வியாழன், 23 ஏப்ரல், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 116


ஐந்தாவது ஸ்கந்தம் – எட்டாவது அத்தியாயம்

(அம்மன்னவன் மான்குட்டியை ரக்ஷிக்க முயன்று கடைசியில் மானாகப் பிறத்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பரத மன்னவன் ஒரு கால், நதியில் ஸ்நானம் செய்து அவசியமாய் அனுஷ்டிக்க வேண்டிய நித்ய நைமித்திகங்களை முடித்து ப்ரணவத்தை ஜபித்துக்கொண்டு மூன்று முஹூர்த்தம் வரையில் நதிக்கரையில் உட்கார்ந்திருந்தான். மன்னவனே! அப்பொழுது அந்நதியில் ஒரு பெண்மான் தண்ணீர் குடிக்க விரும்பித் தனியாய் ஜலத்திற்கு அருகாமையில் வந்தது. அது ஜலம் குடித்துக் கொண்டிருக்கையில் ஸமீபத்தில் உலகமெல்லாம் பயந்து நடுங்கும்படி ஸிம்ஹகர்ஜனை உண்டாயிற்று. இயற்கையாகவே தழதழப்புற்ற அந்த மான் பேடு ஸிம்ஹ கர்ஜனத்தைக் கேட்டுக் கண்பார்வை அடிபட்டு ஸிம்ஹம் வருகிறதேயென்னும் பயத்தினால் மனம் கலங்கிக் கண்கள் நடுங்கித் தண்ணீர் தாஹம் தீராமலே பயத்தினால் திடீரென்று போகக்கிளம்பிற்று. அது பூர்ண கர்ப்பமுடையது. அங்கனம் வேகத்துடன் கிளம்பும்பொழுது பயத்தின் மிகுதியால் அதன் மலமூத்ரத்வாரத்தின் வழியாய் கர்ப்பம் நழுவி நதியின் ப்ரவாஹத்தில் (ஓட்டத்தில்) விழுந்தது.

தன்னினத்தினின்று பிரிந்தமையால் வருந்தின அப்பெண்மான் கர்ப்பம் நழுவினதாலும் வேகத்துடன் கிளம்பினமையாலும் பயத்தினாலும் இளைப்புற்று மிகவும் வருந்தி ஒரு பர்வத குஹையில் விழுந்து மாண்டது. மன இரக்கத்திற்கிடமான அந்த மான்குட்டி நதியின் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகக் கண்ட அம்மன்னவன் தாயில்லாத அம்மான் குட்டியை ஆபத்தில் ஆழ்ந்த பந்துவைப்போல் தன்னுடைய ஆச்ரமத்திற்கு எடுத்துக் கொண்டு போனான். அம்மன்னவன் அந்த மான்குட்டியிடத்தில் பெரிய அபிமானம் வைத்து அதை நாள்தோறும் போஷிப்பதும் பாதுகாப்பதும் ப்ரீதிக்கிடமான கார்யங்களைச் செய்வதும் சீராட்டுவதும் அதையே நெஞ்சில் நினைப்பதுமாய் இருந்தானாகையால் ஸ்னானாதி நியமங்களும் பரமபுருஷாராதனம் முதலிய ஸகல தர்மங்களும் நாளுக்கு ஒன்றாகச் சில நாள்களுக்குள் எல்லாம் தொலைந்தன. அவன் அந்த மான் குட்டியிடத்திலுள்ள மனப்பற்றினால் “ஆ! இந்த மான்குட்டி காலவசத்தினால் தன்னினத்தையும் நண்பர்களையும் பந்துக்களையும் இழந்து மன இரக்கத்திற்கிடமாகி என்னையே தாயாகவும் தந்தையாகவும் உடன் பிறந்தவராகவும் பத்துக்களாகவும் ஜ்ஞாதிகளாகவும் தன்னினத்தினராகவும் நினைத்து என்னைச் சரணம் அடைந்தது. இது என்னைத்தவிர மற்றொரு ரக்ஷகனையும் அறியாது. என்னிடத்தில் மிகுந்த விச்வாஸமுடையது. ஆகையால் என்னையே சரணமாகப் பற்றின இந்த மான்குட்டிக்கு ஆஹாரம் கொடுத்துப் போஷிப்பதும் புலி முதலிய துஷ்ட மிருகங்களிடத்தினின்று பாதுகாப்பதும் தினவுசொரிகை (அரிப்பு தொலைய சொரிந்து கொடுப்பது) முதலிய ப்ரீதிக்கிடமான கார்யங்களைச் செய்வதும் கையால் தடவிக்கொடுக்கை முத்தமிடுகை முதலிய சீராட்டல்களுமாகிய இவற்றையெல்லாம் நான் அவச்யம் செய்யவேண்டும். இதனால் என் ப்ரயோஜனமெல்லாம் பாழாய் விடுகிறதேயென்று நான் இதன்மேல் அஸூயைப்படலாகாது. சரணம் அடைந்தவர்களை உபேஷிப்பது அறிஞர்களுக்குத் தோஷமல்லவா? ஆனது பற்றியே பரோபகார சீலர்களும் (பிறர்க்கு உதவும் குணம் படைத்தவர்களும்) ஜிதேந்த்ரியர்களும் (புலன்களை வென்றவர்களும்) மன இரக்கத்திற்கு இடமுள்ளவரிடத்தில் ஸ்னேஹம் உடையவருமாகிய பெரியோர்கள் இத்தகைய சரணாகத ரக்ஷணத்திற்காக மிகவும் பெரிய தமது ப்ரயோஜனங்களையும் உபேஷிக்கின்றார்கள்” என்று தனக்குள் தானே சொல்லிக்கொண்டு இருத்தல், படுத்தல், திரிதல், புசித்தல், ஸ்நானம் செய்தல் முதலிய எல்லா ஸமயங்களிலும் அதைக் கைவிடாமல் அதனிடத்தில் மிகுந்த ஸ்நேஹமுடையவனாய் இருந்தான்.

தர்ப்பம் புஷ்பம் ஸமித்து இலை பழம் வேர் ஜலம் முதலியவற்றைக் கொண்டுவரப் போகும்பொழுது அதை இங்கு விட்டுப்போனோமாயின் காட்டுநாய் செந்நாய் முதலியவை பக்ஷித்து (உண்டு) விடுமென்று நினைத்து அந்த மான்குட்டியைக் கூடவே கொண்டுபோவான். போகும்பொழுது வழிகளில் அது இளமையினால் நடக்கமுடியாமல் பின் தங்குமாயின், ஸ்நேஹத்தின் மிகுதியால் அதைப்பிரிந்திருக்கப் பொறாமல் தோளின்மேல் தூக்கிக் கொண்டுபோவான். இங்கனமே படுக்கும்பொழுது மார்பிலும் உட்கார்ந்திருக்கும்பொழுது மடியிலும் வைத்து அதைச் சீராட்டி மஹாநந்தத்தை அடைந்தான். அவன் நித்ய நைமித்திகாதி கர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டிருக்கையில் இடையில் க்ஷணந்தோறும் (ஒவ்வொரு நொடியும்) எழுந்தெழுந்து அதைப் பார்ப்பான். அங்கனம் பார்க்கும் பொழுதெல்லாம் அப்பரதன் மன ஆக்கத்துடன் “குழந்தாய்! உனக்கு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் க்ஷேமங்கள் உண்டாகுக” என்று ஆசீர்வாதம் செய்வான். அங்கனம் பார்க்கும்பொழுது ஒருகால் அதைக்காணாமல் பணத்தை இழந்தவன் போல் மிகவும் பயந்து ப்ரீதியின் மிகுதியால் அதைப் பிரிந்திருக்கப் பொறாமல் எப்பொழுது காண்பேனென்னும் ஆவலுடன் மனம் தழதழத்துப் பரிதபித்து மன இரக்கத்திற்கிடமாகிப் பெரிய மோஹத்தை அடைந்து சோகித்துக்கொண்டு மன இரக்கத்துடன் இங்கனம் மொழிந்தான்.

பரதன் சொல்லுகிறார்:- “தாயை இழந்தமையால் ஐயோவென்று வருந்துவதற்கிடமான என் இளமான்கன்று எங்கேயோ தெரியவில்லையே? நான் ஏமாற்றுபவன், முட்டாள், வேடன் போன்ற கொடிய புத்தி உடையவன், பாக்யமற்றவன். இப்படிப்பட்ட என்னிடத்தில் அது பெரிய விச்வாஸம் வைத்திருந்தது. அது தன் விச்வாஸத்தினால் என் தோஷங்களைப் பாராமல் நன்மையுடைய ஸாதுவைப் போல் மீளவும் என்னிடம் வந்து சேருமா? அந்த என் மான்குட்டி தேவனால் பாதுகாக்கப்பெற்று இந்த ஆச்ரமத்திற்கு அருகாமையிலுள்ள வனத்தில் க்ஷேமமாய்ப் புல் மேய்ந்து கொண்டிருக்கக் காண்பேனா? செந்நாயாவது, காட்டுநாயாவது, பன்றியாவது, புலியாவது அதைப் பக்ஷியாதிருக்குமா (உண்ணாதிருக்குமா)? ஸமஸ்த லோகங்களுக்கும் க்ஷேமம் விளையுமாறு உதிக்கும் தன்மையுடைய ஸூர்யபகவான் அஸ்தமிக்கிறானே. இந்த மான்பேடு (பெண் மான்) என்னிடத்தில் பாதுகாக்கும்படி வைத்த என் இளமான்கன்று வந்துசேரவில்லையே. என்னுடைய மான்குட்டியாகிற ராஜகுமாரன் மான்குட்டிகளுக்கு இயற்கையில் ஏற்பட்டவைகளும் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி அழகாய் இருப்பவைகளுமான பலவகை விளையாட்டுக்களால் தன் பந்துவாகிய என் மன வருத்தங்களை எல்லாம் போக்கிக்கொண்டு வந்து பாக்யமற்ற என்னை ஆநத்தப்படுத்துவானா? நான் அதனோடு விளையாடும்பொழுது பொய்யாகவே த்யானம் செய்வதுபோல் கண்ணை மூடிக்கொண்டிருக்கையில், ப்ரணய கோபத்தினால் (ப்ரியத்தினால் ஏற்படும் கோபத்தினால்) கலங்கி அருகாமையில் வந்து நீர்த் திவலைபோல் (தண்ணீர் துளி போல்) மெதுவாயிருக்கின்ற கொம்புகளின் நுனியால் பொற்றாதபடி பயந்து பயந்து அடிக்கடி என்னை முட்டிப் பார்க்குமல்லவா? ஹவிஸ்ஸு வைத்திருக்கிற தர்ப்பத்தைக் கடித்து எச்சிலாக்கித் தூஷிக்கையில் என்னால் கோபத்துடன் அதட்டப்பெற்றுப் பயந்து அந்த க்ஷணமே விளையாட்டெல்லாம் அடங்கி இந்திரியங்களையெல்லாம் வென்ற ரிஷிகுமாரன் போல் பேசாதிருக்குமே. இந்தப் பூமி நிரம்பவும் கௌரவிக்கத்தக்கது. இது என்ன தவம் செய்ததோ? ஏனெனில், இப்பூமி வணக்கமுடைய க்ருஷ்ணஸார ம்ருகத்தின் (கறுப்பு மானின்) குட்டியின் அழகிய குளப்படிகளால் (அடிச்சுவடுகளால்) நிறைந்திருக்கின்றது. அவை மிகவும் மங்களமானவை; உறுதியானவை. அத்தகைய குளப்படிகளின் வரிசைகளால் நிறைந்த இப்பூமி என் தனமாகிய மான்குட்டியை இழந்து வருந்துகிற எனக்கு அது போனவழியை அறிவிக்கின்றது. இப்பூமி அதன் குளப்படிகளால் அலங்காரமுற்று ஸ்வர்க்க மோக்ஷங்களை விரும்புகிற அந்தணர்கள் வேள்வி செய்தற்குரிய இடம்தானே என்னும்படி திகழ்கின்றது” (க்ருஷ்ணஸார மிருகம் இருக்குமிடம் யாகம் செய்யத்தகுந்த இடமென்று ஸ்ம்ருதி சொல்லுகின்றது). “மன இரக்கத்திற்கிடமான ஜனங்களிடத்தில் மிகுந்த ப்ரீதியுடைய மஹானுபாவனாகிய இச்சந்த்ரன், தாய் மரணம் அடைந்ததும் எனது ஆச்ரமத்தினின்று தப்பிப்போனதுமாகிய இந்த மான்குட்டியைத் தயையினால் காத்திருப்பானா? என் புதல்வனாகிய மான் குட்டியைப் பிரிந்தமையால் உண்டான ஜ்வரமாகிற (காய்ச்சலாகிற) அக்னியின் ஜ்வாலைகளால் என் ஹ்ருதயமாகிற நிலத்தாமரை தபிக்கப்பட்டிருக்கின்றது (எரிக்கப்பட்டிருக்கிறது). மற்றும் மான்குட்டியைத் தேடித் திரிந்தமையால் நான் இளைப்புற்றிருக்கின்றேன். இப்படிப்பட்ட என்னை இச்சந்த்ரன் குளிர்ந்து சாந்தமாயிருப்பதும் என்னிடத்தில் ப்ரீதியால் மேல் மேல் பெருகுவதுமாகிய தன் வாயில் ஊறும் ஜலமாகிற அம்ருதமயமான கிரணங்களால் சிரமம் தீரும்படி செய்கின்றான்” என்றான். 

இங்கனம் நேரக்கூடாத பலவகை மனோரதங்களால் அப்பரத மன்னவன் மனக்கலக்கமுற்றிருந்தான். மான் குட்டியென்னும் வ்யாஜத்தையுடைய ப்ராரப்தகர்மமே அங்கனம் அவனுக்குப் பெரிய விக்னமாய் (இடையூறாய்) நேர்ந்தது. அதனால் அவன் ஜ்ஞானயோக ஆரம்பம் தனது வர்ணாச்ரமங்களுக்குரிய கர்மயோக ரூபமான தவம் பகவத் ஆராதன ரூபமான தவம் ஆகிய இவை எல்லாவற்றினின்றும் நழுவினான். இது ப்ராரப்த கர்மமாகாத பக்ஷத்தில், வேறு ஜாதியாகிய மான்குட்டியிடத்தில் தன் பிள்ளையினிடத்தில் போல இப்படிப்பட்ட மனவிருப்பம் எப்படி உண்டாகும்? மோக்ஷமார்க்கத்திற்கு விரோதிகளென்று நேரே வயிற்றில் பிறந்த விடமுடியாத குணமுள்ள பிள்ளைகளைத் துறந்தும், இங்கனம் விக்னத்தினால் (இடையூறால்) யோகம் செய்யத் தொடங்குவது போன்றவை தடைபடப்பெற்று மான் குட்டியைப் போஷிப்பதும் பாதுகாப்பதும் அதற்கு ப்ரியமான கார்யங்களைச் செய்வதும் சீராட்டுவதுமாய் அதனிடத்தில் மிக்க மனப்பற்றுக்கொண்டு தன்னைப்பற்றி இம்மியும் நினையாதிருக்கிற அப்பரதனென்னும் ராஜரிஷிக்கு எலிப்பாழியில் (எலியின் வளையில்) பாம்பு நுழைவதுபோல், கடக்க முடியாத மரணகாலம் வந்தது. அப்பொழுதும் தன் பக்கத்திலிருந்து பிள்ளையைப்போல் சோகிக்கின்ற அந்த மான் குட்டியைப் பார்த்துக்கொண்டே அதனிடத்திலேயே மனம் சென்று அத்தோடுகூடவே அந்தத் தேஹத்தையும் துறந்து ஒன்றுமறியாத மூடன் போல் மிருக ஜன்மத்தைப் பெற்றான். அப்பொழுதும் பூர்வஜன்ம ஸ்மரணம் மாறப்பெறாதிருந்தான். முன் ஜன்மத்தில் அவன் பகவானை ஆராதித்துக் கொண்டிருந்த நற்செயலின் மஹிமையால் தான் மானாகப் பிறந்தமைக்குக் காரணம் இன்னதென்பதை அறிந்து அதற்கு மிகவும் பரிதபித்து “ஆ! என்ன வருத்தம்? நான் ஜ்ஞானிகளுடைய மார்க்கத்தைத் தொடர்ந்து சென்றும் இடையில் இடையூறுகளால் தடைபட்டு அதினின்றும் நழுவினேன். எனக்கு என்ன கஷ்டம் நேர்ந்தது? நான் தேஹத்திலும் அதைத் தொடர்ந்த மற்றவைகளிடத்திலும் பற்றுக்களையெல்லாம் துறந்து ஜனஸஞ்சாரமில்லாத பரிசுத்தமான அரண்யத்தில் (காட்டில்) வாஸம் செய்துகொண்டு இந்திரியங்களை எல்லாம் வென்று ஸர்வாந்தராத்மாவான பகவானுடைய கதைகளைக் கேட்பது அவனுடைய திருமேனியை தியானம் செய்வது குணங்களைக் கீர்த்திப்பது (புகழ்வது) அவனை ஆராதிப்பது அவனையே நினைப்பது முதலியவற்றில் அபிநிவேசங்கொண்டு (மிகுந்த ஈடுபாடு கண்டு) அதனால் ஒரு யாமமும் வீணாகப்பெறாத நெடுங்காலமாய் மனத்தை வேறு எவ்விஷயத்திலும் போகவொட்டாமல் தடுத்து அந்த வாஸுதேவனிடத்திலேயே ஊக்கத்துடன் நிலை நிறுத்தியிருந்தேன். அப்படிப்பட்ட மனத்தை மான் குட்டியிடத்தில் பற்றவிட்டு மதிகெட்டு அந்த மானையே அனுஸரித்து இருந்தேனாகையால் யோக மார்க்கத்தினின்று நன்றாக நழுவச்செய்தேன்” என்று தனக்குள் பரிதபித்தான். 

இங்கனம் மனவெறுப்புற்றுத் (மான் குட்டியாகப் பிறந்த பரதன்) தன் தாயான பெண் மானைத் துறந்து தானிருந்த காலஞ்சர பர்வதத்தினின்று புறப்பட்டு இந்திரியங்களை அடக்கி ஆள்கையே இயற்கையாகப் பெற்ற முனிவர் கூட்டங்களுக்கு ப்ரியமாயிருப்பதும் பகவானுடைய ஆவிர்ப்பாவ ஸ்தானமுமாகிய ஸாலக்ராமமென்கிற புலஹாஸ்ரமத்திற்கு வந்தான். அங்கு தனக்குத் தானே ஸஹாயமாய்த் தனியே அந்த மான் சரீரம் விடுங்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு எதில் மனப்பற்று செய்தால் என்ன கெடுதி நேரிடுமோவென்று மிகவும் பயந்து உலர்ந்த இலை புல் கொடி இவைகளைத்தின்று மானாகப் பிறந்ததற்குக் காரணமான ப்ராரப்த கர்மத்தின் முடிவையே எண்ணிக் கொண்டிருந்தான். பிறகு அச்சரீரம் முடியும்படியான காலம் நேரப் பெற்று அப்புண்ய தீர்த்தத்தில் பாதி நனைந்திருக்கின்ற மிருக சரீரத்தைத் துறந்தான்.

எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக