ஶ்ரீமத் பாகவதம் - 115

ஐந்தாவது ஸ்கந்தம் – ஏழாவது அத்தியாயம்

 (பரதனுடைய வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹா பாகவதனாகிய பரதன் ருஷபதேவனால் பூமண்டலத்தை ஆளும்படி நியமிக்கப்பெற்று அப்படியே அதைப் பாதுகாத்துக் கொண்டு வருகையில், விஸ்வரூபனது புதல்வியாகிய பஞ்சஜனி என்பவளை மணம்புரிந்தான். தாமஸ அஹங்காரம் பூத ஸூக்ஷ்மங்களைப் படைப்பதுபோல்.,
   
[படைப்பின் முறை: மூல ப்ரக்ருதி என்கிற அசேதன தத்வம் நித்யமானது. அதாவது அழிவற்றது. இது எப்பொழுதும் மாறுபாட்டை அடைந்துகொண்டே இருக்கும். இந்த ப்ரக்ருதி ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களை உடையது. இந்த மூன்று குணங்களும் ஸமமான அளவில் உள்ளபோது மஹாப்ரளயம் ஏற்படும். அந்த குணங்கள் ஏற்றத்தாழ்வை அடையும்போது இந்த ப்ரக்ருதி பலவகை தத்வங்களாக மாறுகிறது. முதலில் இந்த ப்ரக்ருதி மஹான் (மஹத்) என்னும் தத்வமாக மாறுகிறது. இம்மஹத் தத்வத்திலிருந்து அஹங்காரம் என்னும் தத்வம் பிறக்கிறது. இந்த அஹங்காரம் ஸாத்விக அஹங்காரம், ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம் என்று மூன்று வகைப்படும். ஸாத்விக அஹங்காரத்திலிருந்து பதினொன்று இந்த்ரியங்கள் உண்டாகின்றன. அவையாவன:
ஜ்ஞானேந்த்ரியங்கள் ஆறு – மனம், காது, கண், நாக்கு, மூக்கு, தோல் என்பன. 
கர்மேந்த்ரியங்கள் ஐந்து – வாக்கு, கால், கை, பாயு (மலத்வாரம்), உபஸ்தம் (ஆண்/பெண் குறி). தாமஸ அஹங்காரத்திலிருந்து தன்மாத்ரை எனப்படும் பூத ஸூக்ஷ்மங்கள் மூலமாய் ஆகாசம், காற்று, நெருப்பு, நீர், பூமி என்ற ஐந்து பூதங்கள் உண்டாகின்றன. தன்மாத்ரை (அ) பூத ஸூக்ஷ்மம் என்பது ஒரு இடைப்பட்ட நிலை. 

உதாரணம் – தாமஸ அஹங்காரத்திற்கும் ஆகாசத்திற்கும் இடைப்பட்ட நிலை சப்த தன்மாத்ரை. ஆகாசத்திற்கும் காற்றிற்கும் இடைப்பட்ட நிலை ஸ்பர்ச தன்மாத்ரை. காற்றுக்கும் நெருப்புக்கும் இடைப்பட்ட நிலை ரூப தன்மாத்ரை. நெருப்புக்கும் நீருக்கும் இடைப்பட்ட நிலை ரஸ தன்மாத்ரை. நீருக்கும் பூமிக்கும் இடைப்பட்ட நிலை கந்த தன்மாத்ரை. ஆக தாமஸ அஹங்காரத்திலிருந்து முறையே சப்த தன்மாத்ரை, ஆகாசம், ஸ்பர்ச தன்மாத்ரை, காற்று, ரூப தன்மாத்ரை, நெருப்பு, ரஸ தன்மாத்ரை, நீர், கந்த தன்மாத்ரை, பூமி என்பது படைப்பு க்ரமம். ராஜஸ அஹங்காரம் மற்ற இரண்டு அஹங்காரங்களுக்கும் உதவி செய்யும்.] 


அம்மன்னவன் தன் பார்யையான பஞ்சஜனியிடத்தில் எல்லாவிதத்திலும் தனக்கு அனுரூபர்களான (தன்னைப் போன்றவர்களான) ஸுமதி, ராஷ்ட்ரப்ருத், ஸுதர்சனன், ஆசரணன், தூம்ரகேது என்னும் பேருடைய ஐந்து புதல்வர்களைப் பெற்றான். முன்பு அஜாபமென்னும் பேருடைய இவ்வர்ஷத்தை இப்பரதமன்னவன் ஆளத் தொடங்கினது முதல் பாரத வர்ஷமென்று வழங்குகிறார்கள், பலவும் அறிந்த அந்த பரத மஹீபதி தான் தர்மத்தில் நிலை நின்று தமது வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களைத் தவறாது நடத்தும் ப்ரஜைகளைத் தன் தந்தை பாட்டன்மார்களைப்போல் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பாதுகாத்து வந்தான். அவன் அக்னிஹோத்ரம் தர்சபூர்ணமாஸம் சாதுர்மாஸ்யம் பசுஸோமம் (இவை யாகங்களின் பெயர்கள்) என்னும் யாகங்களின் ப்ரக்ருதிகளும் விக்ருதிகளுமான பலவகை யாகங்களால் ச்ரத்தையுடன் பகவானை ஆராதித்தான். மூன்று காலங்களிலும் சாதுர் ஹோத்ர (நான்கு வகை ஹோமங்களின்) விதியின்படி அங்கங்களோடு கூடின பலவகை யாகங்கள் நடந்து கொண்டிருக்கையில், தர்மமென்றும் அபூர்வமென்றும் வழங்கி வருகிற யாகாதி கர்மங்களின் பலன்களெல்லாம் ஸமஸ்த தேவதைகளின் அடையாளங்களும் அமைந்த மந்த்ரங்களின் பொருளான இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் நியாமகனாகையால் ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிப்பவனும் யஜ்ஞபுருஷன் வாஸுதேவன் பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனும் பரதேவதையுமாகிய பகவானுடைய அனுக்ரஹமேயென்று பாவித்து அங்கனம் பாவிக்கையாகிற தனது வல்லமையால் ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களெல்லாம் தொலையப்பெற்று, அத்வர்யுக்கள் (யஜுர் வேதப்படி வேள்வி புரிபவர்) ஹோமத்தின் பொருட்டு புரோடாசம் (வெந்த மாவினாலான பண்டம்) முதலிய ஹவிஸ்ஸுக்களைக் (அக்னியில் ஸமர்பிக்கப்படும் பொருள்) கையில் ஏந்திக் கொண்டிருக்கையில், யஜ்ஞங்களால் ஆராதிக்கப்படும் தேவதைகளான இந்த்ரன் முதலியவர்களை அப்பரமபுருஷனுடைய அவயவங்களில் த்யானித்தான். இங்கனம் கர்மசுத்தியால் பரிசுத்தமான மனமுடைய அந்த பரத மன்னவனுக்குச் சரீரத்திற்குள் புண்டரீகம் போன்ற ஹ்ருதயத்தின் ஆகாசத்தைச் சரீரமாகவுடையவனும் அளவிறந்த ஸ்வரூபமும் குணங்களுமுடையவனும் ஷாட்குண்யபூர்ணனும் ஸர்வாந்தராத்மாவும் மஹாபுருஷனென்பதை அறிவிக்கும் அடையாளங்களான ஸ்ரீவத்ஸம் கௌஸ்துபம் வனமாலை சக்ரம் சங்கம் கதை கத்தி இவை அமைந்தவனும் தன் பக்தர்களுடைய ஹ்ருதயத்தில் எழுதினாற்போல் அசையாதிருப்பவனும் அங்கனமே தன் மனத்தில் தோற்றுகின்றவனுமாகிய பரமபுருஷனிடத்தில் க்ஷணந்தோறும் வளர்கின்ற வேகமுடைய மேலான பக்தி உண்டாயிற்று. இங்கனம் அநேகமாயிரமாண்டுகள் கழிந்தபின்பு கடைசியில் கர்மாவஸானம் (கர்மங்கள் முடிவு பெறும் ஸமயம்) நேரப்பெற்றுத் தான் அனுபவித்து வருவதும் தந்தை பாட்டன் முதலிய பரம்பரையில் வந்ததுமான தனத்தைப் புதல்வர்களுக்கு க்ரமப்படி பங்கிட்டுக்கொடுத்து ஸமஸ்த ஸம்பத்துக்களும் நிறைந்த தன் க்ருஹத்தினின்றும் புறப்பட்டுப் புலஹருடைய ஆஸ்ரமத்திற்குப் போனான். அவ்விடத்தில் ஷாட்குண்யபூர்ணனான ஸர்வேச்வரன் தன் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யத்தினால் அவர்கள் விரும்பினபடி உருவங்களைக் கொண்டு ஸந்நிதானம் செய்கிறான். கீழும் மேலும் சக்ரங்களையுடைய சிலைகள் அமைத்திருக்கையால் சக்ரநதியென்னும் பேருடைய மேன்மையுள்ள ஓர் நதி அவ்விடத்திலுள்ள ஆச்ரமங்களையெல்லாம் பாவனம் (தூய்மை) செய்கின்றது. அவ்விடத்தில் புலஹருடைய ஆச்ரமத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு வனத்தில் அம்மன்னவன் பலவகைப் புஷ்பங்கள் தளிர்கள் துளஸிஜலம் இவைகளாலும் கிழங்கு வேர் பழம் இவையாகிற உபஹாரங்களாலும் பகவானை ஆராதித்துக்கொண்டு பரிசுத்தமான, ஆஹாரத்தைப் புசித்து சப்தாதி விஷயங்களில் விருப்பமற்று இந்திரிய நிக்ரஹம் கைகூடப்பெற்று ஆநந்த ரூபமான பரபக்தி உண்டாகப்பெற்றான். இங்கனம் பரமபுருஷனுக்கு ஓயாது நடத்திக்கொண்டு வருகிற ஆராதனத்தினால் பகவானிடத்தில் நாள்தோறும் வளர்கின்ற ப்ரீதியின் மிகுதியால் மனம் உருகி உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகப்பெற்று ப்ரீதியினால் ஆனந்தநீர் பெருகிக் கண் பார்வையற்றுத் தனது அன்பனாகிய பகவானுடைய திருவடித் தாமரைகளின் த்யானத்தினால் பக்தியோகம் தலையெடுத்து அதனால் முழுவதும் நிறைந்த பரமாநந்தமாகிற பெருமடுவில் ஆழ்ந்த மதியுடையவனாகித் தினந்தோறும் நடத்துகிற பகவானுடைய பூஜையையும் மறந்திருந்தான். இவ்வாறு பகவத் ஆராதன ரூபமான பற்பல வ்ரதங்களை அனுஷ்டிப்பவனும் மான்தோலை உடுத்திருப்பவனும் மூன்று காலங்களிலும் ஸ்நானம் செய்கையால் நனைந்து பொன்னிறமேறிச் சுரும்பார்ந்த ஜடைகளின் பாரத்தினால் திகழ்பவனுமாகிய அம்மன்னவன் ஸூர்யோதய காலத்தில் ஸூர்ய மண்டலத்தினிடையில் இருக்கும் பொன்னிறமுடைய புண்டரீகாக்ஷனை ஸூர்ய மந்த்ரத்தினால் உபஸ்தானம் (மீண்டும் அவனுடைய இடத்திற்கே எழுந்தருளச் செய்தல்) செய்ய முயன்று எழுந்து நின்றுகொண்டு “தனது ஸங்கல்பரூப ஜ்ஞானத்தினால் சேதன அசேதன ரூபமான ஜகத்தையெல்லாம் படைத்து அதில் தனக்குச் சரீரமாகிய ஜீவன் மூலமாகவும் நேராகவும் உட்புகுந்து ஜீவன் சப்தாதி விஷயங்களை அனுபவிக்க விரும்பி அவற்றில் கொண்டு மூட்டுகிற புத்தியின் வ்யாபாரத்தினால் கர்ம பலன்களை அனுபவிக்கையில் பக்கத்திலிருந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் தன்மையனான பரமபுருஷனுடைய தேஜோமயமான திவ்யமங்கள விக்ரஹத்தைச் சரணம் அடைகிறேன். அது லோக விலக்ஷணமாய் நித்ய ஜ்ஞானமயமாய் இருக்கும். அதை த்யானம் செய்கிறேன்” என்று மொழிந்து பணிந்தான். 

ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை