புதன், 22 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 12 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் 5

திருமந்திரம், துவயம், சரம ஸ்லோகம் என்ற ரகஸ்யத்ரயம் மூன்று. அதில் திருமந்திரத்துக்கு மூன்று பதங்கள். அதற்கு மூன்று அர்த்தங்கள். அந்த மூன்று அர்த்தங்களும் ஸ்ரீராமாநுஜரே தேவரீரிடம் ஏற்படவேண்டும். 

ஓம் நம: நாராயணாய! 

“ஓமித்யக்ரே வ்யஹரேத்। 
நம இதி பச்சாத்। 
நாராயாணாயேத் யுபரிஷ்டாத்। 
ஓமித்யேகாக்ஷரம்। 
நம இதித்வே அக்ஷரே। 
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி।” 

ஆக எட்டெழுத்து. ஓம் என்று முதலிலும், நம: என்று இரண்டாவதாகவும், நாராயணாய என்று மூன்றாவதாகவும் சொல்லவும். மூன்றிலும் மூன்று அர்த்தங்கள். இவகளை கூர்ந்து கவனிக்கவேண்டும்.

அநந்யார்ஹ ஶேஷத்வம் முதல் அர்த்தம். அநந்ய ஶரணத்வம் நடு பதத்துக்கு அர்த்தம். அநந்ய போக்யத்வம் மூன்றாவது பத அர்த்தம். இதுவே ஓம் நம: நாராயணாய!. 

அநந்யார்ஹ ஶேஷத்வம் என்றால் பகவானுக்கே ஆட்பட்டு தொண்டு பண்ணுகிற தன்மை. அவரைத் தவிர மற்ற பேருக்கு ஆட்படாத தன்மை. அன்ய ஶேஷ என்றால் வேறு ஒருவருக்கு ஆட்பட்ட தன்மை. அநந்யார்ஹ ஶேஷத்வம் என்றால் வேறு யாருக்குமில்லை. பகவானுக்கே ஆட்பட்ட தன்மை. இந்தப் பொருளை ஓம் தருகிறது.

நம: என்றால் எனக்கு நான் அல்லேன், எனக்கு நான் அல்லேன். பகவானே உபாயம். என்னைக் காக்கவேண்டிய பொறுப்பு எனக்கல்ல. பகவானே புகலிடமாகக் கொண்டுள்ளேன். அவரவர் சொந்தக் காலில் நிற்கவேண்டும் இது உலக வழக்கம். இங்கு சொல்வதோ என் காலை நம்பவில்லை. உன் காலை நம்புகிறேன். உன் திருவடிகளில் ஶரணம்.

நாம் அவரவர் சொந்தக் காலில் நிற்கவேண்டும். மனைவியும் வேலைக்குப் போகட்டும். படிக்கும்போதே சின்ன வயதிலேயே கடனை வாங்கி அதை கட்டும் பொறுப்பை அதன் தலையிலேயே போடுங்கள். அப்பதான் சொந்தக் காலில் நிற்கிறார்களா என்று தெரியும். ஆனால் என்னமோ தெரியவில்லை. இந்த ஸம்ப்ரதாயத்துக்கு வந்துவிட்டாலே அந்தக் கால்தான்., பகவானுடைய திருவடிதான். இணைத் தாமரையடிகள் என்கிறோம்.

அகலகில்லேன் இறையுமென்று..... அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே, ஆசார்யார்கள் அத்தனைபேரும் காட்டியது அந்தத் திருவடியைப் பற்று என்பது தான். திருவடிகள் என்று வரும்போது ஶரணம் என்று வருகிறோம் அல்லவா? அதுவே உபாயம். என்னை ரக்ஷித்துக் கொள்ளும் பொறுப்பு என்னதல்ல. அந்தத் திருவடிகளுடையது என்று சொல்கிறது நம: “ம: ம் ந” நான் எனக்குரியவன் அல்லேன். நான் அந்தத் திருவடிகளுக்கே உரியவன். இதைத்தான் “அநந்ய ஶரணத்வம்” என்று சொல்வர்.

