சனி, 30 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 16 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

நின்ற வினையும் துயரும் கெடும்!

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்கிற தித்திக்கும் தேன் தமிழ் பாசுரங்களை உள்ளடக்கிய திவ்ய பிரபந்தத்திற்கு ஆழ்வார்களின் தலைமகனாகிய நம்மாழ்வாருக்குப் பிறகு அதிக பாசுரங்களை படைத்தவர். அது மட்டுமல்லாமல் நூற்றி எட்டு திவ்யதேசங்களில் அதிக திவ்ய தேசங்களுக்கு நேரடியாகச் சென்று அங்கங்கே அருள்பாளிக்கும் பெருமாளைப் பற்றியும் அந்தந்த ஊரின் அழகைப் பற்றியும் அழகுத் தமிழில் அவர் கொடுத்திருக்கும் விதமே பேரற்புதமாகும். அந்தப் பாசுரங்களை பக்தி மணம் கமழச் சொன்னால் நா மணக்கும் அப்புறம் என்ன? நாவெல்லாம் நாலாயிரம், நெஞ்செல்லாம் நாராயணம்தான். சாதாரணமாகத் தமிழ் படிக்கத் தெரிந்த ஒருவர் கூட மிகச் சுலபமாக அவருடைய பாசுரங்களை சொல்வதன் மூலம் அந்த ஈரத் தமிழ் கலந்த, பக்தி மணம் கமழும் தெய்வீக பேரின்பத்தை அனுபவிக்கலாம். இது சத்தியம்.

உலகம் சுற்றும் வாலிபனாக அவர் ஊர்ஊராகச் சென்று பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று எம்பெருமானின் மேன்மைகளை, சிறப்புகளை, அவனுடைய அரிதினும் அரிதான மகத்துவத்தை பாட்டால், பாசுரத்தால் வடித்தெடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட திருமங்கையாழ்வார் தன்னுடைய கடைசிக் காலம் குறித்து ஆழ்வாருக்கு மிகவும் உகந்த பெரிய பெருமாளான ரங்கநாதரிடம் கேட்டபோது, நமது தெற்கு வீடாம் திருக்குறுங்குடிக்குப் போய் கேள் என்று சொன்னதாக ஐதீகம்.
தான் நீண்ட மதில் கட்டி அழகு பார்த்த திருவரங்கத்து ரங்கநாதரே சொல்லிவிட்ட பிறகு வேறு யார் சொல்ல வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு அதுவும் இறுதி தீர்ப்புக்குப் பிறகு வேறு யார் தான் என்ன சொல்ல வேண்டும். சுப்ரீம் பவர் பெற்ற பெயர் ஆயிரம் உடைய பேராளனான ஸ்ரீரங்கநாயகி சமேத ரங்கநாதனே சொல்லி விட்டார்.


வேதத்தை இந்த பூ உலகிற்கு கொடுத்தவனான அந்தத் தனி வேத முதல்வனின் ஆணையை ஏற்று ஆழ்வார் திருக்குறுங்குடி செல்கிறார். திருமங்கை ஆழ்வாருக்கும் திருக்குறுங்குடிக்கும் அப்படி என்ன சம்மந்தம் இருக்கிறது என்று நம் மனம் கூட சிந்திக்கலாம். சாதாரணமாக கிராமங்களில் வழக்குச் சொல்லாக சொல்வார்கள். தேர் எங்கு சுற்றி வந்தாலும் நிலைக்குத் தானே அதாவது இருப்பிடத்திற்கு வந்து தானே தீர வேண்டும் என்று. அதைப்போல எத்தனையோ ஊர்களுக்குச் சென்று ‘பயண நாயகனாக’ திருமங்கையாழ்வார் பல அருளிச் செய்தல்களை செய்தாலும், அவருடைய ஆன்மா குடிகொண்டுள்ள இடம் திருக்குறுங்குடி. தமிழகத்தின் தென்புறத்தில் திருநெல்வேலி  கன்னியாகுமரி மார்க்கத்தில் அமைந்த ஊர். அற்புதமான திருத்தலம். இந்தத் திருத்தலத்தில் மனதைப் பறிகொடுத்த ஆழ்வார் அந்த ஊரின் எழிலிலும் பொழிலிலும் தன்னையே இழந்து விட்டார். அங்கே குடிகொண்டிருக்கிற நம்பிப் பெருமாளிடம் முற்றிலுமாக தன்னையே பறிகொடுத்து விட்டார். திருக்குறுங்குடி பற்றி திருமங்கையாழ்வாரின் அற்புத பாசுரம்...

நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே 

என்று பாசுரத்தை தொடங்குகிறார். அதாவது இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு வாரி வாரி அருள்மழை பொழிகிறாராம் எம்பெருமாள். அதுவும் எப்படியாம்?‘நின்ற வினையும் துயரும் கெட’ என்கிறார். வங்கியில் பணம் சேமிப்பில் இருப்பது போல் நம்முடைய வினை, அதாவது பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார்போல் நல்வினை, தீவினை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்குகள் அமைந்துள்ளதாம். இங்கேயுள்ள பெருமாளான சுந்தர பரிபூரணனையும் குறுங்குடி வல்லத் தாயாரையும் பக்தியோடு இதய சுத்தியோடு வணங்கினால் நின்ற வினையும் துயரும் அகலுமாம். குடோனில் பொருட்களை ஸ்டாக் செய்து வைத்திருப்பதுபோல் நாமெல்லாம் பாவமூட்டைகளை யுகம் யுகமாகச் சேர்த்து வைத்திருக்கிறோம். அதிலிருந்து விடுபட வேண்டாமா? விடுபட வேண்டுமானால் நேராக திருக்குறுங்குடிக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் வணங்குங்கள். அப்படி வணங்கினால் நாம் துக்கத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் விடுபடலாம். அது மட்டுமல்ல சுதந்திரக்காற்றை சுவாசிக்கலாம் என்கிறார் திட்டவட்டமாக.

‘இரவு பகலும் வரிவண்டு இசை பாட’
குன்றின் முல்லை மன்றிடை
நாளும் குறுங்குடியே!

வரி வண்டுகளின் ரீங்காரம் அற்புத இசை விருந்தாக இருக்கிறதாம். அங்கே இருக்கிற வாழைத் தோட்டமும், கரும்புத் தோட்டமும், பூந்தோட்டங்களும் மெல்லிய தென்றல் காற்றும்... அடடா! என்ன சுகம் என்ன சுகம். திருக்குறுங்குடிக்குச் சென்று வந்தவர்களுக்குத்தான் இந்த இன்பம் தெரியும். புரியும்! இன்னொரு பாசுரத்தில் ஊரின் அழகைச் சொல்லிக் கொண்டு வருகிறபோது ‘மன்னு திருக்குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்!’ என்கிறார். திருக்குறுங்குடியிலேயே என் வாழ்வு முடிய வேண்டும். முடிந்த பிறகும் நான் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட வேண்டும் என்கிற பேரவா கொண்டிருக்கிறார். அதனால்தானோ என்னவோ ‘மன்னு திருக்குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்!’ என்றார். பிரியமான மனத்துடன் ஆழ்வாரின் அற்புத வாக்கு பொய்க்குமா? இன்றைக்கும் திருக்குறுங்குடியில் வயல்கள் சூழ கரும்பும் வாழையும் தென்னை மரமும் தாலாட்ட தென்றல் தவழும் இடத்தில் ஆழ்வார் ‘திருவரசாக’ கம்பீரமாக கோயில் கொண்டுள்ளார்.

எங்கள் பரகாலன் எங்கள் கலிகன்றி
தங்கத் தமிழால் தனையாண்ட
பொங்கு உலக பூரணனை
அன்பின் பொலிவென்று காட்டினாள்
நாரணனை நானிலர்க்கு நன்கு!

பொங்கு உலக பூரணனாம் சுந்தர பரிபூரணனை திருக்குறுங்குடியில் அருள்மாரிப் பொழிபவனை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார், திருமங்கை ஆழ்வார்.

திருக்குறுங்குடி கோயிலின் உள்புறத் தோற்றமும் அதன் வெளியழகும் நமக்கு ஒருவித மயக்கத்தையே ஏற்படுத்தும். அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள். கேரள மகாராஜா பரிசாகக் கொடுத்த பெரிய மணி. இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகலாம். சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்தக் கோயில் மிகப் பெரிய எடுத்துக்காட்டு. ஆழ்வார் தன்னுடைய பாசுரத்திலேயே ‘பக்கம் ஒருவர் நின்ற பண்பர் ஊர் போலும்’ என்று குறிப்பிடுகிறார். சிவபெருமானும் இந்த ஆலயத்திற்குள்ளேயே அருட்பாலித்து வருகிறார். பெருமாளுக்கும், சிவனுக்கும் ஒரே மடப்பள்ளியில் நிவேதனம் தயாராகின்றது.

இன்றளவும் இந்த திருக்கோயில் ஜீயர் பக்கத்தில் இருப்பவருக்கு ஏதாவது குறை உண்டா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது. திருக்குறுங்குடி மலைமேல் உள்ள மலை நம்பியை ஜீப்பில் சென்று சந்திக்கலாம். மலைமேலுள்ள நம்பியை தரிசிப்பதற்கு காணக் கண்கோடி வேண்டும். என்ன அழகு! அந்த மகேந்திர மலையில் சலசலத்து ஓடுகிற தண்ணீர் ஒருபுறம். பறவைகளின் ரம்மியமான சப்தம். மனதை மயக்கும்! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆழ்வார் பாடியதுபோல், இன்றும் திருக்குறுங்குடி வள்ளியூரில் அடிக்கிற காற்றே நம்மை திருக்குறுங்குடிக்கு கொண்டுவந்து விட்டு விடும். வைணவ குலத்தில் மாமணியாகத் திகழும் ராமானுஜரின் ஆன்மாவும் இங்கேதான் குடி கொண்டிருக்கிறது. இந்தப் புரட்டாசி மாதத்தில் திருக்குறுங்குடியை நினைத்தாலே நெஞ்சுக்கு நிம்மதியைத் தரும். நம்பியே நம்மாழ்வாரே பிறந்ததாக ஐதீகம். சுந்தர பரிபூரணனையும் திருக்குறுங்குடி வல்லி நாச்சியார் பாதம் பணிவோம். வாழ்வில் வளம் பெறுவோம்!

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக