பகவான் பக்தனைத் தேடுகிறான்
உறையூரில் அன்று வாழ்ந்து வந்த குடிகளில் பாணர் குடியும் ஒன்றாகும். இவர்கள் இசைக் கருவிகளை தயாரிப்பதிலும் இசைப்பதிலும் வல்லவர்கள். ஒரு நாள் பாணன் ஒருவன் அரங்கனின் மீது அருமையான பாடல் ஒன்றினை இசைத்துக் கொண்டே வயல்களின் வரப்பு வழியே சென்று கொண்டிருக்கும் போது ஓங்கி வளர்ந்திருந்த நெற்பயிர்களின் இடையிலே அழகான குழந்தையைக் கண்டான். கண்ட நாள் கார்த்திகை உரோகிணி. கடவுள் திருவுள்ளம்தான் இது என்று குழந்தையை அன்போடு மார்பணைத்தபடி வீடு வந்து சேர்ந்தான். பாணனும் அவன் மனைவியும் தங்கள் பிள்ளையில்லாத குறை தீர்ந்ததாகக் கருதி எல்லையற்ற அன்புடன் குழந்தையை வளர்த்து வந்தனர்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது. அரங்கன் மீது பக்தியும் அருமையான இசையும் நாளும் வளர்ந்தது. பாணன் குழந்தைக்கும் பாணன் என்றே பெயர் வைத்தனர். காலைத் துயிலெழுந்து காவிரிக்கு நீராடச் செல்லும் பாணன் தன் கடமைகளை முடித்தவுடன் அங்கேயே நின்று திருவரங்க திசை நோக்கி அந்த அரங்கனின் பெருமையை யாழ் மீட்டிப்பாடத் தொடங்குவார்.
ஒரு பெருங்கூட்டமே இந்த பக்தி யாகத்தில் ஆழ்ந்து விடும். தினசரி நடக்கும் அற்புதம் இது. அப்போது திருவரங்கக் கோயிலில் பிரதான அர்ச்சகராக இருந்தவர் லோக சாரங்க முனிவர். நால்வேத அறிவும் ஆகம விதிகளும் அரங்கனின் மீது அகலாத பக்தியும் கொண்ட அந்தணப் பெருந்தகை அவர்.
தினசரி அவரும் காவிரிக் கரைக்கு வருவார். அரங்கனுக்காக பொற்குடத்தில் தீர்த்தமெடுத்துச் செல்வார். கூடவே கோயில் குடை, சின்னம், மேளம், தாளம் போன்ற பரிவாரங்களும் வரும். இப்படி ஒரு நாள் தீர்த்தக் குடத்தோடு லோக சாரங்கர் வருவதை கவனியாத நிலையில் மெய்மறந்து பாணன் பாடிக் கொண்டிருந்தார்.
அன்று ஒரு தவ நிலையில் அவர் இருந்தார். அந்த ஆழ்ந்த தவநிலையில் பரிவாரங்கள் போடும் ஓசையோ மேளதாளங்களின் ஓசையோ பாணன் காதில் விழவேயில்லை. லோக சாரங்கர் அரங்கனின் வழிபாட்டுக்கு இடையூறாக இருக்கிறாரே எனக் கருதினார். அவருக்கு கோபம் வந்தது. பாணனை விலகு அப்பால் என்று அதட்டிக் கொண்டே ஓர் கல்லை எடுத்து அவர் மீது போட்டார்.
எய்தவன் அரங்கன். அம்பு லோக சாரங்கர். நாடகம் எழுதியவன்தானே அதனை முடிக்கவும் முடியும். பாணர் தன் நிலை உணர்ந்தார். சட்டென்று விலகினார். நெற்றி சிவந்து இரத்தம் வந்தது. அந்த வலி பெரிதாக இல்லை பாணருக்கு. “ஐயோ! அரங்கனின் பணிக்கு குறுக்கே நின்று அபசாரப்பட்டோமே” என்று மறுகினார். உடல் சோர வீடு திரும்பினார்.
லோக சாரங்கமுனி பொற்குடத்தில் காவிரி தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு அரங்கனின் சந்நிதி நோக்கி நடந்தார். சந்நிதி திறந்தது. உள்ளே நுழைந்த லோகசாரங்க முனி அரங்கனின் திருமுகத்தை பார்த்ததும் அதிர்ந்தே போனார். எப்படி நடந்தது இது? என்று தவித்தார். அங்கே அரங்கனின் நெற்றியில் சிவந்த இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உடனே பச்சைக் கற்பூரம் எடுத்து நெற்றியில் வைத்து அழுத்தினார். அரங்கனுக்கு நேர்ந்த அபசாரம் என்ன என்று தெரியாது திகைத்தார்.
அன்று உணவும் கொள்ளவில்லை. உறக்கமும் இல்லாது தவித்துக் கொண்டிருந்த அவர் சற்று
கண்ணயர்ந்த நேரத்தில் அரங்கன் கனவில் தோன்றினான். லோகசாரங்க முனிவரே! “அபசாரப்பட்டது நீர்! பரமபக்தனான அவர் மீது கல்லெறிந்ததால் ஏற்பட்ட காயம் எம் நெற்றியில் குருதியை வரவழைத்து விட்டது. அவர் காயம் ஆறினால் எம் காயமும் ஆறும்…”
இறைவா! இந்த அபசாரத்திற்கு பரிகாரம் என்ன? இருக்கிறது! தாழ்ந்த குலம் என்பதால் அவர் திருக்கோயிலுக்கு வருவதில்லை. நீரே நாளை நேரில் சென்று உம் தோளில் அவரை எழுந்தருளச் செய்து எம்மிடம் அழைத்து வருக.
அடுத்த நிமிடம் தூக்கம் கலைந்து எழுந்தார். மேளதாளம், குடை, சின்னம் போன்ற பரிவாரங்களோடு காவிரிக் கரைக்கு ஓடினார். அங்கே ஏதும் நடக்காத மோனநிலையில் யாழ் மீட்டி இனிய குரலில் பாடிக்கொண்டிருந்த பாணன் சட்டென்று நகர்ந்தார்.
“பாணரே! நில்லுங்கள். நேற்று தங்களிடம் அபசாரப்பட்டேன். இதற்கு பரிகாரம் காணத்தான் வந்தேன்…”
“பரிகாரமா?”
“ஆம்! தாங்கள் என் தோள்களில் எழுந்தருள வேண்டும். தங்களைச் சுமந்து நான் அரங்கனின் சந்நிதி செல்ல வேண்டும்”
“ஐயோ! என்ன கொடுமை இது! குலத்தாலும் பண்பாலும் உயர்ந்த நீங்கள் எங்கே? பாட்டையும் பண்ணையும் தவிர வேரறியாத குலம் வந்த அடியேன் எங்கே? வேதம் வல்ல தாங்கள் இந்த வீணனைச் சுமப்பதா என்ன கொடுமை இது”.
“வீணணல்ல நீங்கள்! அரங்கனின் மனம் கவர்ந்த பாணன். திருப்பாணரே! எங்கள் வேத ஒலியை விட தங்களின் இனிமையான குரலும் எளிமையான சொற்களும் அந்த அரங்கனுக்கு இனிமையாக இருக்கின்றன... வாருங்கள்”.
“இல்லை! என்னால் முடியாது. தாங்கள் ஆயிரம் சொன்னாலும் என் மனம் இதற்கு இசையாது”.
“திருப்பாணரே! இது அரங்கனின் ஆணை! இதனை மீற உங்களுக்கோ எனக்கோ உரிமையில்லை”.
அரங்கனின் ஆணை என்ற வாக்கியம் பாணனை நிற்கச் செய்தது. அவன் பொருள் அவன் உடமை என்கிற உணர்விலேயே ஊறிய அவர் மனம் அப்படியே நின்றது. அசையாது அவர் மோன நிலையில் நிற்க லோக சாரங்க முனிவர் தம் திருத்தோள்களில் அவரை ஏற்றிக் கொண்டார்.
பாணன் மனக்கண்ணில் அரங்கனின் திருப்பாதம் தெரிந்தது. அற்புதமான இசையில் அந்த இனிமையான திருப்பாதங்களைப் போற்றிப் பாட ஆரம்பித்தார். “அமலன் ஆதிப்பிரான்” எனத் தொடங்கும் பத்துப் பாசுரங்களை ஒவ்வொரு அவயமாக வர்ணித்துப் பாட ஆரம்பித்தார். பத்தாவது பாசுரமான "அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன் றினைக் காணவே" என்று உருக்கமாகப் பாட ஒளி மயமாகிய அவர் ஊன் உடம்பு இறைவனிடத்தில் அப்படியே புகுந்து ஐக்கியமானது. இன்றைக்கும் திருவரங்கன் திருவடிகளில் அவரை தரிசிக்கலாம்.
திருப்பாணாழ்வார் காட்டும் வாழ்வியல் நெறி இது தான். எந்தக் குடியில் பிறந்தாலும் பாகவதர்களுக்கு மோட்சம் உண்டு. அவர்களுக்கு பகவானே தன்னை காட்டித் தருகிறான். அவனே வரவழைத்து தன்னோடு இணைத்துக் கொள்கிறான். அதுவும் அவர்கள் திருமேனியோடு சேர்த்துக் கொள்கிறான். நம் கல்வியும் மற்றத் தகுதிகளும் பக்திக்குத் துணையே தவிர அதுவே முழுமையான பக்தியாகி விடாது.
வாழ்க்கை நெறிகள் வளரும்.....
நன்றி - சப்தகிரி நவம்பர் 2018
நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963