சனி, 30 நவம்பர், 2019

மயக்கும் தமிழ் - 15 - ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

உள்ளம் கவர் கள்வன் கள்ளழகன்

‘‘மாலிருஞ் சோலையென்னும் மலையை யுடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால்வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில்
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே.’’

பெரியாழ்வாரின் அதி அற்புதமான பாசுரம் இது. மதுரைக்குப் பக்கத்தில் பேரெழிலோடு விளங்கும் அழகர்மலையை அதுதான் திருமாலிருஞ்சோலை மலையை  குறிப்பிடுகின்றார், ஆழ்வார். நம் கள்ளழகர் இருக்கும் மலையை அழகர் கோயில், திருமாலிருஞ்சோலை என்று பக்தி பூர்வமாக அழைத்து மகிழ்கிறார்கள். திருமாலிருஞ்சோலை என்னும் மலையை தனது இருப்பிடமாகக் கொண்டவன். எட்டெழுத்துக்களை தனது திருப்பெயராகக் கொண்டவன் அதைத்தான்  நாலிருமூர்த்தி என்று வர்ணிக்கிறார். நான்கு வேதங்களை கடல் அமுதுக்கு ஒப்பிடுகிறார். அங்கே இருக்கிற திருமால்தான் வேதாந்த விழுப் பொருளானவனாம். 

நமக்கெல்லாம் திருமாலைப் பிடிக்கும். ஆனால் திருமாலுக்குப் பிடித்த இடம் திருமாலிருஞ்சோலையாம். 


இதையெல்லாம் சொன்னவர் யார் தெரியுமா? தன் சிந்தை முழுவதும் விஷ்ணுவை தியானம் செய்கிற விஷ்ணு சித்தனான பெரியாழ்வார். எந்தளவிற்கு  பெரியாழ்வார் இந்த அழகர்மலை கள்ளழகரையும், மலையின் அழகையும் வர்ணித்திருக்கிறார் பாருங்கள். அழகன் அலங்காரன் மலைகுல மலை கோல மலை  குளிர் மா மலை கொற்ற மலைநில மலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே இந்தப் பாசுரத்திற்கு தனி உரையோ விளக்கமோ வேண்டுமா என்ன?  படித்தாலே பசுமரத்து ஆணி போல் மனதிற்குள் பதிந்து விடுகிறதே. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் பொழிலோடும் எழிலோடும் விளங்குகிறது! இந்த திருமாலிருஞ்சோலை ஆயிரம் அடி உயரம் கொண்டது.  அரியவகை மூலிகைகள் மலை முழுவதும் மண்டிக் கிடக்கின்றன. இங்கே பாய்ந்து வருகிற சிலம்பாறு என்கிற நூபுரகங்கை புண்ணிய தீர்த்தமாக கருதப்பட்டு  வருகின்றது. துவாதசி தினத்தன்று இந்த நூபுர கங்கையில் நீராடுபவர்கள் சகலவிதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்களாம். ஆழ்வார்களின் மனதை  மட்டுமா இந்த மலை கொள்ளை கொண்டிருக்கிறது.

‘‘சிலம்பாரணிந்த சீர்கெழு திருவிற்  சோலையோடு தொடர் மாலிருங்குன்றம்’’ என்று பரிபாடல் என்னும் சங்ககால நூல் பெருமையோடு எடுத்து இயம்புகிறது.

பரிபாடல் மட்டுமா? சிலப்பதிகாரமும் தன் பங்கிற்கு‘‘தடம்பல கடந்து காடுடன் கழிந்து திருமால் குன்றம் செல்கு வீராயின்’’என்று அழகாகப் பேசுகிறது. இங்கே அழகர் மலையில் மூலவராக பரமஸ்வாமி பஞ்சாயுதங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி சூழ பிரயோகச் சக்கரத்துடன் கிழக்கு திசை நோக்கி நின்று கொண்டு அருள்பாலிக்கிறார். உற்சவப்  பெருமாளுடைய பெயர் சுந்தரராஜன், கள்ளழகரானசுந்தரராஜன் என்கிற உற்சவரை அர்ச்சாரூபமாகப் பார்ப்பதற்கு காணக் கண்கோடி வேண்டும்.

நம்மாழ்வார் சொல்வதுபோல் ‘‘கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம். எல்லோரும் வாரீர்’’ என்பதுபோல் இருக்கும், அதுவும் சித்திரை திருவிழாவில் பாய்ந்து வருகிற  குதிரையில் பச்சை பட்டு உடுத்திக் கொண்டு அழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒன்றல்லவா! இந்த  திருமாலிருஞ்சோலைக்குத்தான் எத்தனை எத்தனை பெருமை? முகமதியர்கள் படையெடுப்பின்போது இங்குள்ள அழகிய மணவாளன் கிணற்றில்தான்  ரங்கநாதனான நம்பெருமாள் உற்சவரை பத்திரமாக பாதுகாத்தார்கள் என்ற அரிய வரலாற்று உண்மையும் நினைவுகூறத் தக்கது. திருவரங்கத்திற்கும்  திருமாலிருஞ்சோலைக்கும் அநேக ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு கோயில்களும் கோட்டைகளும் உயர்ந்த மதிற் சுவர்களும் வாய்க்கப் பெற்றவை. நெல்  மணிகளை சேர்த்து வைக்கும் குதிர்கள் இரண்டு இடங்களிலும் உண்டு. 

இரண்டு கோயில்களிலுமுள்ள பிரதான வாயில்கள் ‘ஆர்யன் வாசல்’ ‘ஆர்ய பட்டர்’ வாசல் என்று அழைக்கப்படுகின்றன. திருவரங்கத்தின் மதில்களின்  எழிலை பொலிவை திருமங்கையாழ்வார் பாடியதுபோல் திருமாலிருஞ்சோலை மலையை பெரியாழ்வார் அற்புதமாக பாசுரமாக படைத்திருக்கிறார்.பெரியாழ்வார்  மட்டுமா? அவருடைய அன்பு மகள்  தமிழுக்கு வழங்கிய கொடை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், தன்னுடைய நாச்சியார் திருமொழியில் படைத்த மிகவும் ரசிக்கத்தக்க  பாசுரம் ஒன்று இதோ...சிந்துரச் செம்பொடிபோல் திருமாலிருஞ் சோலை எங்கும் இந்திர கோபங்களே எழுந்து பரந்திட்டனவால் மந்திரம் நாட்டியன்று மதுரக்  கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோலுடையான் சுழலையினின்றி உய்துங்கொலோ? இது ஒருவித தூய்மையான பக்தி கலந்த அற்புதமான காதல் பாசுரம். இங்கே  நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். திருமங்கை ஆழ்வாரும், நம்மாழ்வாரும், நாயகி  நாயகா பாவத்தில் தங்களை ஒரு பெண்ணாக நினைத்து இறையன்பில்  ஈடுபட்டவர்கள்.

பரகால நாயகியாக திருமங்கை ஆழ்வாரும், பராங்குச நாயகியாக நம்மாழ்வாரும் திருத்தாயார் பாசுரங்களை பெண்மை நிலையில் நின்று கொண்டு இறைவன்  மேல் பேரன்பு செலுத்தி பாசுரம் படைத்தார்கள். ஆனால், இவர்களைவிட ஆண்டாள் ஒருநிலை மேலே சென்று பக்தி செலுத்துகிறாள் அந்த காதல், நட்பு, அன்பு,  தூய்மையான பளிங்குநீர் போல் ததும்புகிற கனிரசம் சொட்டச் சொட்ட அவளால் படைக்க முடிந்ததற்கு மிக முக்கிய காரணம் இயல்பிலேயே ஆண்டாள்  பெண்ணாகப் பிறந்ததனால்தான். ஆண், பெண் வேஷம் போடுவதற்கும் பெண்ணே பெண் வேடம் தரிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான். அதனால்தான் இந்தப்  பாசுரத்தில் திருமாலிருஞ்சோலையில் இருக்கிற சுந்தரத்தோலுடையான், கள்ளழகரின் அழகில் மயங்கி அந்தரத் தோலுடையான் அழகில் மதிமயங்கி கிடக்கிறேன்.  இவனுடைய காதல் வலையில் இருந்து என்னால் எப்படித் தப்ப முடியும்? 

திருமாலிருஞ்சோலை அதுதான் அழகர் மலை எப்படி இருக்கிறதாம்? சிந்தூரச் செம்பொடி தூவியதுபோல் இருக்கிறது. எதனால் அப்படியாம். அழகழகான பட்சிகள்  பல வண்ணத்தில் பட்சிகள் பறப்பது சிந்தூரச் செம்பொடி தூவியதுபோல், அதனால்தான் பரந்திட்டனவால் என்கிறாள். பாசுரத்தில் ஆண்டாள் கையாண்ட அழகு  தமிழ் வார்த்தை பிரயோகங்களை கவனித்தோமானால் மந்திரம் நாட்டி, மதுரக் கொழுஞ்சாறு தன்னை முழுவதுமாக ஒப்படைத்த ஒருவரால்தான் இப்படி உணர்ச்சி  பிழம்பாக வார்த்தைகளை பிரயோகப்படுத்தி பாசுரத்தை படைக்க முடியும். ஆண்டாள் சொன்னது சத்தியம் ஏனென்றால் சத்தியத்திற்கு சாட்சிகள் தேவை இல்லை.  அங்கே யுள்ள கள்ளழகரை நேரில் சென்று தரிசிப்பவர்களால்தான் இந்த உண்மையை உணர முடியும். 

இங்கு அதாவது, திருமாலிருஞ்சோலையிலும் திருவனந்தபுரத்தில் மட்டும்தான் அபரஞ்சி என்கிற பொன்னால் படைக்கப்பட்ட உற்சவர்கள் இருக்கிறார்கள்.  இந்தியாவில் வேறெங்கும் இதுபோன்ற எழிலும் பொழிலும் கொண்ட அர்ச்சாரூபத்தில் காணக் கிடைக்காது என்கிறார்கள். இந்தப் பெருமாளுக்கு காவல் தெய்வமாக  பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனிலும் நீதிமன்றத்தில் பொய் சொன்னாலும் இங்கு இந்த பதினெட்டாம்படி கருப்பண்ண  சாமியிடம் பொய் சொன்னது கிடையாது. அல்லது பொய் சொல்லி தப்பியதாக வரலாறு கிடையாதாம். அந்தளவிற்கு பதினெட்டாம்படி கருப்பு மீது நம்பிக்கை.

நாறு நறும்பொழில் மாலருஞ்சோலை 
நம்பிக்கு நான் நூறு தடாவில்
வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசல் 
சொன்னேன்!
ஏறுதிருவுடையான் இன்று வந்து இவை 
கொள்ளுங்கொலோ?

இந்த எம்பெருமானிடம் எவ்வளவு காதல் ஆண்டாளுக்கு!

நூறு தடாவில் பெரிய அண்டாவில் வெண்ணெயும் அதேபோல் அக்கார அடிசல் அதுதான் நம்மூர் சர்க்கரைப் பொங்கல் சமர்பிக்க ஆசைப்பட்டாளாம். 

இவளுடைய ஆசையை பிற்காலத்தில் உடையவர் எம்பெருமானார் எனப் போற்றப்பட்ட ராமானுஜர் நிறைவேற்றினார். இதனால்தான் ஆண்டாள் நாச்சியாருக்கு  அண்ணன் ஸ்தானம் ராமானுஜருக்கு. பெரும்புதூர் மாமுனிக்கு பின்னாநாள் வாழியே என்று ராமானுஜர் வைணவ உலகத்தினரால் போற்றப்படுகிறாள்.

திருமாலிருஞ்சோலையின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துச் செல்வதற்கு இந்த ஒரு ஜென்மம் போதாது. கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம், வளர் ஒளி மாயோன் மடுவிய கோயில், வளர் இளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே!இளமை இருக்கும்போதே அதாவது, உடம்பு  உயிர்த் துடிப்புடன் இருக்கும்போதே இங்கே வந்து இறைவனை வழிபடுங்கள் அதுதான் பேரானந்தம் என்கிறார் நம்மாழ்வார். அழகர் மலைக்குச் சென்று அந்த  அற்புதத்தை காணுங்கள்.

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக