ஒரு தாயின் அரவணைப்புதான் முக்கியம். ஏதோ ஒரு கோபத்தில் அந்தத் தாயானவள் தன்னுடைய பச்சிளம் குழந்தையை அடித்து விடுகிறாள். தாயின் அடியால் வலி பொறுக்க முடியாமல் குழந்தை அழுகிறது. எப்படி அழுகிறதாம் அடித்த தாயின் பின்னங் கால்களை பிடித்தபடியே அழுகிறதாம். அதற்கு வேறு யாரையும் தெரியாது. கதறுகிற குழந்தை தன்னுடைய தாயின் சேலைத் தலைப்பை பிடித்துக் கொண்டோ கால்களை பின்னிப் பிணைந்து கொண்டோ அடைக்கலம் தேடுவதுபோல் திருவித்துவக் கோட்டம் மானே உன்னை விட்டால் எனக்கு வேறு கதி ஏது? புகலிடம் ஏது? என்னை காத்து ரட்சிப்பவர்கள் யார் இருக்கிறார்கள் என்று திருவித்துவக்கோட்டு இறைவனின் திருவடியைப் பிடித்து கதறுகிறார் குலசேகர ஆழ்வார். மற்றொரு பாசுரம்.
‘‘வெங்கண்திண் களிறடர்த்தாய் வித்துவக் கோட்டம்மானே
எங்குபோய் உய்கேன் உன் இணையடியே அடையல்லால்
எங்கும்போய் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே.’’
உணர்ச்சிகளின் கொந்தளிப்பை இந்தப் பாசுரத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார் குலசேகர ஆழ்வார். நடுக்கடலில் ஒரு பறவை அகப்பட்டுக் கொண்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். கரைப்பகுதியே எங்கும் தென்படவில்லை. இதனால் பறவை தத்தளிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நடுக் கடலில் பாய்மரக் கப்பல் வந்து கொண்டிருப்பது பறவையின் கண்களுக்கு தீர்க்கமாகத் தெரிகிறது. விரைந்து பறந்து வந்த பறவை பாய் மரக் கப்பலின் உச்சியில்போய் அமர்ந்தது. சிறிது நேரம் அங்கே இருந்த பறவை மறுபடியும் சிறிது தூரம் பறந்து சென்றது. எங்கும் தண்ணீர். சிறிது நேரம் பறந்த பறவை மீண்டும் பாய்மரக் கப்பலின் உச்சிக்கே சென்று இளைப்பாறியது. கடலின் நடுவே சுற்றிலும் தண்ணீர். அந்தப் பறவையால் தொடர்ந்து பறக்கவும் முடியவில்லை. அதற்கு இந்தப் பாய்மரக் கப்பலை விட்டால் வேறு கதியில்லை. அந்தப் பறவையின் நிலையில் தான் இருப்பதாக அறுதியிட்டுச் சொல்கிறார் ஆழ்வார்.
எம்பெருமானே! நின் திருவடியைப் புகலிடமாகக் கொண்ட நான் அதை விடுத்து எங்குபோய் உய்வேன். எங்கு போனாலும் எதைக் கண்டாலும் அவையெல்லாம் நிலையற்றதாக என் கண்களுக்குப் படுகிறது. உன் திருவடிதான் இம்மைக்கும் மறுமைக்கும் மாமருந்தாக எனக்கு நினைவில் படுகிறது. பாய் மரத்தை நாடிச் செல்லும் பறவைபோல் மானிடக் கடலில் சிக்கித் தவிக்கும் ஜீவாத்மாவாகிய எனக்கு உன்னைவிட்டால் வேறு ஏது கதி என்கிறார். ஒரு அரசராக இருந்தவர் குலசேகராழ்வார். ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, புகழ் எல்லாவற்றையும் அனுபவித்தவர். ஆனால், இவையெல்லாம் நிரந்தரம் இல்லை. நிரந்தரமானது பேரின்ப பெருவெள்ளமாய்த் திகழும் உய்யவந்த பெருமாளின் திருவடிதான். குலசேகராழ்வாருக்கே இந்த நிலைமை என்றால் சிற்றின்ப வேட்கையிலும் ஆசாபாசங்களில் விழுந்து கிடக்கும் பலவீனங்களின் பிறப்பிடமாக இருக்கும் நம்முடைய நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்த திருவித்துவக்கோட்டிற்கு அருகாமையிலுள்ள மற்றொரு திவ்ய தேசம் திருநாவாய். இந்தக் கோயிலை ஒட்டி பாரத்புழா ஆறு ஓடுகிறது. பார்ப்பதற்கு கடல்போல் காட்சியளிக்கும் இந்தப் பாரதப் புழா காசிக்கு இணையானது. முன்னோர்களை நினைத்து நீத்தார் கடன்களை இங்கு கர்ம சிரத்தையோடு செய்கிறார்கள். திருநாவாய் பெருமானுக்கு நாவாய் முகுந்தன், நாராயணன் என்கிற திருநாமம். மலர்மங்கை நாச்சியார். இத்தலத்தைப் பற்றி ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் திருவாய்மொழியில் அழகான பாசுரங்களை படைத்திருக்கிறார்.
‘‘மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று சொல் கண்டே.’’
நம் எல்லோருக்கும் தலைவன், தேவர்களுக்கும் தலைவன். இப்படிப்பட்ட பெருமான் விரும்பி உறையும் திருத்தலம் எது தெரியுமா? திருநாவாய்தான் என்று அங்கேயுள்ள அந்த நாவாய் முகுந்தனை பார்த்து பரவசப்படுகிறார். அதனால்தான் அவரைப் பார்க்கும்போது கண்கள் பணிக்கிறதாம். குலசேகராழ்வார் கேரள தேசத்தைச் சேர்ந்தவர். இன்னும் சொல்லப் போனால் அந்த மண்ணின் மைந்தர். எனவே, அவருடைய பாசுரங்கள் இதயத்தில் ஈரத்தையும் கண்களில் கருணையையும் வரவழைக்கும். ஒருமுறை திருவித்துவக்கோட்டிற்கும் பக்கத்திலேயே உள்ள திருநாவாய்க்கும் சென்று வாருங்கள். வாழ்வின் பேரின்பத்தை நிச்சயமாக உணர்வீர்கள். ஏனென்றால் ஆழ்வார்கள் வாக்கு அமுதவாக்கு.
நன்றி - தினகரன்