ஶரணம் என்பது உபாயம். உபாயமாக பகவானுடைய திருவடியைப் பற்றுகிறோம். நான் உபாயமாகமாட்டேன். என்னை ரக்ஷித்திருக்கும் பொறுப்பு உன்னுடையது. என்னுடையது இல்லை. இது தான் சரணாகதித் தத்துவமே.. நம: என்பதாலே அநந்யார்ஹ ஶரணத்வம் சொல்லப்படுகிறது.

நாராயணாய என்பதாலே அநந்ய போக்யத்வம். நான் அனுபவிக்க விரும்புவது உலக இன்பத்தையல்ல. பகவானுக்கும் பிராட்டிக்கும் தொண்டு புரியும் இன்பத்தையே விரும்புகிறேன். அது நாராயணாய. நாராயணாய நம: நாராயணாய என்பதால் அநந்ய போக்யத்வம். நம: என்பதால் நான் எனக்குரியவன் அல்லேன். தேவரீருக்கு உரியவன். அப்பொழுது உபாயம் தேவரீர்தான். அநந்ய ஶரணத்வம். அடியேன் தொண்டனே தேவரீருக்குத்தான். அநந்யார்ஹ ஶேஷத்வம்.

இதில் அமைப்பு எப்படி இருக்கிறதென்றால்: முதலில் ௐன் அர்த்தம்: அநந்யார்ஹ ஶேஷன். இது தெரிந்தால்தான் எப்பொழுது நான் பகவானுக்குத் தொண்டனோ அப்பொழுது அவரைத்தானே அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை வரும். உடனே நாராயணாயவுக்குப் போவோம். அவரைத்தான் போக்யமாக அனுபவிக்க வேணும் என்று தெரியும். அனுபவிக்க வழியென்ன என்று தெரியாமல் சிரமப்படுவோம். நம: அதுக்கு வழி என்கிட்ட இல்லை. தேவரீர் தான் வழி. என்று நம: ஸப்தம் அநந்யார்ஹ ஶரணத்வம். 

அநந்யார்ஹ ஶேஷன், அநந்யார்ஹ ஶரணத்வம். அநந்ய போக்யத்வம் என்று மூன்று ஸப்தங்கள் – இது எல்லாம் பிரதம பர்வத்திலே. பிரதம பருவம் என்றால் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஶேஷன் அடியேன். ஸ்ரீமன் நாராயணனே உபாயம். ஸ்ரீமன் நாராயணனுக்கு தொண்டு புரிவதே போக்யம். இதை அப்படியே மாற்றி ராமானுஜ என்று வைத்துவிடுங்கள். 

ராமானுஜருக்கு ஶேஷன் அடியேன். ராமானுஜரே அனுபவிக்கப் படவேண்டியவர். அதற்கு வழியும் பிரிதொன்றில்லை. அவரே உபாயம். ராமானுஜரின் திருவடிகளையே உபாயமாகக் கொண்டவன் அடியேன். ஓம் நம: நாராயணாய என்றிருக்கிறதல்லவா இந்த மூன்றையுமே எனக்கு ராமானுஜரிடத்தில் ஏற்படுத்து. திருமந்திர உபதேசம் பெற்றேன். அது பகவானைப் பற்றிய உபதேசமாக இருக்கவேண்டாம். தேவரீருக்கு உரிய திருமந்திரமாக அடியேனுக்கு ஆக்கிக் கொடுக்க வேணும் என்று பிரார்த்திக்கிறார்.

अष्टाक्षराख्यमनुराजपदत्रयार्थनिष्ठां ममात्र वितराध्य यतीन्द्रनाथ ।
शिष्टाग्रगण्यजनसेव्यभवतपदाब्जे ह्रुष्टास्तु नित्यमनुभूय ममास्य बुद्धिः ॥ (5)

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த 
நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ரநாத |
ஸிஷ்டாக்ரகண்யஜநஸேவ்யபவத்பதாப்ஜே 
ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)

என்னுடைய இந்த புத்தியானது எது ப்ராப்யம், எது ப்ராபகம் என்று தவித்துக் கொண்டிருந்த புத்தியாக இருந்தது. சாதாரண பாமரனாக இருந்தால் உலக இன்பத்திலேயே உழன்றுகொண்டிருப்பான். எது போக்யம் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் ஆசார்யர்களோ பகவானுடைய திருவடிதான் உபாயம் என்பது மாறி உம்முடைய திருவடிதான் உபாயம் என்று வரவேண்டும் என்கின்றனர். இதைப் புரிந்துகொள்வது கடினம். இதை வலியுறுத்தி பகவானது திருவடி உபாயமில்லை என்று பேசிக்கொண்டிருந்தால் இதை ஒரு நாஸ்திகன் கேட்டு இதைத்தானே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பான். அப்படியில்லை ஸ்வாமி. இது ஒவ்வொரு படியாக ஏறிச் செல்வதுபோல. ஒவ்வொரு படியாகத் தாண்டிச் செல்லவேண்டும். 

ஏன் தாண்டிபோகவேண்டும்? பகவான் என்ற படிக்கட்டில் நின்று விடக்கூடாதா? அதைத்தாண்டி ஆசார்யன் என்ற படிக்கு ஏன் போகவேண்டும். என்றால் மதுரகவியாழ்வார் சொல்கிறார். நான் முதலில் யார் யாரிடமோ, ஊர்வசி, ரம்பா முதலியவரிடம் மனதைப் பறிகொடுத்திருந்தேன். தாண்டி பொலிந்த நின்ற பிரானிடம் வந்தேன். அதையும் தாண்டி நம்மாழ்வார் என்ற படிக்கு வந்து சேர்ந்துவிட்டேன். ஒருவேளை அந்தப் நம்மாழ்வார் படியிலிருந்து நழுவி விழுந்துவிட்டேன் என்றால் பொலிந்து நின்ற பகவான் என்ற திருவடியில் தான் விழுவேன். இப்ப நம்மாட்டம் இருக்கிறவர்கள் ஊர்வசி, ரம்பாவைத் தாண்டி பொலிந்து நின்ற பிரானிடம் வந்திருக்கிறோம். அதிலிருந்து தவறிவிட்டால் ஊர்வசி ரம்பாவிடமே விழுவோம். இது வேண்டாம் என்றுதான் மதுரகவி ஆழ்வார் சொல்கிறார். இது வேண்டாமே. உலக இன்பத்தைத் தாண்டி பகவானிடம் வந்தேன். பகவானிடமிருந்து ஆசாரியனிடம் வந்துவிட்டேன். பிறண்டாலும், கவிழ்ந்தாலும் கவலையில்லை. ஏனெனில் திரும்ப பகவானிடமே விழுவேன். இதைத்தான் சரம பருவ நிஷ்டை என்று சொல்கின்றனர். 

பெருமாள்கிட்ட குற்றம் சொல்லி இங்கு இழுத்து வரவேண்டும் என்று ஆசையில்லை. பெருமாளிடமும் ஒரு குறை இருக்கிறது. ஸ்வாதந்த்ரியம். எப்படிப் பண்ணுவார்? ஏது பண்ணுவார்? என்று தெரியாது. இன்னொரு விஷயம். அப்ப அப்ப கைமாறினால்தான் வீடு நம்முடையது என்றாகும். வீட்டில் ஒருவர் ரொம்ப நாள் வாடகைக்கு இருந்தால் அனுபவ பாத்தியதை என்று ஒன்று வந்துவிடும். ஆக வீடு என்னுடையது என்பது திண்ணமாக இருக்க வேண்டும் என்றால் எத்தனை கைவேண்டும் என்றாலும் மாறவேண்டும் அல்லவா? 

அதுபோல பகவானது திருவடி என்னுடைது என்று திண்ணமாக வேண்டுமென்றால் , பகவான் பார்த்து அவருக்குக் கைங்கர்யம் செய் என்றால் அவரிடம் போகவேண்டும். என் தொண்டனுக்குப் பண்ணு என்றால் அந்த பாகவதரிடம்போய் தொண்டு புரியவேண்டும். அவர் பார்த்து என் சிஷ்யனுக்குப் பண்ணு என்றால் அங்கு போகவேண்டும். போவமா? இது என்ன உம்மிடம் கைங்கர்யம் செய்ய வந்தால் இன்னொருவரிடம் கைகாட்டி விடுகிறீரே என்று போகமாட்டோம். அது தான் கூடாது என்று சொல்கிறார்கள். எத்தனை அடியேன் அடியேன் அடியேன் என்று சொன்னாலும் அதை ஏற்று யாரைச் சொல்கிறார்களோ அவருக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும். இப்படிச் செய்தால்தான் அந்தப் பெருமாளுக்கு நான் தொண்டன் என்பதே ஸித்தியடையும். அப்பொழுதுதான் அது உறுதி பெறும் என்பதற்காகச் சொல்கிறார். 

நாத யதீந்த்ர – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய, யதிராஜரே, யதிஸ்ரேஷடரான எம்பெருமானாரே! 

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த - ஆக்ய என்றால் பேர் பெற்றது, பிரஸித்தி பெற்றது, அஷ்டாக்ஷரம் என்றால் எட்டெழுத்து மந்திரம். திருமந்திரம் என்ற பேருடைய, மநுராஜ – மந்திர ராஜ, பதத்ரய - அதிலிருக்கும் மூன்று பதங்களாலும், அர்த்த – அவைகளால் சொல்லப்படுகிற அர்த்தம், ஆக மந்திரங்களுக்கெல்லாம் அரசனான பிரஸித்திபெற்ற எட்டெழுத்து மந்திரமான திருமந்திரம் சொல்லப்படுகிறது. அதிலிருக்கும் மூன்று பதங்களாலும் சொல்லப்படுகிற அர்த்தமானது, என்ன அர்த்தம்: 1. அநந்யார்ஹ ஶேஷத்வம். 2. அநந்யார்ஹ போக்யத்வம், 3. அநந்யார்ஹ ஶரணத்வம். 

நிஷ்டாம் - அந்த அர்த்தங்களிலே நிஷ்டை ஏற்பட வேண்டும். சரமபர்வ பர்யந்தமான நிஷ்டையை அடியேனுக்கு ஏற்படுத்தவேண்டும். ராமானுஜர் பர்யந்தமாக. ஏன் அடியேன் ஆசார்யன் பர்யந்தமாக ஏற்படுத்த வேண்டும். கடைசி வரைக்கும் தேவரீருக்குத்தான் அடிமை, தேவரீர் திருவடிகள்தான் உபாயம்., தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வதே ப்ராப்யம். என்ற நிஷ்டையை அத்ய – இப்போதே அதில் ருசியை ஏற்படுத்து. ருசியுடையார் கிடையாது இந்த விபூதியில். ராமானுஜர் சொல்கிறார், “கண்டிப்பா பண்றேன். வைகுந்தத்துக்கு வந்தபிறகு செய்கின்றேன்”.

அத்ர – இங்கேயே, இங்கே உங்களுக்கு ஆள் கிடைக்குமா? இதுக்கெல்லாம் இங்கு ஆள் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஒருத்தன்தான் வந்திருக்கின்றேன். ஒருத்தன்தான் வந்திருக்கின்றேன் என்பதால் உபன்யாசம் பண்ணாமல் விட்டு விடாதீரும். உட்காரும். உமக்கு நான் தான். எனக்கு நீர்தான் என்று சொல்வோம் அல்லவா? அதைப் போலத்தான் ஸ்வாமியிடம் பிரார்த்திக்கிறார். பகவத் விஷயத்திற்கே ஆள் வரவில்லை. ஆசார்யன் விஷயத்திற்கா ஆள் வரப்போகிது? நல்ல வேளை எனக்குப் புத்தி வந்திருக்கிறது. அடியேனுக்கு கொடுத்தருளவேண்டும். உன்னைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று வடுக நம்பிகள் (ஆந்திரபூர்ணர்) இருந்தார் இல்லையா அந்த நிலையை எனக்குக் கொடும்.

ஸிஷ்டாக்ரகண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – ராமானுஜரே, ஞானம் அநுஷ்டானம் பூர்ணமாக உள்ளவர்களுக்குள் தலைவராக உள்ளவராக எண்ணப்படுபவரான, ப்ரதானமானவரான கூரத்தாழ்வான், முதலியாண்டான் போன்றவர்கள் வணங்கப்படுகிற தேவரீருடைய திருவடித் தாமரை.

ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மம அஸ்ய புத்தி – இதுவரை எது ப்ராப்யம், எது ப்ராபகம் என்று தவித்துக் கொண்டிருந்த எனக்கு, உன்னுடைய திருவடிகளில் ஈடுபட்டு, உன் அடியார்களின் திருவடிகளில் ஈடுபட்டு, ஆனந்தமாக ஆகட்டும். அடியேனது இந்த புத்தியானது திருமந்திரம் சொன்ன அர்த்தத்தின்படி உம்மிடத்தில் ஈடுபட்டு, அப்படி ஈடுபட்டிருக்கிற தொண்டர்களிடத்தும் ஈடுபட்டு எப்போதும் ஆனந்தப் படட்டும். பகவானிடத்தில் ஈடுபட்டு ஆனந்தமும் பட்டது, துன்பமும் பட்டது. ஆனால் உம்மிடம் ஈடுபட்டு ஆனந்தமே படட்டும். இந்த புத்தியானது ராமானுஜர் திருவடி ப்ராப்யமாகக் கிடைக்கவில்லையானால் தவிக்க ஆரம்பித்துவிட்டது. 

சிலபேருக்கு சில பழக்கம் இருந்தது என்றால் அந்தச் செயலைச் செய்யாவிடில் தவிப்பார்கள். காலையில் 6.30 மணிக்கு செய்தித்தாள் படிக்கணும் என்பது வழக்கமாயிருக்கும். அது படித்தால் தான் அடுத்த வேலை ஓடறது என்பர். அதுபோல் திருவாராதனம் பண்ணினால் தான் அடுத்த வேலை ஓடும் என்று சொல்லலாமில்லையா? சொல்லமாட்டார். அது எப்ப பண்ணினால் என்ன? பெருமாள்தான் எப்ப பண்ணினாலும் ஏத்துக்கிறார். அப்படியே பழகிவிட்ட உள்ளத்தை மாற்றுவது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. 

ஆனால் இங்கோ அடியேனுடைய உள்ளம் உமக்கு தொண்டு பண்ணா விட்டால் தரிக்காது என்கிறார் மணவாள மாமுனிகள். உம்மைப் பிரிந்து எம்மால் இருக்க முடியாது. கண்ணன் கீதையில் சொல்கிறார் அல்லவா: “ இவர்கள் எல்லாம் மஹாத்மாக்கள் என்று. இவர்களால் என்னைவிட்டுப் பிரிந்து இருக்க முடியாது.” ‘வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:’ வாசுதேவனே சகலமும் என்று சொல்கிற மஹாத்மாவைத் தேடித் தேடிப் பார்த்தாலும் கிட்டவில்லை. அதுபோலத்தான் இங்கு சொல்கிறார். உம்ம திருவடியைத் தான் நினைத்துக் கொண்டுள்ளது இந்த மனது. அதை விட்டுவிட்டால் மனது தவிக்கும். இந்த மனதுக்குத் தேவரீர் கொடுக்காமல் போய்விட்டீரானால் யார் கொடுப்பார்? திருமந்திரத்தில் உள்ள மூன்று பதத்தின் மூன்று நிஷ்டையை உம் விஷயத்தில் தேவரீர் அடியேனுக்குக் கொடுத்தருளவேண்டும். 

அநுபூய நித்யம் ஹ்ருஷ்டாஸ்து – யதா மனோரதம் அநுபவித்து, இந்த புத்தி உம்மைப் பற்றி நன்கு அநுபவித்து, சந்துஷ்டமாக ஆகவேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக