ஹம்ச வாகனத்தில் எம்பெருமான்
திருமலை பிரம்மோத்ஸவத்தில் இரண்டாம் நாள் மாலை அன்ன வாகனத்தில் கையில் வீணையோடு நாமகள் கோலத்தில் வெண்பட்டுடுத்தி காட்சி தருகிறான் பகவான்.
ஆண்டாளும் அன்னமும்:
“அன்ன வயல் புதுவை ஆண்டாள்” என்று ஆண்டாளின் வில்லிபுத்தூரைப்பாடுகிறார். ஆண்டாளைப் பார்க்க அன்ன உரு எடுத்து வந்தான் என்று ஒரு பொருள். இன்னொரு இடத்திலே "மென்னடை அன் னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தார்'' என்று ஆண்டாள் நாச்சியார் பாடுகிறார். நடை அழகுக்கு அன்னப் பறவை. அந்த அன்னப்பறவைகள் ஆண்டாளின் நடை அழகைக் கண்டு நாணுவதோடு அந்தநடை அழகைத் தானும் கற்க வேண்டும் என்று வில்லிபுத்தூரிலேயே திரிகிறதாம். அன்னம் மட்டுமல்ல அன்னமாய் அருமறை பயந்தவனும் சாரமான பொருளான திருப்பாவையைக் கேட்க வில்லிபுத்தூரிலே உறைகின்றானாம். விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று ஹம்ச அவதாரம். மறைந்த வேதங்களை மீட்டெடுத்து அளித்த அவதாரம் அன்ன அவதாரம். அன்னமாய் நின்றவனைப்போற்றும் திருமங்கையாழ்வார் :
திருபுள்ளம் பூதங்குடி பாசுரத்திலே ஒரு அருமையான பாசுரம்.
“இந்த உலகங்கள் எல்லாம் வேதம் மறைந்து ஒளியிழந்து இருள் சூழ்ந்து அவதிப்பட்டு கொண்டிருந்தபோது பகவான் அன்னமாய் அவதரித்து அருமறைகளை அருளிச் செய்தான்" என்று போற்றுகிறார் திருமங்கையாழ்வார்.
"துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம்" என்கிறார்.
திருவெள்ளறை திவ்ய தேசத்து பாசுரத்திலே,
"முன்னிவ் ஏழுலகும் உணர்வின்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கருள் புரியே..." என்று இறைஞ்சுகின்றார்.
திருவரங்கத்துக்கு வந்து திருவரங்க நாதனைத் தரிசித்த பின்னும் அன்ன அவதாரமே திருமங்கையாழ்வார் நெஞ்சில் நிழலாடுகிறது.
“மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும்
துன்னுமா இருளாய் துலங்கொளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கிருள் நிறம் கெட, ஒரு நாள்
அன்னமாய் அன்றங்கு அருமறைபயந்தான் அரங்கமா நகர் அமர்ந்தானே"
திருப்புல்லாணிக்குப் போகிறார். “அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கி தனைச் செப்புமினே” என்று நாயகி பாவத்தில் பாருக்கு வேதத்தைத் தந்த நாதன் என் காதலுக்குப்பதில் சொல்லாமல் இருப்பது சரியா என்று கேட்கிறார். அவதாரங்களை பாடும் போது, “இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ அன்னமதாயிருந்தங்கு அற நூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே” என்று போற்றுகின்றார்.
திருநெடுந்தாண்டகம் கடைசி பாசுரத்திலும் அன்ன அவதாரத்தை திருமங்கையாழ்வார் மறக்க வில்லை.
“மின்னுமா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணிமாட மங்கை வேந்தன்
மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப்
பழவினையை முதலரிய வல்லார் தாமே” - (2081) என்று முடிக்கிறார்.
உபநிடதங்களை ஒரு பசுவாக்கி வேதாந்தத்தின் விழுப்பொருளை பிரித்தெடுத்து உபநிடதச் சாரமாக்கித் தந்தான் பகவான் ஶ்ரீகிருஷ்ணர். எனவே உபநிடதமாகிய வேதப்பகுதிகளிலும் உள்ள அசாரத்திலிருந்து சாரத்தைப் பிரித்தெடுத்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அன்னமாகத் திகழ்கிறார்.
நம்மாழ்வார் அன்னம் போல் பரந்து பட்ட வேதத்தின் சாரமான திருமந்திரார்த்தத்தை பெரிய திருமொழியில் விளக்குகிறார். எனவே தான் திருநாங்கூர் கருட சேவையில் திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் சேவை தருகிறார்.
அவர் நாயகி பாவமாக பாசுரமிடும்போது அன்ன நடையில் பகவானாகிய புருஷோத்தமனைச் சேர்ந்ததாகப் பாசுரம் வருகிறது. “கள்வன் கொள் யானறியேன்” என்பது திருவாலித் திருநகரிப் பாசுரம் அதில் பாடுகிறார்.
“பெடை அன்னமென
நடந்து போயின பூங்கொடியாள்புனல்
ஆலி புகுவர் கொலோ”
இன்னொரு பாசுரத்திலும்,
“தூவி சேர் அன்னமன்ன
நடையாள் தெடுமாலொடும் போய்....
வயலாலி புகுவர்கொலோ”
நிறைவாக அன்னம் பகவான். அன்னம் ஆழ்வார். பகவானே அன்னம்; ஆழ்வாரே அன்னம். அன்னம் என்பதற்கு சோறு என்ற பொருளும் உண்டு. வேதம் பகவானை அன்னமாய் வர்ணிக்கிறது.
"அகமன்ன அகமன்ன அகமன்னாத" என்பது உபநிஷத். ஆழ்வார் பகவானை அன்னமாக நினைக்கிறார். அதனால் தான் “உண்ணும் சோறு... எல்லாம் கண்ணன்” என்று திருவாய்மொழியிலே தீந்தமிழ் பாசுரமாகப் பதிலிடுகிறார்.
பசியெடுத்தவன் சோற்றைக் கண்டால் பாய்ந்து சென்று பரபரவென்று விழுங்க ஆரம்பிப்பான். பகவான் இங்கே அன்னமாய் அதாவது.... சோறு போல விளங்குகிறான். அவன் காட்சியைக் கண்டதும் வாரி விழுங்க பாரிக்கிறார் ஆழ்வார். வேதம் முத்தாத்மாக்களையும் அன்னமாவே சொல்கிறது.
வாழ்க்கை நெறிகள் வளரும்.....
நன்றி - சப்தகிரி செப்டம்பர் 2018
நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963
கருத்துரையிடுக